சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெண்களை உயர்த்துவோம்! சமுதாயத்தை உயர்த்துவோம்!

செப்டம்பர் 1-15 2019

நூல்    : பெண்களை உயர்த்துவோம்!                                     சமுதாயத்தை உயர்த்துவோம்!

ஆசிரியர்        : மெலின்டா கேட்ஸ்

தமிழில்          : நாகலட்சுமி சண்முகம்

Publisher      : Manjul Publishing House,

                   Corporate and Editorial Office, 2 Floor,

                   Usha Preet Complex,

                  42 Malviya Nagar,                    

                  Bhopal 462 003, India
   நன்கொடை: ரூ.399/_.

 

 

 

முன்னுரை

நான் சிறுமியாக இருந்த காலத்தில், விண்கலன்கள் விண்ணில் ஏவப்படுவது ஒரு பெரிய விஷயமாக இருந்தது. டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். என் பெற்றோருக்கு நாங்கள் நான்கு குழந்தைகள். என் தாயார் ஒரு சிறந்த குடும்பத் தலைவியாகத் திகழ்ந்தார். என் தந்தையார் அப்போலோ பணித் திட்டத்தில் பணியாற்றினார்.

விண்ணில் ஒரு விண்கலன் ஏவப்படவிருந்த போதெல்லாம், நாங்கள் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு எங்கள் காருக்குள் ஏறி, எங்கள் தந்தையின் நண்பர் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றுவிடுவோம். அவரும் அப்போலோ பணித் திட்டத்தில் பணியாற்றிய ஒரு பொறியாளர். நாங்களும் அவருடைய குடும்பத்தினருமாகச் சேர்ந்து அந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிப்போம். ஒரு விண்கலன் ஏவப்படவிருக்கும் நேரத்தில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்போது உடலுக்குள் ஏற்படுகின்ற சிலிர்ப்பை இப்போதும் என்னால் உணர முடிகிறது; “இருபது நொடிகள், இன்னும் பதினைந்து நொடிகள், பன்னிரண்டு, பதினொன்று, பத்து, ஒன்பது… இக்னிஷன் செயல்முறை தொடங்குகிறது. ஆறு, அய்ந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று, பூஜ்ஜியம். எல்லா எஞ்சின்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. விண்கலன் உயருகிறது! விண்கலன் மேலெழும்பிவிட்டது!’’

அக்கணங்கள் எப்போதுமே என்னுள் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கின. குறிப்பாக, எஞ்சின்கள் முடுக்கப்பட்டு, பூமி அதிர்ந்து, ஏவூர்தி மேலேழும்பத் தொடங்குகின்ற அக்கணம் புல்லரிக்க வைப்பதாக இருந்தது. அந்த ஏவூர்தி எவ்வாறு மேலே உயர்த்தப்படுகிறது என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்பினேன்!

நம்மில் பலர் ஏதோ ஒரு சமயத்திலாவது ஒரு விமானத்தில் அமர்ந்துகொண்டு, அது எப்போது மேலே உயரும் என்று இருப்புக் கொள்ளாமல் தவித்திருப்போம். எங்கள் குழந்தைகள் சிறுவர்களாக இருந்த நேரத்தில் நாங்கள் ஒரு விமானப் பயணம் மேற்கொண்ட போதெல்லாம், அந்த விமானம் புறப்படத் தயாராக இருக்கும்போது, “சக்கரங்கள், சக்கரங்கள், சக்கரங்கள்’’ என்று நான் அவர்களிடம் உற்சாகமாகக் கூறுவேன். பிறகு, அந்த விமானம் மேலே உயரவிருக்கும் கணத்தில், “இறக்கைகள்!’’ என்று நான் கூறுவேன். என் குழந்தைகள் சற்று வளர்ந்தபோது, நாங்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவ்வாறு கூறினோம். ஆனால், “சக்கரங்கள், சக்கரங்கள், சக்கரங்கள்’’ என்றுதான் நாங்கள் அதிகமாகக் கூறியதை நான் கவனித்தேன். “விமானம் நிலத்திலிருந்து மேலே உயருவதற்கு ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது?’’ என்று நான் யோசித்தேன்.

மேலே எழும்புவதற்கு சில சமயங்களில் ஏன் இவ்வளவு நேரமாகிறது? சில சமயங்களில் ஏன் அது வேகமாக நிகழுகிறது? நம்மைக் கீழ்நோக்கித் தள்ளுகின்ற ஆற்றல்களை, நம்மை மேல்நோக்கித் தள்ளும் ஆற்றல்கள் விஞ்சி நிற்கும் கணத்தில் எது நம்மை பூமியிலிருந்து மேலே உயர்த்துகிறது? நாம் எவ்வாறு பறக்கத் தொடங்குகிறோம்?

நான் என் கணவர் பில் கேட்ஸுடன் சேர்ந்து துவக்கியுள்ள அறக்கட்டளையின் பணிகள் நிமித்தமாகக் கடந்த இருபது ஆண்டுகளாக உலகம் நெடுகிலும் பயணம் செய்துள்ளேன். இந்நிலையில், என் மனத்தில் ஒரு கேள்வி முளைத்தது:

“மனிதர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுககு, அவர்களை உயர்த்திவிடும் ஒரு கணத்தை எவ்வாறு நாம் உருவாக்கிக் கொடுப்பது?’’ ஏனெனில், பெண்கள் உயர்த்தப்படும்போது, சமுதாயம் உயர்த்தப்படுகிறது; மனிதகுலம் உயர்த்தப்படுகிறது.

பெண்களை உயர்த்த வேண்டும் என்கிற விருப்பம் நம் எல்லோருக்கும் ஏற்படும் விதமாக மனித மனங்களில் எப்படி ஓர் உயர்த்தும் கணத்தை நாம் உருவாக்குவது? ஏனெனில், சில சமயங்களில், பெண்களைக் கீழே இழுத்துத் தள்ளுவதை நிறுத்துவதுதான் அவர்களை உயர்த்தத் தேவையானதாக இருக்கிறது.

தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா _ வேண்டாமா, தாங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் போன்றவற்றைத் தாங்களாகவே தீர்மானிக்கப் பெண்கள் விரும்புகின்றனர். ஆனால், அது அவர்களால் முடிவதில்லை. இது என்னுடைய பயணங்களில் நான் தெரிந்து கொண்டுள்ள உண்மை. கருத்தடை மாத்திரைகள், கருத்தடைக் கருவிகள் போன்ற வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. பெண்களுக்கும் சிறுமியருக்கும் இன்னும் பல உரிமைகளும் சலுகைகளும் மறுக்கப்படுகின்றன: தாங்கள் திருமணம் செய்து  கொள்ள வேண்டுமா _ வேண்டாமா, தாங்கள் யாரைத் திருமணம் செய்து கொள்ளுவது போன்றவற்றைத் தீர்மானிப்பதற்கான உரிமை; பள்ளிக்குச் சென்று பயிலுவதற்கான உரிமை; வருவாய் ஈட்டுவதற்கான உரிமை; வெளியே சென்று வேலை செய்வதற்கான உரிமை; தங்கள் சொந்தப் பணத்தைத் தங்கள் விருப்பப்படி செலவிடுவதற்கான உரிமை; பட்ஜெட்டைத் திட்டமிடுவதற்கான உரிமை; வங்கியில் கடன் வாங்கி ஒரு தொழிலைத் துவக்குவதற்கான உரிமை; சொத்துகளைப் பெற்றிருப்பதற்கான உரிமை; விவாகரத்து செய்வதற்கான உரிமை; ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கான உரிமை; ஒரு காரோட்டுவதற்கான உரிமை; கல்லூரிக்குச் செல்லுவதற்கும் கணினிப் படிப்பை மேற்கொள்ளுவதற்குமான உரிமை; முதலீட்டாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான உரிமை _ இந்த உரிமைகள் அனைத்தும் உலகின் சில பகுதிகளில் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன. சில சமயங்களில் இந்த உரிமைகள் சட்டப்படி மறுக்கப்படுகின்றன. ஆனால், அவை சட்டரீதியாக அவர்களுக்குக் கிடைத்தாலும்கூட, கலாச்சார ரீதியான பாரபட்சத்தின் காரணமாகப் பெண்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

குடும்பக் கட்டுப்பாடு என்கிற விஷயத்துடன் நான் என் பொதுப் பணிப் பயணத்தைத் துவக்கினேன். பின்னாளில் நான் வேறு பல பிரச்சனைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினேன். ஆனால், வெறுமனே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றியும், நான் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளைப் பற்றியுமே பேசிக் கொண்டிருப்பது போதாது என்பதை விரைவிலேயே நான் உணர்ந்து கொண்டேன்.  பெண்களுக்காகப் பேசியாக வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன். பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்களாக ஆக வேண்டுமென்றால், அந்தச் சமத்துவம், அவர்கள் தங்களுடைய உரிமைகளை ஒவ்வொன்றாக வென்றெடுப்பதிலிருந்து கிடைக்காது; மாறாக, அவர்கள் மொத்தமாக அவற்றை வென்றெடுத்தாக வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது.

இவையெல்லாம் நான் சந்தித்த அசாதாரணமான மக்களிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடங்கள். நீங்களும் அந்த அசாதாரணமான மக்களைச் சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்களில் சிலர் உங்களுடைய இதயங்களை நெகிழச் செய்வர். மற்றவர்கள் உங்களுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்துவர். இந்தக் கதாநாயகர்கள் பள்ளிகளைக் கட்டியுள்ளனர், உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர், போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர், பெண் குழந்தைகளுக்கு அதிகாரமும் உரிமையும் வழங்கியுள்ளனர், கலாச்சாரங்களை மாற்றியுள்ளனர். அவர்கள் எனக்கு உத்வேகமூட்டியுள்ளனர். அவர்கள் உங்களுக்கும் உத்வேகமூட்டுவர் என்று நான் நம்புகிறேன்.

பெண்கள் கைதூக்கிவிடப்படும்போது ஏற்படுகின்ற வித்தியாசத்தை அவர்கள் எனக்குக் காட்டியுள்ளனர். அதை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மக்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை அவர்கள் எனக்குக் காட்டியுள்ளனர். அதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால்தான் நான் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறேன். என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுத்துள்ளவர்களுடைய கதைகளை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நாம் அனைவரும் செழிப்புறுவதற்கு, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவுவதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எஞ்சின்கள் முடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, பூமி அதிர்ந்து கொண்டிருக்கிறது, நாம் மேலேழும்பிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றின் போக்கைப் புரிந்து கொள்ளுவதற்கான அறிவும் ஆற்றலும் அறநெறி சார்ந்த உள்நோக்கும் முன்பு எப்போதையும்விட இப்போது நம்மிடம் அதிகமாக இருக்கின்றன. ஆண்கள், பெண்கள் என்று அனைத்து ஆதரவாளர்களின் உதவியும் இப்போது நமக்குத் தேவைப்படுகிறது. யாரும் இதில் விடுபட்டுவிடக்கூடாது. எல்லோரும் உள்ளே கொண்டுவரப்பட வேண்டும். பெண்களை உயர்த்துவதுதான் நம்முடைய நோக்கம். இந்த நோக்கத்திற்காக நாம் ஒன்றிணையும்போது, நம்மால் அவர்களை உயர்த்த முடியும்.

***

சம்பளமில்லா வேலையும் சமத்துவமின்மையும்

சம்பளமில்லா வேலையைச் செய்வதில் தங்களுடைய நேரம் முழுவதையும் செலவிடுகின்ற பெண்களுக்கு, தினசரி வீட்டு வேலைகள், அவர்களுடைய கனவுகள் அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிடுகின்றன. சம்பளமில்லா வேலை என்று நான் கூறுவதற்கு என்ன பொருள்? குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுதல், சமைத்தல், வீட்டைச் சுத்தப்படுத்துதல், கடைக்குச் சென்று பொருள்களை வாங்கி வருவதல் மற்றும் பிற சில்லரை வேலைகள் போன்ற, சம்பளம் எதுவும் பெறாமல் ஒரு குடும்ப உறுப்பினர் செய்கின்ற வேலைகள்தாம் அவை. பல நாடுகளில், மின் வசதியோ அல்லது குழாயைத் திறந்தால் தண்ணீர் வரும் வசதியோ இல்லாத சமூகங்களில், தண்ணீரை எடுத்து வருவதிலும் விறகுகளைச் சேகரிப்பதிலும் பெண்களும் சிறுமியரும் செலவிடும் நேரமும் உழைப்பும்கூடச் சம்பளமில்லா வேலைகள்தாம்.

இது கோடிக்கணக்கான பெண்களின் தினசரி யதார்த்தமாக இருக்கிறது. குறிப்பாக, ஏழை நாடுகளில் இது பரவலாக நிகழுகிறது. அந்நாடுகளில் பெண்கள் தங்கள் குடும்பத்தை ஒழுங்காக நடத்துவதற்கு எக்கச்சக்கமான வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது _ சம்பளம் எதுவும் பெறாமல்!

சராசரியாக, உலகம் நெடுகிலும், ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாகச் சம்பளமில்லா வேலைகளைச் செய்கின்றனர். ஆனால், அவர்கள் உழைக்கும் நேரத்தில் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. இந்தியாவில், பெண்கள் தினமும் 6 மணி நேரம் சம்பளமில்லா வேலைகளைச் செய்கின்றனர். ஆனால், ஆண்கள் 1 மணி நேரத்திற்கும் குறைவாகவே அதில் செலவிடுகின்றனர். அமெரிக்காவில், பெண்கள் சராசரியாக தினமும் 4 மணிநேரம் சம்பளமில்லா வேலைகளைச் செய்கின்றனர். ஆண்களின் சராசரி 2.5 மட்டுமே. நார்வே நாட்டில், பெண்கள் தினமும் 3.5 மணிநேரம் சம்பளமில்லா வேலைகளைச் செய்கின்றனர். ஆண்கள் வெறும் 3 மணிநேரம் மட்டுமே அதில் செலவிடுகின்றனர். ஆண்களும் பெண்களும் சம நேரம் சம்பளமில்லா வேலை செய்கின்ற எந்தவொரு நாடும் இல்லை. அப்படியானால், சராசரியாக, தங்கள் வாழ்நாளின் ஊடாகப் பெண்கள் ஆண்களைவிட அதிகமாக ஏழு ஆண்டுகள் சம்பளமில்லா வேலை செய்கின்றனர். ஓர் இளநிலைப் பட்டமும் ஒரு முதுநிலைப் பட்டமும் பெறுவதற்குத் தேவைப்படுகின்ற காலம் அது.

சம்பளமில்லா வேலையில் தாங்கள் செலவிடும் நேரத்தைப் பெண்களால் குறைத்துக் கொள்ள முடியும்போது, சம்பளத்துடன்கூடிய வேலையைச் செய்வதில் தாங்கள் செலவிடும் நேரத்தை அவர்கள் அதிகரிக்கின்றனர். யதார்த்தத்தில், பெண்களின் சம்பளமில்லா வேலைநேரத்தை நாளொன்றுக்கு அய்ந்து மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகக் குறைப்பது, சம்பளத்துடன்கூடிய வேலையில் அவர்கள் பங்கு கொள்ளுவதை 20 சதவிகிதம் அதிகரிக்கிறது.

இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், சம்பளத்துடன்கூடிய வேலைதான் பெண்களை ஆண்களுக்குச் சமமானவர்களாக உயர்த்துகிறது, அவர்களுக்கு சக்தியையும் சுதந்திரத்தையும் கொடுக்கிறது. அதனால்தான், சம்பளமில்லா வேலையில் பாலினரீதியான சமச்சீரின்மை குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. வீட்டில் ஒரு பெண் செய்கின்ற சம்பளமில்லா வேலையானது, அதிகக் கல்வியைப் பெறுதல், வீட்டிற்கு வெளியே வருவாய் ஈட்டுதல், பிற பெண்களை சந்தித்தல், அரசியல் விவகாரங்களில் ஈடுபடுதல் போன்ற, அவளை முன்னேற்றக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. சமச்சீர்மையற்ற சம்பளமில்லா வேலையானது ஒரு பெண் தன்னம்பிக்கையையும் வலிமையையும் பெறுவதிலிருந்து அவளைத் தடுக்கிறது.

குடும்ப உறுப்பினர்களை அக்கறையோடு கவனித்துக் கொள்ளுவது உள்பட, சில வகையான சம்பளமில்லா வேலையால் வாழ்க்கையை அதிக அர்த்தமுள்ளதாக ஆக்க முடியும்.

2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், தான்சானியா நாட்டில் கிலிமஞ்சாரோ மலைக்கு அருகே உள்ள எம்புயூனி என்னும் கிராமத்தில், மஸாய் இனத்தைச் சேர்ந்த அன்னா மற்றும் சனாரே தம்பதியரின் குடும்பத்துடன் சில நாள்கள் தங்குவதற்காக நான் என் மகள் ஜென்னுடன் சென்றேன்.

அப்படிப்பட்ட அனுபவத்தை நான் பெற்றது அதுதான் முதல் முறை. மக்களின் வாழ்க்கையைப் பற்றி நான் நேரடியாகத் தெரிந்து கொள்ள விரும்பினேன். புத்தகங்களிலோ அல்லது நான் வாசிக்கின்ற அறிக்கைகளிலோ இடம்பெறாத தகவல்களை நான் திரட்ட விரும்பினேன். நான் பயணம் செய்யும்போது நான் சந்திக்கின்ற பெண்களுடன் உரையாடும்போதுகூட அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிய முழுமையான புரிதல் எனக்குக் கிடைப்பதில்லை.

ஜென்னோடு சேர்ந்து இப்படி இன்னொருவருடைய வீட்டில் தங்கவிருந்தது என்னுள் உற்சாகத்தைத் தூண்டியது. அவளுக்கு அப்போது 17 வயது. அவள் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். என் குழந்தைகள் சிறு வயதினராக இருந்த சமயத்திலிருந்தே, உலகத்தை நேரடியாக அவர்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவர்கள் தாங்கள் சந்திக்கின்ற மக்களுக்குத் தங்களால் இயன்றதைச் செய்வதற்காக மட்டுமல்லாமல், அம்மக்களோடு ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொள்ளுவதற்காகவும் அவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். பிற மனிதர்களோடு ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொள்ளுவதைவிட மாபெரும் அர்த்தம் வாழ்வில் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இன்னொரு முறை, நானும் என் மகன் ரோரியும் மலாவி நாட்டில் ஒரு குடும்பத்தினருடன் சில நாள்கள் தங்கினோம். கிறிஸ்ஸி மற்றும் கவனானியும் அவர்களுடைய குழந்தைகளும் எங்களை நன்றாகக் கவனித்துக் கொண்டனர். ஒரு சேவலைச் சமைப்பதற்கு அதன் இறகுகளை எப்படிப் பிடுங்கியெடுப்பது என்பதைக் கவனானி, ரோரிக்கு விளக்கிக் காட்டினார். பிறகு அவர் அங்கிருந்த கால்நடைகளை ரோரிக்குச் சுட்டிக்காட்டி, “அதோ, அங்கிருக்கும் அந்தப் பன்றிதான் என் மகனின் கல்விக்கான கட்டணத்தைச் செலுத்தப் போகிறது’’ என்று கூறினார். மக்கள் தங்களுடைய குழந்தைகளின் கல்விக்காக சேமிக்கின்ற விதம் கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் மாறுபடுகிறது என்பதையும், ஆனால், தங்களுடைய குழந்தைகள் தழைத்தோங்கி வளருவதற்கு உதவுவதற்கான துடிப்பு எல்லாக் கலாச்சாரங்களிலும் ஒன்றுபோலத்தான் இருக்கிறது என்பதையும் ரோரி புரிந்து கொண்டான்.

என்னுடைய கடைக்குட்டி மகளான ஃபீபி, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் தன்னார்வத் தொண்டு ஆற்றியிருக்கிறாள். எதிர்காலத்தில் ஆப்பிரிக்காவில் பல காலம் தங்கி அங்கு சேவை செய்வதற்கு அவள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள். பல்வேறு மக்களையும் இடங்களையும் நேரடியாகப் பார்ப்பது என் குழந்தைகள் தங்கள் வாழ்வில் செய்யவிருக்கும் விஷயங்களைத் தீர்மானிக்க உதவும் என்று நான் நம்புகிறேன். ஆனால், அதைவிட முக்கியமாக, மனிதர்கள் என்கிற முறையில் அது அவர்களைச் செதுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகிழ்ச்சியாக இருத்தல், நம்முடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல், மற்றவர்களுக்குப் பங்களித்தல், பிறரை நேசித்தல், பிறரால் நேசிக்கப்படுதல் போன்ற விருப்பங்கள் நம் எல்லோருக்குமே இருக்கின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். யாரும் இன்னொருவரைவிடச் சிறந்தவரல்ல; யாருடைய மகிழ்ச்சியும் அல்லது மனித கண்ணியமும் பிற எவரொருவருடைய மகிழ்ச்சியையும் கண்ணியத்தையும்விட அதிக முக்கியமானதுமல்ல.

தான்சானியாவில் நான் அன்னா மற்றும் சனாரே குடும்பத்தினருடன் தங்கியிருந்தபோது எனக்குக் கிடைத்த பாடம் அதுதான். அத்தம்பதியர் ஒரு சாதாரணமான வீட்டில் வாழ்ந்தனர். அவர்கள் எனக்கும் ஜென்னுக்கும் ஒதுக்கியிருந்த இடம் முன்பு ஓர் ஆட்டுக் கொட்டகையாக இருந்திருந்தது. அவர்களுக்குத் திருமணமாகியபோது அந்த ஆட்டுக் கொட்டகைதான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஒரு சுமாரான அளவில் ஒரு வீட்டைக் கட்டி இன்னொரு அறைக்கு இடம் பெயர்ந்தனர். அப்போது அந்த ஆடுகள் மீண்டும் தம்முடைய கொட்டகையை எடுத்துக் கொண்டன. நானும் ஜென்னும் அந்தக் கொட்டகையை ஆக்கிரமித்தபோது, அந்த ஆடுகள் ஒருசில நாள்கள் வெளியே போய்விட்டன. என்னுடைய அறக்கட்டளையின் சார்பில் முன்பு நான் மேற்கொண்ட பயணங்களின்போது நான் கற்றுக் கொண்டவற்றைவிட, இக்குடும்பத்தினருடன் நான் தங்கியிருந்த திலிருந்து அதிகமாகக் கற்றுக் கொண்டேன். குறிப்பாக, தன்னுடைய குடும்பத்தையும் வயலையும் நிருவாகிப்பதற்கு ஒரு பெண் சுமக்கின்ற சுமைகளைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன்.

சனாரே தினமும் காலையில் தன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்று, தங்கள் குடும்பத்தின் சிறிய கடை ஒன்றை நிருவாகித்தார். அக்கடை அவர்களுடைய வீட்டிலிருந்து அரை மணிநேரத்தில் நடந்து செல்லும் தொலைவில் இருந்தது. வழக்கமாக அவர் நடந்துதான் சென்றார். ஆனால் சில சமயங்களில், அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அவரைக் கொண்டுபோய்விட்டார். அன்னா தன் வீட்டில் இருந்து வீட்டு வேலைகளையும் வயல் வேலைகளையும் நிருவாகித்தார். ஜென்னும் நானும் அவருடைய வீட்டு வேலைகளில் அவருக்கு உதவினோம்.

நாங்கள் எங்களுடைய அறக்கட்டளையைத் துவக்கிய காலத்திலிருந்தே ஏழைச் சமூகங்களை நேரில் பார்வையிட, பல இடங்களுக்கு நான் பயணம் செய்துள்ளேன். எல்லா இடங்களிலும் பெண்கள் மட்டுமே சமையல் செய்தனர், வீடுகளைச் சுத்தப்படுத்தினர், தங்களுடைய குடும்பத்தினரைக் கவனித்துக் கொண்டனர். ஆனால், அவர்கள் அதிகாலையில் எழுந்த நேரத்திலிருந்து நள்ளிரவுவரை செய்த அனைத்து வேலைகளும் அவர்களுக்குக் கொடுத்த அழுத்தத்தை நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை.

ஜென்னும் நானும் அன்னாவோடு விறகு வெட்டச் சென்றோம். கூர்மயற்ற வெட்டுக் கத்தியைக் கொண்டு கரடுமுரடான மரங்களை நாங்கள் வெட்டினோம். முப்பது நிமிடங்கள் நடந்து சென்று, வாளிகளில் தண்ணீரை நிரப்பி அவற்றை எங்கள் தலைகள்மீது சுமந்து வந்தோம். நாங்கள் வெட்டி வந்த விறகுகளைக் கொண்டு நெருப்பு மூட்டி, தண்ணீரைக் கொதிக்க வைத்து தேநீர் தயாரித்தோம். பிறகு, உணவு தயாரிக்கத் தொடங்கினோம். முட்டைகளை வாங்கி வந்து, பீன்ஸ் காயை நறுக்கி, உருளைக்கிழங்குகளைத் தோலுரித்து, பிறகு இவற்றையெல்லாம் விறகடுப்பில் சமைத்து முடித்தோம். இரவில் ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியது. பிறகு, சுமார் பத்து மணியளவில் அந்த வீட்டின் தூசு படிந்த முற்றத்தில் நாங்கள் மற்ற பெண்களோடு சேர்ந்து பாத்திரங்களைக் கழுவினோம். அன்னா தினமும் பதினேழு மணிநேரம் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார். அவருடைய வேலை நேரமும் உழைப்பின் கடுமையும் எனக்குத் திகைப்பூட்டியது. இதுபற்றி நான் எந்தப் புத்தகத்திலும் படித்ததில்லை. அன்னாவும் சனாரேயும் ஓர் அன்பான உறவை அனுபவித்துக் கொண்டிருந்தனர். சம அளவு கடுமையாக வேலை செய்தனர். ஆனாலும், அன்னாவும் அவருடைய கிராமத்திலிருந்த பிற பெண்களும் சம்பளமில்லா வேலையின் சுமையைத் தாங்க முடியாமல் தினமும் போராடிக் கொண்டிருந்தனர். சம்பளமில்லா வேலையானது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமமாகப் பகிரப்படவில்லை. இது அப்பெண்களின் வாழ்க்கையைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய எதிர்காலத்தையும் இருட்டாக்கியது.

நானும் அன்னாவும் பேசிக் கொண்டே அவருடைய சமையலறையில் விறகடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தபோது, அவருக்குக் கூடுதல் நேரம் இருந்தால் அவர் என்ன செய்வார் என்று நான் அவரிடம் கேட்டேன். “நான் என் சொந்த வியாபாரத்தைத் துவக்குவேன். புதிய வகையான கோழிகளை வளர்த்து, அவற்றின் முட்டைகளை அரை மணிநேரப் பயண தூரத்திலிருக்கும் அருஷாவில் கொண்டு போய் விற்பேன்’’ என்று அவர் பதிலளித்தார். அந்த வருவாய் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றும்; ஆனால், அது வெறும் கனவாகத்தான் இருந்தது. ஒரு வியாபாரத்தை நடத்தத் தேவையான நேரம் அவருக்கு இருக்கவில்லை. அவர் தன் நேரம் முழுவதையும் தன்னுடைய குடும்பத்துக்கு உதவுவதற்காகச் செலவிட வேண்டியிருந்தது.

சனாரேயிடம் பேசுவதற்கும் எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. “எனக்கும் என் மனைவிக்கும் எங்கள் மகள் கிரேஸைப் பற்றிக் கவலையாக இருக்கிறது. அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கிக் கொண்டிருந்த உயர்நிலைப் பள்ளிக்குப் போய்ப் படிப்பதற்கான தேர்வில் அவள் இன்னும் தேர்ச்சி பெறவில்லை. அத்தேர்வில் கலந்து கொள்ளுவதற்கு அவளுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. இரண்டாவது முறையும் அவள் தேர்ச்சி பெறாவிட்டால், தங்கும் வசதியுடன்கூடிய ஒரு தனியார் பள்ளியில்தான் அவள் படித்தாக வேண்டும். ஆனால், அதற்கு மிக அதிகமாகச் செலவாகும். அதற்குத் தேவையான பணத்தை எங்களால் திரட்ட முடியாவிட்டால், ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழுவதற்கான வாய்ப்பை கிரேஸ் இழந்துவிடுவாள்’’ என்று சனாரே கூறினார்.

அவர் மேலும் தொடர்ந்தார், “ என் மகளின் வாழ்க்கை என் மனைவியின் வாழ்க்கையைப் போல ஆகிவிடுமோ என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. கிரேஸ் இனி பள்ளிக்குச் செல்லவில்லை என்றால், அவள் வீட்டில் இருந்து கொண்டு, பள்ளிக்குப் போயிராத பிற சிறுமியரோடு தன் நேரத்தைச் செலவிடத் தொடங்குவாள். அச்சிறுமியரின் குடும்பங்கள் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கத் தொடங்குவர். தன் வாழ்க்கை குறித்து அவள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் கரைந்து போய்விடும்.’’

சனாரே மற்றும் அன்னாவுக்கு அது ஒரு சிக்கலான சூழ்நிலையாக இருந்தது. ஏனெனில், ஓர் அரசாங்கப் பள்ளியில் படிப்பதற்கான தேர்வில் அவர்களுடைய மகன் பென்டா தேர்ச்சி பெற்றுவிட்டான். அரசாங்கப் பள்ளியில் இலவசக் கல்வி வழங்கப்படுவதில்லை. ஆனால், கல்விக் கட்டணம் அங்கு மிகவும் மலிவு. எனவே, பென்டாவின் கல்விக்கு உத்தரவாதம் கிடைத்துவிட்டது. ஆனால் கிரேஸின் கல்விதான் கேள்விக்குறியாக ஆகியிருந்தது.

பென்டாவும் கிரேஸும் இரட்டைக் குழந்தைகள். பள்ளியில் அவர்கள் இருவரும் ஒரே ஆண்டில் படித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இருவருமே அறிவார்ந்தவர்கள். ஆனால், பென்டாவைவிட கிரேஸ் அதிகமான வீட்டு வேலைகளைச் செய்கிறாள். கிரேஸ் தன்னுடைய வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது, பென்டாவுக்குப் படிக்க நேரம் கிடைக்கிறது.

ஒரு நாள் இரவில், ஜென் தன்னுடைய இரவு விளக்கைத் தன் தலையில் அணிந்தபடி எங்கள் குடிசையைவிட்டு வெளியே வந்தபோது, கிரேஸ் அவளிடம் ஓடிச் சென்று, “நீ இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்போது இந்த இரவு விளக்கை எனக்குத் தருவாயா? நான் என்னுடைய வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் முடித்த பிறகு இரவில் படிப்பதற்கு இது எனக்கு உதவும்’’ என்று கூறினாள்.

கிரேஸ் மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமி. ஆனால், இரவு விளக்கை ஒரு பரிசாகத் தனக்குத் தரும்படி ஜென்னிடம் கேட்பதற்கான துணிச்சல் அவளுக்கு இருந்தது. அந்த விளக்கு அவளுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருந்தது.

கிரேஸைப்போல லட்சக்கணக்கான குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் செய்கின்ற எக்கச்சக்கமான, சம்பளமில்லா வேலையின் காரணமாக, ஓர் ஒளிமயமான வாழ்க்கை அமையப் பெறுவதற்குப் பதிலாக, கற்பதற்கும் வளருவதற்கும் நேரத்தை விட்டுவைக்காத, சமையலையும் சுத்தப்படுத்துதலையும் உள்ளடக்கிய ஒரு கடுமையான வாழ்க்கையை அவர்கள் வாழ நேரிடுகிறது.

நான் தான்சானியாவிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பி வந்தபோது, சம்பளமில்லா வேலையானது பாலினரீதியான பாரபட்சத்திற்கான ஓர் அறிகுறி மட்டுமல்ல என்பதை என்னால் பார்க்க முடிந்தது. இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தால், அது பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும் சக்தியையும் கொடுக்கும் என்பதை நான் உணர்ந்தேன். நான் இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *