சிறுகதை : திறப்பு விழா

செப்டம்பர் 1-15 2019

  செப்டம்பர் 15 – பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை

பேரறிஞர் அண்ணா

வெற்றிபுரம் வேந்தர் வேழமுகத்தாரின் உருவச்   சிலை திறப்பு விழா வைபவம் பற்றி, எங்கும் ஒரே குதூகலம்.

வேந்தருடைய அருங்குணங்களைப் பற்றிப் பேசுபவரைவிட, உருவச்சிலை சமைத்த சிற்பியின் கலைத் திறனைப் பற்றியே அதிகமாகப் பேசினர்.

உண்மையைக் கூறுவதானால், ‘வைபவம்’ வேந்தருக்குப் பெருமை தருவதாக அமையவில்லை, சிற்பியின் திறமைக்குப் பெருமை அளிக்கும் திருநாளாக அமைந்தது.

சிற்பி சந்தனத் தேவன், தன் கலைத்திறன் முழுவதையும் அந்தச் சிலை சமைப்பதில் காட்டி இருந்தான்.

மன்னனே, சிலையைக் கண்டு மலைத்துப் போனான்.

“இன்றிருக்கும், நாளை என்ன ஆகுமோ!’’ என்று மதகுரு, அடிக்கடி கூறுகிறார், மனித உடலைப் பற்றி.

மகேசன் படைப்பு மனித உடல் எனினும், தேவ சிற்பியின் சிலை, முதுமை, நோய் எனும் ஆபத்துகளால் தீண்டப்பட்டு முடிவில் பிடிமண்ணாகிப் போகிறது!

அழகொழுகும் கண்கள் _ ஓர் நாள் ஒளி இழந்து வெறும் குழிகளாகிக் காணப்படுகின்றன!

கெம்பீரம், தளர்ச்சியாகிவிடுகிறது.

குன்றெடுக்கும் தோள், குலைந்து போகிறது!

புன்னகை, எங்கோ மறைந்தே போய்விடுகிறது!

தேவ சிற்பியின் கருத்தோவியம் என்கிறார்கள், மனிதனை. ஆனால் அந்தச் சிலை, காலத்தால் தாக்கப்பட்டு, கூனி, குறுகி குலைந்து குப்பையாகிவிடுகிறது.

ஆனால், இதோ மனிதன், சிற்பியாகிறான் _ கல்லைச் செதுக்கிச் சிலை சமைக்கிறான் _ காலத்தை வெல்கிறான்!

கெம்பீரம், கவர்ச்சி, ஒளி எல்லாம் அப்படி அப்படியே அமைந்து விடுகின்றன!

தேவ சிற்பியின் ‘தோல் பொம்மை’ சுருங்கிப் போகிறது!

தன் ‘கைவண்ணம்’ காட்டிச் சமைத்தான் மனிதன். அந்தச் சிலை, ‘இளமை அழகு’ குன்றாத நிலையில், காலத்தை எதிர்த்துக் கொண்டு நிற்கிறது!

படைப்புத் தொழிலில், என்னிடம் பரமன் எங்ஙனம் போட்டியிட முடியும்! அவன் படைப்பு ‘ஆறிலோ நூறிலோ’ அழிகிறது, என் படைப்பு, காலத்தை வென்று நிற்கிறது!

சிற்பி சந்தனத்தேவன், மன்னனைப் பார்த்த பார்வையில் இந்த ‘எண்ணமெல்லாம்’ இருப்பதுபோலத் தோன்றிற்று!

நாளை மாலை, மண்டலம் பலவற்றிலுமிருந்து, சிற்பிகள் வரப் போகிறார்கள் _ சிற்றரசர்கள் வருகிறார்கள் _ சீமான்களின் கூட்டம் ஏற்கெனவே நிரம்பி விட்டது.

சிற்பக் கலாவிற்பன்னர்கள் கண்டு மகிழத்தக்கது மட்டுமல்ல, சிற்பக் கலைக்கு ஒரு புதிய ஆசான் கிடைத்துவிட்டான் என்று போற்றத்தக்க முறையில் சிலை அமைந்து விட்டது, என்று மன்னன் பாராட்டினான்!

சிந்தனை, ஓயாத உழைப்பு, இவைகளால் உடலும் உருக்குலைந்து போயிருந்த நிலையில் இருந்தான் சிற்பி.

கருவுற்ற காலத்தில், மகப்பேறு எதிர்பார்க்கும் தாயின், நிலை போன்றது, சிற்பிக்கு!

மழலை கேட்டது _ முகம் மலரலாயிற்று _ வேதனை என்றனர் விவரமறியாதவர்கள் அவள் கதறியபோது _ விருந்து! என்றாள் தாய், குழந்தை வீறிட்டு அழுதபோது!

அதே நிலையில் சிற்பி இருந்தான்.

கல், சிலையாகி விட்டது _ கருத்து வடிவமெடுத்து விட்டது!

தூக்கம் வராத இரவுகள் பல! நெற்றியிலே ஒரு வளைவு இருக்கிறது மன்னனுக்கு _ ஆனால், அது சிந்தனையின்போது மட்டுமே தெரிகிறது.

சிந்தனை செய்யும்போது, முகம் சோபையற்று இருப்பதுண்டு பலருக்கு.

வேழ முகத்தாருக்கு, சிந்தனையின்போது, தனிச் ‘சோபை’ தெரிகிறது _ கல்லிலே, இது அமைய வேண்டும். கருத்தில் அமைந்துவிட்டது. கரத்திலே அதற்கான ‘இலாவகம்’ வர வேண்டும், எப்படி? எப்படி?

சிற்பி, இதுபோல, பலவற்றுக்குச் சிந்தித்திருக்கிறான்.

ஒரு தட்டு _ சிறிதளவு செதுக்குவான் _ ஒரு கீறல் ஏடுபடுத்துவான் _ சிறிது கிண்டி விடுவான் _ எதிரே போய் பார்த்துக் கொண்டே நிற்பான், பால் புளிப்பேறிவிடும். பழத்தைப் பறவைகள் கொத்திக் கொண்டு போய்விடும்!

மிகுந்த கஷ்டத்துக்குப் பிறகு அவன், ‘கலைச் செல்வத்தை’ப் பெற்றெடுத்தான்.

இனி, ஊரார் காணலாம், உற்றார் மகிழலாம்.

திறப்பு விழா, அவனுக்கு வெற்றி விழா!

மன்னன் சிலை நேர்த்தியாக அமைந்து விட்டது என்று அமைச்சரும் ஆஸ்தான அலுவலர்களும் கூறினர். சிற்பிக்கு இனிப்பாகத்தான் இருந்தது ஒரு கணம் _ மறு கணமோ, அவர்கள் மன்னனைத்தான் பாராட்டுகிறார்கள்போல் தோன்றிற்று, மனதிலே ஓர் பசி எடுத்தது!

தங்கள் அழகு, அப்படியே தெரிகிறது, அரசே!

விரிந்த மார்பல்லவா தங்கட்கு; சிலை அதனால்தான் சோபிதமாக இருக்கிறது.

கண்களிலே உள்ள ஒளியைக் கவிவாணர்கள் பலர் கவிதை வடிவாக்கியுள்ளனர் _ இளைஞன் கல்லில் அந்தக் கண்ணழகைக் காட்டியுள்ளான்!

கிடைத்த பொருள் நேர்த்தியானது! _ படைத்த முறையும் சிலாக்கியமானது!

மன்னனைப் புகழ்கிறார்கள் _ இரண்டோர் புகழுரையை தனக்கும் வீசுகிறார்கள்.

சிற்பிகள் நாளைக்கு வருவர் _ அவர்களால் தான், சிறந்த பாராட்டுரை கூற முடியும்! என்று எண்ணினான் _ மறு கணமோ, “ஆனால்… அவர்கள்…’’

“கண் செதுக்க நாலு நாள் ஆகியிருக்கும்.’’

என்பார் ஒருவர்; “இதற்கு ஏன் நாலுநாள், நான் நரேந்திரபூபதியின் கண்களை நாலு மணி நேரத்தில செதுக்கினேன்’’ என்பார்.

“தம்பி!’’ என்று சொந்தம் கொண்டாடி அழைத்து வேறொருவர் கேட்பார், “காதணி செதுக்கியபோது, மாலை வேளையோ?’’

இங்ஙனம் ஒவ்வோர் சிற்பியும், சிற்பக்கலையில் தத்தமக்கு உள்ள அறிவுத் திறனை அறிவிக்கும் வகையிலேயன்றோ, பாராட்டுகளை அமைப்பர் என்ற எண்ணம் உண்டாயிற்று!

அரசர், அகமகிழ்கிறார்! ஆனால் கலைத்திறமை கண்டா, அல்லது காலத்தை வெல்லும் வகையில் கல்லுருவம் கிடைத்து விட்டது, இனி வாழையடி வாழையாக வருபவர்கள், தமது அருமையை அறிவர் என்கிற எண்ணத்தினாலா?

அரசியார்? மகிழத்தான் செய்வார்கள்! ஆனால், கல்லுருவம், கண்ணாளா! ஊராருக்கு, எனக்கு, இந்தப் பேசும் ஓவியம் என்று கொஞ்சிட முனைவார்களே தவிர, என் ‘கைத்திறனை’யா புகழ்ந்தபடி இருப்பார்கள் என்று எண்ணினான்; விவரிக்க முடியாததோர் வருத்தம் அவனைக் கப்பிக் கொண்டது.

வருத்தம் குறையவும், வெப்பம் தாக்காதிருக்கவும், மாலை முழுவதும் மலர்ச் சோலைகளாகக் சுற்றினான் _ நீரூற்றுகளை நாடினான் _ எதைக் காணும்போதும் அவனுக்கு, எழில் எங்கும் இருக்கிறது! அதோ மலரும் அரும்பும் ஒரே கொடியில்! இதோ பெடையிடம் கொஞ்சும் சேவல்! ஆஹா! அந்த மந்தியின் பார்வையில்தான் எவ்வளவு குறும்பு!

எங்கும் எழிலோவியங்கள் காண்கிறோம்! செதுக்காத சிற்பங்கள்! உளியில்லை, உறக்கமற்ற இரவுகளில்லை, எனினும் கலைக்குக் கருத்தளிக்கும் ஓவியங்கள் உள்ளன! என் ‘கைத்திறன்’ எம்மாத்திரம்! _ என்றெண்ணிக் கவலையிலாழ்ந்தான்!

இருள் மெல்ல மெல்ல கப்பிக் கொண்டது _ என்றைய தினம் இணையற்ற மகிழ்ச்சி இருக்க வேண்டுமோ, அன்று அவனுக்கு விவரிக்க முடியாத ஓர் வருத்தம்!

பாறையில் படுத்து உறங்கி விட்டான்.

கனவில், தாயும் தந்தையும் வந்தனர் _ தாய் கடிந்து கொள்கிறாள். காடு கழனியைக் கவனிக்காமல், கல்லை உடைப்பதும் காலத்தை ஓட்டுவதுமாக இருக்கிறாயே என்று _ தகப்பன், சிறு பிரம்பு கொண்டே அடிக்கிறான், பெரிய சிற்பியோ! ச்சீ! பஞ்சைப் பயல் மகனே! பிழைக்கும் வழியைப் பாரடா! என்று மிரட்டுகிறார்.

கண் காணாத தேசம் சென்று விட்டனர் _ மகன் ஓர் உதவாக்கரை என்று சபித்துவிட்டு.

என்ன ஆனார்களோ! தெரியாது!

இவனோ ‘சிற்பி’யாகி விட்டான் _ புகழ்பரவி, அவர்கள் இருக்குமிடம் சேருமோ, அல்லது, எந்தச் சேதியும் தேவையற்ற நிலையை அவர்கள் அடைந்துவிட்டார்களோ, யார் கண்டார்கள்!

* * *

பாவம், களைத்துப் போய்விட்டான், _ என்று முதியவர் கூறினார்.

வீடு வாசல் இல்லையா, இப்படிக் காடு மேடு தங்கிட, என்ன காரணம் _ என்றாள் அவர் பேத்தி.

சிற்பி விழித்துக் கொண்டான்.

அய்யா, தாங்கள் யார்…? என்று கேட்டபடி, வெட்கித் தலைகுனிந்த வண்ணம், தன் வேல்விழியைப் பக்கவாட்டாகப் பாய்ச்சியபடி நின்ற பாவையைக் கவனித்துவிட்டு, “இது தங்கள் தோட்டமா? நான் அனுமதி இல்லாமல் நுழைந்துவிட்டேனோ? களைப்பில் தூங்கிவிட்டேன்’’ _ என்று குளறினான் _ குமாரி ‘கலகல’வெனச் சிரித்தே விட்டாள்.

“சும்மாகிட குட்டி, தம்பி யாரு, நீ? இந்தப் பக்கம், பொழுது சாய்ந்த பிறகு புலிகூட உலாவுமே, இங்கே படுத்துத் தூங்கலாமா? வா, வா என்னோட அரண்மனை அருகாமையில் இருக்கு’’ என்று கூறி அழைத்துச் சென்றார்.

அரண்மனை சமையற்காரர்களிடம் ‘அஞ்சும் மூணும்’ அடுக்கடுக்காகக் கொடுத்தும், ஏன் இப்படிச் சுவையாகச் சமைத்திடத் தெரிவதில்லை என்று எண்ணினான் _ அந்த மங்கையின் கரம் பட்ட துவையலும் பொரியலும், அவியலும் அப்படிச் சுவைத்தது அவனுக்கு.

ஏதேதோ பேசவேண்டுமென்று எண்ணினான் _ ஆனால் ஏனோ அந்த மங்கையின் பார்வை அவன் ‘நாவை’க் கட்டிப் போட்டுவிட்டது.

தாத்தா!… ஓ! தாத்தா… என்று கேட்டுக்கொண்டே முக்காடிட்ட உருவம் உள்ளே நுழைந்தது.

தாத்தாவும் தையலும் வரவேற்றனர்; வந்த பெண், சிற்பியைக் கண்டதும் சிலையாகச் சமைந்துவிட்டாள்; அவனும் அவளைக் கண்டு ஆச்சரியப்பட்டான். அவள், அரசனுடைய தங்கை, விதவை.

“கொழந்தே…’’ _ என்றான் கிழவன் _ “உஸ், பேசாதே’’ என்று எச்சரிக்கை செய்தாள் அரச குடும்ப அணங்கு.

“இவர் எப்படி உங்களுக்குத் தெரியும்?’’ _ அவள் கேட்கிறாள். “காட்டில் கண்டோம் _ வழி தவறி வந்தான் இந்த இளைஞன்’’ _ கிழவன் சொன்னான்.

“வரவேண்டிய இடத்துக்குத்தான் சிற்பி வந்து சேர்ந்திருக்கிறார்’’ என்று கேலியாகப் பேசிவிட்டு, அவள், கிழவனின் பேத்தியைப் பார்த்துச் சிரித்தாள்.

“தாத்தா, பாலில் கலந்து பருகியதும், பிணமாகிக் கீழே விழ வேண்டும் _ அப்படிப்பட்ட ‘விஷம்’ உடனே தேவை’’ என்றாள் அரச குடும்ப அழகி. சிற்பி திடுக்கிட்டுப் போனான்.

“நல்ல வாய்ப்பை இழந்து விட்டீரய்யா சிற்பியாரே, நாலு நாளைக்கு முன்பு தெரிந்திருந்தால்கூட, என்னையும் கல்லுருவமாக்கி இருக்கலாம். நாளைக்கு _ அல்லது நாளை நள்ளிரவுக்கு மேல் நான் இருக்க மாட்டேன்’’ _ என்று கூறிக் கொண்டே இருக்கையில் அவளுக்குக் கண்களில் நீர் ‘பொல பொல’வென உதிர்ந்தது.

“தம்பி, என்ன இது’’

“எனக்கொன்றும் தெரியாதே’’

“தாத்தா, இவர் சிற்பி _ நிபுணர் _ என் அண்ணனுடைய சிலையை அழகாகச் சமைத்திருக்கிறார்.’’

“ஆமாம், அம்மணி அதனால் என்ன…’’

“அதனால் என்னவா… அந்தக் கருணை பொழியும் முகம் எல்லோருக்கும் தெரியுமல்லவா, உமது கலைத்திறனால், என் அண்ணனுடைய புகழ்பரவும் _ உமக்கும்தான்…’’

“அம்மணி, தங்கள் வார்த்தையிலே கேலி தொனிக்கிறது…’’

“அய்யா, கல்லுளிச் சத்தத்தை மட்டுமே கேட்டுக் கேட்டுப் பழகிப் போனதால், என் வேதனை உமக்குக் காதில் படவில்லை; கண்ணீருமா தெரியவில்லை. கலைத் திறனைக் கொண்டு, யாருடைய சிலையைச் சமைத்திருக்கிறீர், தெரியுமா…. என் அண்ணன் சிலையை, என் அண்ணன் யார்? நாட்டுக்கு அரசன், போரில் புலி, கலாரசிகன், மக்களிடம் மதிப்புப் பெற்றவன், மண்டலம் பலவற்றிலே, செல்வாக்குப் பெற்றவன்…’’

“ஆமாம், அம்மணி, ஆமாம்…’’

“ஆனால், என் அண்ணன் ஒரு குருடன்…!’’

“அம்மணி!’’

“ஆமய்யா சிற்பியாரே! விழி திறந்திருக்கிறது. ஆனால், குருடன்! எல்லாருக்கும் அல்ல! அவரால், உன் சிலையைக் காண முடியும், கப்பப் பொருளைக் காண முடிகிறது. கோட்டை கொத்தளத்தை, பொக்கிஷத்தை பூஜாமாடத்தை _ எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. கல்லுடன் காலமெல்லாம் பழகும் சிற்பியே! என்னையும் பார்க்க முடிகிறது, ஆனால், என் கருவில் வளரும் சிசுவைக் காண முடியாத குருடன் அவர்…’’

“இதென்ன வேதனை, அம்மா!’’

“நான் விதவை, அய்யா! விதவை! என் குற்றமல்ல! என் அண்ணன், தன் ‘பட்டம்’ பறிக்கப்படாமலிருக்க வேண்டும் என்பதற்காக, சதிகாரர்களின் தலைவனாக இருந்த ஒரு கிழச் சீமானுக்கு என்னைத் ‘தாரை’ வார்த்துக் கொடுத்தார். ஆமாம், கோலாகலமான திருமண விழா! என் கண்கள் குளமாயின. சீமான்கள் குடித்துக் கூத்தாடினர். என் அண்ணன், இனி தன் பதவிக்கு ஆபத்து இல்லை என்ற களிப்புடன், அண்ணியுடன் பால்வண்ண நிலவில், பளிங்கு மாடியில், உலவினான் _ நான் பால் நுரைபோன்ற தலையுடன் தத்தி நடக்கும் காமாந்தகாரக் கிழவனிடம் சிக்கினேன் _ அவன் ஆஹா! என்றான். என் ‘அய்யோ!’’ கூட அவனுக்கு, கீதமாக இருந்தது!’’

“கிழவனுக்கு மனைவியாக, எப்படி இருப்பது என்பதை நான் தெரிந்து கொள்ளச் சிலகாலம் பிடித்தது _ அதற்குள் என் காதலர், களத்திலிருந்து திரும்பினார் _ யார் அவர்… உமக்கு உதவியாக அமர்த்தப்பட்டிருந்தாரே…’’

“கதிரவன்…!’’

“ஆம், என் இதயத் தாமரையை மலரும்படி செய்தவர். அரியாசனம் கிடைக்காததால் வெறும் போர் வீரனாக உள்ளவர். அவருடைய ‘காதற்கனி’யைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன்…’’

“விதவையான பிறகா…?’’

“கலைமட்டுமறிந்த ஆடவனே! எனக்கு எப்போது திருமணமாயிற்று, விதவையாக… கிழவனுக்குக் கலியாணம் நடந்தது. அவன் பிறகு இறந்தான். கருணை பொழியும் கண்களைச் செதுக்கி இருக்கிறாயே, நாளைக்குக் காணப் போகிறார்களல்லவா, காவலர்கள், நாவலர்கள்… அந்தக் கண்களிலே ஒரு துளி கருணை பிறக்கவில்லை, நான் காலில் வீழ்ந்தேன்… கண்ணீர் பொழிந்தேன்… கருவில் வளரும் செல்வத்தைக் கவனப்படுத்தினேன்… மறுமணத்துக்கு இசைவு தரச் சொன்னேன்.. இந்த மண்டலத்துக்கு அதனால் இழுக்கு நேரிட்டு விடுமென்றால், எம்மை ‘ஓடிவிட’ அனுமதி தாரும், உமது ‘ஓநாய்களை’ அனுப்பி விரட்டிப் பிடிக்காமலிருந்தால் போதும் என்று மன்றாடினேன்…’’

“என்ன சொன்னார், மன்னர்! அம்மணி, என்ன சொன்னார் அரசர்.’’

“அரசரா, அரச நீதி பேசினார்… என் கதிரவனைச் சிறையில் தள்ளிவிட்டார்… நாளை மறுநாளோ, நாலு நாளைக்குப் பிறகோ, விழா முடிந்ததும் சிரச்சேதமாம்…’’

“என்ன அநியாயம்… என்ன அக்ரமம்…’’

“என்ன அழகான சிலை _ எத்துணை கெம்பீரம், என்று நாளைய தினம் புகழப் போகிறார்கள் _ நான் இன்றிரவு பிணமாக வேண்டும்…’’

“தங்கையே, பிணமாக வேண்டியதில்லை. பிழை செய்த நான், கழுவாய் தேடுவதைக் கண்டு களித்திட வேண்டுகிறேன்… காதலனை மீட்டிடவும், கடிமணம் புரிந்திடவும் வழி நான்  கண்டளிக்கிறேன்… தங்கள், உயிர் துறக்கும் முடிவை மட்டும் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்…’’

“ஆமாம், அக்கா, அவர் வார்த்தையை நம்புங்கள்…’’

“குழந்தாய் தற்கொலை பெரிய பாபமம்மா…’’

“தற்கொலை கூடாது என்பது மட்டுமல்ல; கருவில் உள்ள குழவி…’’

“ஆமாம்… அது எல்லாவற்றையும்விட அக்ரமம்.’’

“சத்தியம் செய்யுங்கள் அம்மணி…’’

“நானா? என்னவென்று?’’

“தற்கொலை செய்துகொள்வதில்லை என்று.’’

“அக்கா, அவரை நம்புங்கள்.’’

“ஆகட்டுமடி மருதம்,’’ இந்த உரையாடலுக்குப் பிறகு, சிற்பி, வேகமாக ஊர் திரும்பினான். அரசன், நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.

உளிச்சத்தம்! ஆள் சென்றான்! சிற்பி அவனிடம், மிக முக்கிய ‘வேலைப்பாடு’ அமைக்க மறந்து விட்டதாகவும், விடிவதற்குள் அதனைச் செய்து முடிப்பதாகவும் கூறி அனுப்பிவிட்டான். “மன்னர்பிரான் வேழமுகத்தாருடைய உருவச் சிலையத் திறந்து வைக்கும் பாக்கியம், எனக்குக் கிடைத்தது பற்றி நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்…’’

“மன்னர்களில் மாணிக்கம் எனத்தக்க மாண்புள்ள நம் வேழமுகத்தாரின் சிலையை, கலை மன்னர் என்று போற்றத்தகும் சிற்பி சந்தனத்தேவன் சமைத்திருக்கிறார்.’’

அந்த உருவச்சிலை, கலையின் நேர்த்தியை எடுத்துக் காட்டுவதுடன், மன்னர்கள் எங்ஙனம் ஆட்சி நடத்தி மக்களுக்கு இதம் செய்ய வேண்டும் என்கிற மாண்பினை எடுத்துக்காட்டுவதாக இருக்கும் என்பது திண்ணம் _ என்று சொற்பொழிவாற்றிவிட்டு, சோமேசர் மடாலயத் தலைவர் சொர்ணலிங்க குரு, திரைச் சீலையைத் திறந்தார் _ மண்டலாதிபதிகள், மந்திரி பிரதானியர், சிற்பிகள் அனைவரும் கரகோஷம் செய்தபடி, வேந்தர் வேழமுகத்தார் வாழ்க, என்று வாழ்த்தொலி கூறியவண்ணம் சிலையைப் பார்த்தனர் _ இரு கண்களும் குருடாகச் சிலை காணப்பட்டது. உளியினால் ஆழமாக இரு குழிகளாக்கப்பட்டு விட்டிருந்தன. அனைவரும் பதறினர், அடடா, அய்யகோ யார் செய்த வேலை, என்ன போக்கிரித்தனம், எங்கே சிற்பி _ இதென்ன கோலம் _ என்று பலர் பலவிதமாகக் கூவினர்.

சிற்பி சந்தனத்தேவன் பதறாமல், நின்றான்.

“ஏன் பதைக்கிறீர்கள், அரசன் குருடன், அதை அறிந்த பிறகுதான், சிலையில் நான், இந்தத் ‘திருத்தம்’ செய்தேன்….’’

பித்தம் பிடித்துவிட்டதோ _ என்று பெருங்கூச்சலிட்டனர் அமைச்சர்கள். பிடித்துக் கட்டுங்கள் கம்பத்தில், என்றான் மன்னன்.

“வேண்டாம் வேந்தே, கதிரவன் இருக்கும் காராக்கிரகத்தில் என்னையும் கொண்டுபோய்த் தள்ளுங்கள் _ பிறகு, முதலில், தங்கள் சிலையில் நான் செய்த திருத்தம் தவறா, என்று கேளுங்கள், நான் பதிலளிக்கிறேன். நான் கலைஞன் _ கூலிக்காரனல்ல. கலை, கற்பனையை ஏற்றுக் கொள்வதுதான், ஆனால், உண்மையை மறைப்பது கலையாகாது. நாள் கணக்கில் _ மாதக் கணக்கில், நான் சிலை செதுக்கிக் கொண்டிருந்த போதெல்லாம், குருடனாகத்தான் இருந்தேன் _ அதனால்தான் தாங்கள் குருடர் என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை! நேற்று இரவுதான் எனக்குக் கண் திறந்தது; தாங்கள் குருடர் என்பது தெரிந்தது.

“கசை அடி கொடுங்கள் _ கீழே சுருண்டு விழும் வரையில்…’’

_ மன்னன் கட்டளையிட்டான்.

“கட்டாரி கொடுங்கள் எனக்கு _ நான் இறந்த பிறகு கசையடி விழா நடத்தட்டும்’’ _ என்று கூறியபடி, மன்னனின் தங்கை, மன்றம் நுழைந்தாள். சிற்பியையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தனர், மன்றத்தினர் சந்தேகத்தோடு.

“அவள் என் தங்கை. அறிவிலிகளே, அவள் என் தங்கை, அவள் விதவை, விவேகமற்றவரே, விதவை. ஆனால், ‘தாய்’ ஆகும் நிலையில் தத்தளிக்கும் துர்ப்பாக்கியவதி…!’’

மன்றம் பரபரப்பு அடைந்தது. மன்னன் மன்றத்தைக் கலைத்துவிட எவ்வளவோ முயன்றான் _ முடியவில்லை _ படை வரிசையினரே, சிற்பியின் பேச்சைக் கேட்கக் கூடிவிட்டனர். “ஆம், நான் குருடன்தான்… சமூகக் கட்டுப்பாடு, போலிக் கௌரவம் என்பவைகள் என் கண்களைக் குருடாக்கி விட்டன _ சந்தனத்தேவன், என்னைக் குருடனாகச் சமைத்தது முற்றிலும் பொருத்தமே….’’ என்று மனம் கசிந்து கூவினான் மன்னன்.

காலடி வீழ்ந்த தங்கையின் கண்ணீரைத் துடைத்தான் _ “கதிரவனுக்கு மன்னனைக் கடிமனம் செய்விக்கிறேன், இன்றே, இங்கேயே, இப்போதே…’’ என்று கூறினான்.

விழா மன்றம், மணமன்றமாகிவிட்டது.

சிற்றுளி எங்கே, எங்கே என் சிற்றுளி, என்று களிப்புடன் கூவினான் சந்தனத்தேவன் _ கையாள் கொடுத்த சிற்றுளியைக் கொண்டு சிலையில் கண் அருகே சில விநாடி ‘வேலை’ செய்து, புதிதாக அங்கு செதுக்கி அமைத்திருந்த குருட்டு விழியைப் பெயர்த்தெடுத்தான் _ சிலையின் சோபிதம் குன்றாமல் விளங்கிற்று. கண், ஒளிவிட்டது, கண்ணீர் மல்கிய நிலையில், மன்னன் சிற்பியைக் கட்டித் தழுவிக் கொண்டு, கண் திறந்தது, _ என்றான். இஃதன்றோ, உண்மையான திறப்புவிழா, என்று கூறி மகிழ்ந்தனர் மன்றத்தினர். (9.10.1955)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *