2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடத் தேர்வாகியுள்ளார் மாரியம்மாள். தமிழகம் சார்பில் தேர்வாகியிருக்கும் ஒரே பெண். கூலித் தொழிலாளர்களான பாலமுருகன் – காந்திமதி தம்பதியின் மகள் மாரியம்மாள், தற்போது நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ‘ப்ளஸ் டூ’ படித்து வருகிறார்.
“பொம்பளப்புள்ளைக்கு எதுக்கு விளையாட்டுன்னு மத்தவங்க சொன்னாலும், அதையெல்லாம் கொஞ்சம்கூடக் கண்டுக்க மாட்டாங்க எங்க அப்பா, அம்மா. அவங்களுக்கு ‘ஃபுட்பால்’ பத்தி எதுவும் தெரியாது. ஆனால், நான் விளையாட்டில் ஜெயிச்சிட்டு வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அப்பா, அம்மா கூலி வேலைக்குப் போனாலும், என் புள்ள அவளுக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழணும், அதுக்கு என்ன வேணாலும் பண்ணுவோம்னு சொல்லுவாங்க. நான் எது கேட்டாலும் வாங்கித் தருவாங்க. அவங்களோட சக்திக்கு மீறி உழைக்கிற அவங்களுக்காக, என்னோட சக்திக்கு மீறி நானும் உழைச்சு விளையாட்டில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் ஜெயிக்கணும். ‘இதுதான் என் கனவு’ – தன் கனவுகளைப் புன்னகையுடன் விவரிக்கத் தொடங்குகிறார் மாரியம்மாள்.
“தெரியாத ஒரு விளையாட்டைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம்தான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கு’’ என்கிறார் மாரியம்மாள். ஏழாம் வகுப்பு வரை சங்ககிரியில் படித்துவந்த மாரியம்மாள், அதன்பிறகு நாமக்கல்லில் உள்ள மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கிப் படித்தார். மாரியம்மாளின் தடகளத் திறமையே அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. எட்டாம் வகுப்பு படித்தபோது பயிற்சியாளர் கோகிலாவின் வழிகாட்டலில் மாரியம்மாள் கால்பந்து விளையாடத் தொடங்கினார்.
“ஆரம்பகாலப் பயிற்சியின்போது நடைபழகும் குழந்தையைப்போல் தத்தித் தத்தித்தான் விளையாடினார் மாரி. இடைவிடாத பயிற்சியால் இப்போது கால் பந்தைத் தொட்டால் ஒரு கோலையாவது அடிக்காமல் மைதானத்தை விட்டு வெளியே வருவதில்லை. 9ஆம் வகுப்பு படிக்கும் போதே, மாநிலக் கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு முன்னேறினார். ஜூன் மாதம் கோவாவில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் தேசிய ஜூனியர் கால்பந்துப் போட்டியில் 12 கோல்களை அடித்து, அந்தத் தொடரில் அதிகமான கோல்களை அடித்தவர் என்கிற பெருமையைப் பெற்றார். மாரியம்மாள் அடித்த அந்த 12 கோல்கள் மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றுக்கு அவரைத் தேர்வுபெற வைத்தது.
இந்தியாவில் நடைபெறும் முதல் ஜூனியர் உலகக்கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டி இது. இதற்காக நாடு முழுவதுமிருந்து 35 வீராங்கனைகள் முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டார்கள். அதில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தகுதித் தேர்வில் 24 பேரில் ஒருவராக மாரியம்மாள் தேர்வாகியிருப்பது இந்திய அளவில் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
மகளிர் உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணியில் மாரியம்மாள் நிச்சயம் இடம்பெறுவார் என நம்புகிறேன். அப்படி நடந்தால் தமிழகத்திலிருந்து சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ளும் முதல் வீராங்கனை என்கிற பெருமையும் அவருக்குக் கிடைக்கும் என்று நெகிழ்கிறார் பயிற்சியாளர் கோகிலா. ஜூனியர் நேஷனல்ஸ் தொடரில் தமிழ்நாடு காலிறுதிக்குள் நுழைந்ததற்கு முக்கிய காரணம் மாரியம்மாள். அரியானா அணியோடு நடந்த ஆட்டத்தில் முதலில் இருந்தே 1 – 1 என்று விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்தது. தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில், இவர் அடித்த அந்தக் கோல்தான் வெற்றிக்கு அடித்தளமிட்டது. அப்போது நடப்பு சாம்பியனான மணிப்பூரை 4- 1 வித்தியாசத்தில் தோற்கடித்ததில் இருந்த வேகம், தற்போது உலகக் கோப்பைப் போட்டி வாய்ப்பை மாரிக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.
தகவல் : சந்தோஷ்