Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சிந்தனைத் துளிகள்

 “இனி தண்ணீரிலும் கார் ஓட்டலாம்!” 

“இந்த இன்ஜினுக்கு ஆதார சுருதியே ஹைட்ரஜன் தொழில்நுட்பம்தான். ஜப்பான் மாதிரியான சில நாடுகளில் மட்டும்தான் வாகனங்களில் பெட்ரோலுக்குப் பதிலா ஹைட்ரஜனைப் பயன்படுத்துறாங்க. ஆனா, ரொம்ப காஸ்ட்லியான தொழில்நுட்பம்தான் புழக்கத்துல இருக்கு. தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரிக்க கோடிக்கணக்கான பணம் செலவு செய்கிறார்கள். அது மட்டுமல்ல;  இதைச் சேமித்து வைக்கின்ற ‘ஹைட்ரஜன் ஃபில்லிங் ஸ்டேஷன்’ தொடங்கவே இந்திய மதிப்பில் 15 கோடி ரூபாய் தேவைப்படும். அதிலும் சுமார் 300 கிலோ ஹைட்ரஜனை மட்டும்தான் சேமிக்க முடியும். ஒரு கிலோ ஹைட்ரஜன் ஆயிரம் ரூபாய் வரை விற்கிறார்கள். அப்படியிருக்க, ஒரு இன்ஜினுக்குள்ளே தண்ணீரை விட்டு, அதிலிருந்தே ஹைட்ரஜனைப் பிரித்து எடுத்து அந்த இன்ஜினை ஓட வைக்கலாம் என்று தோணுச்சு.

நாம் பயன்படுத்துகிற ஒரு கிலோ தண்ணீரில் 111 கிராம் ஹைட்ரஜன், 890 கிராம் ஆக்சிஜன் இருக்கு. ஹைட்ரஜனை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிற மாதிரி சில புதிய தொழில்நுட்ப பாகங்களை நானே உருவாக்கினேன். எல்லாமே வெற்றிகரமாக அமைந்தது. நான் கண்டுபிடித்த இன்ஜினுக்கு ‘சூப்பர் ஸானிக் ஹைட்ரஜன் அய்.சி.இன்ஜின்’ என்று பெயர் வைத்தேன்’’ என்கிறார் கிராமத்து விஞ்ஞானி சவுந்தரராஜன்.

******

புதுக்கோட்டை – அய்ங்கரன் உணவகத்தில்

ஜாதி மத வெறிக்கு எதிர்வினை 

03-08-2019 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழில் வந்த செய்தியானது புதுக்கோட்டை – அய்ங்கரன் உணவகத்தின் உரிமையாளர் எ.அருண்மொழி, நிருபர்களிடம் கூறுகையில், “உணவுக்கு முன்பாக எந்த ஜாதி மதமும் கிடையாது. ‘மதத் துவேஷம், ஜாதி மத வேறுபாடு பார்ப்பவர்களுக்கு எனது உணவகத்தில் உணவு கிடையாது’ என்று எல்லோரும் பார்க்கும்படி அறிவிப்புப் பலகையே வைத்துவிட்டேன்’’ என்கிறார். மேலும் கூறுகையில், “சோமாபடோ உணவகத்தில் தயாரிக்கப்பட்டு, வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்ற உணவினை, எடுத்துச் சென்றவர் ஒரு ‘முஸ்லிம்’ என்கிற ஒரே காரணத்தால், கொண்டு சென்ற உணவினை வாங்க மறுதலித்து திருப்பி அனுப்பிய செய்கை எனக்கு மனதளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இதன் எதிரொலியாக, எனது உணவகத்தில், “ஜாதி மத வேறுபாடு பார்ப்பவர்களுக்கு உணவு இல்லை’’ என்ற எல்லோரும் அறியும்படியாக அறிவிப்பு பலகை வைத்துவிட்டேன். அண்மையில் நடந்த ஜாதி, மத மோதல்கள் மிகுந்த மனவேதனை அளிக்கிறது’’ என்றார். “இந்த எனது செயலை, எனது வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் ஏற்று பாராட்டி வருகிறார்கள்’’ என்கிறார் அருண்மொழி.

******

மீன்வளம்

மிகப் பெரிய நீர்வளம் நீண்ட கடற்கரை கொண்ட இந்தியாவில் 25 இலட்சம் டன் மீன்கள்தான் கடலிலிருந்து பிடிக்கிறோம். ஆனால், சிறிய நாடான ஜப்பான் ஒரு கோடி டன்னுக்கு மேலாக கடலில் மீன் பிடிக்கிறது.

******

விண்வெளியில் தண்ணீர் விநியோகம்

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்பிட் ஃபேப்  (Orbit Fab) எனும் தொடக்கநிலை நிறுவனம் (startup) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்துள்ளது. ஒரு தனியார் நிறுவனம் முதன்முதலாகச் செய்துள்ள சாதனை இது. ஃபர்பி எனும் பெயரிடப்பட்ட சோதனையில் இரண்டு விண்கல சோதனைப் படுக்கைகளுக்கிடையே தண்ணீரைப் பரிமாறி தனது திறமையை நிரூபித்துள்ளது. இது எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பிட உதவக் கூடும் என்பதை காட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி அமெரிக்க தேசிய ஆய்வுக்கூடத்தின் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டது.

******

ஆப்பிரிக்கக் கண்டம்தான் உலகிலேயே அதிக நாடுகள் கொண்ட கண்டம். மொத்தம் 54 நாடுகள் இந்தக் கண்டத்தில் உள்ளன.

******

பாப்புவா நியூகினியா என்பது ஒரு சிறிய நாடு. ஆனால், உலகிலேயே மொழி வேறுபாடுகள் அதிகம் நிறைந்த நாடு இது. 851 மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.

******

உலகின் மிகப்பெரிய தீவு நாடு எது தெரியுமா? கிரீன்லாந்து. இத்தீவின் பரப்புளவு 2,166,086 ச.கி.மீ.