மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். உண்மையில் கலைஞர். உண்மையாகச் சொல்கிறேன். கலைஞரை எனக்கு மிகவும் பிடிக்கும். கலைஞரைப் போல ஒரு தலைவர், கவிஞர், எழுத்தாளர், மனிதநேயர் தமிழ்நாட்டுக்கு எப்போது கிடைப்பர் என்கிற ஏக்கம் எனக்குண்டு. கலைஞர் சிறந்த மாபெரும் தலைவர். சிறந்த முதலமைச்சர். இன்னும் சொல்லப்போனால் அவர் எழுதிய குறிப்புகளைப் பார்த்தவள் _ நேரில் பார்த்தவள்; அவர் பேசியதைக் கேட்டவள். தலைமைச் செயலக ஊழியர்களுள் நிறையப் பேருக்கு அவரைப் பிடிக்கும். மறக்கவே முடியாதுங்க கலைஞரை என்னால்! அவர் இல்லை என்று நினைக்கக்கூட என்னால் முடியவில்லை. கலைஞரைப் போல் ஒரு தலைவரை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.
தலையங்கம் உண்மை. கல்லப்பாடி க.பெ.மணியன் “சாதிகளை உருவாக்கிய சதிகாரர்கள்’’ நாட்டில் நடக்கும் கொடுமைகளை வெளிப்படையாக விவரித்துள்ளார். தீண்டாமை அதிகரி த்துள்ளது, ஆணவக் கொலைகள் அதிகரி த்துள்ளதற்கு, சாதியும், தீண்டாமையுமே காரணம். அருமை யான கட்டுரை. படிப்பவர்களை கண்டிப்பாக சிந்திக்க வைக்கும். அருமை, மிக அருமை!
வ.க.கருப்பையா அவர்களின் பெரியாரின் பேரறிவு நெகிழ்ச்சியை மட்டுமல்ல, மகிழ்ச்சியையும் அளித்தது. பெரியார் பெரியார்தான். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் தந்தை பெரியார் பற்றிய கவிதை அதிரசம் அதி! ரசம்! என்னைப் பொறுத்தவரை பெரியாரின் அன்பான செய்கைகள் நிகழ்ச்சிகள் என்னை மீண்டும் மீண்டும் பெரியார் குறித்த நூல்களைப் படிக்க வைக்கின்றன.
திரு.மஞ்சை வசந்தன் அண்மையில் அவர் எழுதிய “இவர்தான் பெரியார்’’ என்கிற நூலைப் படித்தேன். ‘உண்மை’ இதழில் அவர் பெரியார் குறித்து எழுதுவதை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. அளப்பரிய பணி. தொடரட்டும். என்னைப் போன்ற பெரியாரைப் பற்றி தெரியாதவர்களுக்கு மஞ்சை வசந்தன் ‘குரு’ என்றால் மிகையில்லை. என்னுடைய வாழ்த்துகள்! ஓர் உண்மை இதழின் வாசகியாகவே இதை எழுதுகிறேன்.
பொதட்டூர் புவியரசன் கட்டுரை நித்தம் நித்தம் அரங்கேறும் அவலம்தான். புத்தி கெட்டுப் போனவர்களை திருத்தத் தேவை பெரியார். ‘பக்தி இருந்தால் புத்தி போகும்’ என்றாரே பெரியார்! பெரியாரின் கருத்துகள் இடைவிடாது மீண்டும் மீண்டும் பரப்பப்பட வேண்டும்.
என்றென்றும் நன்றியுடன்,
– ஞா.சிவகாமி