ஜாதிப் பித்தர்களே!
ரத்தம் வேண்டுமா ரத்தம்
எடுத்துக்கொள்ளுங்கள் என்னில்
கத்தி உள்ளதா கத்தி
செருகுங்கள் என் கண்ணில்
கொள்ளி உள்ளதா கொள்ளி
செலுத்துங்கள் என் புண்ணில்
சிந்தி முடிந்ததா கோபம்?
வெந்து தணிந்ததா வீடு?
இப்போது சொல்லுங்கள்
இது என்ன
குடலுக்கும் வயிற்றுக்கும்
குருட்சேத்திரமா?
இந்த மண்ணில்
வெற்றிலை எச்சில் துப்பவும்
விரும்பாதவன் நான்
இப்படி ரத்தம் துப்பினால்
எப்படி?
**
கண்ணுக்குள்
கறுப்பும் வெள்ளையும்
கை கலக்குமாம்
இமை இறங்கிவந்து
தீ வைக்குமாம்
இந்த தேசத்தில்
அடுப்புகளுக்கே இன்னும்
நெருப்புவந்து சேரவில்லை
அதற்குள் கூரைக்கா…?
**
விசாலப்படுத்தச் சொன்னது
மனத்தைத்தானே
மயானத்தையா…?
**
இந்த ஜாதிக்கத்தி
தற்கொலைப் பட்டறையில்
தயாரிக்கப்பட்டதப்பா
இந்தக் கத்திக்கு
இரண்டு வேலை
எதிர்த்தவனைஅழிப்பது
எடுத்தவனையும் ஒழிப்பது
எறியுங்கள்
எறிந்தே விடுங்கள்
ஜனத்தொகை விடவும்
பிணத்தொகை மிகுந்தால்
இனத்தொகை என்னாவது…?
**
ஜாதி ஒரு மாயை
எந்த ரசாயனம்
ஜாதியின் நிறம் காட்டும்?
எந்த பவுதிகம்
ஜாதியின் குணம் காட்டும்?
“இப்போது தேவை
இன்னஜாதி ரத்தம்’’
வரிவிளம்பரம் வந்ததுண்டா?
“இப்போது இன்னஜாதி அரிசி
இங்கே கிடைக்கும்
கடையில் பலகை கண்டதுண்டா?
சொல்லுங்கள்
வெட்கத்தில் விழுகிறேன்
துக்கத்தில் அழுகிறேன்
**
உலகம்
விண்ணைத் துளைத்து
விடியவைக்கப் பார்க்கிறது
நாமோ பூமியைத் துளைக்கும்
புழுக்களாய்… புழுக்களாய்…
உலக மானுடம்
சிறகு தயாரிக்கச் சிந்திக்கிறது
நாமோ
இருக்கும் உடைகளையும்
இழந்துவிட்டு… இழந்துவிட்டு…
**
இங்கு
எல்லா ஜாதியும் இருக்கிறது
இல்லாத ஒரே ஜாதி
மனிதஜாதி
இன்னும்
தீப்பந்தம் தேவை
ஜாதியின் சடலம் எரிக்க
இன்னும்
ஆயுதம் தேவை
வகுப்புவாதத்தின்
ஆணிவேர் அறுக்க
இப்போதைக்கு
ஒரு வெண்புறா தேவை
திரும்பத் திரும்பத்
தெற்கில் பறக்க
– கவிப்பேரரசு வைரமுத்து