உடுமலைப்பேட்டையில் சேரன் போக்குவரத்துக் கழகத்தின் கிளை மேலாளராகப் பணி செய்தபோது எப்படியோ என்னைத் தெரிந்து கொண்டு வீட்டிற்கு வந்தார் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி. வந்தவர் என் வீட்டைச் சேர்ந்த சகோதரிகள், சகோதரர்கள் ஒவ்வொருத்தரைப் பற்றியும் பெயர் சொல்லி விசாரித்தார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் யார்? எப்படி எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றியெல்லாம் கூறுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்குப் பதில் சொல்ல மறுத்தவர், ஒரு நாள் என் வீட்டிற்குச் சாப்பிட வா சொல்றேன் என்றார்.
அந்த ஞாயிற்றுக்கிழமையே அவரது வீட்டிற்குச் சென்றேன். பலமான வரவேற்பு. இப்போது சொல்லுங்கள் என்றேன். முதலில் சாப்பிடு என்றார். சுவையான விருந்து முடிந்ததும் மீண்டும் கேட்டேன். அப்போது மெதுவாக அவுங்க வீட்டுப் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று கதவைத் திறந்து காட்டினார்கள். உள்ளே அப்பாவின் படம் நடுநாயகமாக இருந்தது. எனக்கு அதிர்ச்சியும் நெகிழ்ச்சியுமாய் இருந்தது. பின்னர் அந்தப் பெண்மணியே பேச ஆரம்பித்தார்.
எனக்குச் சிறுவயதிலேயே திருமணம். கணவர் சில மாதங்களே என்னோடு வாழ்ந்தார். பெற்றோர் வீட்டில் வறுமை. நான் பார்க்க மிக அழகாக இருப்பேன். அதனால் தெரிந்த ஒருவர் கூறிய யோசனையைக் கேட்டு, சினிமாவில் நடிக்கும் ஆசையோடு கலைவாணரைப் பார்க்க உங்க வீட்டிற்கு வந்தேன். உங்க அப்பா வெளியூர் சூட்டிங் சென்றிருந்தார். வர ஒரு வாரம் ஆகுமென்று சொன்னாங்க. என்ன செய்வது என்று குழம்பியபோது வீட்டிலிருந்த வேப்பம்மா (டி.ஏ மதுரத்தின் தங்கை ) கலைவாணர் வரும் வரை இங்கேயே தங்கிக்கொள் என்று சொன்னார்கள்.
நானும் உங்க வீட்டிலேயே தங்கியிருந்தேன். அப்போது பழகியதுதான் உங்கள் வீட்டுப் பெண்களிடம். அதை வைத்துத்தான் உன்னிடம் அவுங்க பெயரைச் சொல்லி விசாரித்தேன். அப்புறம் கலைவாணர் வந்தார். விவரம் தெரிஞ்சுக்கிட்டு என்னை மாடிக்கு அழைத்தார். கலைவாணர் சொன்னார், என்னை மதித்து என் வீடு தேடி வந்திருக்கிறாய். நான் சொல்வதை மறுக்காமல் கேட்பாயா? என்றார். கேட்பேன் என்றேன். நான் பணம் தருகிறேன். நீ போய் ஆசிரியர் பயிற்சி அல்லது செவிலியர் பயிற்சிப் பள்ளியில் சேரு. அதற்குண்டான உதவிகளைத் தொடர்ந்து செய்கிறேன் என்றார்.
உங்க அப்பா எனக்குச் சரியான வழியையும் காட்டி பண உதவியையும் செஞ்சார். அதற்கு நன்றிக்கடனாத்தான் உங்க அப்பாவைத் தெய்வமா கும்பிடுறேன். உங்க வீட்டில் ஒரு வாரம் உட்கார்ந்து சாப்பிட்ட நான் பிற்காலத்தில் ஒரு வேளையாவது என் கையால உங்க அப்பாவுக்குச் சாப்பாடு போடணும்னு விரும்பினேன். ஆனா இன்னைக்கு உனக்குச் சாப்பாடு போட்டதன் மூலம் அந்த ஆசையை நிறைவு செஞ்சுக்கிட்டேன். மனம் மகிழச் சொன்னார். அப்போது என் கண்கள் கலங்கின.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் மகன் நல்லதம்பி
நன்றி : yananwritings.wordpress.com