சிறுகதை

நவம்பர் 01-15

குருவையா  கொத்தனார்

எங்கள் சுற்றுப் பட்டிகளில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு குருவையா கொத்தனாரை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை.

இளம் வயதிலேயே பெரிய கொத்தனார் எனப் பெயரெடுத்தவன். வீடு கட்டணும் என்று சொன்னால் போதும். அக்கணமே அனுபவமுள்ள சிவில் இன்ஜினியராக அவதாரம் எடுத்து விடுவான். இடத்தின் நீள அகலத்திற்கு ஏற்ப ஒரு வெற்றுக் காகிதத்தில் உத்தேசமாக அவன் போடும் கோடுகள் வரைபடமாக நமக்குத் தெரியும்! பிடித்துப் போகும்.

அடுப்படி, அலமாரி, சன்னல், குளியலறை, கழிப்பறை, ஏணிப்படி இவையெல்லாம் எந்தெந்த இடத்தில் எப்படி அமையும் என்பதை குருவையா விளக்கும்போதே வீடு முடிந்துவிட்டது போன்ற நிறைவு ஏற்படும். திருத்தம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. தலையாட்டிவிட்டு அவனிடமே வேலையை ஒப்படைப்பார்கள். மணல், செங்கல், சுண்ணாம்பு, சிமென்ட், மரம், கம்பி போன்ற விலை பொருள்களைத் தேர்வு செய்வதை, வாங்குவதை அவனிடமே விட்டுவிடுவார்கள். துணைக் கொத்தனார்கள், நிமிர்ந்தாள்கள், சித்தாள்கள் நியமனங்களில் வீட்டுக்காரர் தலையிடுவதே இல்லை. பெரிய கொத்தனார் என்பவர் வேட்டி சட்டை அழுக்காகாமல் மேற்பார்வையிடும் மேஸ்திரி, சட்டாம்பிள்ளை என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தவன்.

வேலைக்கான ஆள்கள், தளவாடங்கள் தயார் என்றால் தோளில் கிடக்கும் துண்டு தலைக்குப் போய்விடும். தம்முடன் பணியிலிருப்பவர்களுக்குத் தகுந்த உத்தரவுகளைத் தந்துவிட்டு கரண்டியைக் கையில் எடுத்தால் மதியம் இடைவேளை வரை கீழே போடமாட்டான். உணவும் சிறிது ஓய்வும் எடுத்த பிறகு திட்டமிட்ட அன்றைய வேலையை நிறைவு செய்யும் வரை இயங்கிக் கொண்டிருப்பான். தொழிலில் அந்தளவுக்கு அக்கறை, ஈடுபாடு!

அவனிடம் வேலையை ஒப்படைக்கக் காத்திருந்தவர்கள் உண்டு. கிராக்கி இருக்கிறது என்பதற்காக வருகிற வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டு விழி பிதுங்கி நின்றதுமில்லை. தொட்டுவிட்ட வேலை முடியும் முன்பு அடுத்ததை ஒப்புக்கொள்ளும் பேராசையும் இல்லை. தொழிலுக்கு மரியாதை!

இப்படியெல்லாம் சர்டிபிகேட் கொடுக்க நான் யார் எனும் கேள்விக்கு விடை…

அனுபவம்! என் நண்பர் ஒருவரின் வீடு கட்டும் வேலை நடந்தது. அங்கே பலர் வேலை செய்து கொண்டிருக்க, என் பார்வை அவர்களில் ஒருவனான குருவையா மீது பதிந்தது. பதின் வயதில் அவன் காட்டிய சுறுசுறுப்பும், செயல்திறனும் என்னை மலைக்க வைத்தது. அவனைப் பற்றி நண்பரிடம் கேட்டேன்.

ஏழை விவசாயி வீட்டுப் பிள்ளை. தொடக்கக் கல்விகூட முடிக்கவில்லை. உழைத்துச் சாப்பிட வேண்டிய சூழல். மிக அருகாமையில் இருக்கும் கிராமத்தான். கட்டிட வேலைதான் கிடைத்தது. அதில் ஆர்வமானான். கொத்தனாராகக் கரண்டி ஏந்தியபோது அவனிடம் சித்தாள் வேலை கேட்டுச் சேர்ந்தவள் வைகை.

தொழிலும் இளமையும் அவர்களை இணைத்தது. மணலும் சிமென்ட்டும் கலந்தன. வாழ்க்கை இணையர்கள் ஆனார்கள். குழந்தை பெறும் வரை இருவரும் ஒரே சைக்கிளில் வேலைக்கு வருவார்கள். பிள்ளைகள் இரண்டு ஆனதும் வைகை வேலைக்கு வருவதில்லை. தாய்மார்களுக்கே உரிய கடமைகளில் மூழ்கினாள்.

வாடகை வீட்டு வாசம் கசந்துபோக, சொந்த வீடு வேண்டும் என்ற எண்ணம் துளிர்க்க, நிதி ஆதாரம் கைகொடுக்க சட்டென குருவையாவைத் தேர்வு செய்தேன். இதனை இதனால் இவன் முடிப்பான் என்ற நம்பிக்கையில் அதனை அவனிடமே விட்டேன். குழுவில், கூட்டத்தில் ஒருவனாக வேலைக்குப் போய் வந்தவனுக்கு, பொறுப்புள்ள பெரிய கொத்தனார் பதவியில் அமர்த்திய போது நெகிழ்ந்து போனான். வேலையைத் தொடங்கச் சொல்லி அவன் கையில் கணிசமான தொகை ஒன்றைத் திணித்தேன். திணறித்தான் போனான். புதிதாய்ச் சிறகுகள் முளைத்துவிட்டது போன்ற உணர்வுபோலும்!

நாள் செய்வது என்பது கொத்தனார்களுக்குத் தவிர்க்க முடியாத ஒரு சடங்கு. வாஸ்து, நாள் நட்சத்திரம், நல்ல நேரம் என்று வேண்டாதவற்றை யெல்லாம் நினைவுப்படுத்துவார்கள். குருவையா என்னிடம் அப்படிச் சொன்னபோது, அதெல்லாம் வேண்டாம். வேலை உடனே ஆரம்பிக்கணும் என்றேன். அவன் மறுக்கவில்லை. அன்றே செயல்பட ஆரம்பித்தான். வீட்டை முடித்து, வண்ணப் பூச்செல்லாம் செய்து வாக்களித்தபடி மூன்றே மாதத்தில் புதுமனை புகுவிழாவுக்கு வகை செய்தான். அழைப்பிதழில் குறிப்பிட்ட இடத்தில் கட்டிடக் கலைஞர் குருவையா என்று பதிவு செய்திருந்தேன். அவன் மனம் குளிர்ந்திருக்கும்.

நான் வாழ்ந்த பகுதியில், தெருவில், என் வீடு மற்றவர்கள் பார்வை படும்படி எடுப்பாக அமைந்ததைச் சொல்லித்தான் ஆகவேண்டும். அதன் வீச்சு, குருவையாவைத் தேடி வேலைகள் வந்தன. பெரிய பெரிய வீடுகள், பங்களாக்கள் என படு பிசி. பழைய சைக்கிள் ஒன்றில் பயணித்தவன் புத்தம் புது டூ வீலரில் பறந்தான். வறுமைக்கு விடைதந்துவிட்டு வளமையில் திளைத்தான். அடுத்துப் போகுமிடம் வெகு தூரமில்லை. அருகாமையிலேயே இருந்தது. வேலையில் கண்டிப்பும், கடின உழைப்பும் காட்டியவன் கை நிறையக் காசு சேர டாஸ்மாக்கில் சரணடைந்தான். குடியும் குடித்தனமாக இருக்கச் சொன்னதை அவன் புரிந்து கொண்ட விதம் அவ்வாறாக இருந்தது.

மடி நிறையக் கனம் இருந்தாலும் வாய் நிறைய நெடி இருந்தாலும் வெளியில் தெரியாமல் போகாது. அரசல் புரசலாக இச்செய்தி என் காதில் விழுந்தபோது கட்டி விடப்பட்ட கதை என்றே நினைத்தேன்.

ஒரு நாள் டூ வீலரில் வந்து கொண்டிருந்தேன். தற்செயலாக டாஸ்மாக் பக்கம் திரும்பினேன். வாசலருகே ஒருவன் விழுந்துகிடந்தான். அப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் இதேபோல் விழுந்து புரள்வது, தள்ளாடுவது வாடிக்கைதான். அவரவர் வழியே போய்க் கொண்டிருப்பார்களே தவிர, எவரும் கண்டு கொள்வதில்லை. எனக்கு ஏனோ அப்படி ஒரு சந்தேகம்! டூ வீலரை ஓரம் கட்டினேன். அருகில் சென்று உற்றுப் பார்த்தேன். அவனேதான்!

குருவையா தேவதாசாக மாறியிருந்தான். அவனைத் தொட்டுத் தூக்கி நிறுத்தி, சுயநினைவுடன் நடமாடிய குடிமகன்கள் சிலரின் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி வீடு கொண்டு சேர்த்தேன். வைகையும் பிள்ளைகளும் பதறி நின்றது பரிதாபமான காட்சி!

அய்யா நீங்கதான் இவருக்கு நல்ல புத்தி சொல்லணும் என்றாள் வைகை. அவள் கண்களில் கங்கை!

இப்ப நல்லாத் தூங்கட்டும். இன்னொரு நாளைக்குப் பேசிக்கலாம் என்று நான் சொன்னது அவளுக்கு ஆறுதல். விழி நீரை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

வீட்டில் அவன் இருக்கும் தருணம் பார்த்து நேரில் வருவதாகச் சொல்லி அனுப்பினேன். அவனோ, தானே வருவதாகச் சொல்லியனுப்பியவன் தகவல் வருவதற்கு முன்பே என் வீட்டு வாசலில் வந்து நின்றான். அவனைத் தொடர்ந்து வைகையும் வந்தாள்.

சாராய போதைக்கு அடிமையாகிப்போன ஒருவன் திருந்திவிட்டேன் என்று சொல்வதை நம்புவதும், சாமியார் ஒருவரைச் சுத்தப் பிரம்மச்சாரி என்று கூறுவதை ஏற்பதும் மடமை என்பது தெரியும். அறிவுரை வழங்குவதிலோ, பாராட்டிப் பேசுவதிலோ கஞ்சத்தனம் கூடவே கூடாது. முயற்சிப்போம். திருவினை ஆனால் மகிழ்ச்சி!

உள்ளே வாங்க என்றேன் இருவரையும். புதிதாக போலீஸ் ஸ்டேசனுக்குள் காலடி எடுத்து வைப்பவன் போல் லேசான பதட்டம். குற்ற உணர்வின் வெளிப்பாடுகள் அவன் முகத்தில்!

என் துணைவியார் ஆவி பறக்கும் தேநீர் கொண்டு வந்தார். வைகை வாங்கிப் பருகினாள். குருவையா கையில் டீ அப்படியே இருந்தது. தயக்கம் போக்க டீதான், சாப்பிடலாம், ஒண்ணும் பண்ணாது என்றேன் அர்த்தத்துடன். புரிந்து கொண்டவன் மன்னிச்சுருங்கையா என்றான் பணிவாக தலை கவிழ்ந்தபடி.

நம்ம வீட்டு வேலையெல்லாம் நடந்தப்ப ரொம்ப நல்ல பிள்ளையாத்தானே இருந்தே… என்றேன் பரிவுடன், அவன் வாய் அசையவில்லை.

நான் சொல்ல வந்ததைச் சொல்லிடுறேன். குடிக்கிறது, கூத்தடிக்கிறது எதுன்னாலும் அது உன்னோட சுதந்திரம். அதுல தலையிடுறதா நீ நினைச்சுடக் கூடாது.

இல்லிங்கய்யா. வேலை செஞ்ச அலுப்புத் தீரட்டும்னு அந்தப் பக்கம் போனேன். அன்னிக்குப் பார்த்து கொஞ்சம் அதிகமாயிருச்சி. அசிங்கமாப் போச்சு என்றான் வெட்கத்தைவிட்டு.

குடிப்பது பாவம் என்று நினைக்கும் நாடு. குடித்தேன் என்று சொல்ல வெட்கப்படும் நாடுன்னு நல்லதம்பி படத்துல கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொல்வாரு…

ஆமாங்கய்யா.. டி.வி.யிலே அடிக்கடி  போடுறாங்க. நானும் பார்த்திருக்கேன். அய்யா நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்கக் கூடாது. பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, ரேசன் கடை திறக்குற மாதிரி பிராந்திக் கடையையும் அரசாங்கமே திறக்குது. குடிக்கிறதுக்கு கவர்மெண்டே பச்சைக்கொடி காட்டுற மாதிரி இருக்கு. அதனால கூச்சமோ, வெட்கமோ, பயமோ இம்மியளவும் இல்லாமல் போச்சு. நான் செய்ததை நியாயப்படுத்துறதுக்காக இதைச் சொல்லலே…!

மரமும் கயிறும் கிடைச்சா தூக்குப் போட்டுக்கணுமா? தள்ளாடப் போறது நீ மட்டுமில்லை. குடும்பமும்…

நீங்க வரச்சொன்னதைக் கேள்விப்பட்ட மறுநிமிசமே முடிவு பண்ணிட்டேன். இனிமே அந்தக் கடைப்பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கக் கூடாதுன்னு…

பரவாயில்லையே, என்னோட வேலை இவ்வளவு சுலபமா முடியும்னு நினைக்கலே. இந்தா பாரும்மா. உன் புருசன் சொன்னதைக் கேட்டியா? இனிமே பயப்பட வேண்டியதில்லே. நம்பிக்கையோட போயிட்டு வாங்க என்று விடைகொடுத்தேன். வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தேன். நிம்மதியும், உறுதியும் அவர்களின் நடையில் பளிச்சிட்டது.

நாள்கள் மட்டுமா! மாதங்களும், சில வருடங்களும் கடந்திருந்தன! ஊரெங்கும் பரவலாக வாழ்பவர்கள் கட்டிடத் தொழிலாளர்கள். அவர்களைத் தேடித்தான் பிடிக்க வேண்டும் என்பதில்லை. அவர்களில் பலர் எதிர்ப்படுவதுண்டு. குருவையா பற்றி குறுஞ்செய்தி எதையும் என் காதில் போட்டதில்லை. மெனக்கெட்டு விசாரித்தபோது கட்டுமானத் தொழிலில் குருவையா கொடிகட்டிப் பறப்பதாகச் சொன்னார்கள். வீடு, நில புலன்கள் என சொத்துக்கள் வாங்கிப் போடுவதாகவும், கட்டிட கான்ட்ராக்டராக சிகரங்களை எட்டிப் பிடிப்பதாகவும், பெரிய சைஸ் ஹீரோஹோன்டாவில் வலம் வருவதாகவும் சொன்னார்கள். என் புருவம் பொட்டுக்கு உயர்ந்தது உண்மை!

அது ஒரு பொன்மாலைப் பொழுது. புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். -குருவையா குழுவில் வேலை செய்த கொத்தனார் ஒருவர் வியர்க்க விறுவிறுக்க வீடு தேடி வந்தார். என்னைக் கண்டதும், உங்களுக்கு விசயம் தெரியுமா? நம்ம குருவையா கொத்தனாரு ரோட்டுல குண்டக்க மண்டக்க விழுந்து கெடந்தாரு. குடிச்சிப்புட்டுக் கெடக்கிறார்னு சொல்லிக்கிட்டே சனங்க அவங்க பாட்டுக்குப் போய்க்கிட்டிருந்தாங்க. பக்கத்தில பிராந்திக்கடை வேற. சேதி தெரிஞ்சு ஓடீப்போயித் தூக்குனோம். பக்கத்துல இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டு அவரோட வீட்டுக்கும் உங்களுக்கும் தகவல் சொல்லிட்டுப் போக வந்தேன் என்று சொன்னவர் வந்த வேகத்தில் வெளியேறினார்.

நெஞ்சு கனத்தது. டாக்டர் கதிரவனுக்குப் போன் போட்டேன்.

திடீர்னு மாரடைப்பு ஏற்பட்டிருக்கு. மயங்கி விழுந்திருக்காரு. குடிச்சுட்டு விழுந்து கெடக்குறாருன்னு அலட்சியமா இருந்துருக் காங்க. அரைமணி நேரத்துக்கு முந்திக் கொண்டு வந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம் என்று முடித்துக் கொண்டார்.
நொந்து நூலாகிப் போனேன். ஒரே ஒரு விருப்பம்!

ஊரைக் கூட்டிவைத்து குடி குடியைக் கெடுக்கும். வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு  என்று வாசலில் காணப்படும் வாசகத்தைக் கடந்து பாருக்குள் படை எடுப்பதும், நுழைவாயிலில் தர்மம் பண்ணுங்க சாமி என்று கையேந்தி நிற்கும் மனிதனின் அவலக்குரல் காதில் விழுந்தபின் கோவிலுக்குள் நுழைவதும் எந்த நம்பிக்கையில்? என்று கேட்க வேண்டும்!

– சிவகாசி மணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *