மஞ்சை வசந்தன்
உலகின் பல மொழிகளுக்கும் மூலமொழி தமிழ் என்பதோடு செம்மொழிக்குரிய தகுதிகளையும், மிகத் தொன்மையையும் உடையது. ஆனால், சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல. அது கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் தொன்மைத் தமிழ் சொற்களைப் பயன்படுத்தி செயற்கையாக உருவாக்கப்பட்டது. உண்மை இப்படியிருக்க அதை மறைத்து சமஸ்கிருதமே உலகின் மூல மொழி எனவும், தொன்மை உடையது எனவும், செம்மொழி தகுதி பெற்றது எனவும் ஆரிய பார்ப்பனர்கள் மோசடியாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அண்மையில் மேல்நிலை வகுப்பு தமிழ்ப் பாடத்தில் கூட இப்பொய்ப் பிரச்சாரத்தைச் செய்துள்ளனர்.
எனவே, உண்மை எது என்பதை ஆதாரபூர்வமாக உலக மக்களுக்கு உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளபடியால், ஆய்வுகளின் அடிப்படையிலான சான்று களுடன் இதை இங்கு உறுதி செய்துள்ளோம்.
சமஸ்கிருதம் பின்னாளில் உருவாக்கப்பட்ட செயற்கை மொழி
ஆரியர்கள் இந்தியாவிற்கு கி.மு.1500 அளவில் வந்ததாகவும், இருக்கு வேதம் கி.மு. 1200 அளவில் தோன்றியதாகவும் மேல் நாட்டறிஞர் கூறுவர்.
அசோகருடைய கல்வெட்டுகளில் பிராகிருதமும், பிராமி எழுத்துகளுமே காணப்படுவதால் அக்காலத்தில் சமஸ்கிருதம் பொதுமக்களால் பேசப்படவில்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
பண்ணவணா, சுத்தா முதலிய சைன நூல்கள், அக்காலத்தில் இந்தியாவில் 18 வகையான எழுத்துகள் இருந்ததாகவும், அவற்றில் குறிப்பிடும்படியானவை பாம்பி, கரோஷ்டி, தமிழி போன்றவை என்றும் கூறுகின்றன. ஆனால், ஆரியம் அல்லது சமற்கிருதம் போன்ற எழுத்து வகைகள் அதில் குறிப்பிடப்படவில்லை.
இராமாயணமும், மகாபாரதமும் எழுதப்பட்ட காலத்தில் சமஸ்கிருத எழுத்து உருவாகவில்லை.
இந்திய வரலாற்றாசிரியர் கே.சி.கன்னா என்பவர், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவை கி.பி.நான்கு அல்லது அய்ந்தாம் நூற்றாண்டில் குப்த அரசர் காலத்தில் சமற்கிருதத்தில் எழுதப்பட்டனவென்றும், அப்பொழுது அவை சமய இலக்கியங்களாக மாறின என்றும் கூறுகிறார் ஏ.பார்த் என்னும் அறிஞரும் இதே கருத்துடையவராய் இருக்கிறார்.
அறிஞர் பர்னல், ஆரியர்கள் தங்களுக்கென ஓர் எழுத்து முறையை உருவாக்கவில்லை என்றும், அவர்கள் குடியேறிய இடத்து எழுத்துகளையே ஏற்று வாழ்ந்தனர் என்றும் குறிப்பிடுகிறார். சமற்கிருதம் ஏற்கெனவே இருந்த திராவிட எழுத்துகளில் ஆரியர்கள் செய்த மாற்றம் என்று தெரிகிறது.
எச்.ஜி.வெல்ஸ் என்னும் அறிஞரும் ஆரியர்கள் நாகரிகமடைந்த மக்களுடன் தொடர்பு கொள்ளும்வரை அவர்களுக்கென்று எழுத்து முறை இருந்ததில்லை என்று ‘A Short history of the World’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
கி.மு. முதல் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும், பிற தொல்லியல் ஆதாரங்களிலும் காணப்படாமலிருந்த சமற்கிருதம் கி.மு. முதல் நூற்றாண்டு முதல் பிராகிருத எழுத்துகளால் எழுதப்பட்டும், கி.பி. 350க்குப் பின் பிராகிருத இலக்கியத்தை மொழிபெயர்த்தும் வளர்ந்தது. இந்த மொழிபெயர்ப்புக் காலத்தில்தான் இந்திய மரபுப் புராணங்களும், இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களும் திருத்திச் சமற்கிருத மொழியில் வெளியிடப்பட்டன. (ஆதாரம்: இந்திய வரலாற்றுத் தொகுதி 162_3 பாரதீய வித்யாபவன் வெளியீடு _ சார்ஜ் எல். ஆர்ட்டின் _ ஆரிய மொழி, திராவிட மொழி மரபுகளின் ஒப்பாய்வு நூல்.)
சமற்கிருத மொழியின் தோற்றம், அமைப்புப் பற்றி ஆராய்ந்த கால்வின் கெபார்ட் (Calvin Kephart) ‘‘இந்தியாவின் பழைய மொழி எதற்கும் சமஸ்கிருதம் தாய் அல்லவென்றும், அது பழைய இந்திய மொழிக் கூறுகளின் கலப்பால் பிற்காலத்தில் தோன்றி வளர்ந்த மொழி என்றும் விளக்கிக் காட்டியிருக்கிறார்.
மத்திய தேசத்தினர் பேசி வந்த மொழி சூரசேனி பண்டைய பாகதமாகும். இச்சூரசேனி இந்தி மொழியின் பெரும் பகுதியாகிய மேற்கு இந்திக்குத் தாய் மொழியாகும். இச்சூரசேனியே பின்னர் மத்திய தேசத் திருந்திய ஆரிய மொழியாக மாறுதலடைந்தது. அதுவே மேலும் மேலும் செம்மை செய்யப்பட்டு முறையான இலக்கண அமைப்புடையதாகப் பின்னர் மாறியதன் காரணத்தால், சமற்கிருதம் என்று பெயர் பெற்றது.
இதனால் திருத்தம் செய்யப் பெற்றுப் புத்துருக்கொண்ட சமற்கிருத மொழியினின்றும் வேறெம்மொழியும் கிளைத்திருக்க முடியாது என்பது தெளிவு’’, என்கிறார்.
இந்திரமால் பகவான்ஜி என்னும் சமண அறிஞர் பழைய பிராகிருத மொழிகள் பழங்காலத்தில் சிறந்து விளங்கின என்றும் அவற்றின் போலி உருவங்களே சமற்கிருத மொழி என்றும் கூறுகிறார்.
ஆதலின், பிராகிருத மொழியிலிருந்தே தோன்றியது சமற்கிருதம். சமற்கிருதத் திலிருந்து பிராகிருத மொழிகள் தோன்றவில்லை.
பிராகிருதம், பாலிமொழி என்பவை தொன்மைத் தமிழே
வடமொழியில் மூன்று விதச் சகர ஒலிகள் உண்டு. ஆனால் பாலியில், தமிழில் உள்ளதுபோல ஒரே சகரம்தான் உள்ளது.
தமிழில் மெய்யெழுத்துகள் வருமொழி முதல் எழுத்துக்கேற்ப மாறும் தன்மையுடையவை. இம்முறை பாலியிலும் உண்டு.
தமிழில் சொற்கள் எளிய ஒலிகளால் முடியும். அதாவது, உயிரொலிகள் அல்லது மூக்கொலிகளால் முடியும்.
வடமொழியில் உள்ள இருமை பாலியில் இல்லை: திராவிட மொழிகளில் உள்ளபடி ஒருமை, பன்மை தாம் உண்டு.
வடமொழியில் எகர, ஒகரக் குற்றுயிர்கள் இல்லை. ஆனால், அவை பாலியில் உண்டு.
மேற்கூறிய கூறுகள் எல்லாம் திராவிடக் கூறுகளாய் இருப்பதால் ஆரியர் வருகைக்கு முன்னரே, வட இந்தியாவில் இம்மொழியைப் பேசி வந்த மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றன.
கி.பி.10இலிருந்து கி.பி.15க்குள் வழங்கிய பேச்சு மொழிகளாயிருந்த சில பிராகிருத மொழிகளிலிருந்து அபப்பிராம்ச மொழிகள் தோன்றின. சூரசேனியிலிருந்து மேற்கு இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தியும் _ மகாராட்டிரி யிலிருந்து மராத்தியும் _ மாகத்தியிலிருந்து வங்காளி, பீகாரி, அசாமி, ஒரியாவும் _ அர்த்தமாகதியிலிருந்து கிழக்கு இந்தியும் _ பைசாசியிலிருந்து இந்தியும் தோன்றின.
கி.மு. பத்தாவது நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தமிழ் எழுத்தும், நெடுங்கணக்கும் பெற்றிருந்ததாக எஸ்.கே.சாட்டர்சி போன்ற அறிஞர்கள் கூறுவர்.
தமிழுக்கும், பிராகிருதிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இலக்கண அடிப்படையிலும் இவை இரண்டும் சமற்கிருதத்திலிருந்து வேறுபடுகின்றன என்பர் இம்மொழிகளை ஆராய்ந்த அறிஞர் (D.C.Sircar, Prakrit grammar, Calcutta). இவ்விரு மொழிகளின் உயிரெழுத்துகளிலும் ஒற்றுமை காணப் படுகின்றது.
பிராகிருதியில் தமிழ் போல் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ உயிரெழுத்துகள் உள்ளன. வடமொழிக்குரிய புலதம், விசர்க்கம் போன்றவையும் இல்லை. ரு, ரூ, னு, லூ போன்றவையும் இல்லை. ங, ஞ, ஸ, ஷ ஆகிய மெய்யெழுத்துகளும் இல்லை. (தமிழிலுள்ள ள, ற வும் இல்லை.)
கூட்டெழுத்துகள் அமைப்பு தமிழ் மரபை ஒட்டியிருக்கிறது. வடமொழியில் தன்னின எழுத்துகள் மட்டுமின்றிப் பிற மெய்களின் கூட்டுறவே அதிகமாகும். தமிழில் தன்னினக் கூட்டே மிகுதியாகும்.
வடமொழியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூன்று எண்கள் உள்ளன. பாலி, பிராகிருத மொழிகளில் திராவிட மரபுப்படி ஒருமை, பன்மை என இரு எண்களே உள்ளன. இருமை இரு வடிவம் இல்லை.
தமிழ் எ, ஒ போன்ற குறில்கள் பிராகிருதியில் உண்டு. சொல் உச்சரிப்பு முறையில் பிராகிருதம் முழுவதும் தமிழோடு ஒத்திருக்கிறது. சில எடுத்துக்காட்டுகள்:
தமிழ் பிராகிருதம்
அச்சன் அஜ்ஜ
அத்தன் அத்த
அத்தை அத்தா
அப்பன் அப்ப
இதோ இதோ
செட்டி சேட்டி
எனவே, இவை இரண்டு மொழிகளும் தொன்மைத் தமிழே.
சமற்கிருதம் உருவானது எப்படி?
தந்தை பெரியார் அவர்கள், பழங்காலத்தில் சமஸ்கிருதம் என்பதாக ஒரு மொழி இருந்திருக்கவில்லை. சமஸ்கிருதம் பழங்காலத்தில், பலர் பலவிதமாகப் பேசிவந்த பல மொழிகளிலிருந்த சொற்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியாகும்.
சமஸ்த்தம் + கிருதம் = சமஸ்கிருதம்
சமஸ்த்தம் = யாவும்
கிருதம் = சேர்த்துச் செய்தது என்பது பொருள் என்று கூறியுள்ளார்.
பாவாணர், வடமொழி அய்ந்து நிலைகளில் உருவானது என்கிறார். அதன் முதன்நிலை தெலுங்கு அல்லது தென் திராவிடம். இரண்டாம் நிலை பிராகிருதம் அல்லது வட திராவிடம். மூன்றாம் நிலை கீழையாரியம். வேத ஆரியரின் முன்னோர் வடகோகித்தானத் திலிருந்த போது (தற்கால ஈரான்) பேசிய மொழியே கீழையாரியம். இம்மொழி கிரேக்கத்திற்கு மிக நெருக்கமாய் இருந்தது. நான்காம் நிலை வேதமொழி. வேத ஆரியர் வடநாட்டில் சிறுபான்மையினராய் இருந்ததால் வடநாட்டுத் திராவிடருடன் கலந்து தங்கள் முன்னோர் மொழியை மறந்துவிட்டனர். வேதங்கள் ஆரியர் இந்தியாவுக்கு வந்து பல நூற்றாண்டுகள் சென்ற பிறகே இயற்றப்பட்டதால் வேதமொழி பிராகிருதம் என்னும் வடதிராவிடச் சொற்கள் கலந்தது. வேதமொழியின் சொற்றொடரமைப்பு தமிழ் முறையைத் தழுவியது.
அய்ந்தாம் நிலை சமற்கிருதம் வேதமொழியும் ஆயிரக்கணக்கான தென்சொற்களும் கலந்ததே சமற்கிருதம். வடமொழியில் அய்ந்திலிருபகுதி தமிழ்ச் சொற்கள் உள்ளன.
ஆரியர் தென்னாடு வந்து தமிழரோடு தொடர்பு கொண்ட பின்பே தமிழ் எழுத்தைப் பின்பற்றிக் கிரந்த எழுத்தையும், தேவநாகரியையும் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னரே அமைத்துக் கொண்டனர்.
வடமொழி நெடுங்கணக்கும் தமிழைப் பின்பற்றியே உள்ளதால் அம்மொழி பிந்தித் தோன்றியது.
மேலை ஆரிய மொழிகளில் எண் வேற்றுமை சொல்லப்படாததால் வடமொழி வேற்றுமை அமைப்பும் தமிழைத் தழுவியது.
கிரேக்க இலக்கணத்தில் அய்ந்து வேற்றுமைகளும், இலத்தீன் மற்றும் முதற்கால ஆங்கில இலக்கணத்தில் ஆறு வேற்றுமைகளும் இருக்க வடமொழியில் தமிழில் உள்ளதுபோல் எட்டு வேற்றுமைகள் உள்ளன. அவற்றின் வரிசையும் பொருளும் தமிழில் உள்ளதுபோல் இருக்கின்றன. முக்கிய இலக்கணக் கூறுகள் எல்லாம் தமிழைப் பின்பற்றியே அமைந்திருக்கின்றன.
கிரேக்க நாட்டில் கிரேக்கர்களுக்கு முன் வசித்த தமிழ்மொழி பேசிய மக்கள் கிரேக்கர்களுடன் கலந்ததால் அவை கிரேக்க மொழியில் நிலைத்தன என்று கூறுகிறார்.
கிரேக்க நாட்டில் கி.மு.5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏரோதோத் என்று வரலாற்றாசிரியர் இந்தியாவின் தென்கோடியில் உள்ள குமரிநாட்டிலிருந்து வந்த பினிசியர் முதலில் கிரீத் தீவிலும் பின்னர் கிரேக்க நாட்டிலும் கி.மு.3000 அளவில் குடியேறியதாகக் கூறுகிறார்.
தமிழின் தொன்மை வடிவமான சூரசேனி என்னும் பிராகிருத மொழி, கலப்பு குறைந்து காணப்பட்டதால் ஆரியர் அதைச் செம்மைப்படுத்திச் சமற்கிருதம் (செம்மை செய்யப்பட்டது) என்கிற பெயரைக் கொடுத்து அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் கருத்துகளை எல்லாம் நூல்கள் வடிவில் அம்மொழியில் எழுதி வைத்தனர். அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்களும், அம்மொழியிலேயே எழுத ஆரம்பித்ததால் சமற்கிருத நூல்கள் நாளடைவில் பெருகி அவற்றிற்குச் சிறப்புகள் பல உண்டாயின. இந்தியாவின் பல பாகங்களிலிருந்த அறிஞர் பலவகை அறிவு வளர்ச்சியையும் வடமொழியில் எழுதி வைத்தனர். அவ்வாறு வடமொழியில் எழுதி வைத்தவர்களில் பலர் தென்னாட்டு அறிஞர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வரலாற்று ஆசிரியர்களான எச்.வி. சீனிவாசமூர்த்தி, ஆர்.இராமகிருஷ்ணன் போன்றோர் சாதவாகனருடைய கல்வெட்டுகள் பிராகிருதியிலும், பிராமி எழுத்துகளிலும் இருந்தனவென்றும், சமற்கிருத மொழி கல்வெட்டுகளில் புகுந்தது கி.பி.நான்காவது அல்லது ஐந்தாவது நூற்றாண்டுகளில்தான் என்றும் கூறுவர். ஆனால், நாசிக் குகையில் காணப்படும் நாகபாணா கல்வெட்டுதான் பழமையானதென்பர் சிலர். வேறு சில அறிஞர்கள் கி.பி.150இல் ருத்ரதாமனால் வெட்டுவிக்கப்பட்ட ஜுனாகத் கல்வெட்டே (கிர்னார் கல்வெட்டு) மிகப் பழமையானதென்பர்.
டி.ஆர்.சேஷ அய்யங்காரும் இதே கருத்தைத் தெரிவிக்கிறார். (Dravidian India – Prof. Sesha Aiyangar).
ஸ்டென்கொனோவ், பர்ரோ போன்றவர்களும் சமஸ்கிருதத்தில் திராவிடச் சொற்கள் அதிக அளவில் இருப்பதைச் சுட்டிக்காட்டுவர்.
எமினோ, சட்டர்ஜி, முயல் ப்லோக் போன்றவர்கள் சமற்கிருதம் திராவிட முறையைத் தழுவி வினையெச்சங்கள், வினையாலணையும் பெயர்களைப் பயன்படுத்தி யிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
டாக்டர் மக்ளீன் என்னும் அறிஞர் ‘‘திராவிட மொழிகள் சமற்கிருதத்தைவிட மூத்த மொழிகள் என்பதில் சந்தேகமில்லை’’ என்கிறார்.
பஞ்சாப், சிந்துவெளிப் பகுதிகளில் கிடைத்த குறியீடுகளை ஆராய்ந்து பார்த்த பி.டி.சீனிவாச அய்யங்காரும், அக்குறியீடுகள் மூலத் தமிழைக் குறிப்பதாகக் கூறுகிறார். புதிய கற்காலத்தில் இந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் அனைத்தும் மூலத்தமிழ் மொழியின் கிளைமொழிகள் என்றும், தற்காலத்தில் கீழ்க்கோதாவரிப் பகுதிகளில் பேசப்படும் மொழிகள், மூலத்தமிழின் இன்றைய கிளைமொழிகள் என்றும், வடநாட்டு இந்தோ_ ஆரிய மொழிகள் மூலத்தமிழிலிருந்து கிளைத்த மொழிகள் என்றும், என்றும் கூறுகிறார்.
George. Hart – Tamil heroic poems என்னும் நூலில், பெருவாரியான தமிழ் மற்றும் திராவிட இலக்கிய மரபுகள், பிராகிருத மொழி இலக்கியங்கள் மூலம் சமஸ்கிருதத்திற்கு வந்ததாகப் பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கிக் காட்டுகிறார்.
தமிழ் வார்த்தைகளை சமஸ்கிருத வார்த்தைகளாக்கினர்
ஆரிய பார்ப்பனர்கள் தமிழ் எழுத்துகளுக்குப் பதிலாக சமஸ்கிருத எழுத்துகளை மாற்றிப்போட்டு சமஸ்கிருத வார்த்தைகளை உருவாக்கினர்.
சுரம் என்பதை ஜூரமாக்கினர்.
சுரம் என்பது ‘சுர்’ என்ற தமிழ் வேர்ச் சொல்லிலிருந்து வந்தது. சுர் என்றால் சுடுதல்.
சலம் என்பதை ஜலம் என்று சமஸ்கிருதமயமாக்கினர்.
“சலம்’’ என்பது நீர் சலசல வென்று ஓடுவதால் வந்த காரணப் பெயர்.
சலம் என்பதை ஜலம் என்று சமஸ்கிருதமயமாக்கினர்.
பன்கயம் என்ற தூய தமிழ்ச் சொல்லை பங்கஜம் ஆக்கினர்.
பன்கயம் என்பது பல இதழ்களை உடையது என்பது பொருள். தாமரை பல இதழ்களை உடையதால் அது பன்கயம் எனப்பட்டது. அதில் எழுதுவதை மாற்றி பங்கஜம் என்ற சமஸ்கிருத சொல்லாக்கினர்.
குருதி ஆயம் என்ற தமிழ் வார்த்தையை ஹிருதயம் என்று சமஸ்கிருதமாக்கினர். குருதி ஆயம் என்றால் குருதி சேரும் இடம். இதயத்தில் குருதி சேர்வதால் அதற்கு குருதி ஆயம் என்று தமிழில் பெயர். அதை ஹிருதயம் என்று மாற்றி சமஸ்கிருதம் ஆக்கினர்.
இப்படி தமிழிலிருந்து சமஸ்கிருதத்தை உருவாக்கினர். சமஸ்கிருதத்தில் இவற்றிற்கு வேர்ச் சொல் கிடையாது என்பதை ஆய்வில் கொள்ள வேண்டும்.
இடவல மாற்றம் (Mirror Method)
கண்ணாடியில் இடதுவலமாகத் தெரியும். அதேபோல் தமிழ் எழுத்துகளை இடவலமாகத திருப்பிப் போட்டு சமஸ்கிருதமாக்கினர்.
அரசு என்று தூய தமிழ் சொல்லை இடவலமாற்ற முறையில் ராஜ் என்று சமஸ்கிருதமாக்கினர்.
அரசு என்பதில் முதல் இரு எழுத்துகளை இடவலமாக மாற்றினால் ரஅசு என்று ஆகும். முதல் எழுத்தை நெடில் ஆக்கி ராசு என்று ஆக்கி பின் சு_ஜீ என்று மாற்று ராஜீ _ ராஜ் என்று ஆக்கினர்.
அரசன் என்ற தூய தமிழ்ச் சொல்லை இதே முறையில் ராஜன் என்று ஆக்கினர்.
அரசன் _ என்பதை இடவலமாக மாற்றி ராஅசன் என்றாக்கி ‘ச’ எழுதுவதை ஜ வாக்கி ராஜன் என்றாக்கினர். இவ்வாறே அறமன் என்பதை ராமன் என்றும் அறவாணன் என்பதை ராவணன் என்றும் ஆக்கினர்.
சிலர், வேதங்கள் 2500 ஆண்டு பழமையானவை. அவை சமஸ்கிருதத்தில் இருப்பதால் சமஸ்கிருதம் 2500 ஆண்டுகள் பழைய மொழி என்கின்றனர். ஆனால் இது அறியாமை.
வேதமொழி சமஸ்கிருதம் அல்ல!
ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களிடம் எழுத்தும் இல்லை; எழுத்து வடிவான இலக்கியமும் இல்லை.
தமிழே வேத மொழிக்கு முந்தையது என்பதை மலையாளத்தில் சட்டம்பி அடிகள் 1901ஆம் ஆண்டில் ‘ஆதிபால’ என்னும் நூலில் நிலைநிறுத்தி இருக்கிறார். பாணினி நூற்பாக்களைத் தொல்காப்பிய நூற்பாக்களோடு மேற்கோள்காட்டி தமிழே முந்தையது என்றார்.
மாபாணன் என்னும் சொல் சிந்துவெளி முத்திரையில் உள்ளது. ஈரானியம் மற்றும் பிற மொழிகளிலிருந்து 20 சதவிகித சொற்களும், தமிழில் இருந்து 60 சதவிகித சொற்களும் வேத மொழியில் கலந்தன. எனவே, வேதமொழி சமஸ்கிருதம் அல்ல.
சிந்துவெளி முத்திரைகள் அனைத்திலும் கி.மு.3000 காலத்திய தமிழ்ச் சொற்கள் உள்ளன. ஆப்கானிஸ்தான் மெகர்கார் அகழ்வாராய்ச்சியில் சிந்துவெளி எழுத்தில் ஸ்வஸ்திக் வடிவம் காணப்படுகிறது. இதன் காலம் கி.மு.6000_கி.மு.7000 என வரையறுத்துள்ளனர். ஸ்வஸ்திக் எழுத்து தமிழ் ‘ஓம்’ எனப் படிக்கப்பட்டுள்ளது. ஓம் ஓம்பு என்னும் சொல் காப்பாற்று என்று பொருள்படும்.
எனவே, உலக மொழிகளிலேயே 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துச் சான்றுடைய மொழி தமிழ் என நிறுவப்பட்டுள்ளது.
வடமொழிப் பேராசிரியர் டாக்டர் கே.கைலாசநாத குருக்கள் வேதங்கள் சமற்கிருத நூல்கள் எனப்படுவதில்லை என்றும், வேதங்களுக்குப் பின் பாணினியால் திருத்தம் செய்யப்பட்ட மொழியில் தோன்றிய இலக்கியங்களே சமற்கிருத நூல்கள் எனப் பெயர் பெற்றதாகவும் கூறுகிறார்.
வேதமொழி சமஸ்கிருதம் அல்ல என்று பெரிய சங்கராச்சாரியும் கூறியுள்ளார்.
உலகின் மூலமொழி, தொன்மொழி தமிழ்!
ஆங்கிலம், ஜப்பான், கொரியா உள்பட உலகில் பல மொழிகளின் மூலமொழி தமிழ் ஆகும்.
W.W.Skeat என்பவரின் The Etymological dictionary of the English languageஇல் உள்ள 14286 சொற்களில் 5700 (40 விழுக்காடு) சொற்கள் தமிழ் மூலத்திலிருந்து வந்தவையென்று விளக்கியிருப்பதாகவும், மேலும் 7200 சொற்கள் (50 விழுக்காடு) தமிழ் மூலத்திலிருந்து வந்தவை என்று சந்தேகப்படுவதாயும் கூறுகிறார். பொதுவாகப் பார்க்கும்போது ஆங்கிலமொழி பாதிக்கு மேல் தமிழ் மொழியே என்று தாம் நினைப்பதாக் கூறுகிறார்.
எடுத்துக்காட்டாக:
தமிழ் – ஆங்கிலம்
கரை _Cry
கனை _ Neigh
மண் _ Mud gland
மாறுகடை _ Market
பிளிறு _ Blare
இவ்வாறு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட அய்ரோப்பிய கலைச் சொற்களிலும் தமிழ் வேர்ச் சொற்கள் உள்ளன என்றும் அவை கிரேக்க, இலத்தீன், தியுத்தானிய மொழிகள் மூலம் அய்ரோப்பிய மொழிகளில் கலந்ததாகக் கூறுகிறார்.
செனகல் மொழி
அம்மொழி அறிஞர் இந்தியாவில் செனகல் மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களோடும் ஒத்திருக்கிறது என்கிறார்.
ஜப்பான் மொழி தமிழிலிருந்து வந்தது என்று ஜப்பான் மொழியியல் அறிஞர் சுசுமோ ஓனோ கூறுகிறார்.
அதேபோல் கொரிய, சுமேரிய மொழியின் மூலமொழி தமிழ் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
தமிழ் – கொரியா
குடில் _ குடுல
அப்பா _ அபி
தீ _ தீ
பாம்பு _ பாம்
காய் _ க்யு
படகு _ பட
தமிழ் – சுமேரியா
அம்மா _ அம்மா
அப்பன் _ அபா
அரை _ அர
ஊ _ ஊர்
குருதி _ குருன்
தும்பி _ தும்
இப்படி உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாம் தமிழ்மொழியின் தொன்மை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதில் நல்ல நூல்கள் உருவாகியுள்ளன. தமிழ்மொழியின் தோற்றம் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது.
இப்படிப்பட்ட தொன்மையான தமிழ்மொழியோடு, கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் செயற்கையாக தமிழைக் கொண்டு உருவாக்கப்பட்ட சமஸ்கிருதத்தை ஒப்பிடுவதே குற்றம். அப்படியிருக்க தமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையானது என்பது மோசடியாகும்.
எனவே, தமிழோடு ஒப்பிடும் அளவிற்கு தொன்மையும் வளமையும் உடைய மொழி உலகில் எதுவும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை!