சாமி கைவல்யம்

ஆகஸ்ட் 16-31 2019

பிறந்த நாள்: 22.8.1877

1877இல் கேரளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர் இயற்பெயர் பொன்னுசாமி. இவர்களின் முன்னோர்கள் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒருமுறை இவர் கரூருக்கு வந்தார். அங்குள்ள மவுனசாமி மடத்துக்குச் சென்றார். அங்கு சில சாமியார்கள் உண்டு. வேதாந்த விசாரணைகள் நடைபெற்றன. கைவல்யம் என்ற வேதாந்த விசாரணை நூல் பற்றிப் பேசப்பட்டது. கைவல்யம் தொடுத்த வினாக்கள், விசாரணைகள் பலரையும் அதிரச் செய்தன. இதன் காரணமாக அவர் கைவல்யம் என்றே அழைக்கப்படுபவர் ஆனார்.

அவரது தர்க்க ஞானம் முதலில் பார்ப்பன மதக் கொள்கை எதிர்ப்பிலிருந்து கிளர்ந்து எழுந்ததாகும் நாடு பூராவும் சுற்றித் திரிவார்.

தந்தை பெரியார் அவர்களின் நண்பர் ஆனது இயல்புதானே! தொடக்கத்தில் தர்க்கத்தில் ஆரம்பித்து பின்னர் இணை பிரியாக் கொள்கைக் கயிற்றால் இணைந்து நண்பர்கள் ஆனார்கள். ‘குடிஅரசி’ல் கைவல்யம் எழுதி வந்த கட்டுரைகள் ஆணித்தரமானவை. எழுத்து நடையோ புத்தம் புதிய பாணி! இசைபாடும் அருவி நீரோட்டம் போன்றது.

கைவல்யம் வருகிறார் என்றால், சாமியார்கள் ஆட்டம் கண்டு போய்விடுவார்களாம். எதிரிகள் வயிற்றைக் கலக்குமாம். கழிந்துவிடுவார்களாம்; வாய் வறண்டு போகுமாம்; தொண்டை வற்றிப் போகுமாம்! அப்படியொரு அசைக்க முடியாத ஆற்றலுக்குச் சொந்தக்காரர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *