பெண்ணால் முடியும் : பந்தய வாகனப் பொறியாளராய் சாதிக்கும் முதல் பெண்

ஆகஸ்ட் 01-15 2019

ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் உச்சம் தொடும் இக்காலத்தில் அத்திபூத்தாற்போல கவனம் ஈர்க்கும்    ஒரே பெண் ஜெனிஃபர் கிறிஸ்டா பால். இந்தியாவின் முதல் பெண் ரேஸ் என்ஜினீயர் என்னும் இலக்கை எட்டும் முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார்.

“வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. எனக்கு ஆறு கசின்ஸ். அத்தனைபேரும் ஆம்பிளைப் பசங்க. யமஹா ஆர்15, வி1, பைக் வாங்கித் தந்து ரேஸ் ட்ராக்ல ஓட்டு’ன்னு சொல்லி எனக்கு ரேஸ் ட்ராக்கை அறிமுகப்படுத்தினார். ஹோண்டா ஒன் மேக் லேடீஸ் ரேஸ்ல (ரவுண்டு 1) கலந்துக்கிட்டேன். ப்ளஸ் டூ முடிச்சதும் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிக்க முடிவு பண்ணினேன். எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜியில் அந்த டிபார்ட்மென்ட்டில் 250 மாணவர்களும் பசங்க. பேராசிரியர்களும் ஆண்கள். நான் மட்டும்தான் ஒரே பெண்.

பொண்ணுங்க கம்ஃபர்ட் ஸோனைவிட்டு வெளியில வரணும். ஆண்களுக்கு இணையானவங்கதான் என்று நிரூபிக்கணும்னு நினைச்சதும் நான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க ஒரு காரணம்’’ என கூறுகிறார்.  பைக் ரேஸ்லேருந்து மெல்ல மெல்ல என் ஆசை கார் ரேஸ் பக்கம் திரும்புச்சு. லெவல் ஒன் கார்ட்டிங் பயிற்சிக்குப் போனேன். அதை நடத்தின மீகோ மோட்டார் ஸ்போர்ட்ஸ் கம்பெனியின் உரிமையாளர் அக்பர் இப்ராஹிம்தான் எனக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்ஜினீயரிங் பற்றிச் சொன்னார்.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்ஜினீயரா நான் என்ன செய்ய முடியும்னு விளக்கினார். ‘நீ ஏற்கெனவே ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் முடிச்சிருக்கே, இந்தத் துறையில உனக்கு வாய்ப்புகள் பிரகாசமா இருக்கும்’னு சொன்னார். அந்த நிமிஷத்துலேருந்து என் மனசு ரேஸிங்கைவிட்டு விலகி, ரேஸ் இன்ஜினீயரிங் பக்கம் தீவிரமாயிடுச்சு. கோயம்புத்தூர்ல உள்ள ஆசியாவின் மிகப்பெரிய மோட்டார் ஸ்போர்ட் கம்பெனியான ஜே.ஏ.மோட்டார் ஸ்போர்ட்ஸ்ல இன்டெர்ன்ஷிப் பண்ணினேன். ஃபார்முலா 1600 மற்றும் ஃபார்முலா 2000 கார்களைத் தயாரிக்கிற கம்பெனி அது. ஒவ்வொரு வருஷமும் சாம்பியன்ஷிப்பும் நடத்தறாங்க. போன வருஷம் யுகேவைச் சேர்ந்த பெண் ரேஸ் கார் டிரைவர் ஜேமியோடு வொர்க் பண்ற மிகப் பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. பிரிட்டிஷ் ரேஸ் என்ஜினீயர் லீனா காடேதான் என் ரோல் மாடல். அவங்களை மாதிரி வரணும்கிறதுதான் என் லட்சியம். ரேஸ் என் பொழுதுபோக்கா மட்டும்தான் இருக்கும். ரேஸ் என்ஜினீயர் என்பதுதான் எனக்கான அடையாளமாக இருக்கணும்னு ஆசைப்படறேன்’’ விருப்பங்களால் வியக்க வைக்கிறார்.

“இதெல்லாம் பசங்க பண்ற விஷயம். பொண்ணுங்களுக்கு எதுக்குன்னு கேட்கறவங்க எல்லா காலத்திலும் இருக்காங்க. அதைப் பத்தி ஒரு பொண்ணா நான் கவலைப்பட வேண்டியதில்லை. சின்ன வயசுலேருந்தே அப்பாகூட பைக்ல ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளுக்குப் போயிருக்கேன். பைக் ரிப்பேர் பண்றப்போ மெக்கானிக் பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டு, எந்தப் பார்ட்டை எப்படிப் பொருத்தறாங்க, எப்படியெல்லாம் வேலை செய்யறாங்கன்ணு கவனிச்சிருக்கேன். எனக்குப் பிடிச்ச விஷயத்தை நான் செய்யறேன். என்னைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி நாளைக்கு இன்னும் நாலு பேர் அதைப் பண்ணுவாங்க. உலகின் முதல் பெண் ரேஸ் என்ஜினீயரான லீனா காடேவைப் பார்த்துதான் நான் இன்ஸ்பையர் ஆனேன். இதெல்லாம் ஆண்கள் வேலைன்னு சொல்லிச் சொல்லியே வளர்க்கப்படற பெண்கள், ஒரு கட்டத்துல அதை நம்பவும் ஆரம்பிச்சிடறாங்க. என் விஷயத்துல அப்படி நடக்காம இருக்கக் காரணம் என் அப்பா.

உனக்குப் பிடிச்சதைச் செய்ய நீ ஆணா, பெண்ணான்னு பார்க்க வேண்டியதில்லை. உன்னால் முடியும்னா எந்த வேலையையும் செய்யலாம்’னு ஊக்கம் கொடுத்தவர் அவர்’’ என்று கூறும் இவரை தன்னம்பிக்கையோடு வளர்த்திருக்கிறார்கள் பெற்றோர்.  “மற்ற என்ஜினீயரிங் பிரிவுகளைவிடவும் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் கொஞ்சம் ஸ்பெஷல். மனுஷங்களோட வாழ்க்கையை ஈஸியாக்கும் வாகனங்களைப் பத்திப் படிக்கிறது நல்ல விஷயம். பொண்ணுங்க அதைப் பத்திப் படிக்கிறது இன்னும் நல்ல விஷயம்’’ என்கிறார். முதல் சாதனை பெண்களின் பட்டியலில் இணையக் காத்திருக்கும் இவரின் முயற்சிக்கு வாழ்த்துவோம்.

                தகவல் : சந்தோஷ்

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *