Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை : தந்தை பெரியார்

– முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்

தங்கத்தின் உருக்கில் வந்த தனித்ததோர் ஒளியைப் போலச்

செங்கதிர் உதயமாகும் செவ்வானம் வெட்கியோடப்

பொங்கியே எழுந்தார் பெரியார், புதுமைக் காளைகள் கோடி

உறுதியாய்க் கூறி நின்றார் குருதிதான் பணயமென்று!

அங்கத்தில் பழுதென்றால் அறுத்தெறிய ஒப்புகிறோம், உயிர்பிழைக்கப்

பங்கமுறு சாதிமதப் பேதங்களால் அல்லலுறும் – மனித

சங்கத்தின் நோய் களையத் திகைக்கின்றோம் சரிதானா? எனக் கேட்டார்

அந்தச் சிங்கத்தின் குரல்கேட்டுச் சிறுநரிகள் ஊளையிட்ட கதைதானே நடந்ததிங்கே!

வைக்கத்து வீரர் என்று யாரைச் சொன்னோம்?

“வை கத்தி! தீண்டாமைக் கழுத்தில்’’ என்று

வரிப்புலியாய்க் களம் சென்று வாகைசூடி

வையத்து மக்கள் தந்த பட்டமன்றோ வைக்கம் வீரர்

காங்கிரசுக் கட்சிக்கு மீகாமனாய்க்

கதர் இயக்க வெற்றிக்குத் தளபதியாய்க்

காந்தி வழி நின்றிட்ட கர்மவீரன்

கட்சிக்குள் போராடக் காலம் வந்து

காஞ்சிபுரம் மாநாட்டில் வெளிநடந்தார்

வ.வே.சு.அய்யர் என்பார் வடிகட்டிய தேசபக்தர்

வகுப்புவாத உணர்வாலே வம்புக்கு அழைப்புத் தந்தார்.

சேரன்மாதேவி ஊரில் சிறந்ததொரு குருகுலத்தில்

ஒரு குலத்துக்கொரு நீதி கடைப்பிடித்தால்

சகிக்குமா பெரியார் மனம்? சமருக்கு வில்வளைத்தார்

சரித்திரம் படைக்கலுற்றார். அதன் விளைவாய்த்

தன்மான இயக்கத்தின் தந்தையாகத்

தமிழர் இனப் பாதுகாப்புத் தலைவராகப்

பெரியார் ஆனார் – புது

நெறியார் ஆனார்!

பிற்பட்டோர் நலனுக்கென்று நீதிக்கட்சி

பெரும்பணிகள் இயற்றிடவே முனைந்தபோதும் – அது

பித்தாபுரம் பனகல் என்று பிரபுக்கள் காலடியில்

வற்றாத செல்வர் கைத்தடியில் இருந்ததாலே அதை மாற்றி

மாளிகையில் இருந்தகட்சி மக்களிடை வருவதற்கு

மாமேதை அண்ணாவின் துணையுடனே வெற்றி கண்டார்.

மந்தி கை மாலையென

இந்தி கைத் தமிழர், ஆக

வஞ்சகச் சூழ்ச்சிகள் வலையாக விரிந்தபோது

அஞ்சிடா நெஞ்சுகொண்டு அறுத்தவர் பெரியார்தாமே?

அவர்,

பாதம் படாத பட்டி தொட்டி உண்டோ – அவர் பேர் கேட்டுக்

காதம் ஓடுகின்ற ஆத்திகரும் (அவர்) பேசக்கேட்டால், தமிழ்க்

கீதம் கேட்ட கிறுகிறுப்பில் மயங்கிப்போவர்,

அறிவு மழை பொழியும் எழில்

வழியும் _ இருள் கழியும்

தெளிவுமிகு உரைகள் பல

ஒளிரும் திறன் மிளிரும் –

கடலின் மடை அலையின் ஒலி – மலையின் முடி,

தழுவும் முகில் வழியும்!

அறிவு மழை பொழியும்!

ஆணவங்கள் அழியும்!

அடிமை முறை ஒழியும்!

அய்யாவின் பேச்சென்றால்

அதிரசம் தின்பதுபோல் கழகத்தவர்க்கு,

அணுக்குண்டு வெடித்தது போல் கயவர்கட்கு!

அவர் தலைமை ஏற்று நானும் அவருடனே

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தெட்டில்

ஆரூரில் மாணவனாய் இருந்தபோதே இணைந்துவிட்டேன்.

அதன் பிறகு புதுவையில் நான் தாக்குண்டபோது

அய்யாவின் கையாலே மருந்திட்டார், என் காயத்திற்கு!

குடிஅரசு அலுவலகக் குருகுலத்தில்

கொள்கை வழிப்பாடங்கள் பயின்றகாலை – நான்

தமிழரசுத் தலைவனாக வருவேன் என்றும், எனை வளர்த்த

தந்தைக்கு அரசு மரியாதையுடன் இறுதி வணக்கம் செய்வேன் என்றும்

எண்ணியும் பார்த்ததில்லை;

 

 

 

 

 

 

(சேலம் நேரு கலையரங்கில் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 11.1.1974 அன்று நடைபெற்ற ‘தந்தை பெரியார்’ கவியரங்கில், கலைஞர் அவர்களின் தலைமைக் கவிதையிலிருந்து)