கவிப்பேரரசு வைரமுத்து
அணைப்பட்டியில் செங்கற்சூளைத் தொழில் செய்யும் முள்ளுமூக்கன் விளாம்பட்டி காவல் நிலையத்துக்குள் சுற்றியடிக்கும் சூறாவளிபோல் புகுந்தான் _ தன் சுற்றம் சூழ. அவன் நெஞ்சு பதறியது; வாய் குழறியது.
“அய்யா… இன்ஸ்பெக்டர் அய்யா… எம் மகளக் காணோம். எங்க வம்சத்துக்கே ஒரே ஒரு பொட்டப்புள்ள. காலேசுக்குப் போனபுள்ள வியாழக்கெழமையிலருந்து வீடுதிரும்பல. எங்கெங்க தேடியும் காங்கல. வீடே எழவு வீடாக் கெடக்கு. ஊரு எரியுது தீப்புடிச்சு. எங்க மானம் மருவாதி உசுரு எல்லாம் உங்க கையிலய்யா’’.
பென்சிலால் காது குடைந்து கொண்டே, காவல்துறைக்கென்றே கட்டமைக்கப்பட்ட உணர்ச்சியற்ற தொழில்மொழியில் இன்ஸ்பெக்டர் கேட்டார்:
“போட்டோப் படம் இருக்கா?’’
“இந்தா இருக்கு’’
“எழுதி ஒட்டிக் குடுத்திட்டுப் போங்க; பாப்பம்’’
* * *
காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த முள்ளுமூக்கன் வெறியோட்டம் ஓடி வந்த வேட்டைநாய்போல் மூச்சுவிட்டுத் தணிந்த குரலில் கோபம் எரியும் சொற்களால் சொன்னான்:
“ஏலே மாப்ள சிவங்காள! இந்தப் போலீஸ்காரப்பயகள நம்ப முடியாதுய்யா; குமுளி தேக்கடின்னு நீ மேற்க போயித் தேடு. யப்பா, கூடப் பெறந்தவனே குத்துப்பாண்டி… நீ தெக்குச் சீமைக்குப் போப்பா. நான் பெத்த மக்கா… கருத்தராசு.. செவத்திவீரா… வடக்க மலப்பக்கம் போங்கப்பா. நான் கெழக்க போறேன். சீதையை ராமர் தேடுனமாதிரி தேடுவோம் நம்ம பிள்ளைய. அவள யாராச்சம் கடத்திட்டுப் போயிருந்தான்னு வச்சுக்க.. புடிச்ச எடத்துல அவனப் பொலி போட்ருங்க. இல்ல… அவளே ஓடிப்போயிருந்தான்னு வச்சுக்குங்க, கண்ட எடத்துல ரெண்டு பேரையும் கண்டதுண்டமா வெட்டிக் காக்கா கழுகுக்கு எரையாப் போட்ருங்க. வைகை ஆத்துல தல முழுகிட்டு வேட்டிய ஒனத்திக்கிட்டே வீடு வந்து சேருங்க’’.
* * *
வீட்டில் கதறிச் சிதறியது பெண்ணைப் பெற்ற தாய் மனது.
“அடியே ஆத்தா! என் ஒத்த மகளே… நான் பொத்தி வளத்த பூங்குருவி! எங்கடியம்மா போயிட்ட என்னிய விட்டுப்புட்டு. செல்லப்பூவுன்னு பேரு வச்சுச் செல்லங்குடுத்து வளத்தேனே மகளே. பெத்தன்னைக்கிருந்து மூணுநா உன் மூஞ்சி காணாம இருந்ததில்லையே. ஒனக்கு ஏதாச்சும் ஆச்சு… ரெண்டாம் பொணம்தான் நீயி. மொதப்பொணம் நாந்தாண்டி’’.
“ஏய் ஒன்னிய சாக விட்ருவோமா? கூசாமப் பேசாதடி கூருகெட்ட சிறுக்கி. ஏழு கடல் தாண்டி அவ போனாலும் இழுத்து வந்திரமாட்டமா குடுமியப் புடிச்சு. மூக்கச் சிந்தாம மூலையில உக்காரு போ’’.
மனைவியை மிரட்டி அடக்கிய முள்ளுமூக்கன் செங்கல் விற்ற காசை வழிச்செலவுக்கு எல்லாருக்கும் பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
கொடைக்கானலுக்கு மேலே கவுஞ்சி. அதன் பிராதானச் சாலையை விட்டுப் பள்ளத்தாக்கில் வழுக்கி விழுந்த ஒரு பேரித்தோட்டம். சுவர்களின் தோலுரிந்த ஒரு தகர வீடு. பேரி மரங்களில் மலைப் பறவைகளின் உரையாடல். தகர வீட்டுக்குள் ஒரு பெண்ணின் கன்னிகழியாத விசும்பல். அவள் அழுகை துடைக்கும் ஆண் குரல்.
“ஏய் செல்லம்… இப்படி அழுதுக்கிட்டேயிருந்தா எப்படி? குறிஞ்சியாண்டவர் கோயில்ல தாலி கட்டி ஒன்னக் கூட்டியாந்தேன்…? எல்லாருக்கும் கல்யாணத்துல காதல் முடிஞ்சுபோயிருது. நாம இனிமேதான் காதலிக்கவே போறோம். அழாத… சிரி… என்னச் சுட்டுப்போட்ட சிரிப்பு -_ சூறையாடிய சிரிப்பு _ அதை மறுபடி சிரி…’’
அவள் மார்பில் புதைந்து தலைகுலுக்கி மாட்டேனென்றாள். அவன் கழுத்தை ஒரு கையால் கட்டிக்கொண்டவள் மறுகையால் மார்பைப் பூட்டிக்கொண்டாள். வழியெல்லாம் மலர்ந்தே கிடந்தவள் இந்தத் தகரவீட்டுத் தனிமைக்குள் வந்ததும் சிவக்கச் சிவக்க அழ ஆரம்பித்துவிட்டாள். புலன்களை உள்ளிழுத்துக்கொள்ளும் ஆமைபோல் தன்னைத் தாழிட்டுக்கொண்டாள். அடிக்கடி ‘அம்மா… அம்மா…’ என்று அழுதாள். ஓரிருமுறை ‘அப்பா…’ என்று பெருங்குரலெடுத்துக் கத்தினாள்.
‘நம்மள வாழவிடுவாங்களா?’ என்ற கேள்வி மட்டும் ஒரே இடத்தில் சுற்றும் ஒலித்தட்டைப்போல் மீண்டும் மீண்டும் அவளால் முனகப்பட்டது.
அவள் மனநிலையை மாற்ற நினைத்தான். அழுகையின் ஈரத்தை முத்தத்தால் துவட்ட முயன்றான். இவன் தீண்டினான். அவள் உதறினாள். இவன் நெருங்கினான்; அவள் நழுவினாள். கால்விரல்களை ஒவ்வொன்றாய் உருவிப் பாதப்பள்ளங்களில் பால்வினை செய்தான். உடன்பாடில்லையென்று விலகினாள். கையோடு கைசேர்த்தான்.
“ஐவிரல் இடைவெளி
அன்பே எதற்கு?
கைவிரல் பத்தும்
கைகோப்பதற்கு’’
காதுமடலருகில் கவிதை சொன்னான். கைகளால் கைகளிரண்டையும் கைது செய்தவன் அதுவரை உதடு காணாத பண்டங்கள் தேடி நகர்ந்தபோது, அவள் திடீரென்று தீவிரமானாள். தன் உடம்பைப் பாதியாய் மடித்துக்கொண்டு கால்களிரண்டையும் பின்னித் தொடைகளைப் பூட்டிக்கொண்டாள். அந்தச் சக்கரவியூகத்தை அவனால் உடைக்க முடியவில்லை. அவள் தூங்கும் வரைக்கும் தூங்காதிருந்தவன் பிறகு பூட்டிய கால்களைக் கட்டிக்கொண்டே தூங்கிப்போனான்.
* * *
பண்ணைக்காடு தாண்டிக் கொடைக்கானல் நோக்கி எந்திரப்புலிபோல் உறுமிக்கொண்டே ஏறிக்கொண்டிருந்தது தாய்மாமன் சிவன் காளையின் பழைய டாட்டா சுமோ.
* * *
“யப்பா மலையாண்டி! சம்சாரி வீட்டுப் பிள்ளையைக் கூட்டிட்டு ஓடியாந்திட்டியே… சரி சொல்லுவாகளா அவுக? சாதி பாப்பாகளே. ஏவாரத்துல மட்டும் தானப்பா நம்மூர்ல சாதி பாக்க மாட்டாக; மத்த எல்லாத்துலயும் பாக்குறாகப்பா. எனக்கென்னமோ பயமாத்தான் இருக்கு. நீங்க நல்லாருக்கணும்’’.
இந்த வீராயிச் சித்தி ஒருத்திதான் மலையாண்டிக்கு மிச்சமிருக்கிற ஒரே ஓர் உறவு. அவளை நம்பித்தான் கொடைக்கானலில் தாலிகட்டிக் கவுஞ்சிக்குக் கூட்டி வந்துவிட்டான் செல்லப்பூவை.
சின்ன வயதில் பஞ்சம் பிழைக்கக் கணவனோடு மலையேறியவள் இன்று பழைய விதவையாய் இந்தக் கால் ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் கழித்துக் கொண்டிருக்கிறாள் தன் வாழ்வின் மிச்சத்தை.
“காதலுக்குத்தான் சாதி தடையாயிருக்கும் சித்தி. கல்யாணத்துக்குமா இருக்கும்? தாலி கட்னபெறகு என்ன செய்யும் சாதி? இவளப் பாத்துக்க. நானும் ஒரு வேலவெட்டிக்குப் போயி காசு சம்பாதிக்க வேணாமா? காலி ஃபிளவருக்குப் பூச்சிமருந்தடிக்கப் போறேன். வாரேன்’’.
* * *
“ஏந்தாயி… பொட்டச்சி வாசனையே ஆகாதே ஏம்பிள்ளைக்கி, எப்பிடி விழுந்துபோனான் உன் கவுட்டுக்குள்ள?’’
வெட்கத்தால் சிவந்த முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டாள் செல்லப்பூ. மூடிய கண்களின் முன்னே படம்படமாய்… சரஞ்சரமாய் விரிந்தோடின பழைய காட்சிகள்.
நிலக்கோட்டை கல்லூரிக்கு அவள் அணைப்பட்டியிலிருந்து வருகிறாள். பிள்ளையார்நத்தம் நிறுத்தத்தில் அவன் தினந்தோறும் பேருந்து ஏறுகிறான். கருப்புதான் அவன். முகம் களையானது. குளிர்ந்த நெருப்புக் கங்குகள் அவன் கண்கள். எதேச்சையாக நான் பார்க்கும்போதெல்லாம் அவன் என்னையே பார்க்கிறான். அவள் பார்க்கும் தூரத்திலும் அவளைப் பார்க்கும் தூரத்திலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறான். அவன் பார்வை என் உயிரைக் குடைகிறது. என் எலும்புகள் ஐஸ் க்ரீம் ஆகின்றன. அவனைப் பார்க்காத பகலில் என் அறிவு அழிகிறது; தீயில் வேகின்றன என் சனி ஞாயிறுகள்.
டிஃபன்பாக்ஸ் வாங்கப் போனபோதுதான் தெரிகிறது அவன் பாத்திரக் கடையில் ஒரு பணியாளன் என்று. அவனைப் பார்க்க வெட்கப்பட்டு ஏதோ ஒரு டிஃபன்பாக்ஸை வாங்கிக்கொண்டு பஸ் ஏறுகிறேன், பிரித்துப் பார்த்தேன் _ என்ன ஆச்சரியம்? டிஃபன்பாக்ஸில் ‘செல்லப் பூ’ என்று பெயர் வெட்டியிருக்கிறான். எமகாதகன்! எப்படி அறிந்தான் என் பெயரை? மறுநாள் எங்கள் டிஃபன்பாக்ஸ்களைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கிறோம். திருப்பித் தரும்போது டிஃபன்பாக்ஸ் கடிதங்களால் நிறைந்து காதல் பாத்திரம் ஆகிவிடுகிறது. போகப் போகப் பைத்தியம் பிடிக்கிறது. எங்கள் வாழ்க்கை நிறம் மாறுகிறது. நிலக்கோட்டை -_ அணைப்பட்டி நெடுஞ்சாலை பட்டாம்பூச்சிகளால் நிரப்பப்படுகிறது. சாலையோரக் கள்ளிகளில் தங்கம் ஒழுகுகிறது.
‘கல்யாணம் பண்ணிக்கலாமா’ என்கிறேன் நான். ‘பண்ணிக்கலாம்; ஆனால் நீ மேல்ஜாதி; நான் கீழ்ஜாதி’ என்கிறான். நான் சிரிக்கிறேன். “உண்மையில் நீங்கள்தான் ‘னீணீறீமீ’ ஜாதி; நான் ‘யீமீனீணீறீமீ’ ஜாதி’’ என்கிறேன் ஆங்கிலத்தில், சிரிக்கிறான்; சிரிக்கிறோம். இப்போது கழுத்தில் அவன் தாலி; கண்ணிலே கண்ணீர். இது ஆனந்தமா? துக்கமா?
“புதுசா ஒரு பையனும் பொண்ணும் அக்கம்பக்கத்துல பாத்தீகளா?’’
கொடைக்கானல் நாயுடுபுரத்தில் விசாரித்துக் கொண்டிருக்கிறது சிவன்காளை வகையறா.
* * *
அழுது அழுது கண்வீங்கிக் கிடக்கிறாள் செல்லப்பூவின் தாயார். தொடர்பற்ற சொற்கூட்டங்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டவள் வெளியேறும் வழியறியாமல் புலம்பித் தீர்க்கிறாள்.
“எங்க இருக்காளோ? எப்படி இருக்காளோ? இல்ல இருக்காளோ…? இல்லையோ…? ஊரெல்லாம் மஞ்சக் குளிச்சா, சந்தனம் குளிப்பாளே ஏந்தங்கம். இன்னக்கி எந்தக் காட்டு முள்ளுல கெடக்காளோ? இத்தன தாட்டியவான்களிருந்தும் இன்ன தெசையில இருக்கான்னுகூடக் கண்டுபிடிக்க முடியலையே’’
புலம்பிக் கொண்டிருந்த ஆத்தாளை இடைமறித்தாள் சமையல்காரியின் சின்னமகள்.
“யாத்தா, இந்த டிஃபன்பாக்ஸப் பாரு. இது நம்ம வீட்டுப் பாத்திரமாத் தெரியலையே. மலையாண்டின்னு வேற பேரு வெட்டியிருக்கு. நம்ம ஆளுகள்ல யாரு மலையாண்டி?’’
ஒரே ஒரு தீப்பொறியில் எரிந்தது காடு; கவுஞ்சி வரைக்கும் தெரிந்தது ஒளி.
* * *
“அந்தா அவதான். பேரி மரத்தடியில பேன் பாத்துக்கிட்டிருக்காளே அவதான் எங்க பொண்ணு’’
சிவன்காளை கைகாட்டவும் ரெண்டு பெண்களையும் நிதானமாய்ச் சூழ்ந்துகொண்டன காக்கிச்சட்டைகள்.
“ஏண்டி ஓடுகாலி! நம்ம சாதிப்பய எவனும் ஒனக்கு ஆம்பளையாத் தெரியலையா? கீழ்சாதிப்பயகிட்டதான் கிறுக்கா? வாடி கழுத வச்சிருக்கோம் ஒனக்கு வீட்ல’’
செல்லப்பூவின் தலைமுடியைக் கையில் சுற்றி பேரிக்காட்டில் தரதரவென்று இழுத்துப்போனான் தாய்மாமன்.
தடுக்க வந்த சித்தி வீராயி மாட்டுக்காம்பில் ஒட்டிய உண்ணியைப்போல் நசுக்கி எறியப்பட்டாள்.
அவள் ‘அய்யோ மாமா’ என்று காடு கிழியக் கத்தினாள்.
“வம்சம் புழுக்கைப் பட்டுப்போச்சு. இன்னும் தாய்மாமன் உறவு மட்டும் ஒட்டிக்கிட்டிருக்காக்கும்? மஞ்சக் கெழங்கக் கழுத்துல கட்டினாத் தாலி ஆயிருமா தாலி…?’’
கழுத்தில் காயம்பட அழுத்தி அறுக்கப்பட்ட தாலி, பீட்ரூட் செடிகளுக்கு மத்தியில் எங்கோபோய் விழுந்து தொலைந்தது.
“என்னைய விடுங்க. அவரு வந்தபிறகு அவரையும் சேத்துக் கூட்டிட்டுப் போங்க. எனக்கு என் புருசன் வேணும்… புருசன் வேணும்…’’
“வாடி புள்ள. நம்ம சாதியில ஒனக்கு ஒம்போது புருசன் கட்டிவைக்கிறேன்; வா’’
ஒரு பெண்ணின் மீது செலுத்தப்படும் அதிகபட்ச ஆதிக்கத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ், பைகளில் கைகளைவிட்டு நோட்டுகளை நோண்டிக் கொண்டிருந்தது.
“ஏலே இந்தச் சிறுக்கிய நான் கூட்டிட்டுப் போறேன். இவள ஓட்டிட்டுப் போனவன் வந்தான்னா போட்டுத்தள்ளிட்டு வந்திருங்க’’
சாராயச் சிவப்பு மாறாத இரண்டு தடிப்பயல்களுக்கு உத்தரவு போட்டுவிட்டு செல்லப்பூவின் தோள்பட்டையில் இரும்புக் கைகளை வைத்து அழுத்திக்கொண்டு புறப்பட்டான் சிவன்காளை.
ஒரு காதலுக்கான கடைசிச் சங்கை ஊதிக்கொண்டே வளைந்த மலைச்சாலைகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது டாட்டா சுமோ. மரஞ்செடிகொடிகளின் வேர்களும் கருகும்படி மலைவெளியெங்கும் கேட்டுக் கொண்டே யிருந்தது செல்லப்பூவின் கதறல்.
அந்தி மயங்க மழை தூறியது; கவுஞ்சி மலையை மஞ்சு(மேக)மூட்டம் மூடியிருந்தது. ஒரு கையில் வாசனை இல்லாத மலைப்பூவும் இன்னொரு கையில் சாரம்போன இனிப்பும் வாங்கிக்கொண்டு ஓர் உருளைக்கிழங்குக் கோணியைத் தலையில் மாட்டி வீடு திரும்பிக் கொண்டிருந்த மலையாண்டியின் தோள்களை எலும்பு நொறுங்க அழுத்தின நான்கு தேக்கங் கரங்கள்.
* * *
விளாம்பட்டி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர ஈ காக்கா இல்லாமல் பார்த்துக்கொண்டது போலீஸ்.
“போடி! உங்கப்பன் கால்ல போயி விழு’’
தரதரவென்ற இழுத்து வந்தவளை அப்பன் காலடியில் அர்ப்பணித்தான் தாய்மாமன்.
பதற்றம் _ அச்சம் _ அவமானம் என்ற கலவை உணர்ச்சிகளால் நொந்து நொறுங்கிக் கிடந்தவள் அப்பன் கால்களைக் கட்டிக்கொண்டு கதறினாள்.
“என்னிய மன்னிச்சிருங்கப்பா. ஒங்களக் கேக்காமக் கல்யாணம் பண்ணினது தப்புதான். என்னிய அவரோட சேத்து வச்சிருங்க. உடுத்துன துணியோட வெளியேறிக்கிறேன். அவரு இல்லேன்னா நான் செத்தே போயிருவனப்பா’’
தரையைக்கூடக் குனிந்து பார்க்காமல் காவல் நிலையத்தின் அழுக்குப் பிடித்த மின்விசிறிமீது பார்வை செலுத்தி விறைத்தது விறைத்தபடி நின்றான் முள்ளுமூக்கன்.
கலைந்த தலையும், குலைந்த கோலமும், உடம்பில் உட்காராத ஆடையும், கருணையைப் பிச்சை கேட்கும் கண்களுமாய் நடுங்கும் குரலில் விம்மிவிம்மிப் பேசியவளை வம்சத்தின் இழிவென்று பார்த்து நின்றார்கள் அண்ணன் தம்பிகள்.
“என்னய்யா முள்ளுமூக்கா, இந்தப் பொண்ணுதான ஒம் மக. ‘பெண்ணைப் பெற்றுக்கொண்டோம்’ன்னு எழுதிக் கொடுத்துட்டு புகாரை வாபஸ் வாங்கிக்குங்க’’
தரையில் உடைந்து கிடந்தவளை ஒன்று சேர்த்தார்கள். வாகனத்தில் நடு இருக்கையில் அவளை அமரவைத்து இருபுறமும் இருவர் சுவர் கட்டினார்கள்.
“ஏலே! அந்த டிரைவரை இறக்கிவிடுறா. வண்டியை நீ ஓட்றா கருத்தராசு’’
வண்டி புறப்பட்டது.
* * *
இரண்டு மணி நேரத்தில் மீண்டுவந்த முள்ளுமூக்கன் விளாம்பட்டி காவல் நிலையத்துக்குள் சுற்றியடிக்கும் சூறாவளிபோல் புகுந்தான் தன் சுற்றம்சூழ.
அவன் நெஞ்சு பதறவில்லை; வாய் குழறவில்லை.
“அய்யா இன்ஸ்பெக்டர் அய்யா… என் மகளைக் காணோம். கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்சுக் குடுத்தீக. இப்பத் திரும்பவும் காணோம். வீட்டுக்குப் போற வழியில ஒண்ணுக்கிருக்க வண்டிய ஓடையில நிறுத்தினோம். வந்துபாத்தா திரும்பவும் ஓடிப்போனா ஓடுகாலி. இருட்டுல எங்க போனாளோ தெரியல. கையெடுத்துக் கும்புடுறேன்; கண்டுபிடிச்சுக் கொடுக்கணும்’’.
தீர்ந்துபோன தேநீர்க் கோப்பையின் கடைசிமண்டியை உறிஞ்சிக் கொண்டே காவல்துறைக்கென்றே கட்டமைக்கப்பட்ட உணர்ச்சியற்ற தொழில்மொழியில் இன்ஸ்பெக்டர் சொன்னார்:
“எழுதிக் குடுத்துட்டுப் போங்க; பாப்பம்’’
* * *
“ஏலே பாவிமக்கா! எங்கடா என் பிள்ள? கைக்கு வந்த பிள்ளையக் கண்ல காட்டுங்கடா, அவ எந்தச் சாதிப்பயகூடப் போனாலும் போகட்டும். உசுரோட இருந்தாப் போதுமடா மக்கா, சொல்லுங்கடா! எங்கடா இருக்கா என்னப் பெத்த ஆத்தா?’’
“ஏ கெழவி! சும்மா கெட. ஓடுகாலிப்பிள்ள திரும்ப ஓடிப்போனா. கண்டுபிடிக்காம விடுவோமா- போ… போயிப் பொத்திக்கிட்டு ஒறங்கு’’
இடிமொழியில் பேசிய மகன் குரலில் இடிந்தேபோனாள் ஆத்தா. விடிந்து தொலைந்தது இழவு இரவு.
நேற்று ராத்திரி பின் ஜாமத்தில் முள்ளுமூக்கனின் செங்கற்சூளையில் பிணவாடை வீசியதாகப் பேசிக் கொண்டார்கள் கம்மாக்கரைக் காவல்காரர்கள்.
எங்களூர் நெருப்பு வீடெரிக்கும்; காடெரிக்கும்; ஆளெரிக்கும்; நீதியெரிக்கும்.
பாவி மக்கா! சாதியை எரிக்கும் நெருப்பை எப்பப்பா கண்டுபிடிக்கப் போறீக?
(நன்றி : வைரமுத்து மற்றும் சூர்யா
லிட்ரேச்சர் (பி) லிட்)