கெடுதலகள் யாரால்? எனும் கேள்வி கேட்டவர்
இறப்பு என்பது உடலின் இறுதியும் உயிரின் இறுதியுமாகும். எனவே, அதுகண்டு அச்சமடையத் தேவையில்லை. மனிதர்களுக்குக் கடவுள்கள் தண்டனை ஏதும் தருவதில்லை;
அவை மனிதர்களுக்குப் பரிசும் கொடுப்பதில்லை. இந்த அண்டம் முடிவில்லாதது; எல்லையில் லாதது, அழிவில்லாதது, நிரந்தரமானது எனும் கருத்துகளை முதன்முதலில் கூறியவர்தான் எபிகூரஸ் (EPICURUS). இன்று இது உலகம் முழுக்கப் பரவியுள்ளதும் பெரும்பான்மை யோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான கருத்தாக இருக்கலாம். ஆனால், எபிகூரஸ் வாழ்ந்த காலத்தில்…? நினைத்தே பார்க்க முடியாது… ஆம், அவர் வாழ்ந்தது – பொது ஆண்டுக் கணக்குக்கு 371 ஆண்டுகள் தொடங்கி 270 ஆண்டுகள் வரை. அதாவது கிறித்து பிறப்பதற்கு 371 ஆண்டுகளுக்குமுன் பிறந்து கி.பி.270இல் உயிர் நீத்தவர். 71 ஆண்டுக்காலம் வாழ்ந்து மறைந்த கிரேக்கத் தத்துவ அறிஞர்.
கிறித்து பிறந்த முறையையோ, அவர் பெயரால் ஆண்டுக்கணக்கு பின்பற்றப்படு வதையோ, பகுத்தறிவாளர்கள் ஏற்பதில்லை என்பதால் பொது ஆண்டுக்கணக்கு என எழுதப்பட்டு வருகிறது. கி.மு.(B.C.) என்பதை பொது ஆண்டுக்கு முன் எனப் பொருள்படும் B.C.E. எனவும் கி.பி.(A.W.) என்பதை பொதுஆண்டு (COMMON ERA – E.C.) எனவும் பகுத்தறிவாளர்கள் எழுதி வருகின்றனர்.
சார்வாகனைப் போலவே
எபிகூரசின் தத்துவங்கள் எபிகூரனிசம் என அழைக்கப்படுகின்றது. 300க்கும் மேற்பட்ட எழுத்துரைகள் அவரால் எழுதப்பட்டன என்றாலும் மிகச்சில கட்டுரைகளே – அதிலும் முழுமையாக இல்லாமல்தான் – நமக்குக் கிடைத்துள்ளன. தமிழின் அய்ம்பெருங்காப் பியங்களில் நீலகேசி, குண்டலகேசி போன்றவை முழுமையும் இல்லாத நிலை இங்கே ஏற்பட்டதைப்போல அவருடைய எழுத்துகளுக்கு நிலை ஏற்பட்டுவிட்டது. இங்கே போன்றே, அங்கேயும், அவர் கருத்துக்கு எதிரிகள் அவற்றை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு ஒழித்துவிட்டனர். எனினும் அக்கருத்துகள் மக்கள் மனதில் இடம்பிடித்து நிலைபெற்றுவிட்டதை அழிக்க முடியவில்லை. அவற்றுக்கு எதிர்வாதம் செய்து சிலவற்றை எழுதினர். அவற்றைக் கொண்டு எபிகூரசின் கருத்துகளைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிட்டியுள்ளது. பரபக்கவாதம் எனும் வகையில் அவர்கள் மேற்கோள் காட்டிய எபிகூரசின் கருத்துகள்தாம் அவரை அறிந்து கொள்ள உதவி செய்கின்றன.
இந்திய மண்ணில்கூட, இந்த நிலை சாருவாகக் கருத்துகளுக்கு ஏற்பட்டுள்ளது. சாருவாகம் எனும் அறிவு வாதம் – பகுத்தறிவுக் கொள்கை – நாத்திகம் – ஆரியப் பார்ப்பனர் களால் மறைக்கப்பட்டு, ஆள்வோரின் ஆதரவி னால் அழிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், அதனை எதிர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டவர்களின் எதிர்வாதங்களிலி ருந்துதான், நாம் சாருவாகத்தை அறிய முடிகிறது.
எபிகூரசின் பகுத்தறிவு வாதம் ஒருபக்கம் புறந்தள்ளப்பட்ட நிலை ஏற்பட்டாலும்கூட, அவரது அறிவியல் கருத்துகளை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அண்டத்தின் பரந்துபட்ட வெட்ட வெளியில் அசைந்தும் மாறிக்கொண்டுமிருக்கிற அணுக்களால் தான் உலக இயக்கத்திற்கான அடிப்படை அமைந்துள்ளது எனும் அவருடைய தத்துவம் இன்று மெய்ப்பட்டுள்ளது.
பள்ளி நிருவாகி
கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் பிறந்த எபிகூரசின் பெற்றோர்கள் அதன் ஆளுகைக்கு உட்பட்ட சாமோஸ் எனும் தீவில் வாழ்ந்தபோது எபிகூரஸ் பிறந்தார். அவரின் பெற்றோர்கள் வாக்குரிமை பெற்ற குடிமக்கள் (CITIZEN). அந்நாளில் அந்நாட்டில் வாக்குரிமையற்ற அடிமை மக்களும் இருந்தனர். அவர்கள் DENIZEN என அழைக்கப்பட்டனர். நான்கு ஆண்டுகள் தத்துவம் படித்த எபிகூரஸ் தனது 18ஆம் வயதில் அந்நாட்டுச் சட்டப்படி போர்ப்படையில் சேர்ந்து பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொஞ்ச காலம் ஓர் ஆசிரியரிடம் பாடம் கேட்டார். பின்னர் தனது 35ஆம் வயதில் தோட்டம் (THE GARDEN) எனும் இடத்தை வாங்கி அதே பெயரில் பள்ளி ஒன்றைத் தொடங்கி நடத்தினார். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து பிள்ளைகள் ஏதும் இல்லாமலே சிறுநீரகக் கற்கள் தொல்லை நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.
பெண்கல்வி – முதல்வர்
கிரேக்கத்தில் தத்துவம் பயிற்றுவிக்கும் பள்ளிகளில் அந்தக் காலத்தில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. சாக்ரடீஸ், அவரது மாணவன் பிளேட்டோ, அவரது மாணவன் அரிஸ்டாட்டில் போன்றவர் களெல்லாம் வாழ்ந்து மறைந்த மண் அது. என்றாலும் ஆணாதிக்கச் சமுதாயம். பெண்களைக் கீழாக நடத்தியவர்கள் அந்த நிலையில் பெண் கல்வியைப் பேணுவதற்கு அவர்களைத் தம் பள்ளியில் சேர்த்துத் தத்துவம் சொல்லிக் கொடுத்தார் எபிகூரஸ் என்றால், அது பெரும் புரட்சிதான்! பள்ளியின் வாசல் கதவில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்களும் புரட்சியானவைதான்! புதியவரே! இங்கே நீங்கள் வசதியாகத் தங்கலாம்; இங்கே எங்கள் உச்சபட்ச நல்ல செயல் – மகிழ்ச்சி என்பது எபிகூரசின் தத்துவச் சுருக்கம்.
பலரும் நட்புடன் பழகுவதுதான் அவருடைய விருப்பமும் எதிர்பார்ப்பும். அதற்கான உறுதிமொழியை அங்கே கற்போர் அனைவரும் ஏற்றிட வேண்டும். அந்தக் காலத்தில் இருந்த ஆசிரியர்கள் பலரிடமிருந்தும் அவர் வேறுபட்டவர். அவரது பள்ளியில் பெண்களையும் அடிமைகளையும் சேர்த்து, கல்வி கற்பித்தார்.
அவர்கள் படிப்பது கடவுளுக்கு ஆகாத ஒன்று என்று கற்பிக்கப்பட்டிருந்த காலத்தில், அவர் கடவுளுக்கு எதிர்ப்பான காரியங்களைச் செய்தார். அதனால் கடவுள் பற்றிய பயம் மக்களின் மனதிலிருந்து அகன்றது. கெட்டவர்களைக் கடவுள் தண்டிக்கும் என்றும் நல்லவர்களை நற்கதியில் வைத்திருக்கும் என்றும் கற்பிக்கப்பட்ட பொய்மைகளைப் பொசுக்கினார்.
மனிதர்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருப்பது கடவுளின் வேலையல்ல என அவர் கூறியதை மக்கள் ஏற்றனர். மகிழ்ச்சியான இன்ப வாழ்வுதான் மனிதனின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்ற அவரது கருத்துக்கு இசைவு தெரிவித்தனர்.
அரிஸ்டாட்டிலின் அபத்தம்
சாவைக்கண்டு அஞ்சு எனக் கூறிய அரிஸ்டாட்டிலின் கருத்துக்கு எதிராக, எபிகூரஸ் பயப்படாதே என்றார். அரிஸ்டாட்டில் பல அபத்தக் கருத்துகளுக்குச் சொந்தக்காரர். பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை; இயற்கையில் மூன்றுவகை மனிதர்கள் உண்டு என்றவர். ஆண்களைவிடப் பெண்களுக்கு வாய்ப்பற்கள் குறைவு எனக்கூறிய மேதாவி அவர்!
நாம் இருக்கும்போது, சாவு இல்லை! சாவு வந்தால் நாம் இல்லை! இதுதான் எபிகூரசின் கருத்து. எல்லா புல உணர்ச்சிகளும் நினைவுகளும் இறப்பில் அற்றுப் போகின்றன. எனவே, சாவு மகிழ்ச்சியும் அல்ல, துன்பமும் அல்ல என்றார் அவர். அந்தக்கால மதக் கொள்கைக்கு மாறானது இது.
I was not; I was; I am not; I do not care என்பது எபிகூரனிசவாதிகளின் கல்லறையில் எழுதப்படும் சொற்கள். இன்றளவும்கூட மனிதாபிமானிகளில் இறப்பு நிகழ்வில் கூறப்படும் வாசகங்கள். மதச் சடங்குகளைப் பின்பற்றாத மனிதாபிமானிகளின் சாவுகளில் (HUMANIST FUNERALS) இவை இடம்பெறும்.
நாத்திகர் என்றனர்
இந்தக் கொள்கைகளுக்காக எபிகூரஸ் நாத்திகர் எனப்பட்டார். மனிதர் இறந்தபின் அவருடைய இளைப்பாறுதலுக்காக சிபாரிசு செய்யும் வார்த்தைகள் இடம்பெறாமல் இறப்பை இயல்பாக ஏற்றுக் கொள்ளச் செய்யும் சொற்கள் கடவுளுக்கு எதிரானவை; எனவே, நாத்திகம் என்பது அந்த நாட்டுக் கிறித்துவர்களின் கணிப்பு. இங்கேகூட, இறந்துபோனவர்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் சாந்தி அடைய விண்ணப்பம் போடும் இரங்கல் செய்திகளை, பகுத்தறிவாளர் அண்ணா பெயரில் கட்சி நடத்திடும் ஓர் அம்மையார் அடிக்கடி வெளியிடுவதைப் பார்க்கலாம். வேதனைதான். புகழ் வெளிச்சம் வேண்டப்படாத வாழ்க்கை வாழ வேண்டும் எனக்கூறிய எபிகூரஸ் நாத்திகர். புகழ்ச்சிக்காகவே வாழும் அம்மையார் போன்ற ஆஷாடபூதிகள் அனைவரும் ஆத்திகராம்! நல்லா இருக்கு ஞாயம்!
புரட்சிகளுக்கு ஆசான்
ஆனால், எபிகூரசின் கொள்கைகள், புகழ்பெற்ற பிரஞ்சுப் புரட்சியின் கர்த்தாக்களைக் கவர்ந்து பின்பற்றச் செய்தது. வாழ்க்கை, சுதந்தரம், சொத்து ஆகியவை மனிதர்களுக்கு அடிப்படையானவை எனும் கருத்தை ஜான் லாக் கூறுவதற்கு அடிப்படையாக அமைந்தது. ஒருவரது உடம்புதான் அவருடைய சொத்து என்பார் ஜான் லாக். அதுபோலவே, அமெரிக்கப் புரட்சிக்கும் அந்நாட்டுச் சுதந்தரப் பிரகடனத்திற்கும் அடித்தளம் அமைத்ததும் எபிகூரசின் கொள்கைகள்தான். அமெரிக்கத் தந்தை தாமஸ் ஜெபர்சன் கொண்ட கொள்கையான எல்லா மனிதர்களும் சமமானவர்கள்; அவர்களுக்குள்ள உயிர் வாழும் உரிமை, சுதந்தர வாழ்வுக்கான உரிமை, மகிழ்ச்சியான வாழ்வு ஆகியவை எவராலும் பறிக்கமுடியாதவை என்பது எபிகூரசின் கொள்கைகள்தான்.
எபிகூரஸ் தொடக்கத்தில் டெமாக்ரிடிஸ் என்பவரின் கொள்கைகளைப் பயின்றவர் என்றாலும் அவர்கள் இருவரின் கொள்கைகளுக்கும் வேறுபாடுகள் உண்டு. அத்தகு வேறுபாடுகள் பற்றி கார்ல் மார்க்ஸ் ஆய்வுசெய்து டாக்டர் பட்டம் பெற்றார்.
ஆனாலும் அவருடைய எழுத்துகள் முழுவதும் கிடைக்காதது வருந்தற்குரியது. இருந்தாலும் மூன்று கட்டுரைகள் மட்டுமே உள்ளன. புகழ்பெற்ற தத்துவ அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு எனும் நூலில் ஒரு கட்டுரை. முக்கிய தத்துவங்கள் எனும் நூலில் ஒன்று. வாடிகன் கருத்துகள் எனும் நூலில் கண்டுள்ள கையெழுத்துப் பிரதி ஆகியவை மட்டுமே இருக்கின்றன என்பது ஆறுதலளிக்கும் சேதி!
தந்தை பெரியாரின் தத்துவங்களை மக்கள் மத்தியில் பரப்பிட அவரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் நாம் கொண்டாடுவதைப் போல எபிகூரசின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டு வந்தது. அவராலேயே ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது. அந்த நாளில் கலந்துகொண்டோர் அனைவருக்கும் பொதுவிருந்து அளிக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பிறகும் அவரது பின்பற்றாளர்கள் அந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். (பொ. ஆ. முன் 341 காமெலியன் மாதம் 10ஆம் நாள் பிப்ரவரி மாதம் 4ஆம் நாள்).
அனைத்தையும் காக்கவல்ல கடவுள் இருக்கும்போது கெடுதல்கள் ஏற்படுவது ஏன்? அவற்றிற்குக் காரணம் யார்? என்று அவர் கேட்டார். இன்றுவரை அந்தக் கேள்விக்கு விடையே கிடைக்கவில்லை.
– தொடரும்