அத்வானியின் யாத்திரை முக்கியத்துவம் இல்லாதது. ஏற்கெனவே நரேந்திர மோடி, பாபா ராம்தேவ் ஆகியோர் யாத்திரை மேற்கொண்டனர். இந்த யாத்திரைகளின் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்.தான். யாத்திரைகளுக்கு நிதி திரட்டி, தங்கள் சொந்த லாபத்துக்கு அதைப் பயன்படுத்திக் கொள்வதில் சங்பரிவார், பா.ஜ. தலைவர்கள் வல்லுநர்கள். – திக்விஜய் சிங், பொதுச்செயலாளர், காங்கிரஸ்
நீதிபதிகள் மீது தற்போது சிறுசிறு புகார்கள் கூறப்படுகின்றன. நியாயம், நீதி கேட்டு வருபவர்களுக்கு என் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும். – தர்மாராவ், நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்
ஸீ நீதிபதிகள் மனது, இதயம், கையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கை சுத்தமாக இருந்தால் சிறந்த நீதிபதிகளாக உருவாகலாம். – ப. சதாசிவம், நீதிபதி, உச்ச நீதிமன்றம்
உலகிலேயே அணுமின் நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மிகவும் சுத்தமானதாகும். அது அவசியமானதே. அணுமின் நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அதேவேளையில், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அவசியம். – அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்
வியட்நாமோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், வியட்நாம் பிராந்தியத்தில் தனது அரசியல் செல்வாக்கையும் அதிகரிக்க இந்தியா கருதுகிறது. இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இது நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். இதற்குச் சீனா சம்மதிக்கக் கூடாது. இந்திய வியட்நாம் ஒப்பந்தம் குறித்து சீனப் பத்திரிகைகள்
இந்தியாவின் 81 சதவிகித பிரதான மற்றும் முன்னணி ராணுவச் செயல்தளங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவே உள்ளன. அஷ்பக் நதீம், ராணுவ மேஜர், பாகிஸ்தான்
தேவையற்ற, அவசியமற்ற வீண் பிரச்சினைகளையே ஊடகங்கள் பரபரப்பாக்கிக் காட்டுகின்றன. வறுமையும், வேலையின்மையும்தான் நாடு எதிர்கொண்டுள்ள மாபெரும் பிரச்சினைகளாகும். நாட்டுக்கு முக்கியமானதும் தேவையானதும் சினிமா நடிகரின் மனைவி கருவுற்றிருக்கும் செய்தி அல்ல. ஒரு சினிமா நடிகரின் மனைவி ஒரு குழந்தை பெற்றாரா அல்லது இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாரா என்ற செய்தியை வெளியிடுவதன் மூலம் நாட்டின் எந்தப் பிரச்சினை தீரப்போகிறது? ஆனால், இது போன்ற செய்திகள்தான் பத்திரிகையின் முதல் பக்கத்தில் முக்கியமான இடத்தில் வெளியிடப்படுகின்றன. – மார்க்கண்டேய கட்ஜு இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி.