ஆசிரியர் பதில்கள் : 90% வேலை மாநில மக்களுக்கே! சட்டம் செய்க!

மே 16-31 2019

கே:       திராவிட இயக்க வரலாறே அறியாதவர்கள், ‘திராவிட’ என்ற அடைமொழியோடு கட்சி நடத்துவது பற்றி?-

                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:           தமிழ்நாட்டு அரசியலில் இவையெல்லாம் வினோத விசித்திரங்கள். அண்ணா கொள்கை தெரியாதவர்கள் அ.தி.மு.க. என்ற பெயரில் இயங்குவது! ‘திராவிட’ என்பதற்கு நேர் எதிராக ஆரிய தத்துவங்களின் அடிமைகள் இப்படி ஒரு ஒப்பனை மூலம், அரசியலை நல்ல முதலீடாக்கி வாழுகின்றனர்; கொடுமையிலும் கொடுமை!

கே:       வைரமுத்துவின் பெரியார்பற்றிய பேச்சு இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதுபோல் நிகழ்வுகள் மாதந்தோறும் நடத்தலாமே?

                – மகிழ், சென்னை -98

ப:           பலரது விருப்பம் குவிகிறது. கவிப்பேரரசுக்கு அவருக்குள்ள பணிகளில் இதையும் ஒன்றாக்கி கொள்ளுவார் என்பது நம் நன்னம்பிக்கை.

கே:       தி.மு.க., ம.தி.மு.க. தவிர மற்ற திராவிட பெயரிருக்கும் கட்சிகளை திராவிட கட்சிகள் என்று தாய்க்கழகம் ஏற்கலாமா? அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளால் திராவிடமே கேலிக்கூத்தாகிறதே?

                – அருள்முருகன், மதுரை

ப:           முதல் கேள்விக்கான விடையே இதற்கும்!

கே:       தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மூன்றாவது அணி அமைப்பதில் ஈடுபடுவது பற்றித் தங்கள் கருத்து என்ன?

                – கிருபாகரன், சென்னை

ப:           பயன்தரா வேலை. எண்ணெய் செலவு பிள்ளை பிழைக்காது. அவருக்கு அகில இந்திய தலைவராகும் ஆசை. அதுவும் சந்திரபாவுக்கு நேர்எதிர் கடை விரிக்கிறார்! அவ்வளவுதான்!

கே:       பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசையும், வி.சி.கட்சி தலைவர் தொல்.திருமாவளவனையும் ஒரு நிகழ்வில் சந்திக்கச் செய்து, சாதி மோதலை, தமிழர்களுக்குள் மோதலைத் தாங்கள் தவிர்க்க வேண்டும் என்ற என் ஆவலை நிறைவு செய்வீர்களா?

                – அகமது, மாதவரம்

ப:           காலத்தால் எதுவும் நடக்கலாம்! இன்றில்லாவிட்டாலும் விரைவில் அதுவும் நடைபெறலாம்.

கே:       தங்களைப் போன்றோர் இருப்பதால் மழை பெய்யவில்லையென்று பார்ப்பன நகைச்சுவை நடிகர் கூறியுள்ள கருத்து பற்றி…?

                – திலகவதி, அரக்கோணம்

ப:           ஏன் அவரைப் போன்ற ‘உலக மகா அறிவாளிகள்’ இருப்பதால் மழை பெய்திருக்க வேண்டுமே, ஏனோ இயலவில்லை. ஏதோ அவர் இருக்கும் இடத்தில் மழை, நான் இருக்கும் இடத்தில் மழை இல்லை என்பதா உண்மை?

கே:       வடமாநிலத்தவரின் குடியேற்றமும், பணியமர்த்தலும் சட்டரீதியாக கட்டுப்படுத்தப்பட என்னனென்ன செய்ய வேண்டும்?

                – மகேஷ், விருதுநகர்

ப:           புதிய அரசு 90% வேலை உள்ளூர் மக்களுக்கே என்று சட்டம் இயற்ற வேண்டும்.

கே:       அமைச்சர் செல்லூர் இராஜு அவர்கள் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் பயன்படுத்தியதை கிண்டல் செய்யும் ஊடகங்கள், மழைவேண்டி யாகம் என்ற பெயரில் அண்டா பானையில் தண்ணீர் வைத்து அதில் உட்கார்ந்து மந்திரம் சொல்வதை விமர்சிக்காதது எதைக் காட்டுகிறது?

                – கருணாமூர்த்தி, முடப்பள்ளி, கடலூர்

ப:           அதிலும் ‘பிராமண _ சூத்திர’ பேதம் உள்ளது போலும்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *