கே: திராவிட இயக்க வரலாறே அறியாதவர்கள், ‘திராவிட’ என்ற அடைமொழியோடு கட்சி நடத்துவது பற்றி?-
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: தமிழ்நாட்டு அரசியலில் இவையெல்லாம் வினோத விசித்திரங்கள். அண்ணா கொள்கை தெரியாதவர்கள் அ.தி.மு.க. என்ற பெயரில் இயங்குவது! ‘திராவிட’ என்பதற்கு நேர் எதிராக ஆரிய தத்துவங்களின் அடிமைகள் இப்படி ஒரு ஒப்பனை மூலம், அரசியலை நல்ல முதலீடாக்கி வாழுகின்றனர்; கொடுமையிலும் கொடுமை!
கே: வைரமுத்துவின் பெரியார்பற்றிய பேச்சு இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதுபோல் நிகழ்வுகள் மாதந்தோறும் நடத்தலாமே?
– மகிழ், சென்னை -98
ப: பலரது விருப்பம் குவிகிறது. கவிப்பேரரசுக்கு அவருக்குள்ள பணிகளில் இதையும் ஒன்றாக்கி கொள்ளுவார் என்பது நம் நன்னம்பிக்கை.
கே: தி.மு.க., ம.தி.மு.க. தவிர மற்ற திராவிட பெயரிருக்கும் கட்சிகளை திராவிட கட்சிகள் என்று தாய்க்கழகம் ஏற்கலாமா? அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளால் திராவிடமே கேலிக்கூத்தாகிறதே?
– அருள்முருகன், மதுரை
ப: முதல் கேள்விக்கான விடையே இதற்கும்!
கே: தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மூன்றாவது அணி அமைப்பதில் ஈடுபடுவது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– கிருபாகரன், சென்னை
ப: பயன்தரா வேலை. எண்ணெய் செலவு பிள்ளை பிழைக்காது. அவருக்கு அகில இந்திய தலைவராகும் ஆசை. அதுவும் சந்திரபாவுக்கு நேர்எதிர் கடை விரிக்கிறார்! அவ்வளவுதான்!
கே: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசையும், வி.சி.கட்சி தலைவர் தொல்.திருமாவளவனையும் ஒரு நிகழ்வில் சந்திக்கச் செய்து, சாதி மோதலை, தமிழர்களுக்குள் மோதலைத் தாங்கள் தவிர்க்க வேண்டும் என்ற என் ஆவலை நிறைவு செய்வீர்களா?
– அகமது, மாதவரம்
ப: காலத்தால் எதுவும் நடக்கலாம்! இன்றில்லாவிட்டாலும் விரைவில் அதுவும் நடைபெறலாம்.
கே: தங்களைப் போன்றோர் இருப்பதால் மழை பெய்யவில்லையென்று பார்ப்பன நகைச்சுவை நடிகர் கூறியுள்ள கருத்து பற்றி…?
– திலகவதி, அரக்கோணம்
ப: ஏன் அவரைப் போன்ற ‘உலக மகா அறிவாளிகள்’ இருப்பதால் மழை பெய்திருக்க வேண்டுமே, ஏனோ இயலவில்லை. ஏதோ அவர் இருக்கும் இடத்தில் மழை, நான் இருக்கும் இடத்தில் மழை இல்லை என்பதா உண்மை?
கே: வடமாநிலத்தவரின் குடியேற்றமும், பணியமர்த்தலும் சட்டரீதியாக கட்டுப்படுத்தப்பட என்னனென்ன செய்ய வேண்டும்?
– மகேஷ், விருதுநகர்
ப: புதிய அரசு 90% வேலை உள்ளூர் மக்களுக்கே என்று சட்டம் இயற்ற வேண்டும்.
கே: அமைச்சர் செல்லூர் இராஜு அவர்கள் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் பயன்படுத்தியதை கிண்டல் செய்யும் ஊடகங்கள், மழைவேண்டி யாகம் என்ற பெயரில் அண்டா பானையில் தண்ணீர் வைத்து அதில் உட்கார்ந்து மந்திரம் சொல்வதை விமர்சிக்காதது எதைக் காட்டுகிறது?
– கருணாமூர்த்தி, முடப்பள்ளி, கடலூர்
ப: அதிலும் ‘பிராமண _ சூத்திர’ பேதம் உள்ளது போலும்!