வரலாற்றுச் சுவடு : ”பெரியார் கொடுத்த தந்தி”

மே 16-31 2019

வ.க.கருப்பையா

தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகத்தை ஈரோட்டில் இருந்த தன் வீட்டுக்குக் கொண்டு போனார் பெரியார். தலைவர்களும் காமராஜர் உள்ளிட்ட தொண்டர்களும் ஈரோடு போவார்கள்.

அங்கு பெரியாரின் வீட்டையும், உபசரிப்பையும் கண்டு காமராஜர் உள்ளிட்டவர்கள் வியந்து போனார்கள். “இவ்வளவு பெரிய பணக்காரர் இத்தனை எளிமையாக இருக்கிறார் என்று நெகிழ்ந்து பாராட்டினார்கள்.”

இப்படி பெரியாரைக் கண்டு வியந்த காமராஜர் பின்னாளில் தன் சீரிய உழைப்பால் ‘முதல்வர்’ சிம்மாசனத்தில் அமர்ந்தார். அந்த நாளில் அன்னை சிவகாமி அம்மையார் அடைந்த மகிழ்ச்சியைவிட பெரியார் அடைந்த மகிழ்ச்சி பெரிது.

சாதாரண சாமானிய மக்களின் நலனுக்கு விரோதமான குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்து, ராஜாஜியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் பெரியாரும் தீவிரமாக இருந்தார். ராஜாஜிக்குப் பிறகு புதிய முதல்வர் யார் என்பதில் சிக்கல் நிலவியது.

பெரியார் சிதம்பரத்தில் இருந்தார். தகவல் கிடைத்ததும் தனது வாகனத்தில் போனால் தாமதமாகும் என்ற வேறு ஒரு நல்ல வாகனத்தில் விரைந்து சென்னை வந்து சேர்ந்தார்.

இப்போது அரசினர் தோட்டமாகிவிட்ட இடத்தில் டாக்டர் பி.வரதராஜலு நாயுடு வீடு இருந்தது. அங்குதான் பெரியாரும் காமராஜரும் சந்தித்துப் பேசினார்கள். அது ரகசிய சந்திப்பு.

காமராஜர்தான் முதல்வராக வரவேண்டும் என்ற 1952 முதலே ஆசைப்பட்டார் பெரியார். அதற்கான காலம் கனிந்ததும், “நீங்கள் தைரியமாக பதவியில் அமருங்கள். துணைக்கு நான் இருக்கிறேன்’’ என்று ஊக்கமூட்டினார் பெரியார்.

காமராஜர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சட்டமன்ற உறுப்பினராக இல்லை. எனவே குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். திராவிடர் கழகம் காமராஜருக்கு ஆதரவு அளித்தது. பெரியார் நேரில் சென்று பிரச்சாரம் செய்தார். அண்ணா தலைமையில் தி.மு.க.வும் ஆதரித்தது-.

காமராஜர் ஆட்சியை “தமிழ்நாட்டின் பொற்காலம்’’ என்று வர்ணித்தார் பெரியார். அதோடு நிற்கவில்லை. காமாஜரின் அரசு செய்த சாதனைகளை கூட்டம் போட்டு விளக்கும் பிரச்சார பீரங்கியாகவே பெரியார் மாறிவிட்டார்.

காமராஜரின் பொற்கால ஆட்சி 1954 முதல் 1963 வரை நீடித்தது. அந்த ஒன்பது ஆண்டுகால சாதனைகளில் ஏதேனும் குற்றம் குறை காண முடியாதா? என்று சில எதிர்க்கட்சிகள் கண்ணில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு துடிதுடித்தன.

“காமராஜர் ஆட்சியின் சாதனைகள்’’ என்ற புத்தகம். சகோதரர் கி.வீரமணியை எழுதவைத்து, ‘விடுதலை’ வெளியீடாக வந்த அந்தப் புத்தகத்தை நான்கு அணா விலைக்கு நாடு முழுவதும் விற்றார் பெரியார்.

ஆனால், பெரியார் என்ன செய்தார் தெரியுமா? காமராஜர் ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு புத்தகம் வெளியிட்டார். அதன் பெயரே “காமராஜர் ஆட்சியின் சாதனைகள்’’ என்ற புத்தகம். சகோதரர் கி.வீரமணியை எழுதவைத்து, ‘விடுதலை’ வெளியீடாக வந்த அந்தப் புத்தகத்தை நான்கு அணா விலைக்கு நாடு முழுவதும் விற்றார் பெரியார்.

அந்தப் புத்தகம் 60 பக்கங்களைக் கொண்டது. அரியமங்கலம் திராவிடர் கழகம் சார்பில் அந்தப் புத்தகம், தலைவர் காமராஜருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை நானும் படித்து இருக்கிறேன்.

இது “தமிழன் ஆட்சி… பச்சைத் தமிழன் ஆட்சி’’ என்ற வசிஷ்டர் வாயால் வாழ்த்து கிடைத்ததுபோல் புகழாரம் சூட்டினார் பெரியார்.

1961இல் தேவக்கோட்டையில் மரண சாசனம் போல் ஒரு கருத்தை பெரியார் சொன்னார். “தோழர்களே… எனக்கோ வயது 82. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். இப்போது மரண வாக்குமூலம் போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூற வேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

காமராஜர் ஆட்சியில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் இதற்கு முந்தைய இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் ஆகட்டும்; அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லாம் மக்கள் கல்விக்கு இப்படி வகை செய்யப்படவில்லை.

நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் காமராஜரை விட்டுவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்’’ என்றார். ஆனால் விருதுநகர் தொகுதியில் காமராஜர் தோல்வி அடைந்தபோது அகமகிழ்ந்த அரசியல் தலைவர்கள் பலருக்கு மத்தியில், வேதனையில் மூழ்கியவர் தந்தை பெரியார்.

அதைவிட காமராஜர் முதல்வர் பதவியை 1963இல் துறந்தபோது அதிகம் துடிதுடித்தவரும், மனம் பதைபதைத்தவரும் பெரியார்தான். காமராஜரின் ராஜினாமாவில் பெரியாருக்கு உடன்பாடு இல்லை. உடனே காமராஜருக்கு தந்தி கொடுத்தார்.

“தாங்களாகவோ அல்லது பிறரது ஆலோசனை கரணமாகவோ தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பிலிருந்து தாங்கள் விலகியது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும், தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பானதாகும்’’ என்பதே அந்தச் செய்தி.

“தனக்குப் பிடிக்காத அரசியல் கட்சியில் இருந்த ஒரு தலைவரை, இன்னொரு தலைவர் இப்படிப் புகழ்ந்ததும், ஆதரித்ததும் உலக அரசியலில் அதுவே முதல் முறையும் கடைசி முறையும் என்றே கருதுகிறேன்.’’

ஆதாரம்: பெருந்தலைவர் காமராஜரின் உதவியாளர் வைரவன் அவர்கள் எழுதிய, “காமராஜருடன் கால் நூற்றாண்டு’’ என்ற நூலில் (பக்கம் 126_129)

இப்படிப்பட்ட தலைவர்கள் வாழ்ந்த நாட்டில், இன்று பார்ப்பன அடிமைகளும், நச்சுப் பாம்புகளும் கோலோச்சி, தமிழ் மக்களின் வீரத்தையும், நற்பண்புகளையும், சிதைத்து, மக்களின் வாழ்வினை நாசமாக்கி  கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *