Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கூத்துக் கலை : ’வெங்காயம்’ திரைப்பட இயக்குநரின் ’நந்திக்கலம்பகம்!’

கி.தளபதிராஜ்

பெரியார் கருத்துகளை உள்ளடக்கிய ‘வெங்காயம்’ திரைப்படத்தை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார்.

மாற்று முயற்சியாக  ‘நந்திக்கலம்பகம்’  எனும் தெருக்கூத்து நிகழ்ச்சியை சென்னை தியாகராயர் அரங்கத்தில் 28.04.2019 அன்று அரங்கேற்றினார்.

பல்லவ மன்னன் நந்திவர்மனின் பூர்வீகம் கம்போடியா அல்ல.  காஞ்சிபுரமே அவனது பூர்வீகம்!  எனும் அறிமுகத்தோடு துவங்குகிறது கூத்து. இயக்குனர் ராஜ்குமார் நந்திவர்மன் வேடமேற்றிருந்தார்.

சின்ன வயதில் கோடைக்காலங்களில் தெருக்கூத்து பார்த்த அனுபவம் உண்டு. மேடை மேல் பகுதியிலிருந்து ஒன்றிரண்டு மைக் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கும். ஒலிபெருக்கியே இல்லாவிட்டாலும் அந்தக் கலைஞர்களின் குரல் காத தூரத்திற்கு கேட்கும். இப்போது காலர் மைக் பொறுத்தப் பட்டிருந்தது.

நிகழ்வில் பங்கேற்ற கூத்துக் கலைஞர்கள்

ஆடைகள் பெரும்பாலும் மெல்லிய மரச்சட்டங்களில் வண்ணமடித்து அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதைச் சுமப்பதற்கே ஏதாவது விசேஷ பானம் அருந்திவிட்டுத்தான் பல கலைஞர்கள் மேடையேறுவார்கள். தற்போது உடைகளில் மாற்றம்!.

சங்ககிரியுடன் அவரது குழுவினர்

எங்கள் பகுதியில் கூத்து கட்டும் போது பின்னணி இசையில் ஆர்மோனியம் தான் பிரதானமாக இருக்கும். இங்கே நாயணம் வாசிக்கப்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னால்  தெருக்கூத்தை தலைநகர் சென்னையில், தியாகராயர் அரங்கில் பார்க்கும் அரிய வாய்ப்பு.

நந்திவர்மனை வீழ்த்தத் துடிக்கும் அவனது சகோதரன், நந்திவர்மனின் தமிழ்ப்பற்றைப் பயன்படுத்தி அவனை கொல்வதே கரு.

கோமாளி வேடமிட்டு கூத்தின் கட்டியக்காரனாக செயல்பட்டவரின் வசனங்கள் இன்றைய காலச்சூழலை வெளிப்படுத்தி, வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாக இருந்தது.

சாளுக்கிய மன்னன் கப்பம் கேட்டு படையெடுத்துவரும் நேரத்தில் அவனை எதிர்கொள்ள தயாராகும் நந்திவவர்மனைப் பார்த்து இதற்கு ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்? ‘GOBACK MANNAN’ என்று இணைய தளங்களில் மக்களைப் பகிரச் செய்யுங்கள் மன்னா!’ என்பார் கோமாளி நண்பர்.

சிறைப்படுத்தப்பட்ட தம்பி சிறையிலிருந்து தப்பிவிட்டதறிந்து அதுபற்றி விசாரித்து விட்டு, சிறையில் வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என நந்திவர்மன் கேட்க, ‘மன்னா! எந்தக்குற்றமும் புரியாமல் ஏழு பேர் நீண்டநாட்களாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்!’ என்று கோமாளியார் பதில் சொல்ல, ‘அப்படியா! ஆளுநரிடம் உடனடியாக கோரிக்கை வைக்கிறேன்!’ என்கிறார் மன்னர்.

புத்தர் சிலைகளை உடைத்து விட்டு சிவன் சிலைகளை வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழ, மன்னா! இதைச் சொல்வது நீங்களா? உங்கள் அட்மினா என்பார் கோமாளியார்.

சாளுக்கிய மன்னன் கப்பம் கேட்டு அனுப்பிய ஓலையைப் படித்துவிட்டு, ‘மன்னா! கப்பத்தோடு ஜிஎஸ்டி வரியும் சேர்த்துக் கட்டச் சொல்லியிருக்கிறார் சாளுக்கிய மன்னர்!’ என்பார் கோமாளி.

மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து மன்னனிடம் விளக்கும் கோமாளியார் நீட், ஹைட்ரோகார்பன், மீத்தேன், எட்டுவழிச்சாலை என சமூகத்தை ஆட்டிப் படைக்கும் இன்றைய பிரச்சனைகளையெல்லாம் பட்டியலிட்டுவிடுவார்.

கூத்து முழுவதும் இப்படி ‘பஞ்ச்’ டயலாக்குககள் விரவிக் கிடப்பது நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடக வசனங்களை நினைவுபடுத்துகிறது.

இவ்வளவு சிறப்பாக வசனத்தை எழுதிய இயக்குநர் அதைப் பேசிய கோமாளியார் கேரக்டரில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை.

நந்திவர்மனின் தம்பி மற்றும் மகன் பாத்திரமேற்றவர்கள் கூத்துக்கு மெருகூட்டினர்.

கூத்து துவங்கியதிலிருந்து முடியும் வரை இயக்குநர் முகத்தில் அப்படி ஒரு சோகம்! நிகழ்ச்சி செலவு கையைக் கடித்திருக்குமோ?

தமிழர்களை மூளைச்சலவை செய்ய பயன்படுத்தப்பட்ட கூத்துக்கலையை மீட்டெடுத்து சமூக முன்னேற்றத்திற்கும் பகுத்தறிவு வளர்ச்சிக்கும் பயன்படத்தக்க வகையில் நவீன யுத்திகளுடன் அரங்கேற்ற முயற்சித்த இயக்குனருக்குப் பாராட்டுகள்! .ஆதரவு பெருகட்டும். கூத்துக்கலை வளரட்டும்.