அய்யாவின் அடிச்சுவட்டில்…
கி.வீரமணி
18.03.1987 அன்று பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில் நுட்பக்கல்லூரி வளாகத்திலுள்ள அன்னை மணியம்மையார் விடுதி திறப்பு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. அப்போது பெண்ணின் அறிவு வளர வளர தன்னம்பிக்கை வளரும்; தன்னம்பிக்கை மலர்ந்தால் மூடநம்பிக்கை ஒழியும் எனக் கூறினேன். விழாவில் சிறப்புரையாக, விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் சிவசங்கரி பேசுகையில், “முதன் முதலில் திரு.வீரமணி அவர்களும், நானும் 4 வருடங்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகையில் பேட்டிக்காக சந்தித்தோம். கருத்து வேறுபாடுள்ள இருவர் சந்தித்தது பலருக்கு ஒரு ஆச்சரியமான வியப்பைத் தந்தது. என்னை கேட்டார்கள். நீ ஏன் அவரைப் போய் சந்தித்தாய்? கூப்பிட்டாலும் போகலாமா வேண்டாம் அநாவசியமாக காயம்பட போகிறாய் என்றுகூட சொன்னார்கள். “ஒருவரை சந்திக்காமலோ, ஒருவரோடு பேசாமலோ” ஒரு கருத்துக்கு வருவது தவறு என்று அவர்களுக்கு கூறினேன். எனக்கு பெரியார் அவர்களைப் பற்றி தெரியும் அவர் அவர்களுடைய கருத்துகளை தெரியும். ஆனால், திரு.வீரமணி அவர்களுடன் விவாதிக்கும் அந்த நாளில் எல்லாம் புதியதாக, புது கண்ணோட்டத்திலிருந்து நான் பலவற்றை பார்த்து உணர்ந்துக் கொள்ளத்தான் வேண்டும். எதிர்ப்பாராத திருப்பங்கள் கொண்டதுதான் வாழ்க்கை. தன்னம்பிக்கைதான் அஸ்திவாரம் என்று திரு.கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்கள்’’. என்று சிவசங்கரி குறிப்பிட்டார்.
குமுதம் இதழில் எழுத்தாளர் சிவசங்கரியும், எழுத்தாளர் இந்துமதியும் சந்தித்துப் பற்றிய விவரம், பேட்டி கட்டுரையாக வெளியிடப்பட்டது.
நாம் விழாவிற்கு அழைக்கும் சில நாட்களுக்கு முன் குமுதம் 19.02.1987 இதழில் எழுத்தாளர் சிவசங்கரியும், எழுத்தாளர் இந்துமதியும் சந்தித்துப் பேசியது பற்றிய விவரம், பேட்டி கட்டுரையாக வெளியிடப்பட்டது. எழுத்தாளர் சிவசங்கரி சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். பேட்டியின்போது இந்துமதி சிவசங்கரியிடம் அமெரிக்கா அனுபவங்கள் பற்றி கூறும்படி கேட்டார்.
அப்போது சிவங்கரி தமது அமெரிக்க பயணம் பற்றிக் கூறுவதோடு நின்றுவிடாமல் ஆசிரியர் கி.வீரமணி சொன்ன ஒரு கருத்து நம்மிடம் எந்த அளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றியும் அந்த தன்னம்பிக்கை உணர்வு காரணமாக தம்மிடம் சிறுவயது முதலே இருந்துவந்த தனிமைப் பற்றிய பய உணர்வு அடியோடு அகன்றுவிட்டது என்றும் இப்போது எந்த விஷயமானாலும் பிறருடைய உதவிக்காகக் காத்திராமல், தாமே நம்முடைய சொந்த முயற்சியால் எதையும் சாதித்துக் கொள்ள கூடிய துணிவும் – திறனும் தம்மிடம் வளர்ந்திருக்கிறது என்று மனம் திறந்துக் கூறியிருக்கிறார்.
சிவசங்கரி “குமுதம்” ஏட்டுக்கு தெரிவித்தக் கருத்து வருமாறு.
இந்துமதி : சமீபத்தில் அமெரிக்கா போயிருந்தீர்களே அதைப்பற்றிச் சொல்லுங்கள்
நான்கு வாரம் அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்க வாய்ப்புத் தந்தார்கள். சின்ன வயதிலிருந்தே அப்பா அம்மாவுடன் இருந்துவிட்டு கல்யாணமும் 19 வயதில் ஆகிவிட்டதா, தனியா ஒரு போதும் வாழ்ந்து பழக்கப்பட்டவர் இல்லை. முந்தைய தடவைகளில் வெளிநாடு சென்ற போதும் கணவருடன் தான் போனேன்.
இந்தத் தடவைதான் ஒரு மாறுதல் எனக்கென்று ஒரு தனி அறை மற்ற எழுத்தாளர்களோடு கலந்து பேசிப் பழகினது ஒன்றாகப் பயணம் செய்தது எல்லாம் நூதனமான அனுபவமாக இருந்தது.
அப்போது கி.வீரமணி அவர்களைப் பற்றி (விடுதலை ஆசிரியர்) நினைத்துக் கொண்டேன். “குமுதம்” இதழுக்காக அவருடன் ஓர் உரையாடல் சந்திப்பு நிகழ்த்தினார்கள். தெய்வ நம்பிக்கையைப் பற்றி எங்கள் இருவரிடையே பேச்சு எழுந்தது நானும் விடவில்லை.
எனக்கு இப்போது என்ன குறைந்து போய்விட்டது. தெய்வ நம்பிக்கை உள்ள நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று எதிர்வாதம் செய்தேன். வீரமணியும் விடவில்லை.
‘நானே துணை’ என்று (தெய்வத்தை நம்பி இராமல்) நினைத்துப் பாருங்கள். அப்படி நினைக்க நினைக்க உங்கள் பேரில் உள்ள தன்னம்பிக்கை கூடும் என்றார்.
என்றைக்காவது அவரைச் சந்தித்து “நீங்கள் சொன்னது சரி என்று சொல்ல வேண்டும்” என்று எண்ணுகிறேன்.
“கணவர் சந்திரா இறந்த பிறகு நான் யார் மீதும் சாயக்கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறேன். கடவுள் மீது கூட ஓரளவு நான் சாயறதில்லை. கசப்போ வெறுப்போ கிடையாது. என் காலில் உறுதியாக நிற்க நான் பழகிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். அப்படி நினைக்கும்போது எனக்கு இப்போது தன்னம்பிக்கை நிறையக்கூடி இருக்கிறது. முன்பெல்லாம் இருட்டிலே போகமாட்டேன். தனியாகப் பயணம் செய்தால் பயமாக இருக்கும். அதெல்லாம் மாறி எல்லாவற்றையும் அதனதன் இயல்போடு எடுத்துக் கொள்கிற பக்குவம் வந்திருக்கிறது” என்று கூறுகிறார் சிவசங்கரி.
(குமுதம் 19.02.1987)
சிவசங்கரி வைதீகப் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்.
எனினும், அவர் தமது சொந்த அனுபவத்திலிருந்து பெரியார் கொள்கை வழங்கக் கூடிய தன்னம்பிக்கை, தைரியம், ஆற்றல் ஆகியவற்றை உணர்ந்து “குமுதம்” பேட்டியின் மூலம் அதனை மற்றவர்களுக்கும் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
24.03.1987 அன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ‘புரட்சி’ என்பது பற்றி விளக்கி உரையாற்றினேன். அப்போது, ‘‘பழக்க வழக்கங்களிலிருந்து அடியோடு மாற்றம் செய்வதுதான் புரட்சி என்று சொல்லப்படும். நம்மிடையே புரட்சி வராததற்கு காரணம் என்ன? நமக்கு மாட்டப்பட்ட விலங்கு கையிலே அல்ல; காலிலே அல்ல; மூளையிலே ஆதிக்கவாதிகள் விலங்கு மாட்டிவிட்டார்கள். அதை உடைப்பதற்கு பலரால் முடியவில்லை ஈரோட்டு சம்மட்டியை எடுத்து தூக்கி அடித்தால் ஒழிய அந்த விலங்கு உடையது’’ என்று எடுத்துரைத்தேன்.
தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கம் ஈன்றெடுத்த பிரச்சாரம் பீரங்கிகளில் ஒருவரும் இறுதிவரை பகுத்தறிவாதியாகவே வாழ்ந்து பல்லாயிரக்கணக்கான சுயமரியாதை குடும்பங்களின் பேரன்பையும், பாசத்தையும் பெற்ற அடிநாள் தோழர்களில் ஒருவருமான ‘டார்பிடோ’ என்றும், நமது இனிய தோழர் ஜெனா என்றும் தோழர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஏ.பி.ஜெனார்த்தனம் எம்.ஏ. அவர்கள் 01.04.1987 அன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற பேரிடி போன்ற செய்தி கேட்டு மிகவும் துயரமும் அடைந்தேன். அவரது மறைவு சுயமரியாதை இயக்கத்திற்கு ஈடுச் செய்ய முடியாத இழப்பாகும்! என்று 02.04.1987 அன்று விடுதலையில் முதல் பக்கத்தில் இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அன்று மாலை ஓட்டேரியில் உடல் அடக்கம் நடைபெற்ற இறுதி நிகழ்விலும் கலந்துக் கொண்டு கழகத்தின் சார்பில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினேன். என்னுடன் விடுதலை நிர்வாகி என்.எஸ்.சம்பந்தம், திராவிடர் கழக தலைமை நிலைய செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் ந.இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
ஏ,பி,ஜனார்த்தனம் அவர்கள் 01.04.1987 அன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவர்க்கு ஆசிரியர் கி.வீரமணி மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
ஏ.பி.ஜெனார்த்தனம் அவர்களது படத்திறப்பு விழா 07.04.1987 அன்று சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்றது.
ஏ.பி.ஜெனார்த்தனம்
அவரது படத்தினை திறந்து வைத்து உரையாற்றினேன். 1944லே அய்யா அவர்கள் கடலூருக்கு வந்திருந்த போது, அய்யா அவர்களிடம்
ஏ.பி.ஜெனார்த்தனம் அவர்கள் அழைத்துப் போய், ‘இந்த மாணவன் நம்ம இயக்கத்து மாணவன்’ என்று என்னை அறிமுகப்படுத்தினார்கள்.
அய்யா அவர்களும் வழக்கம் போல் எல்லோரிடமும் விசாரிக்கிற மாதிரி என்னிடமும் விசாரித்தார்கள். எந்த வகுப்பு படிக்கிறாய்? என்ன படிக்கிறாய் என்றெல்லாம் விசாரித்தார்கள்.- இப்படி என்னை அய்யா முதல் முறையாக அறிமுகப்படுத்தியது மாத்திரமல்ல, அதற்கு முன்னாலே என்று ஆசிரியர் திராவிடமணி தங்கிருந்த இல்லத்திற்கு அடிக்கடி வருவார்கள், அரசியலே அவர்கள் எத்தனையோ நிலைகளை எடுத்திருக்கலாம். அதுவேறு என்றைக்கும் தன் சுயமரியாதைக் கொள்கையிலிருந்தோ, பகுத்தறிவுக் கொள்கையிலிருந்தோ ஏ.பி.ஜே. அவர்கள் கடைசி வரை பின் வாங்கவில்லை . அவரது பேச்சாற்றல், எழுத்தாற்றல், மேடைப் பேச்சிலே எதிரிகளை கதிகலங்கச் செய்வார். “அதனால் தான் ‘டார்ப்பீட்டோ’ என்றாலே ஏ.பி.ஜே அவர்களைத்தான் குறிக்கும் இதுவரைக்கும் வேறுயாருக்கும் டார்ப்பீட்டோ என்ற பட்டம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் எப்படி சுயமரியாதைக்காராக இருந்தார்களோ அதே போன்று அவர்கள் இறுதி வரை வாழ்ந்து அவரது இறுதி நிகழ்ச்சிகூட சுயமரியாதையுடன் நடந்து முடிந்திருக்கிறது” என்று குறிப்பிட்டு உரையாற்றினேன். அவரது வாழ்விணையரான ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்கள் இறுதிவரை இயக்கப் பணியாற்றினார்.
பாலசுப்ரமணியம்
ஆனந்த விகடனில் வெளியான நகைச்சுவைத் துணுக்கு காரணமாக ‘ஆனந்த விகடன்’ ஆசிரியருக்கு 04.04.1987 மூன்று மாத கடுங்காவல் சிறை தண்டனையை சட்டப்பேரவை வழங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க உட்பட அய்ந்து கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர். ஜஸ்டிஸ் பி.வேணுகோபால் அவர்கள் தலைமையில் கூடிய தமிழக மூதறிஞர் குழுக் கூட்டத்தில் தண்டனையை திரும்ப பெறுமாறு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ‘ஆனந்த விகடன்’ பத்திரிகை ஆசிரியருக்கு சிறை தண்டனை எதிர்ப்பு தெரிவித்து விடுதலை செய்தியாளர்கள் சட்டசபைக்கு செல்லவில்லை. கடும் எதிர்ப்பின் காரணமாக மூன்று மாத சிறை 42 மணிநேரத்தில் முடிந்தது.
முதலமைச்சரின் “பெருந்தன்மையும்” சபாநாயகரின் “வானளாவிய” அதிகாரமும் மீண்டும் இணைந்து ஆனந்தவிகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனை விடுதலைச் செய்வதாக சட்டப்பேரவையில் அவைத்தலைவர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார். ஆனந்தவிகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் சென்னை மத்திய சிறையிலிருந்து 06.04.1987 அன்று விடுதலை செய்யப்பட்டார். அன்று பிற்பகலில் ஆனந்தவிகடன் அலுவலகத்தில் சென்று பாலசுப்பிரமணியனுக்கு கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். இந்த விஷயத்தில் நான் அளித்த ஆதரவிற்கு விகடன் ஆசிரியர் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
மொழிப்போர் தியாகிகளுக்கு மாதம் 250 ரூபாய் கொடுப்பது என்று முதல்வர் முடிவெடுத்தார். அது 14.04.1987 முதல் அமலுக்கு வரும் என்று தமிழக கல்வி அமைச்சர் திரு.சி.பொன்னையன் அவர்கள் அறிவித்தார். இதனை நான் வரவேற்று 16.04.1987 அன்று விடுதலையில் முதல் பக்கத்தில் தமிழக அரசின் முடிவை வரவேற்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு சார்பாக 22.04.1987 அன்று மாலையில் சென்னை அசோக் நகரில் உள்ள “ராஜ் கேப்” உணவு விடுதியில் எனக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பி.எம்.சுந்தரவதனம்
பல்வேறு ஒடுக்கப்பட்ட சமுகவாதிகளும் பிரமுகர்களும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர். ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால், ஜஸ்டிஸ் திரு.கே.நாராயணசாமி முதலியார் டாக்டர் பி.எம்.சுந்தரவதனம், டாக்டர் சமரசம் எம்.எல்.ஏ, டாக்டர் மா.நன்னன், மலேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.ராமசாமி, தலைமைக் கழகச் செயலாளர் கலி.பூங்குன்றன், தி.சு.கிள்ளிவளவன், சேலம் செல்வி அருள்மொழி, எம்.டி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு நிகழ்வில் பாராட்டி உரையாற்றினார்கள்.
மறைந்த டார்பீட்டோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்களின் படத்தை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
பாராட்டு விழாவில் நான் ஏற்புரையாற்றும் போது “தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட தொண்டருக்கெல்லாம் தொண்டன் நான். தந்தை பெரியாரின் சிந்தனை ஓட்டத்தை தவிர வேறு ரத்த ஓட்டம் எனக்குக் கிடையாது. நான் இன்றைய தினம் ஒரு நெருக்கடியில் மாட்டிக் கொண்டுவிட்டேன். வசவுகளை தாங்கிக் கொள்ள முடியும் ஆனால், பாராட்டுகளை தாங்கிக்கொள்வதைவிட கடுமையான தண்டனை ஒன்று இருக்கமுடியாது. அந்த தண்டனையை நீதிபதிகளே இங்கு கொடுத்துவிட்டதால் இதனை அப்பீல் செய்ய முடியாது பணியாளன் நினைத்தால் விலகிக்கொள்ளலாம்; அவனுக்கு அந்த வாய்ப்பும் உரிமையையும் உண்டு ஆனால் அடிமைக்கு அந்த வாய்ப்புகள் இல்லை’’ என்று கூறினேன்.
டாக்டர் சரோஜா
பூவிருந்தமல்லி டாக்டர் சரோஜா பழனியப்பன் அவர்களின் தந்தையாரும், வழக்குரைஞர் ஆர்.பழனியப்பன் அவர்களின் மாமனாருமான ஆர்.தியாகராசன் அவர்களது மறைவையொட்டி படத் திறப்புவிழா நிகழ்ச்சி 22.04.1987 புதன் அன்று விருகம்பாக்கம் பத்மாவதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழில் மற்றும் உழவுத்துறை அமைச்சர் மானமிகு க.ராசாராம் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். அப்போது தந்தை பெரியார் கொள்கைப்படி தம் மக்களை சிறப்பாக படிக்கவைத்தவர் மறைந்த தியாகராஜன் என்று அமைச்சர் க.ராசாராம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
தியாகராஜன்
விடுதலை நிருவாகி என்.எஸ்.சம்பந்தம் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். நான் உரையாற்றிய போது மறைந்த தியாகராசன் அவர்கள் தந்தை பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டு மிகவும் எளிமையாக வாழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டினேன்.
24.04.1987 அன்று சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்ற விழாவில் எனக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்சென்னை மாவட்ட தலைவர் எம்.பி.பாலு, முதலில் நாணயத்தைப் போட்டார். காமராசர் காங்கிரஸ் தலைவர் பழ.நெடுமாறன் கூட்டத்தினரின் பலத்த கரவொலிகளுக்கு இடையே நாணயத்தை வழங்கினார்கள்.
அக்கூட்டத்தில் காமராசர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் எம்.கே.டி. சுப்பிரமணியம் பேசுகையில் ‘‘தமிழ்நாட்டின் பெரிய அறக்கட்டளையை தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையை காமராசர் ஏற்படுத்தினார். சரியானவர்களை அடையாளம் கண்டு டிரஸ்டிகளாகப் போடாததால் அது இன்று டில்லியிடம் போய்விட்டது! அதுபோலவே எம்.ஜி.ஆர் அறக்கட்டளை நிலையும். ஆனால் தந்தை பெரியார் அடையாளம் கண்ட அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரிடம் ஒப்படைத்தார், அதன் பிறகு ஆசிரியர் வீரமணியிடம் சென்றதால் இன்று பாதுகாப்புடன் நன்கு வளர்ச்சி பெற்றுள்ள ஓர் அமைப்பாக உள்ளது’’ என்று உரையாற்றினார்.
தேவசகாயம்
விழாவில் துணைப்பொது செயலாளர்கோ.சாமிதுரை, டாக்டர் நன்னன், மதுரை தேவசகாயம், வழக்கறிஞர் துரைசாமி, மயிலை நா.கிருஷ்ணன், கலி.பூங்குன்றன், பொறியாளர் ஞானசுந்தரம், சி.ஆளவந்தார், நாகரசம்பட்டி விசாலாட்சி, வழக்கறிஞர் த.வீரசேகரன், தங்கமணி, உள்ளிட்ட கழக நிருவாகிகள் பலரும் கலந்து கொண்டனர். நாயணத்தை வழங்கியவுடன் அனைவரும் உரையாற்றினார்கள்.
சி.ஆளவந்தார்
மண்டல் குழு அறிக்கையை அமலாக்கக் கோரி நம் முயற்சியில் தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர் ஒன்றியத்தின் சார்பில் 25.04.1987 அன்று லக்னோவில் மாபெரும், பேரணியும், மாநாடும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் நான் கலந்துக் கொண்டு உரையாற்றினேன், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத் தலைவர்கள் உரையாற்றினார்கள்.
டி.பி.வருண், டாக்டர் வீரப்பா, நாராயண ராவ், ராம் நரேஷ் குஸ்வத், ஆர்.பி.யாதவ், தனிக்லால், மண்டல், சரத்யாதவ், உசேன், சரத்அஞ்சால் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டு உரையாற்றினார்கள். நான் உரையாற்றியபோது, மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டுமென்று அரசின் சட்ட ரீதியான கடமையாகும் என்றும், ஒடுக்கப்பட்டோர் உரிமை போரை வீதிக்கு எடுத்துச் செல்வோம் என்றும், மக்கள் சக்தி முன் எந்த சக்தியும் வெற்றி பெற முடியாது என்றும் எடுத்துரைத்தேன். மாநாட்டின் மேடையில் தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் படங்கள் மாட்டப்பட்டிலிருந்த மாநாட்டில் பேசிய தலைவர்கள் தந்தை பெரியாரின் சமுதாய தொண்டினை எடுத்துகாட்டி உரையாற்றினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் வி.பி.சிந்தன் 08.05.1987அன்று சோவியத் யூனியனில் காலமானார். இவர் இடதுசாரி ஜனநாயக இயக்கத்தின் முன்னேற்றத்திற்கு கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றிய தோழர் வி.பி.சிந்தனின் மறைவு தொழிலாளர் வர்க்கத்திற்கு, இடதுசாரி இயக்கத்திற்கும் ஜனநாயகத்துக்கும் பேரிழப்பாகும்.
விபி.சிந்தன்
அவரது உடல் சோவியத் யூனியனிலிருந்து 12.05.1987 அன்று இரவு உடல் சென்னை வந்தது, நான் கழகத்தின் சார்பில் வி.பி.சிந்தன் அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன், இறுதி நிகழ்விலும் கலந்து கொண்டேன். என்னுடன் சென்னை மாவட்ட திராவிட கழகச் செயலாளர் ச.ஏழுமலை, அ.குணசீலன், சபாபதி, பெரம்பூர் சிட்டிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
11.05.1987 அன்று தலித் சாகித்ய அகடாமி சார்பில் “டாக்டர் அம்பேத்கர் சிந்தனையாளர்’’ சியாம் சுந்தர் அவர்கள் அம்பேத்கர் எழுதிய ‘‘சாதியை ஒழிக்க வழி’’ எனும் ஆங்கில நூலினையும், அவர் எழுதிய ‘‘இவர்கள் எரிக்கப்படுகிறார்கள்’’ என்னும் அவரது நூலையும் நான் வெளியிட்டு உரையாற்றினேன்.சென்னை பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்றது. தலித் கலாச்சார முன்னனியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு ‘தலித் வாய்ஸ்’ ஆசிரியர் வி.டி.ராஜசேகர் தலைமை தாங்கினார்.
நூலினை வெளியிட்டு நான் உரையாற்றும் போது, ‘‘திராவிடர் கழகம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இயக்கம் என்றும் தன்னை பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர் என்றும் கூறப்பட்டதை மறுத்தவர் தந்தை பெரியார். திராவிடர் கழகத்தில் முன்னுரிமை தாழ்த்தப்பட்டவர்களுக்கு; அடுத்த உரிமை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு; திராவிடர் கழகம் இந்த இருபகுதிகளைக் கொண்ட ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம், நான் தலைவன் அல்ல; தொண்டன்; டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர். அவரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு மட்டும் தலைவர் அல்ல’’ என்று குறிப்பிட்டேன்.
மேலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டிராமல் ஜாதி அமைப்பைக் கட்டிக் காத்துவரும் பார்ப்பன, பனியா ஆதிக்கத்தை எதிர்த்தும் போராடவேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.நிகழ்ச்சியில் புலவர் இரா.வெ.இராமச்சந்திரன் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பேராசிரியர் பால்வில்சன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டார்கள்.
ராஜிவ் காந்தி
அடுத்தக் குடியரசுத் தலைவர் யார்? என்ற கேள்வி இந்தியா முழுவதும் எழுந்த நிலையில், பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள், அடுத்த குடியரசுத் தலைவர் தென்னாட்டவராக இருப்பார் என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நான் பிரதமர் அவர்களுக்கு 17.05.1987 அன்று கீழ்க்கண்ட தந்தி ஒன்றை அனுப்பினேன். அதில், சமுக நீதிக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தாழ்த்தப்பட்ட சமுகத்திலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்; இதுவரை மற்ற சமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது; இம்முறை தென்னாட்டுத் தாழ்த்தப்பட்ட சமுகத்தவர் ஒருவருக்கே அவ்வாய்ப்பினை நல்க வேண்டும் ‘‘இந்தியா குடியரசு நாடாகி 37 ஆண்டுகள் ஓடியும் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு தாழ்த்தப்பட்டவர் வரமுடியவில்லை என்கிற போது; இங்கு சமுக நீதிக்கு இடமில்லை என்று தெளிவாகி விட்டது என்று பொருள்’’ என்று கேட்டுக் கொண்டேன்.
(நினைவுகள் நீளும்)