நேயன்
தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எதுவும் செய்யவில்லையென்று ஒரு சிலர் அக்காலத்திலிருந்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதால், தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்தவற்றை இதுவரை ஆதாரங்களோடு விளக்கினோம்.
தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எந்த அளவிற்குப் பாடுபட்டிருக்கிறார் என்பதை தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள், பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில், பல்வேறு சூழல்களில் தந்தை பெரியாரைப் பாராட்டி, பெரியாருக்கு நன்றி தெரிவித்து கூறியுள்ளவற்றை தெரிந்துகொண்டாலே புரிந்து கொள்ளலாம்.
இதோ அவற்றுள் சில:
டெல்லியில் இருந்து பம்பாய் சென்றார் பெரியார். தாராவியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இங்கு பேசிய மராட்டியத் தோழர் மாருதி கன்சே, டாக்டர் அம்பேத்கர் சொல்லி வந்ததை பெரியார் சொல்லி வருகிறார். ‘அவர் வழியில் நடப்போம்’ என்று பேசினார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்கு பேசும்போது, “வடநாட்டில் அம்பேத்கர் செய்துவந்த பிரசாரத்தை தென்னாட்டில் பெரியார் செய்து வருகிறார். அம்பேத்கருக்குப் பிறகு நம் அனைவருக்கும் ஒரே தலைவர் அவர்தான்’’ என்று பேசினார்.
22.2.1959 பரேல் பகுதியிலுள்ள காம்கார் மைதானத்தில் நடந்த குடியரசு கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அக்கட்சியின் பம்பாய் மாநில தலைவர் ஆர்.டி.பண்டாரே தலைமை வகித்தார். அக்கட்சியின் தொண்டர் படையினர் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். மேடையில் இருபுறமும் குடியரசு கட்சியின் கொடியும் புத்தர், அம்பேத்கர் படமும் இருந்தது. வரவேற்றுப் பேசிய காம்ளே, இதற்கு முன் பெரியார் _ அம்பேத்கர் சந்திப்பு (1940) நடந்தபோது தானும் உடன் இருந்ததாகச் சொன்னார். அம்பேத்கர் படத்துக்கு பெரியார் மரியாதை செலுத்தினார்.
தலைமை தாங்கிய பண்டாரே பேசும்போது, ‘பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் ஒரே கொள்கைதான்’ என்றார். இறுதியாகப் பேசும்போது, “பெரியார் அவர்களது அறிவுரைப்படியும் அம்பேத்கர் காட்டிய வழியிலும் நிற்க வேண்டும்’’ என்று பேசினார் பண்டாரே. (‘விடுதலை’ 25.2.1959)
24.2.1959 அன்று பம்பாய் நகரின் சேம்பூர் டவுன்ஷிப் காலனி சர்ச்பிள் மைதானத்தில் சேம்பூர் பவுத்த ஜன் சாகித் மண்டல் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பம்பாய் சித்தார்த்தர் கல்லூரி மராத்திய பேராசிரியர் காஸ்டுருடே தலைமை வகித்தார். பெரியார் _ அம்பேத்கர் இருவருக்கும் இருந்த நட்பு, கொள்கை ஒற்றுமை பற்றி காஸ்டுருடே பேசினார். மேடையில் இருந்த புத்தர், அம்பேத்கர் படங்களுக்கு பெரியார் மலர் மாலை அணிவித்தார். (‘விடுதலை’ 3.3.1959)
ஜோதிபா ஃபூலேவின் அமைப்பான பகுஜன் சமாஜை தாய்க்கழகமாகக் கொண்ட கிளைக் கழகமான சத்திய சோதக் சமாஜ் கூட்ட-த்தில் பெரியார் கலந்து கொண்டார். 24.2.1959 அன்று ஃபூலே மைதானத்தில் இது நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகுதான் தனக்கு ஃபூலே பற்றி தெரிய வந்ததாக பெரியார் கூறுகிறார்.
100 வருடங்களுக்கு முன்பே மகாத்மா ஃபூலே என்பவர் இந்தக் கருத்தக்களை வைத்து தொண்டாற்றி வருகிறார்கள் என்று விச்சாரே சொன்னார்கள். அந்த விஷயம் இதே கருத்துக்களை பல்லாண்டுகளாகப் பிரச்சாரம் செய்துவரும் எனக்கு இப்பொழுதுதான் தெரிய வந்தது. நமது நிலைமை இப்படி இருக்கிறது. இந்தியாவில் முட்டாள்களையும் பைத்தியக்காரர்களையும் உலகத்திற்கெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், இது மாதிரி விஷயங்கள் எல்லாம் நமக்குள் ஒருவருக்கொருவர் இருட்டடித்து அடக்கி நம்மை ஆளுகிறார்கள்’’ என்று பேசினார்.
பம்பாய் வாழ் கொலாபா மக்கள் பெரியாருக்கு வரவேற்பு கொடுத்தார்கள். கொலாபா குடியரசு கட்சியின் கிளைத் தலைவரான எஸ்.டி.அகீர் பேசும்போது, “டாக்டர் அம்பேத்கருக்குப் பின் வேறு தலைவர் எங்களுக்கு இல்லை. நீங்கள்தான் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்’’ என்று கூறினார்.
உத்தரப் பிரதேச மாநில இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் சாடிலால் சாந்தி, ‘வடநாட்டில் பெரியார்’ என்று ஒரு கட்டுரை எழுதினார். வட இந்தியாவில் பெரியாருக்கு கிடைத்த வரவேற்பை அதில் அவர் விவரித்துள்ளார். படிக்கவே பிரமிப்பாக இருக்கிறது. அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை 1962 விடுதலை மலர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளது. சாடிலால் சாந்தி எழுதிய கட்டுரையின் வரிகள்:
“பெரியார் அவர்கள் எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களின் நலத்தைப் பற்றிய கவலை கொண்டு அவர்களுக்கு தக்க சமயத்தில் ஏற்ற முறைகளைக் கையாண்டு நலம் தேடித் தருவதில் கருத்துக் கொண்டு உழைத்து வருவதை நான் அறிவேன். பெரியார் அவர்களது இயக்கமான திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் வட இந்தியாவிலுள்ள நாங்கள் மிகவும் விரும்பி அறிவதுடன் அவ்வழியில் உந்தப்பட்டு ஊக்கமடைந்து வருகிறோம். இதனாலேயே பெரியாரவர்கள் தென்னாட்டுக்கு மட்டும் தலைவராகக் கருதப்படாமல் இந்நாட்டின் மற்றப் பகுதிகளிலும் உள்ள அனைவருக்கும் தலைவராகவும் நாட்டின் தந்தையாகவே கருதப்படுபவராக விளங்குகிறார்.’’ என்று குறிப்பிட்ட சாடிலால் சாந்தி, அன்றைய தினம் பெரியாருக்கு தரப்பட்ட வரவேற்பையும் எதிரிகளின் எதிர்ப்பையும் எழுதி இருக்கிறார்.
1959ஆம் ஆண்டு பிப்ரவரி 8இல் பெரியார், கான்பூர் செல்கிறார். ரயில் நிலையத்தில் 20 ஆயிரம் பேர் வரவேற்பு தருகிறார்கள். சுமார் நான்கு மைல் நீளத்துக்கு மாபெரும் வரவேற்பு ஊர்வலம் நடக்கிறது. இந்து மத பெரியவர்கள், பெரியாருக்கு எதிராக துண்டுப் பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள். ‘பெரியார் வந்தால் விபரீதம் நிகழும்’ என்று அதில் இருக்கிறது. “இதையறிந்த நமது மக்கள் (தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள்) கொதிப்புற்று பளபள ஒளி வீசும் பட்டாக் கத்திகளுடனும் துப்பாக்கிகளை ஏந்தியும் பெரியாரைப் புடைசூழ நின்று மிக அதிக ஊக்கத்துடனும் உத்வேக உணர்ச்சியுடனும் ஒளி முகத்துடனும் ஊர்வலத்தை நடத்தி முன்னேறிச் சென்றனர்’’ என்கிறார் சாடிலால் சாந்தி.
பெரியார் வருகை தரும் நாளன்று அந்தக் கூட்டத்தின் எழுச்சியை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் வேறு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார்கள்.
அன்றைக்கு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த பண்டித கோவிந்த வல்லபந்த், உ.பி. முதலமைச்சர் சம்பூரணானந்தர் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் பிசுபிசுத்துப் போய் தோல்வி கண்டது என்று எழுதுகிறார் சாடிலால் சாந்தி. பெரியார் பேசிய கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்கிறார் இவர்.
பெரியாரின் இரண்டு மணி நேர பேச்சைக் கேட்ட மக்கள், “பெரியார் அவர்களின் தலைமையையேற்று அவர் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் உயிரையும் கொடுத்து அவர் இட்ட பணிகளை நிறைவேற்றத் தயாரென்று உறுதி பூண்டனர்’’ என்கிறார் சாடிலால் சாந்தி.
நம் அனைவரையும் நடத்திச் செல்ல பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் நீண்ட காலம் சுகவாழ்வு எய்த வேண்டுமென்று மனதார விரும்புகிறோம். பெரியார் அவர்களைத் தலைவராகப் பெற்றமைக்கு நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்திய இயக்கங்களின் வரலாற்றில் பெரியார் மிகச் சிறந்த தலைவராகப் பொறிக்கப்படுபவராக இருப்பதுடன், இந்த எண்பத்து நான்கு வயதிலும் பெரியார் அவர்கள் புரட்சியின் சின்னமாக விளங்குகிறார்கள். தாழ்த்தப்பட்டுக் கிடப்பவர்களின் ஊக்கத்துக்கு ஊன்று கோலாகத் திகழும் தலைவர் அவரேயன்றி வேறெவர் தலைவர்?’’ என்று எழுதி இருக்கிறார் சாடிலால் சாந்தி. தமிழகத்தைத் தாண்டி பெரியாரின் தாக்கம் எப்படி இருந்தது, பெரியாரை வட இந்தியர்கள் கூட மிகச் சரியாக அடையாளம் கண்டார்கள் என்பதற்கான சான்று இது. பெரியாரை அம்பேத்கர் ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, இந்தியக் குடியரசு கட்சித் தலைவர்களும் எப்படி எல்லாம் ஏற்றுக் கொண்டார்கள் என்பதே பெருமைக்குரியதாக இருக்கிறது.
(தொடரும்)