ஆசிரியர் பதில்கள்

மே 01-15 2019

கே:       ஜாதியின் பேரால் வன்முறையைத் தூண்டும் ஜாதிச் சங்கம் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்க வழி என்ன?

                – மகேஷ், சிவகாசி

ப:           1. அவர்களை அம்பலப்படுத்தி, பொதுமக்களைத் திரளச் செய்யும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்.

                2. அரசுகள் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை, அழுத்தம் பலவகையிலும் தருவது.

கே:       தி.மு.க. ஆட்சிக் காலங்களில் மட்டுமே அரசு ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும் அ.தி.மு.க. அரசு அதைத் தகர்ப்பதும் ஏன்?

                – ச.அபிநவ், தூத்துக்குடி

ப:           மக்கள் நலன் என்பதில் தி.மு.கவுக்கு அரசு ஊழியர்கள் நலனும் உள்ளடக்கம் என்று தி.மு.க. அரசு உணருவதும், அ.தி.மு.க. அரசு உணராததுமே உண்மைக் காரணங்கள்.

கே:       நேர்மையற்ற மோடி – எடப்பாடி ஆட்சியில் தேர்தல் மட்டும் நேர்மையாக நடக்கும் என்று நாம் நம்புவதற்கு இல்லையே… உங்கள் கருத்து அய்யா?

                – க.நரசிம்மன், புழல்

ப:           உங்கள் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும்.

கே:       இலங்கையில் கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு எதைக் காட்டுகிறது?

                – த.உமாபதி, ரெட்டேரி

ப:           ‘எண்ணிலா மதங்கள் கந்தக் கிடங்கில், கன்னிக் கொள்ளிகள்’ என்ற புரட்சிக்கவிஞர் கருத்து எத்தகைய உண்மை பார்த்தீர்களா? நெறி வெறியாகும் என்பதன் சாட்சி!

கே:       மனிதநேயம் கடவுள் மறுப்பாளர்களிடம் உள்ள அளவிற்கு கடவுளை நம்புவோரிடம் இல்லாதது ஏன்?

                – அருள்மொழிதேவன், மதுரை

ப:           எதிலும் தனது செயல் இல்லை என்ற பக்தர்கள் நம்பிக்கையும், எதற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்ற பகுத்தறிவாளர்களின் உணர்வும்தான் சரியான காரணங்கள்.

கே:       பூணூல் போட்டுக் கொள்பவன் உயர்ந்தவன் என்றால், அந்த நூலை தயாரித்தவன் அவனைவிட உயர்ந்தவனாகத்தானே இருக்க வேண்டும்?

                – யாழினி, சைதை

ப:           அருமையான நெற்றியடி இது!

 

கே:       உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதே பாலியல் குற்றச்சாட்டை புனைந்து பேசப்பட்டிருக்கிறதே! உச்சநீதிமன்றத்திற்கே அச்சுறுத்தல் தரும் பாசிஸ்டுகளின் ஜனநாயகப் படுகொலைதானே இது?

                – அ.சி.அஸ்வின், பம்மல்

ப:           பெரிய சக்தியின் சதிவலை. அதுவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு நேர்மையாளர் மீது பெரும்பழி!

கே:       ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய இயலாத காரணத்தாலேயே ஒருவர் ஜாதி ஒழிப்பு பற்றி பேச தகுதியற்றவராகி விடுவாரா?

                – முத்தமிழ்ச்செல்வன், அரியலூர்

ப:           பல சூழல்கள் காரணமாக அமையலாம். அதனால் அதை தகுதிக்குறைவாக எண்ண வேண்டாம்.

கே:       இந்துமதக் கடவுள்களின் காமவெறியையும், காலித்தனத்தையும் எடுத்துச்சொன்னால் பக்தர் மனம் புண்படுகிறதென்றால் அந்தக் கதைகளைச் சொல்லும் புராண இதிகாசங்களை தடை செய்யாதது ஏன்?

                – பிரித்திவிராஜ், மாதவரம்

ப:           ஒருதலைப்பட்ச முட்டாள்தனமான பார்வை _ ஆரிய ஆணவம்தான் காரணம் என்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *