ஆறு.கலைச்செல்வன்
“பாலில் என்ன தூசுகளும் பூச்சிகளும்’’ என்று கத்தியபடியே பால் சொம்பை தூக்கி வீசிய அப்பா சிவசங்கரனை நடுக்கத்துடன் பார்த்தான் அவனது பத்து வயது மகன் முருகன்.
இன்று முருகனுக்குப் பிறந்த நாள். அதை முன்னிட்டு கோயிலுக்குச் சென்று சிறப்பு அபிஷேகம், பூசைகள் செய்ய திட்டமிட்டிருந்தான் சிவசங்கரன். அவனுடைய மனைவி நிர்மலாவும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள். பூசைக்கு வேண்டிய சாமான்கள் அத்தனையும் தயார் நிலையில் வாங்கி வைக்கப்பட்டது. பழங்கள், பால், நெய், மாலைகள், பூக்கள், அர்ச்சகருக்கு ஆடைகள், சாமி சிலைக்குத் துணிகள் எல்லாவற்றையும் சரிபார்த்த சிவசங்கரன் பால்சொம்பைத் திறந்து பார்த்தபோது கடும் கோபம் கொண்டான். காரணம் அதில் தூசுகளும், பூச்சிகளும் விழுந்து கிடந்தன.
“நிர்மலா, யார் இந்த பாலை வாங்கி வைச்சது. அசுத்தமான பாலை சாமிக்கு எப்படி ஊத்துவது?’’ என்ற சத்தம் போட்ட கணவனை சமாதானப்படுத்தினாள் நிர்மலா.
“சரி, சரி வேற பால் எடுத்து வரச் சொல்றேன். மல்லிகா வீட்டில்தான் பால் வாங்கினேன். ஏதோ தூசு விழுந்துருச்சி போலருக்கு’’ என்றாள்.
“சுத்தமான பாலா இருக்கணும். ஒரு சொட்டு தண்ணீர்கூட ஊற்றக்கூடாது. பால் கொஞ்சமா வாங்கினா போதாது. பத்து லிட்டர் பால் உடனே வேண்டும்’’ என்று மனைவியிடம் சொல்லிவிட்டு வேறு வேலைகளைக் கவனிக்கச் சென்றான் சிவசங்கரன்.
முருகனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் அப்பா இப்படி பேசுகிறார்? தூசு இருந்தால் பாலை வடிகட்டி எடுத்துச் செல்வதுதானே! ஏன் இப்படி கீழே தூக்கி எறிந்து வீணாக்க வேண்டும்? என்று யோசித்தான் முருகன்.
மேலும் கடந்த வரம் தந்தையுடன் கடைத்தெருவிற்குச் சென்றிருந்தான் முருகன். ஒரு சில மளிகைப் பொருட்களையெல்லாம் வாங்கிய பின் சிவசங்கரன் முருகனை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றான். தேங்காயை வாங்கி உடைத்தான். அர்ச்சகர் நீட்டிய தட்டில் பணத்தையும் போட்டான். பிறகு வெளியே வந்தபின் கடைத்தெருவில் ஒரு வயதான மூதாட்டி நடக்க முடியாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தாள். பசி மயக்கத்துடன் வந்த அந்த மூதாட்டி சிவசங்கரனிடம் ஒரு டீ வாங்கித் தரச் சொல்லி கெஞ்சினாள். அவன் கைகளையும் பிடித்துக்கொண்டாள்.
“அடச் சீ சனியனே’’ என்று திட்டிய சிவசங்கரன் கைகளை உதறியபடியே எரிச்சலுடன் அவளைப் பார்த்தான்.
முருகனுக்கு ஒரே வருத்தமாகப் போய்விட்டது. கோயிலில் நிறைய செலவு செய்த அப்பா இந்த வயதான கிழவிக்கு ஒரு டீ வாங்கித் தரக் கூடாதா என நினைத்தான். அன்று அப்படி செய்த அப்பா இன்று பாலை தூக்கி எறிந்து வீணாக்குகிறாரே, இதை யாரிடமாவது கொடுத்திருக்கலாமல்லவா என அவன் சிந்திக்கலானான்.
இந்நிலையில் நிர்மலா பத்து லிட்டர் சுத்தமான பாலை வரவழைத்தாள். அதில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட சேர்க்கவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டாள்.
“அம்மா, ஒரு குடம் நிறைய பால் வாங்கி வைச்சிருக்கியே. இதை என்னம்மா செய்யப் போறோம்’’ என்று அம்மாவிடம் கேட்டான் முருகன்.
“முருகா, இன்னைக்கு உனக்கு பிறந்த நாள் இல்லையா? அதுக்காக கோயிலுக்குப் போகப் போறோம். சாமிக்கு இந்தப் பாலை ஊத்தி அபிஷேகம் செய்யணும்.’’
“அம்மா, இவ்வளவு பாலையும் வீணாக்கணுமா? ஒரு பாட்டிக்கு டீ கூட வாங்கித் தராத அப்பா எப்படி மனசு வந்து இவ்வளவு பாலை வீணாக்க நினைக்கிறார்?’’
“முருகா, இப்படியெல்லாம் பேசக் கூடாது. அப்பா உனக்காகத்தான் இதையெல்லாம் செய்கிறார். நீ நல்லா இருக்கணும். அப்பா உன்மேல் உசிரையே வைச்சிருக்கார். அப்பா மட்டுமில்லை. நானும்தான். இன்னைக்கு உனக்கு பிறந்த நாள். அதுக்காகத்தான் இதெல்லாம். ஆயிரக்கணக்கில் நாங்கள் செலவு செய்றோம்.”
“அப்படியா அம்மா. ஆனாலும் இன்னைக்கு என் கிளாசில் படிக்கிற அறவாழிக்கும் பிறந்த நாள். ஆனா, அவன் அம்மா அப்பா அவனை கோயிலுக்கு கூட்டிகிட்டுப் போகலையாம். ஏதோ அநாதை விடுதிக்குப் போறாங்களாம். அங்கிருக்கிற அநாதைப் பிள்ளைகளுக்கு சோறு போடுவாங்களாம். அவங்க மட்டும் ஏம்மா அப்படி செய்யறாங்க.’’
“சாமிக்கு செய்ஞ்சாத்தான் புண்ணியம் கெடைக்கும். நம்மைப்போல் அவங்களால செலவு செய்ய முடியாதோ என்னவோ! நாங்க உன்னை வருஷா வருஷம் உன்னோட பிறந்த நாளுக்கு கோயிலுக்குத்தான் அழைச்சிகிட்டுப் போவோம். இத்தனை வருஷமா நீ எதுவும் எங்களை கேள்வி கேட்கலை. ஆனா இப்ப உனக்கும் வயது கூடிகிட்டே போகுது. அதனால கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டே.’’
இதற்குமேல் மகனைக் கேள்வி கேட்க விடக் கூடாது என நினைத்த நிர்மலா பேச்சை அத்தோடு முடித்துக்கொண்டாள்.
மாலை அனைவரும் கோயிலுக்குக் கிளம்பினர். சிவசங்கரன் ஒரு சிறிய லாரியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டான். அதில் மூட்டை மூட்டையாக தேங்காய்கள், அபிஷேகப் பொருட்கள் அத்தனையும் ஏற்றிக் கொண்டான். இவர்கள் மூவரும் தங்கள் காரில் ஏறி கோயில் வாசலை அடைந்தார்கள். அங்கு தேங்காய் மூட்டைகளை இறக்கச் சொன்ன, சிவசங்கரன் மூட்டைகளைப் பிரித்து ஒவ்வொரு தேங்காயாக எடுத்து வாசலின் ஒரு பக்கத்தில் வீசி உடைத்தான். உடைந்த தேங்காய்கள் நாற்புறமும் சிதறி ஓடின. அந்தச் சிதறல்களைப் பலர் பொறுக்க ஓடினர். சில சிதறல்கள் சாலையில் சென்ற வாகனங்களின் சக்கரங்களில் சிக்கி கூழ் கூழாயின. தேங்காய் தண்ணீர் வாசலில் ஆறாக ஓடி வீணாகியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உடைத்த சிவசங்கரன் ஏதோ பெரிய சாதனையை செய்துவிட்டதைப் போல பெருமையுடன் மற்றவர்களைப் பார்த்து கோயிலுக்குள் சென்றான்.
ஏன் அப்பா இப்படியெல்லாம் செய்கிறார் என்ற வினாவுடன் அம்மா, அப்பாவைப் பின்தொடர்ந்தான் சிறுவன் முருகன். அவன் மனதில் ஆழமாக ஏதோ ஒரு சிந்தனை பதிந்தது.
கோயிலில் கருவறைக்கு வெளியே மூவரும் அர்ச்சகரால் நிற்க வைக்கப்பட்டனர். சிவசங்கரனும் நிர்மலாவும் அபிஷேகப் பொருட்களைக் கொடுத்தனர்.
“பையனோட நட்சத்திரம் என்ன?’’ என்று அர்ச்சகர் கேட்டார். சிவசங்கரன் பதில் சொன்னான். பிறகு அர்ச்சகர் குடத்திலிருந்து பாலை சிலையின் மீது கொட்டினார். பிற பொருட்களையும் கொட்டி புதிய துணிகளையும் சிலையின் மீது போட்டார். புரியாத மொழியில் மந்திரங்கள் சொன்னார். முருகன் அருகில் வந்து நெற்றியில் பூச விபூதி, குங்குமம் கொடுத்துவிட்டு மந்திரங்கள் சொன்னார். முருகனுக்கு எதுவுமே புரியவில்லை. பள்ளியில் அவனுடன் படிக்கும் மாணவர்களுக்கு பிறந்த நாள் வந்தால் வகுப்பில் அவர்களுக்கு தமிழிலோ ஆங்கிலத்திலோ பாட்டுப்பாடி வாழ்த்து சொல்வார்கள். ஆசிரியரும் சேர்ந்து வாழ்த்து சொல்வார். பெரிய வகுப்பில் தமிழ்ப் புத்தகத்தில் இருக்கும் கவிஞர் அறிவுமதியின் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை சில ஆசிரியர்கள் அழகாகப் பாடி மற்ற மாணவர்களையும் பாடவைத்து வாழ்த்துவார்கள். சிலர் ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ என்று ஆங்கிலத்தில் பாடி வாழ்த்துவார்கள். ஆனால் இந்த அர்ச்சகர் பாடுவது எதுவுமே புரியவில்லையே என எண்ணினான் முருகன். பிறந்த நாளும் அதுவுமாக தன்னை இன்று பள்ளிக்கு அனுப்பவில்லையே என வருந்தினான். பள்ளிக்குச் சென்றிருந்தால் புரியும் மொழியில் ஆசிரியர்களும் நண்பர்களும் வாழ்த்தியிருப்பார்கள் என்று நினைத்தான்.
“முருகன், இவர்கள் எல்லாம் ஆதரவற்றவர்கள். எனது பிறந்த நாளுக்கு என்னை என் அப்பாவும் அம்மாவும் இங்குதான் அழைத்துவந்து சாப்பாடு போட்டாங்க. அப்போதுதான் இவங்க என்னை பாத்திருக்காங்க’’ என்றான் அறவாழி.
அர்ச்சகர் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் தலையில் தலைப்பாகைபோல் துண்டுகளைக் கட்டினார். சிவசங்கரன் பவ்வியமாகக் கும்பிட்டான். அர்ச்சகர் தட்டில் கட்டாக பணத்தை வைத்தான். அர்ச்சகர் வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டே “பேஷா போயிட்டு வாங்கோ’’ எனச் சொல்லி அனுப்பிவிட்டு அடுத்தவர்களை வரச் சொன்னார். வருமானம் அவருக்கு முக்கியமல்லவா!
சில நாட்கள் கடந்தன. ஒரு நாள் முருகனும் அவன் வகுப்புத் தோழன் அறவாழியும் ஒரே மிதிவண்டியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பாதாள சாக்கடைத் திட்டம் என்ற பெயரில் சாலைகளைத் தோண்டி நகராட்சி கொள்ளையடித்து கடந்த மூன்று ஆண்டுகளாக சீர்கெட்ட நிலையில் இருக்கும் சாலையில் மிதிவண்டியில் சென்ற அவர்கள் ஒரு பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்தனர். முருகனுக்கு காலில் அடிபட்டு இரத்தம் கொட்டியது. அறவாழி கீழே விழுந்தவன் எழ முடியாமல் தடுமாறினான். அப்போது அந்தப் பக்கத்தில் யாருமே இல்லை. சில நிமிடங்களில் யாரோ ஒருவர் அங்கு வருவதைப் பார்த்தான் முருகன். வருபவர் அப்பா பூசைகள் செய்த அர்ச்சகர் என்பதை முருகன் அறிந்தான். அவர் தங்களுக்கு உதவி செய்வார் என நினைத்தான். ஆனால் அந்த அர்ச்சகரோ, “திமிர் பிடித்ததுகள். மெதுவா போறதுக்கென்ன? இதுங்களுக்கு வேணும்’’ என்ற திட்டிக்கொண்டே அவர்களைக் கடந்து சென்றுவிட்டார். முருகனுக்கு ஒரே திகைப்பாகப் போய்விட்டது. இந்த ஆளுக்குப் போய் அப்பா கட்டாக பணத்தைக் கொடுத்தாரே என வருந்தினான்.
பிறகு இருவரும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு எழுந்து மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி மெதுவாக நடந்துசென்றனர். முருகனின் காலில் இரத்தம் வடிந்து கொண்டே இருந்தது. சிறிது தூரம் சென்றதும் ஒரு வீட்டிலிருந்து சில சிறுவர்கள் ஓடிவந்தனர். அவர்களில் ஒருவன் தனது சட்டையைக் கிழித்து முருகனின் இரத்தம் வழிந்த காலில் கட்டினான்.
அவர்கள் அறவாழியை அடையாளம் தெரிந்துகொண்டு இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று படுக்க வைத்து தண்ணீர் கொடுத்தனர். இதையெல்லாம் பார்த்த முருகனுக்கு ஒரே வியப்பாக இருந்தது. அறவாழியை இவர்களுக்கு எப்படித் தெரிந்தது, யார் இவர்கள் என்று சிந்தித்த அவன் அதுபற்றி அறவாழியிடமே கேட்டான்.
“முருகன், இவர்கள் எல்லாம் ஆதரவற்றவர்கள். எனது பிறந்த நாளுக்கு என்னை என் அப்பாவும் அம்மாவும் இங்குதான் அழைத்துவந்து சாப்பாடு போட்டாங்க. அப்போதுதான் இவங்க என்னை பாத்திருக்காங்க’’ என்றான் அறவாழி.
அறவாழியின் பெற்றோர்களை நினைத்துப் பெருமைப்பட்டான் முருகன். கட்டாக பணமும் துணிமணிகளும் பெற்ற அர்ச்சகர் செயலையும் ஆதரவற்ற இந்தச் சிறுவர்களின் செயலையும் ஒப்பிட்டுப் பார்த்த முருகன் அடுத்த தனது பிறந்த நாளில் செய்ய வேண்டிய செயலை மனதிற்குள் நினைத்து உறுதி செய்து கொண்டான்.
அதாவது அடுத்த பிறந்த நாளில் பெற்றோர்கள் எவ்வளவு சொன்னாலும் கோயிலுக்குச் செல்லக் கூடாது எனவும் இதுபோன்ற ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் உறுதி செய்துகொண்டான். அதற்குள் பெற்றோர்கள் சிந்தனைகளை மாற்ற வேண்டும் எனவும் முடிவு செய்தான். தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டான்.