பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மாணவிகள் சாதனை!
ஆசியாவில் முதல்முறையாக முற்றிலும்
மாணவிகள் உருவாக்கிய செயற்கைக் கோள்
வை.கலையரசன்
தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஏரோஸ்பேஸ், கணினி, மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் என்று பல்துறை சார்ந்த மாணவிகள் 15 பேர் இணைந்து, ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனத்தில் பயிற்சி பெற்று ‘ அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி இந்த செயற்கைக்கோளை வடிவமைத்தனர். அது ஆசியாவிலேயே முதன்முதலாக பெண்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்த செயற்கைக் கோள் ஏவும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இஸ்ரோ’ நிறுவனத்தின் மேனாள் திட்ட இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு சிறப்பித்தார்.
‘எஸ்கேஐ என்எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட்’ (SKI-NSLV 9 Maniammaiyar Sat) என்ற பெயரைக் கொண்ட இந்த பலூன் செயற்கைக்கோள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 21.4.2019 காலை 11.42 மணிக்கு ஏவப்பட்டு மாலை 4.45க்கு தரையிறங்கியது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனுடன், வான்வெளியில் 70 ஆயிரம் அடி உயரத்துக்குச் சென்று, அங்குள்ள வெப்பநிலை காரணமாக உருமாற்றம் பெற்று, பாராசூட் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் தரையிறங்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், ‘மணியம்மையார் சாட்’ என்ற இந்த செயற்கைக்கோள் ஒரு லட்சத்து 3 ஆயிரம் அடி உயரம் சென்று, 4 மணி நேரத்துக்குப் பின்னர், 20 கிலோ மீட்டர் தூரத்தில் தஞ்சாவூர் குலமங்கலம் சாலையில் உள்ள சங்கத்திடல் என்ற கிராமத்தில் உள்ள வயலில், பாராசூட் மூலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
இந்த செயற்கைக்கோள் விண்ணை நோக்கிச் செல்லும்போதும், கீழே தரையிறங்கும் போதும், அதில் பெருத்தப்பட்டு உள்ள கேமரா உதவியுடன் வான்வெளியின் வளிமண்டலத்தில் உள்ள வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், அங்குள்ள வாயுக்களின் தன்மை குறித்து கண்டறிந்து, நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.
“சாமானியமானவர்கள்தான் – ஆனாலும் சாதித்தோம்“
சென்னைக்குச் சென்றோம். 17 நாட்கள் பயிற்சி கொடுத்தார்கள். எங்களில் பலருக்குச் சென்னையே அதுதான் முதன்முறை. எதுவுமே தெரியாமல் சென்ற எங்களுக்கு செயற்கைக்கோள் குறித்துத் தெரிய ஆரம்பித்தது. பயிற்சியில் மட்டுமின்றி, இணையம் மூலமாக நாங்கள் நிறைய தேடத் தொடங்கினோம். பல நாட்களில் நள்ளிரவு கடந்தும் பயிற்சி நடந்தது. பிறகு கல்லூரிக்குத் திரும்பி தொடர் பணிகள். இரவு, பகல் பாராமல் உணவை ஒரு பொருட்டாகக் கருதாமல் இரண்டு மாதங்கள் இருந்தோம். எங்களுக்குக் கிடைத்த திருப்புமுனையை இப்போது நாங்கள் அனுபவிக்கிறோம். நாங்கள் சாமானியமானவர்கள்தான் – ஆனாலும் சாதித்தோம். தகுதி – திறமை என்பது சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிவரும் – யாருக்கோ ஆன குத்தகையா?
இதனுடன் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் மற்றும் வெப்பநிலை கணக்கிடும் கருவி ஆகியவை அட்சரேகை, உயரம், திசைவேகம் ஆகியவற்றைக் கணக்கிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தியதால், பலூன் செயற்கைக்கோள் எங்கு செல்கிறது என பேராசிரியர்களும், மாணவர்களும் கணினி உதவியுடன் பார்த்துக்கெண்டே இருந்தனர்.
இந்நிகழ்வை ஆசியா புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தினர் சாதனையாகப் பதிவு செய்து கொண்டனர். தன்னுடைய பயண நேரத்தில் 1600க்கும் மேற்பட்ட மின்னணுத் தகவல்களை, கட்டுப்பாட்டு அறைக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது மணியம்மையார் சாட்.
துணைவேந்தர் பேராசிரியர் வேலுசாமி, பதிவாளர் தன்ராஜ், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் உள்ளிட்டோர் மாணவிகளைப் பாராட்டி ஊக்கமளித்தனர்.
செயற்கைக்கோளின் சிறப்பம்சம்
அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டில் அவரது நினைவைப் போற்றும் விதமாக மணியம்மையார் சாட்’’ எனும் பெயரில் ஏவப்பட்ட-தோடு, அதன்மீது அன்னை மணியம்மையாரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் வேளாண்மையில் சிறந்தோங்கும் தஞ்சை மாவட்டத்திலிருந்து ஏவப்படுதவதால், மாணவிகள் அதில் விவசாயத்தை முன்னிறுத்தும் விதமான படங்களைச் சுற்றியும் இணைத்து வேளாண்மை தொழிலுக்குப் பெருமை சேர்த்தனர்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் அமைந்திருப்பது காவிரி டெல்டா மாவட்டம் என்பதனை நினைவு கூறும் விதமாக, செயற்கைக்கோளின் மேற்கூரை மூங்கில் குச்சிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெற்றிகரமான இந்தச் சாதனைக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் நம் ஆசிரியர் தாத்தா கி.வீரமணி அவர்கள் குழுவினரைப் பாராட்டினார். இன்னும் பல சாதனைகளுக்குத் தயாராகி வருகிறது நம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்.
சாதித்த சாதனையாளர்கள்
சே.ஜான்சிராணி, கு.அனுமந்த்ரா, வெ.சத்யசிறீ, ம.சங்கவி, சு.நிவேதா, ச.சுஷ்மா, ப.கனகப்பிரியா, ரா.சுபலட்சுமிதாஸ், பா.ஜெயசிறீ, ச.சிவப்பிரியா, இ.ஞானசுந்தரி, கு.அபிநயா, பா.சா.மீனலட்சுமி, டி.ஆ.ஆக்னஸ் அர்ச்சனா, பி.பிரணவி.