23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். இது அவரது சிறந்த ஓட்ட நேரமாகும். தங்கப் பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இதற்கு முன்னர் 2013, 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டிகளில் பங்கேற்று நான்காவது இடத்தையே பெற்று வந்தார். இந்தப் போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிகண்டத்தைச் சேர்ந்தவர் ராசாத்தி. இவரது கணவர் மாரிமுத்து 2016இல் இறந்துவிட்டார். இவர்களின் கடைசி மகள் கோமதி.
கோமதி தங்கப் பதக்கம் பெற்ற தகவல், ஊடகங்கள் மூலம்தான் அவரது பெற்றோருக்கும், கிராமத்தினருக்கும் தெரிய வந்தது. இதனால், கோமதியின் பெற்றோரும், உறவினர்களும், கிராமத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தக் கிராமத்தில் ஒரு விளையாட்டு மைதானம்கூட கிடையாது. பேருந்து வசதி குறைவுதான். பல்வேறு ஓட்டப் பந்தயங்களில் வென்றதற்காக பெற்ற சான்றிதழ்கள், பதக்கங்கள், கோப்பைகள் ஆகியவை கோமதி வீட்டில் நிறைந்து கிடக்கின்றன.
சிறு வயது முதலே ஓட்டப் பந்தயத்தில் ஆர்வமுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கோமதி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்றுள்ள பல்வேறு ஓட்டப் பந்தயங்களில் வென்று சாதனை படைத்ததன் மூலம் 2014இல் வருமான வரித் துறையில் பணியில் சேர்ந்து தற்போது, பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். கோமதியின் சாதனை குறித்து அவரது தாய் ராசாத்தி கூறுகையில், “சிறுவயது முதலே விளையாட்டில் குறிப்பாக ஓட்டப் பந்தயத்தில் கோமதி ஆர்வம் மிக்கவராக இருந்தார். தினமும் காலையில் எழுந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு சென்று பயிற்சி பெற்று வந்தார். அர்ப்பணிப்பு மிக்க ஆர்வம்தான் அவரை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளது. இதன்மூலம் கிராமத்துக்கும், தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்’’ என்றார்.
கோமதியின் அண்ணன் சுப்பிரமணி கூறியபோது, “பெண் பிள்ளை என்பதால் விளையாட்டுக்கு அனுப்பக் கூடாது என்று என் தந்தையிடம் நான் கூறினேன். ஆனால், கோமதியின் ஆர்வத்தைக் கண்டுகொண்ட என் தந்தை குடும்பம் வறுமையில் இருந்த நிலையிலும் தேவையான உதவிகளைச் செய்து கோமதியை ஊக்கப்படுத்தினார். அவருக்குப் பக்கபலமாக இருந்தார்.
அதற்கேற்ப கோமதி தினமும் அதிகாலையிலும், மாலையில் பள்ளி முடிந்த பிறகும் தவறாமல் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டார். எப்போதும் பயிற்சி என்றே இருந்ததால் கிராமத்தில் அவருக்கு தோழிகள்கூட கிடையாது. பள்ளி நேரத்தைத் தாண்டி அவரது எண்ணம், செயல் எல்லாமே ஓட்டம் என்பதாகவே இருந்தது.
அவரது ஆர்வத்தைப் பார்த்த அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் கணேசன், பயிற்சியாளர் ஒருவரிடம் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, கல்லூரியில் சேர்ந்த பிறகு அவருக்கு ஒட்டத்தில் நல்ல பயிற்சி கிடைத்தது. முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு என் தங்கை கோமதியும் உதாரணம் என்பதில் எனக்குப் பெருமையாக உள்ளது’’ என மகிழ்கிறார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீராங்கனை கோமதியின் சாதனையைப் பாராட்டி பல்வேறு தமிழகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தகவல் : சந்தோஷ்