அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (43) : தலையறுந்த மனிதனுக்கு குதிரை தலையைப் பொருத்தினால் உயிர் பெறுவானா?

மே 01-15 2019

சிகரம்

“விஷ்ணு, அசுரர்களோடு பதினாயிரம் ஆண்டுகள் கடும் பேர்புரிந்து சோர்வடைந்தார். அவர் ஒரு மேடான இடத்தில் அமர்ந்து தமது வில்லை நிறுத்தினார். அதன்மீது தமது தாடையை ஊன்றிக்கொண்டு அந்நிலையிலேயே உறங்கலானார். அச்சமயத்தில், இந்திரன் ஒரு பெரிய யாகம் செய்ய முயன்று, அதற்கு விஷ்ணுவின் ஆசியைப் பெறுவதற்காக வைகுண்டத்துக்கு வந்தான். அங்கே அவர் இல்லாததால் அவர் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இடத்துக்குத் தேடிக் கொண்டு வந்தான். நெடுநேரம் காத்திருந்தும் அவர் விழிக்காதது கண்டு மயங்கிய இந்திரன், ருத்திரரது ஆலோசனைப்படி செல்லாக உருவெடுத்து, வில்லின் நுனியை அரித்தான். அதனால் வில் அசையும், விஷ்ணு விழித்துக்கொள்வார் என்று  எண்ணியே அச்செயலைச் செய்தான். ஆனால், வில்லின் நாண் திடீரென்று அறுந்தது. அதனால் வில்லின் நுனி வேகமாக விடுபட்டுத் தெறிக்கவே விஷ்ணுவின் தலை அறுபட்டு, வெகு தூரத்திற்கப்பால் போய் விழுந்துவிட்டது.

அப்போது பிரம்மதேவர், “இவ்வாறு புலம்புவதால் எப்பயனும் இல்லை. மகாசக்தி கொண்ட உலகமாதாவான பராசக்தியைத் துதிப்போம். அவளால் முடியாத செயல் ஏதுமில்லை’’ என்று கூறினார். அனைவரும் பராசக்தியைத் துதித்தனர். தேவி அவர்கள் முன்பு ஆகாயத்தில் தோன்றினாள். “ஒரு சமயம், லக்ஷ்மி தேவியைப் பார்த்து நாராயணமூர்த்தி ஏளனமாய்ச் சிரித்தார். அதைப் பார்த்த லக்ஷ்மி தேவி, ‘இவர், வேறு எவளோ ஒருத்தியை மனத்தில் கருதிக்கொண்டு என்னை எள்ளி நகையாடுகிறார்’’ என்ற கோபங்கொண்டாள். உடனே ‘உமது தலை அறுபடட்டும்’ என்று அவசரப்பட்டுச் சபித்துவிட்டாள். அதன் விளைவுதான் இது. கணவன் வேறொரு பெண்ணை நினைக்கிறான் என்று தெரிந்ததும் அவனையே சாகும்படி சபிக்குமளவுக்குப் பெண்கள் கெட்ட குணமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

“ஒரு காலத்தில் ஹயக்ரீவன் எனும் அரசன் என்னை நோக்கிக் கடுந்தவம் புரிந்து தனது உடலை வருத்திக்கொண்டிருந்தான். நான் அவன் முன் தோன்றி, அவனது பக்திக்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு அவன் வேண்டிய வரத்தைக் கேட்கும்படி கூறினேன். அவன், ‘ஜெகன் மாதாவே! எனக்குத் தேவர்களாலோ, அசுரர்களாலோ, இயற்கையாலோ, வேறு எவராலோ மரணமுண்டாகாத வரத்தைக் கொடுக்க வேண்டும்’’ என்று வேண்டினான். அதற்கு நான் நீ வேண்டுகிறபடி வரமளிக்க முடியாது. இவ்வகையில்தான் உனக்கு மரணமுண்டாக வேண்டும் என்று நீ தெரிவித்தால் அதற்குத் தகுந்தபடி வரம் தருகிறேன் என்று கூறினேன். அவனும் தந்திரமாக, ‘குதிரை முகமும் மனித உடலும் கொண்ட நான், என் போன்றவனாலேயே மரணமடைய வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டான். அவ்வாறே நானும் வரமளித்தேன்.

குதிரை முகமும் வலிமையான தோளும் கொண்ட அவ்வரக்கன் இப்போது பெருந்தீயவனாகி முனிவர்களைத் துன்புறுத்துகிறான்; வேதங்களைப் பழிக்கிறான். எனவே, பிரம்மதேவன் ஒரு குதிரையின் தலையை அறுத்து, அதை விஷ்ணுவின் கழுத்தில் பொருத்திவிட்டால் அவரும் ஹயக்ரீவனாகி அந்த அசுரனை வதைக்க முடியும்’’ என்று தேவி கூறியருளினாள்.

அவ்வாறே பிரம்மாவும் அழகிய ஒரு குதிரையின் தலையைக் கொய்து, விஷ்ணுவின் கழுத்தின் மேல் பொருத்திவிட, அவர் ஹயக்ரீவ உருவங்கொண்டார்’’ (ஸ்ரீதேவி பாகவதம்) என்று இந்து மதம் கூறுகிறது. ஒரு போர் 16 ஆயிரம் வருடம் நடக்குமா? அசுரர்கள் அவ்வளவு காலம் வாழ முடியுமா? ஒரு மனிதனின் தலை அறுபட்டபின் அதில் குதிரை தலையை வைத்தால் அந்த ஆள் உயிர் பெற முடியுமா? இவையெல்லாம் அறிவியலுக்கு ஏற்றக் கருத்துக்களா? இப்படி அடிமுட்டாள்தனமான கருத்துக்களைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

காதில் பிள்ளைகள் பிறக்குமா?

ஒரு சமயம் மகா பிரளயம் ஒன்று ஏற்பட்டது. அதனால் சமுத்திரம் பெருவெள்ளமாகப் பொங்கி மூன்று உலகங்களும் மூழ்கின. அச்சமயம் பாம்புப் படுக்கையில் நாராயணமூர்த்தி ஆழ்ந்திருந்தார். அப்போது அவர் காதுகளிலிருந்து மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உருவாகினர். அவர்கள், தம் உடலை வருத்தி, தேவியை நினைத்துக் கடுந்தவம் புரிந்தார்கள். அவர்களது தவத்தைக் கண்டு தேவி மகிழ்ந்தாள்; அவள் அவர்கள் முன் தோன்றி “உங்கள் தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன். உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டாள். அச்சகோதரர்கள், ‘தேவி! நாங்களே விரும்பினாலொழிய எவராலும் எதனாலும் எங்களுக்கு மரணம் நிகழக்கூடாது’’ என்று கேட்டனர். அவ்வாறே தேவியும் அவர்களுக்கு வரமளித்துவிட்டுச் சென்றாள்.

அதற்குப் பின்னர் அவ்வசுரர்கள் செய்த அட்டகாசத்துக்கு அளவேயில்லை. அப்போதும் விஷ்ணு நித்திரையிலிருந்தார். பிரம்மதேவர் அங்கு வர, அவரை வழி மறித்து, “ஏய் பிரமனே! எங்களுடன் சண்டைக்கு வா! பயமாயிருந்தால் உனது சத்தியலோகத்தை எங்களிடம் விட்டுவிட்டு ஓடிப்போய்விடு’’ என்று சவால் விட்டார்கள். அது கேட்டுப் பிரம்ம தேவர் திகைத்தார். விஷ்ணுவிடம் சென்று, “தந்தையே உங்கள் காதுக்குறும்பிலிருந்து உருவானவர்கள் மதுகைடபர் எனும் அரக்கர்கள். அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் எண்ணிலடங்கா. தற்போது அவர்கள் என்னைப் போருக்கு அழைக்கிறார்கள். தாங்கள்தாம் அவர்களைப் போரில் வெல்ல வேண்டும்’’ என வேண்டினார்.

விஷ்ணு அவர்களுடன் தொடர்ந்து அய்யாயிரம் ஆண்டுகள் போர் நடத்தியும் முடிவு காணமுடியவில்லை. விஷ்ணுவும் சோர்வடைந்து யோசிக்கலானார். அவர் களைப்படைந்திருப்பதைக் கண்ட மதுகைடபர்கள், “ஏ விஷ்ணுவே! உன் தோல்வியை ஒப்புக்கொள்!’’ என்று ஏளனத்துடன் கூக்குரலிட்டனர்.

அப்பொழுது விஷ்ணு சிந்திக்கலானார். ‘இந்த அசுரர்கள் தாங்களே இறக்கலாம் என எண்ணினாலொழிய இவர்களை வெல்ல முடியாதே! இவர்களுக்குத் தாங்கள் மரணமடைய வேண்டும் என்னும் விருப்பத்தை உண்டாக்கும் செயலைச் செய்ய வேண்டும். அது தேவியின் கருணையின்றி எப்படி முடியும்?’ உடனே விஷ்ணு பராசக்தியைத் துதிக்கலானார்.

தேவி தோன்றி, “திருமாலே! நீ இப்போது அவர்களைப் போருக்கு அழைத்து அவர்களுடன் போரிடு. நான் அவர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு மோகத்தை உண்டாக்கி ஏமாற்றுகிறேன். அப்பொழுது நீ அவர்களை வெல்வாய்!’’ என்று கூறினாள்.

அதைக்கேட்ட விஷ்ணுவும், அவ்வசுரர்களை மீண்டும் போரிட அழைத்து, கடுமையாகப் போர் புரிந்தார். அச்சமயம் தேவி, ஜெகன் மோகினியாக அசுரர்களின் கண் முன்னே தோன்றினாள். அவள் எழிலையும்  நடையழகையும் கண்ட அவ்வரக்கர்களுக்கு அளவு கடந்த மோகம் உண்டாகியது. அவர்களுக்குப் போரில் மனம் செல்லவில்லை.

அச்சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு விஷ்ணு, “அரக்கர்களே! உங்களுக்கு போர்புரிய எண்ணமில்லை போலும்! இருப்பினும் உங்கள் பராக்கிரமத்தை நான் பாராட்டுகிறேன். உங்களுக்க வேண்டிய வரம் யாது?” என்று வினவினார். ஆணவமிக்க அசுரர்கள் விஷ்ணு கூறியதைக் கேட்டுக் கடும் கோபம் கொண்டார்கள். “எங்களுடன் போரிட முடியாத உன்னிடமா நாங்கள் யாசிப்போம்? வேண்டுமானால் உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்டுக்கொள். நாங்கள் தருகிறோம்!’’ என்ற இறுமாப்புடன் கூறினார்கள். உடனே விஷ்ணுவும், “உங்கள் வாக்கு உண்மையானால் நீங்கள் இப்போது இறந்துவிட விரும்ப வேண்டும். அதாவது, என்னால் கொல்லப்பட வேண்டும்’’ என்று கேட்டார்.

அதுகேட்டு அசுரர்கள் அதிர்ச்சியுற்றார்கள். ஆனாலும், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் தங்கள் தலைகளை விஷ்ணுவின் தொடைமேல் வைக்க, அவரும் சக்ராயுதத்தைப் பயன்படுத்தி அவர்களைக் கொன்றார். அவர்கள் உடம்பே பூமியாக மாறியது’’ (ஸ்ரீதேவிபாகவதம்) என்கிறது இந்துமதம். காது என்பது கேட்கும் செவிப்பறை கொண்டது. அதன் வழியே பிள்ளைகள் பிறந்தார்கள் அதுவும் ஆண் பெண் சேர்க்கையில்லாமல் என்கிறது இந்து மதம். காதில் பிள்ளை பிறக்கும் என்று கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா? அது மட்டுமல்ல, இறந்த அசுரர்கள் பூமியாக மாறினர் என்கிறது இந்துமதம். சூரியனிலிருந்து சிதறி விழுந்தது பூமி என்கிறது அறிவியல். அப்படியிருக்க இப்படி அறிவுக்கும் அறிவியலுக்கும் எதிரான கருத்துக்களைக் கூறும் இந்து மதம் அறிவியலுக்கு அடிப்படையென்பது அசல் பிதற்றல் அல்லவா?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *