முகப்புக் கட்டுரை : சாதி வெறியைத் தூண்டி அரசியல் ஆதாயம் பெற திட்டமிட்டுக் கலவரங்கள்!

மே 01-15 2019

மஞ்சை வசந்தன்

சாதியற்ற தமிழ்ச் சமுதாயத்தில் ஆரியர் நுழைந்தபின் அவர்களின் சுயநலத்திற்காக, பாதுகாப்பிற்காக, தமிழினத்தைச் சாதிகளாய் பிரித்தனர். அதற்கு கடவுள், புராணம், சாஸ்திரங்களை உருவாக்கினர். தமிழ்ச் சமுதாயம் சாதிகளால் சிதறுண்டது. இந்நிலை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் நிலைபெற்றது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தந்தை பெரியாரின் பிரச்சாரங்களும், போராட்டங்களும் சாதிப் பிடிப்பை, உணர்வை, வெறியை பெருமளவிற்குக் குறைத்தது. பெயருக்குப் பின்னால் சாதியைப் போடவே வெட்கப்பட்டு விலக்கிய நிலை தமிழகத்தில் உருவாயிற்று. இது இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத மாபெரும் மாற்றம்.

சாதி மறுப்பு மணங்கள் பெருமளவில் நடைபெற்றன. தமிழகப் பத்திரிகையில் “மணமக்கள் தேவை’’ என்ற பகுதியில், சாதி தடையில்லை என்ற விளம்பரங்களே அதிக அளவில் வந்தன.

ஆனால், சாதிய ஒடுக்குமுறையை, இழிவை அகற்ற, அடித்தட்டு மக்களை மேல் உயர்த்த சமூகநீதி அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டைச் சிலர் சுயநலத்திற்கும், சுயவளர்ச்சிக்கும் பயன்படுத்த முற்பட்டனர்.

மீண்டும் வளர்க்கப்பட்ட சாதிய உணர்வுகள்:

சாதிய உணர்வுகள் மங்கிக் கிடந்த தமிழ்நாட்டில், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து மருத்துவர் இராமதாஸ் பல போராட்டங்களை நடத்தினர்.

வன்னிய மக்களுக்குத் தனி ஒதுக்கீடு என்ற கோரிக்கையால் கவரப்பட்ட வன்னிய மக்கள் இராமதாஸ் தலைமையில் திரண்டனர்.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இராமதாஸ் பலமுறை வன்னியருக்கு 20% இடஒதுக்கீடு குறித்து கோரிக்கைகள் வைத்தும் எம்.ஜி.ஆர் அதற்கு சம்மதிக்கவில்லை. மாறாக வன்னியர்கள் போராட்டத்தை நசுக்க துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் பல வன்னியர்கள் உயிரிழந்தனர்.

கலைஞரின் சாதனை:

ஆனால், கலைஞர் முதல்வரானதும், வன்னியர்களை முதன்மையாகக் கொண்ட “மிகப் பிற்படுத்தப்பட்டோர்” என்ற ஒரு பிரிவை உருவாக்கி 20% இடஒதுக்கீடு அளித்தார். கலைஞர் தவிர வேறு யாரும் இதைச் செய்திருக்க மாட்டார்கள். மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு கலைஞர் வழங்கிய மிகப் பெரிய சமூகநீதி உரிமை சாசனம் இது. இதனை மருத்துவர் இராமதாஸ் அவர்களே பலமுறை பாராட்டிப் பேசியும் எழுதியும் உள்ளார்.

அரசியல் நாட்டம் அழிவுக்கு வித்திட்டது

இடஒதுக்கீடு கிடைத்ததும், அதனை அடிப்படையாக வைத்து வன்னிய சமுதாய வாக்கு வங்கியை உருவாக்கி அரசியல் நடத்த இராமதாஸ் முடிவு செய்த கணமே தமிழகத்தில் சாதி உணர்வு வெறிக்கான விதை ஊன்றப்பட்டு விட்டது.

அரசியலை அறவே வெறுத்து, “ஓட்டுப் பொறுக்கிகளே, ஊருக்குள் வராதீர்!” என்று தட்டிகள் எழுதிவைத்த இராமதாஸ், தன் கொள்கைக்கு மாறாய் அரசியல் கட்சி தொடங்கினார்.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை, வயதான முதியோர், வீடுகள்.

 

 கலவரத்தினால் காயமுற்றோர்.

ஆர்.எஸ்.எஸ். அணுகுமுறையால் ஆபத்தும் அழிவும்

ஓர் இடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கி வளர்க்க வேண்டும் என்றால், அங்கு கலவரத்தை உருவாக்குவது ஆர்.எஸ்.எசின் அணுகுமுறை. அதே அடிப்படையில், அரசியல் கட்சி உருவாக்கப்பட்ட பின் வன்னியர்களிடையே சாதி வெறியை வளர்க்க, சாதி மோதல்கள் உருவாக்கப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வளர்க்க இஸ்லாமியர்களை எதிரியாக நிறுத்தி, அவர்களுக்கு எதிராக மத வெறியைத் தூண்டி வருவதுபோல, வன்னியர் வாக்கு வங்கியை வலுப்படுத்தவும் வளப்படுத்தி விரிவாக்கவும் தாழ்த்தப்பட்ட மக்களோடு வன்னியர்கள் மோதல் பயன்படுத்தப்பட்டு, பல மாவட்டங்களில் இந்த இரு சாதிகளுக்கு இடையே மோதல்களும், கலவரங்களும், குடியிருப்புகள் கொளுத்தப்படுவதும் பரவலாக நடந்து, பதட்டமான சூழல் உருவாக்கப்பட்டது.

எதிர்விளைவு

இதன் எதிர்விளைவாய் தாழ்த்தப்பட்ட மக்களும் சாதி அடிப்படையில் ஒன்று சேர்ந்தனர். அதன்பின் இந்த மோதல்களும் அழிவுகளும் அதிகமாயின. சாதிய வெறி மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

அரசியல் வெற்றி தந்த ஊக்கம்

சாதிய உணர்வால் அரசியலில் சில ஆதாயங்களும் கிடைத்தன. பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு சில இடங்களில் வெற்றியும் பெற்றதால் சாதிய அரசியலுக்கு ஊக்கம் கிடைத்தது.

சாதிய கட்சிகள் பெருக்கம்

வன்னியர் வாக்கு வங்கியால், பாட்டாளி மக்கள் கட்சிக்கு பேரம் பேசும் சக்தியும், அரசியல் ஆதாயமும் கிடைக்கவே, இதைக் கண்ட மற்ற சாதித் தலைவர்களும், தத்தம் சாதிக்கு தனித்தனி அரசியல் கட்சியை உருவாக்கினர். அரசியல் கட்சிகளையும் விட, ஜாதிய கட்சிகள் தமிழகத்தில் பெருகின. இவற்றின் ஒட்டுமொத்த விளைவு, பெரியாரால் அழித்தொழிக்கப்பட்ட சாதிய உணர்வு மீண்டும் துளிர்த்து வளர்ந்தது. தனது கட்சிக் கூட்டத்திற்கான சுவரொட்டிகளின் பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டு அச்சிட்டு ஒட்டி மீண்டும் சாதி வெறியை வளர்த்தார் இராமதாஸ். பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் பின்பற்றிய கொள்கைகளுக்கு இது முற்றிலும் எதிரானது. சமுதாய நலனுக்கு மாற்றத்திற்கு கேடானது.

சாலையெங்கும் சிதறிக் கிடக்கும் வீசப்பட்ட கருங்கற்கள்

அரசியல் ஆதாயத்திற்கான அண்மைக் கலவரங்கள்

பத்திரிகைகள் பார்வையில்…

பொன்பரப்பியில் நடந்தது என்ன?

“சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவித்த நாளிலிருந்தே இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் தொற்றிக்கொண்டது. பதற்றமான தொகுதியாகவே இதைப் பார்த்தது தேர்தல் ஆணையம். இறுதியில் ஆணையம் கணித்ததே நிகழ்ந்தது.

பொன்பரப்பி கிராமத்திலுள்ள பட்டியல் சமூக மக்களின் வீடுகளைக் குறிவைத்துத் தாக்கிய கும்பல், ஆறு பேர் மண்டையை உடைத்தது; வண்டிகளைக் கொளுத்தியது. பலரும் காயமடைந்தனர். இந்தக் காட்சிகள் தொடர்பான வீடியோவும் சமூக ஊடகத்தில் பரவி, பதற்றத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

இந்த வன்முறையில் காயமடைந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிமேகலையிடம் பேசினோம். ‘‘திருமாவளவன்தான் வேட்பாளர் என்று அறிவித்ததும், ‘வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திருமாவளவனுக்காக ஓட்டுக் கேட்கக்கூடாது’ என்று பிரச்னைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். இரண்டு கிராமங்களில் எங்கள் தலைவரை உள்ளே வரவே அனுமதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், ஏப்ரல் 18_ம் தேதி அன்று சாமுண்டீஸ்வரி கோயில் முன்பு அனைத்துக் கட்சியினரும் கேன்வாஸ் பூத் அமைத்திருந்தார்கள். திருமாவளவனின் சின்னமான பானையை நினைவுபடுத்த ஒரு பெட்டிக்கடையில் பானையை வைத்திருந்தோம். வாக்குப்பதிவு நாளில் எங்கள் சமுதாய மக்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுப்பிரமணி, சொக்கன், ராஜா, முருகேசன் ஆகிய நான்கு பேர் எங்களிடம் பிரச்னையில் ஈடுபட்டார்கள். பெட்டிக்கடையில் வைத்திருந்த பானையை அடித்து  உடைத்தார்கள். எங்கள் சமுதாய இளைஞர்கள் சிலர் இதை எதிர்த்துக் கேள்வி கேட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், ஆத்திர மடைந்த அவர்கள் காலனிக்குள் புகுந்து 50_க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளை அடித்துச் சேதப்படுத்தினர். இதில் வீட்டில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த மூன்று பேரை இழுத்து வந்து வீதியில் போட்டு அடித்து மண்டையை  உடைத்தனர். என் மகனையும் அடித்தார்கள். அதைத்தடுக்கப் போன என்னையும் சரமாரியாகத் தாக்கினார்கள். மயக்கத்தில் நான் கீழே விழுந்துவிட்டேன்’’ என்றார்.

பொன்னமராவதியில் நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டத்தில் கணிசமாக வாழும் முத்தரையர் சமூக மக்கள் பற்றி, வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இருவர் பேசிய பேச்சு, காணொளியில் பரப்பப்பட்டதால் பதற்றம் பரவியது. இதனால், அந்தச் சமூக மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல் நிலையத்தின்மீது கல்வீச்சு நடக்க, போராட்டக் காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வானத்தை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டது போலீஸ். தடியடியும் நடந்தது. பொதுமக்கள், போலீஸார் என இரு தரப்பிலும் சிலர் காயமடைந்தனர்.

இதனால், பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 21 வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பதற்றம் தணியாததால் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 1,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஆனாலும் மாவட்டத்தைத் தாண்டி, பல பகுதிகளிலும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன.’’ என்று எழுதியுள்ளது ‘ஜூனியர் விகடன்’.

 

கலவரத்திற்குக் காரணமானவர்களுக்கு எதிராய் போராடும் பொதுமக்கள்.

“அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வன்முறைக்கான முதல் பொறி கிளம்பியது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட நிலையில், கடந்த 18ஆம் தேதி பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது திருமாவளவனின் தேர்தல் சின்னமான பானையை பா.ம.க. தரப்பில் வாக்குப் பதிவு மையத்தின் அருகே போட்டு உடைத்திருக்கின்றனர். இதற்கு எதிராக வி.சி. கட்சியினர் குரல் கொடுத்தனர். அப்போது எழுந்த தகராறில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் காயம் பட்டிருக்கிறது.

பொன்பரப்பியில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்து மோசமாகப் பேசியபடியே, பானை சின்னம் வரையப்பட்ட 20 வீடுகள் வரை உடைத்து சேதப்படுத்தியதுடன், வாகனங்களையும் எரித்தது வன்முறைக் கும்பல். இந்தத் தாக்குதலில் காயமடைந்த ரவி, தேவா, அஜய், செல்வராஜ் ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எதிர்த்தரப்பில் காயமடைந்த சுப்பிரமணியன், சசி, ராஜா ஆகியோர் பொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் குறித்து செந்துறை போலீசார் இருதரப்பிலும் தலா 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தாலும், யாரையும் கைது செய்யவில்லை.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி சம்பவத்தின் பதற்றமே அடங்காத நிலையில், திருவண்ணாமலையை அடுத்த பறையம்பட்டியைச் சேர்ந்த முரளி என்ற இளைஞர், குறிப்பிட்ட சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பதிவினையடுத்து காட்டாம்பூண்டி, பறையம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் தங்கள் சமுகத்தைப் பற்றி அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட முரளியைக் கைது செய்யக் கோரி மணலூர்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு ஆடியோ புதுக்கோட்டை மாவட்டத்தை போராட்டக் களமாக்கிவிட்டது.

18ஆம் தேதி தேர்தல் ஒரத்தநாடு அருகில் உள்ள பொட்டலங்குடிக்காடு கிராமத்திலுள்ள முத்தரையர் இனப் பெண்கள் எங்களை இழிவாகப் பேசியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் கோரிக்கையுடன் வாக்களிக்க மறுக்கிறார்கள். இந்த தகவலறிந்து செல்வராஜ், மூர்த்தி மற்றும் சிலர் அங்கு சென்று, “புகார் கொடுத்திருக்கிறோம். நடவடிக்கை எடுப்பார்கள் ஓட்டுப் போடுங்கள்’’ என்று சமாதானம் செய்து வாக்குச் சாவடிக்கு அழைத்துச் சென்றார்கள். ஆடியோ வெளியான தஞ்சை தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு, சமாதானத்துக்குப் பின் வாக்களிப்புடன் போராட்டம் முற்றுப்பெற்றது.

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திரண்ட பெண்கள் கைகளில் துடைப்பம், செருப்பு போன்றவற்றுடன் முழக்கங்களை எழுப்பினார்கள். வாக்குவாதம், தள்ளுமுள்ளு, தடியடி, கல்வீச்சு அத்தனையும் நடந்து முடிந்தது. போலீஸ் வாகனங்கள் உடைக்கப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். மாவட்ட ஆட்சியர் உள்பட காவல் உயர் அதிகாரிகள் அவசரமாகக் கூடினார்கள். ஊரடங்கு உத்தரவு போடவில்லை என்றால் கலவரம் பெரிதாகும் என்று சொன்னதால், இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் 49 வருவாய் கிராமங்களுக்கு மாலையில் 144 தடையுத்தரவு பிறப்பித்தார். தாசில்தார் பாலகிருஷ்ணன் ஆயிரம் பேர் மீது புகார் கொடுத்தார்.

இந்தப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சை, திருச்சி, வேலூர் என பல மாவட்டங்களுக்கும் பரவி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது’’ என்று எழுதியுள்ளது ‘நக்கீரன்’ இதழ்.

பொன்பரப்பி பதட்டம்

“அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பொன்பரப்பி கிராமத்தில், தேர்தல் அன்று, எல்லாப் பகுதிகளையும் போல்தான் வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், வாக்குச் சாவடிக்கு அருகில் உள்ள கடையில் ஒருசிலர் மற்றொரு தரப்பினரிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு, பானை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுள்ளனர் என்றும், அதனால் ஆத்திரமடைமந்த ஒரு தரப்பினர் வாக்குப் பதிவு மையத்தின் அருகே உள்ள கடைக்கு முன்பு பானையைத் தூக்கிவந்து ரோட்டில் போட்டு உடைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்த வருவோர்

பானையை உடைத்த நபருக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் தகராறில் ஈடுபட்டதில் ஒருவர் காயமடைந்தார். இதனால் பானையை உடைத்த நபர்கள், தலித் மக்கள் வசிக்கும் தெருவுக்குள் புகுந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை அடித்து சேதப்படுத்தினர். ஒரு வீட்டில் எரிந்து கொண்டிருந்த விறகை எடுத்து இரு சக்கர வாகனத்தின் மீது வீசிவிட்டுச் சென்றனர். இதில், அந்த வாகனம் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் முழுவதும் காணொளி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பலரும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு சாராருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் தேர்தல் நாளான 18ஆம் தேதி காலை 11.00 மணியளவில் விடுதலை சிறுத்தைகளின் சின்னமான பானையை பொது சாலையில் போட்டு உடைக்க, அதனைக் கண்ட தலித் இளைஞர்கள் வாக்குசாவடியில் உள்ள போலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் அந்தக் கும்பலை எச்சரித்துள்ளனர்.

இதன் பின்னர்தான், சுமார் 120 பேர் கொண்ட கும்பல் பிற்பகல் 2.30 மணியளவில் தலித் குடியிருப்பிற்குள் சென்று கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. மூன்று கோணி சாக்குகளில் ஜல்லி கற்களை கொண்டு வந்து எல்லோர் மீதும் வீசியிருக்கின்றனர். பொன்பரப்பி சம்பவத்தில் பதிமூன்று தலித்துகள் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். கடுமையாக நொறுக்கப்பட்ட 20 வீடுகள் உட்பட பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டும், நொறுக்கப்பட்டும் கிடக்கின்றன’’ என்று ‘புதிய தலைமுறை’ இதழ் எழுதியுள்ளது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்

அரியலூர் மாவட்டம் செந்துறையையடுத்த பொன்பரப்பி கிராமத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை நடந்தது. தருமபுரியில் நடந்ததின் நீட்சியாக இது கருதப் படவேண்டும்.

(பாவம், ஹிந்து முன்னணியினர் நம்பும் ஈமச் சடங்கு பானை உடைப்பில்தான் நடக்கும், அது தானோ?)

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்த பா.ம.க., இந்து முன்னணியினர் நடத்திய வன்முறை வெட்கப்படத்தக்கதாகும். 20_க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன.

கோடரியால் தாக்கப்பட்ட ஒரு தோழர் மண்டை உடைக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

அன்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் சொன்னதென்ன?

இந்த 21 ஆம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் கதி இதுதானா? அவர்களுக்கு வாழ்வுரிமை கிடையாதா?

மேனாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப் பேரவையில் சொன்னதுபோல, “வன்முறை என்றால், பா.ம.க’’ என்பதை உறுதிப்படுத்துவதுபோல் அல்லவா இந்த இரு நிகழ்வுகளும் அமைந்துள்ளன.  மருத்துவர் இராமதாசு அவர்கள் தலித் அல்லாத கூட்டமைப்பை ஏற்படுத்தியதன் பலன் இதுதானா?

கீழமாளிகையில் நடந்த கொடுமை!

இந்த நேரத்தில் இன்னொரு முக்கிய தகவல் நினைவூட்டப்பட வேண்டியதாகும்.

இதே பொன்பரப்பியை அடுத்த கீழமாளிகை என்ற ஊரில் நந்தினி என்னும் தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அப்பகுதியில் பேட்டை ரவுடி போல சுற்றித் திரியும் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் முக்கியமாக இருந்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்து, பிணத்தைக் கிணற்றில் வீசிச் சென்றாரே _அந்த வழக்கில் அவர் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அனைவரும் வலியுறுத்திய நிலையிலும், (திராவிடர் கழகம் ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தியது) பா.ஜ.க.வின் தொங்கு சதையாக இருக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி _ அந்த ஆள் மீது சிறு துரும்பும் படாமல் பாதுகாத்ததுதான் _ தொடர்ச்சி தான் எந்த எல்லைக்கும் சென்று தாழ்த்தப்பட்டவர்களை _ அவர்களின் வீடுகளைத் தாக்கலாம் என்ற துணிச்சலைத் தந்திருக்கிறது!

அந்த ஆசாமிக்கு ஒரு பிரபல தொழில் நிறுவனத்தில் சம்பளம் கொடுத்து வைக்கப்பட்டு, இந்து முன்னணியை பிரபலப்படுத்தும் ஏற்பாடு நடந்து வருகிறது.

 

 தாக்குதலால் பாதிக்கப்பட்ட காவல்துறையின் வாகனம். / பாதிக்கப்பட்ட மக்களின் எழுச்சி.

பா.ம.க. நிறுவனரின் கவனத்துக்கு…

பா.ம.க.வும், இந்து முன்னணியும் கைகோர்த்துக் கொண்டு விட்டதா? இதுதான் மருத்துவர் இராமதாசு அவர்கள் பெரியாரை இடை இடையே போற்றும் பேச்சுக்கான இலட்சணமா?

தேர்தல் வரும், போகும் – வெற்றி வரும் – போகும் – அதற்காக அனைத்தையும் பறி கொடுத்து பரிதாப நிலைக்கு ஆளாக வேண்டுமா?

தேர்தலைப்பற்றி கவலைப்படாத, அரசியலை வெறுப்பதுபோல் காட்டிக் கொண்ட ஒரு காலகட்டத்தில்  பா.ம.க. நிறுவனர் பேசிய அந்தப் பேச்சு _ தந்தை பெரியார் அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்ததுண்டு. தேர்தல் அரசியலில், பதவி அரசியலில் அடங்கா ஆர்வம் கொண்ட நிலையில், அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டு வருவது – எதிர்காலத்தில் அவரும், அவர் சார்ந்த கட்சியும் தனிமைப்படுத்திவிடும் என்று தெரிவித்துக் கொள்வது நமது கடமை.

கீழ்விசாரம், பொன்பரப்பி வன்முறை களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வரவேண் டும்; இன்றேல் நீதிமன்றம் மூலம் நடவடிக்கைகள் தொடரவேண்டும். மனித உரிமை ஆணைய மும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் உடனடியாக தலையிட்டு உரியது செய்யப்பட வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.’’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், எந்தவித அரசியல் வெறுப்புணர்வும் இன்றி சமூகப் பொறுப்புணர்வுடன் கூறியுள்ள கருத்துக்கள், மருத்துவர் இராமதாஸ் உள்ளிட்ட அனைத்து சாதி சார்ந்த அரசியல் தலைவர்களும் சிந்தித்து தங்கள் செயல்பாட்டை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயக் கடமையாகும்.

மிக மோசமான கண்டிக்கத்தக்க நிகழ்வு என்னவென்றால், பள்ளி மாணவர்கள்கூட தடியேந்தி தாக்குதலில் ஈடுபட்டதுதான். இளம் உள்ளத்தில் இந்தச் சாதி வெறியை வளர்ப்பதும் அவர்களை காலிகளாக்குவதும் சரியா என்று இவர்கள் சிந்திக்க வேண்டும்.  

நற்பெயரை சம்பாதிக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால், ஒரு நொடியில் அதனை அழித்து அவப்பெயரை பெற்றுவிட முடியும். அரசியல் நடத்துவதும், தலைவராவதும், பழி ஏற்க அல்ல, நல்ல வகையில் மக்கள் மனதில் இடம் பெற; மக்கள் நல்லிணக்கத்துடன் நல்வாழ்வு பெற.

ஆனால், இதை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விட்டு, அற்ப அரசியல் ஆதாயத்திற்காக கலவரங்களைத் தூண்டுவதும், அதை வைத்து ஜாதி வெறியை வளர்ப்பதும் அதன் மூலம் வாக்கு பெற முயல்வது சமுதாயத்திற்கு இழைக்கும் மாபெரும் துரோகம். எல்லா ஜாதிக் கட்சித் தலைவர்களும் இதை ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுவதுதான் சமுதாய அக்கறையுள்ள தலைவர்கள் என்பதற்கு அடையாளம் ஆகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *