இலங்கையில் குண்டுவெடிப்பு கடும் கண்டனத்திற்குரியது!

மே 01-15 2019

கிறித்துவர்களது ஈஸ்டர் விழா நாள் அன்று (21.4.2019) இலங்கையில் சர்ச்சுகளிலும், இரண்டு ஓட்டல்களிலும் குண்டுவெடித்து, 383 பேர் உயிரிழந்துள்ளனர்; 500 பேர்களுக்குமேல் காயம் என்ற உள்ளத்தை உலுக்கும் அதிர்ச்சி செய்தி மீளாத் துயரத்தை அகிலத்திற்குத் தந்துகொண்டுள்ளது. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் 27.4.19 அன்று மீண்டும் குண்டு வெடிப்பு, அதில் 15பேர் பலி என்பது மிகுந்த கண்டனத்திற்கும், வேதனைக்கும் உரியது.    இதற்கான குற்றப் பின்னணிகள் குறித்து மிக முக்கியமாக விசாரணை செய்யப்பட்டு, உண்மைகள் வெளியாக்கப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்கள் மிகமிக மெல்ல மறுவாழ்வு நோக்கிச் செல்லும் இந்தக் காலகட்டத்தில், இப்படி ஒரு கொடூர நிகழ்வு, திட்டமிட்டு நடத்தப் பெறுவது, சிறுபான்மைச் சமுகத்தினரை மிரட்டவா? மதவெறியா? அச்சுறுத்தலா? அல்லது சிங்கள அரசியல் போட்டியின் விளைவா? என்று பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று! இறந்தவர்களில் பெரும்பாலும் சிறுபான்மையினரும், தமிழர்களுமேயாவர் என்பதும் கவனத்துக்குரியது! இதை நாகரிக மனித சமுகம் இதனை ஏற்கவே ஏற்காது. மதவாதம் அங்கே வேறு வடிவத்தில் அதன் கோரப் பற்களுக்கு இரை தேடியது உலகறிந்த உண்மை!

இதனைப்பற்றிய முழு உண்மைகளும், காரணமும் கண்டறியப்படவேண்டும். உயிரிழந்தோருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்; குடும்பத்தினருக்கு ஆறுதல்! உயிர்கள் என்பவை பகுத்தறிவாளர்களுக்கு ‘யாதும் உயிரே, யாவரும் மனிதர்களே’ என்பதுதான். இது குறித்த ஆழ்ந்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கி.வீரமணி,

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *