’சிலம்பொலி’ செல்லப்பனார் மறைந்தாரே!

ஏப்ரல் 16-30 2019

தமிழ் உணர்வும், இனவுணர்வும் கொண்ட, தமிழர் பெருமைப்படத்தக்க இலக்கிய பெரு மகனார் சிலம்பொலி செல்லப்பனார் (வயது 91) இன்று (6.4.2019) மறைந்த தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம். கல்வித் துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றி, அப்படிப் பணியாற்றிய காலங்களில் எல்லாம் தமது தனித் தன்மையான  முத்திரைகளைப் பொறித்தவர் சிலம்பொலி செல்லப்பனார் ஆவார்.

பெரியார் திடலுக்கும் அவருக்கும் உள்ள இடையறாத உறவு என்றென்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியதாகும். பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். சிறப்பாக அவர் பொழிந்த ‘இராவண காவியம்‘ பற்றிய சொற்பொழிவு இன்றும்கூட நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சியிலும் பங்கு கொள்வதில் பெருமைப்படக் கூடியவர்.  பலமுறை கழகத்தால் பாராட்டப்பட்டவர்! நாமக்கல்லில் நமது அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபத்தின் வாயிலில் சிலம்பொலி செல்லப்பனார் நினைவு பெரியார் படிப்பகம் இயங்கி வருகிறது.

நூல்களை எழுதிடுவோர் அவற்றிற்கான மதிப்புரைக்குத் தேடி செல்லும் ‘இலக்கியச் செம்மல்’ சிலம்பொலியார். அந்த மதிப்புரைகள் தனி நூலாகவே வெளிவந்துள்ளது. இந்நூலுக்காகவே தமிழ்நாடு அரசின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விருதும் அளிக்கப்பட்டது. சிலம்பொலியார் மறைவு – அவர் குடும்பத்தை மட்டும் சார்ந்த இழப்பல்ல; தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

– கி.வீரமணி

தலைவர், திராவிடர்கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *