புதுப்பாக்கள்

அக்டோபர் 16-31

சென்னைக் கடற்கரையில் மரண தண்டனைக்கு எதிராக கும்பகோணம் கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மணல் சிற்பம்

செல்  ஜெயந்தி!

மெல்லத் திற செல்லை
பாட்டரியை…
புண்ணிய நீரிலும்
சிம்மை…
குழாய் நீரிலும்
குளிப்பாட்டு!
குங்குமம், சந்தனம் பூசி…
செல்லுக்குள் வை!
செல்லை பூஜையில் வை!
பிறகு…
பயபக்தியோடு…
ஒரே மனத்தோடு…
உரக்கச் சொல்…
கோவிந்தா! கோவிந்தா!!
அறிவுக்குக் கோவிந்தா!
உழைப்புக்குக் கோவிந்தா!
கோவிந்தா! கோவிந்தா!!

– நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

கலவரம்

அம்மனுக்குக்
காப்புக் கட்டப்பட்து
திருவிழாவுக்குத்
தயாரானார்கள்
கலவரக்காரர்கள்

சுதந்திரம்

தெற்கு சூடான் தந்தது
தமிழ் ஈழம் உருவாகும்
நம்பிக்கையை

– வீ. உதயக்குமாரன், வீரன்வயல்

உரசிப் பார்க்காதே

வேண்டாம் வேண்டாம்
யாருக்கும் வேண்டாம்
மண்ணில் தூக்கு
யாருக்கும் வேண்டாம்
தவறுக்குத் தண்டனை
மரணம் என்றால்
மண்ணில் மனிதன்
வாழ்வதும் எங்கே?
ஒருவன் உயிருக்குத்
தூக்கு என்றால்
பல்லாயிரம் உயிர்களுக்குப்
பதிலும் எங்கே?
போபர்ஸ் வழக்கு
காணாமல் போனது
போபால் வழக்கும்
என்ன ஆனது?
மசூதியை இடித்தவனுக்கு
மரணம் உண்டா?
அதனால் மாண்டவருக்கு
விடைதான் உண்டா?
கருவறைக் கொலைகளும்
தொடருது இங்கே
தண்டனை என்றேனும்
உண்டா இங்கே?
இனத்திற்கு எதிராய்ப்
பேசுபவனும் இங்கே
வாழ்ந்ததாய் வரலாறு
இருப்பதும் எங்கே?
சட்டம் பேசும்
சாணக்கிய வம்சமே
சாமான்ய மக்களுக்கு
சட்டமும் வணங்குமே
வேண்டாம் மண்ணில்
மீண்டும் ஒரு சிலப்பதிகாரம்
பயனாய் இருக்கட்டும்
ஆட்சியின் அதிகாரம்
தேவையின்றி உணர்வுகளை
உரசிப் பார்க்காதே
எரிந்திடும் நெருப்பில்
காணாமல் போகாதே…!!

– புதுவை ஈழன்

திடலை நோக்கி

கச்சேரி கேட்டு
காதோய்ந்து போன
முச்சேரி மக்கள்
இச்சேதி கேட்க
எச்சேரி போவார்
தன் தீண்டாமைத் தீயை அணைக்க!

வேற போக்கு என்ன?

காவி உடுத்தி காசிக்குப் போயி
தரிசித்து வந்தால் புண்ணியம்
அப்படி என்ன புண்ணியம் கிடைத்தது?
காவிக்கும் காசிக்கும்
மனிதத்தை அழித்து
மதவெறியை வளர்த்ததைத் தவிர?

வேறொரு மாதத்தில்…

ஏக கன்னிபூசை அய்ப்பசி மாதத்தின் பிற்பகுதியும்
கார்த்திகை மாதத்தின் முற்பகுதியும்
இரவெல்லாம் தூக்கமில்லாமல் ஒரே இரைச்சல்
இப்போதெல்லாம் நாய்க் குரைச்சலைக்                கொஞ்சம்
அசடாகவே காதுகள் சேமித்துக் கொண்டன
வீடு சேராப் படுக்கை குளியல்கூட இரு வேளை
மக்கள் கூடா தூரத்தில்
சற்று தூரத்தில்
சாலையில் இட்டசோறு காகம் தின்னாது
வெறுவாயில் நண்பகல் உணவு
கொஞ்சம் கொஞ்சமாய் பனி விலகியது மாத இறுதியில்
கன்னி கழிந்தும் இன்னும்
கன்னியாய் வேறொரு மாதத்தில்!

– கதா சுரேசு, திருவண்ணாமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *