23.2.2019 அன்று தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கத்தின் போர் வாள் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:
எந்த சனாதனத்தை, ஆரியத்தை எதிர்த்து காலமெல்லாம் போராடினோமோ அந்த சனாதனம், ஆரியம் நம்மை ஆதிக்கம் செய்ய வடக்கே இருந்து வருகிறது. இந்த ஆபத்தை முறியடிப்போம்.
பெரியார் காலத்தில் வராத ஆபத்து _ அண்ணா காலத்தில், கலைஞர் காலத்தில் வராத ஆபத்து _ படையெடுத்து வருகிறது வடநாட்டிலிருந்து. எதை எதிர்த்து இத்தனை ஆண்டுகாலமாகப் போராடினோமோ _ நூறாண்டுகளுக்கு மேல் போராடினோமோ _ எண்ணற்றவர்கள் உயிர் துறந்தார்களோ _ ரத்தம் சிந்தினார்களோ _ துப்பாக்கிக் குண்டுகளுக்கு மார்பு காட்டினார்களோ _ எல்லாம் இன்றைக்கு அதைவிட கொடுமையான முறையில், சனாதனத்தைப் புகுத்தி வருகின்றன இந்துத்துவா சக்திகள்.
பாசிச வெறியோடு கூடிய இந்துத்துவா சக்திகளுடைய மொத்த உருவமாகத் திகழ்கிறார், இந்த நாட்டினுடைய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி.
ஆனால், கோடிக்கணக்கான இசுலாமியர்கள் இந்த மண்ணை உயிராக மதித்து வாழுகிறார்களே! கோடிக் கணக்கான கிறித்துவர்கள்; பவுத்தர்கள்; சீக்கியர்கள்; சமணர்கள், பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் வாழ்கிறார்களே _ இங்கே ஒரு கொடூரமான முறையில், இந்தி, சமஸ்கிருதம் என்பதைத் திணிப்பதோடு மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி வகுப்புகள் நடப்பதோடு மட்டுமல்ல _ எந்த அக்கிரமங்களையும் செய்யலாம் என்ற முடிவோடு வந்துவிட்டார்கள்.
பெரியார் சிலையை உடைப்போம் என்கிறான் ஒருவன்; அவன் சொன்ன வார்த்தைகளை இந்த மேடையில் பேசி, என் நாக்கை அழுக்காக்கிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், நான் அன்றே எச்சரித்தேன், பெரியாரின் படை இருக்கிறதடா!’’ என்றேன்.
அர்த்தராத்திரி அமாவாசை திருடனைப் போல நீ போய் சிலையை அவமானப்படுத்தினாய்; இந்தத் தேதியில், இத்தனை மணிக்கு, இந்த இடத்தில் உள்ள பெரியார் சிலையை நாங்கள் தகர்க்க வருகிறோம் அல்லது சேதப்படுத்த வருகிறோம் என்று எவன் வேண்டுமானாலும் வரட்டும்; கைகள், கால்கள் துண்டு துண்டாகிப் போய்விடும்.
வருகிற காலம், ஆபத்தான காலம்; அதை எதிர்ப்பதற்கு வீரமுள்ள இளைஞர்களாக, மான உணர்ச்சியுள்ளவர்களாக, கருஞ்சட்டைப் படையினரே நீங்கள்தான் வரவேண்டும்; இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம். அந்த அணி வெல்லவேண்டும்; வெல்லும். நாடாளுமன்றத் தேர்தலில் வெல்லும்!
சிந்தனைவாதிகள் கொல்லப்படுகிறார்கள்!
திராவிடர் இயக்கத் தோழர்கள் _ அவர்கள் எந்தப் பாசறையில் இருந்தாலும் சரி, பெரியாரை, அண்ணாவை, கலைஞரை நேசிக்கின்ற தோழர்கள் _ பெரியார் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினாரே எம்.ஜி.ஆர். அவரை நேசிக்கின்ற தோழர்கள் _ உண்மையான மான உணர்ச்சி இருக்குமானால், இன்றைக்கு இவ்வளவு பெரிய பெரும் படையெடுப்பு நம்மீது பாயத் தயாராக இருக்கிறது; சிந்தனைவாதிகள் கொல்லப்படுகிறார்கள்.
ஏன்? உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் காந்தியாரின் உருவத்தைப்போல செய்து, எதிரே நின்று கொண்டு இந்து மகா சபையின் தலைவி பூஜா, துப்பாக்கியால் சுடுகிறாள்; உள்ளே வைக்கப்பட்டு இருக்கிற சிவப்பு நிற திரவம் கொட்டுகிறது; காந்தியாரின் உருவம் கீழே விழுகிறது; அந்த உருவத்தின் தலையில் ஏறி மிதிக்கிறார்கள்; நெருப்பு வைத்து கொளுத்துகிறார்கள்.
தஞ்சைத் தரணியில், செழித்துக் கிடந்த எங்கள் கழனிகள் காய்ந்து; எங்கள் நஞ்சை நிலங்கள் அழிந்து, செங்கையும், செங்கரும்பும், பலா மரமும், மாமரமும், வாழை மரமும், தென்னை மரமும் குலுங்கி வந்த எங்களுடைய சோழ மண்டலம் அழிந்து, அவற்றை அழிப்பதற்காகவே மேகதாதுவில் அணைக் கட்டும் திட்டம்; அதனை ஏற்படுத்திக் கொடுத்ததே இந்த பி.ஜே.பி. கவர்ன்மெண்ட்.
தண்ணீர் வராது இனி மேட்டூருக்கு _ பூமிக்கடியில், 500 அடி ஆழத்திற்கும் இங்கே தண்ணீர் கிடையாது.
இந்த மண் பட்டுப் போகும்; பஞ்சப் பிரதேசமாகும்; எத்தியோப்பியாவாகும் _ பாலைவனமாகும். 15 ஆண்டுகளுக்குள் விவசாயி, அடிமாட்டு விலைக்கு அம்பானிகளுக்கு விற்பான் இந்த நிலங்களை! இந்த நிலங்களை வாங்கி, 6 ஆயிரம், 10 ஆயிரம் அடிக்குக் கீழே இருக்கும் மீத்தேன் வாயு, ஹைட்ரோ வாயுகளை எடுத்து லட்சக்கணக்கான கோடிகளை இந்திய அரசு குவிக்கும்; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குப் போகும். அதற்குத் திட்டமிட்டு விட்டார்கள். ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிறுவியவனுக்கு இரண்டு ஒப்பந்தங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு, இதே தஞ்சை தரணியில்.
மானமற்ற தமிழக அரசே, பெட்ரோலிய மண்டலம் ஆக்குவதற்கு, பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் ஆக்குவதற்கு, 55 ஆயிரம் ஏக்கரை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட அரசே _ இதைவிட ஒரு துரோகம் இந்த நாட்டிற்கு செய்ய முடியுமா? எடப்பாடி பழனிச்சாமி அவர்களைக் கேட்கிறேன், இதைவிட ஒரு துரோகம் இருக்க முடியாது.
ஆக, வேளாண் மண்டலம் _ இவ்வளவு அழிவும் நம்மைச் சூழ்ந்து வருகின்ற வேளையில், நம்மைத் தாக்க நினைக்கின்ற வேளையில், எதற்காக இந்தியாவில் இருக்கவேண்டும் என்கிற கேள்வி எதிர்காலத்தில் எழும்; பக்கத்து நாடுகளா? உலக நாடுகளின் மன்றத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். நான் பிரிவினை பேசவில்லை. ஆனால், எச்சரிக்கிறேன்! இந்த நாடு துண்டுத் துண்டாகப் போய்விடக் கூடாது.
மோடியின் தலைமையிலான அரசு மீண்டும் வரக்கூடாது
கேடுகெட்ட, பாசிச வெறி கொண்ட, தமிழகத்தை வஞ்சிக்கின்ற, சமுகநீதிக்குக் கொள்ளி வைத்த, மீத்தேனைக் கொண்டு வந்த, நியூட்ரினோ திட்டத்தைத் திணித்த எல்லா கேடுகளும் செய்த இந்த நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு மீண்டும் வரக்கூடாது.
தமிழனே, இந்த நாட்டின் வேலைக்காரனாகக் கேட்கிறேன், என் உயிர் இருக்கிற மட்டும், இந்த மண்ணுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இன மக்களுக்காகவும், ஈழ விடுதலைக்காகவும் என்னை நான் அர்ப்பணித்துக் கொள்வேன். எந்தப் பதவியைப் பற்றியும் வாழ்க்கையில் நான் கனவு கண்டதில்லை. பதவியைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. இந்த மண்ணில் பிறந்தேன்; என் தாய்த் தமிழகத்தில் பிறந்தேன்; இந்த சோழ மண்டலத்தைக் காதலிக்கிறேன்; தமிழை என் உயிருக்கு மேலாக நேசிக்கிறேன்; உலகத்தின் மூத்த தமிழ்க் குடி அதன் பெருமை வரலாறு நெஞ்சில் ஓடுவதால், அண்ணா ஊட்டியதால், இதற்கு அழிவு வருவதற்கு விடமாட்டோம்; அதற்கு ஆபத்து வருவதற்கு விடமாட்டோம்; தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழனையும், தமிழ்த் தாயின் சகோதரியும் கரம் கூப்பி வணங்கி, ஒரு வேலைக்காரனாக, கட்சியை விட்டுவிடுங்கள் – என் பின்னால் பறக்கிற கருப்பு, சிவப்பு வண்ணத்தை மறந்துவிடுங்கள்; இந்தத் தமிழ்நாட்டிற்கு வேலை செய்கிற ஒரு வேலைக்காரன் நான்; ஒரு ஊழியக்காரன் நான்; என் காலத்திற்குப் பிறகு என்ன ஆகப் போகிறது என்கிற கவலையில் கேட்கிறேன், இந்த நாசகார கூட்டத்திற்குப் பாசிச கூட்டத்திற்கு ஒரு வாக்குகூட விழுந்துவிடக் கூடாது; அது உன் பேரப் பிள்ளைக்கு நீ கொள்ளி வைக்கிறாய் என்று அர்த்தம்! உன் குடும்பத்திற்கு நீ நெருப்பு வைக்கிறாய் என்று அர்த்தம்.
பெரியார் மய்யம் இடிப்பும் – பிரதமர் வாஜ்பேயி சந்திப்பும்!
டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்படுகிறது; பிரதமர் வாஜ்பேயி அவர்களிடம் சென்று, அண்ணன் வீரமணி திராவிடர் கழகத் தலைவர், செழியன், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆகியோர் உங்களைச் சந்திக்கவேண்டும் என்று சொன்னேன்.
நேரத்தின் நெருக்கடி இருந்தது; கண்டிப்பாக உங்களைப் பார்க்கவேண்டும் என்றேன். பெரியார் மய்யம் இடிக்கப்பட்டுவிட்டது; நெஞ்சம் எரிமலையாகி விட்டது எங்களுக்கு என்றேன்.
மறுநாள் மாலை 4.30 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார். அண்ணன் வீரமணியை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஹவ்வார்யூ மிஸ்டர் வீரமணி? என்றார் பிரதமர் வாஜ்பேயி.
எங்கள் மான உணர்விற்காகவே வாழ்கின்ற கட்சி!
அப்பொழுது நான் சொன்னேன், நாங்கள் ஓட்டுக் கேட்கின்ற கட்சி; அவர்கள் ஓட்டுக் கேட்காமல், எங்கள் மான உணர்விற்காகவே வாழ்கின்ற கட்சி’’ என்றேன்.
வாஜ்பேயி அவர்களே, எங்களை மீண்டும் எந்த இடத்தில் புறப்பட்டோமே, அங்கே போய்த் தள்ளிவிடாதீர்கள் என்றேன். எங்கே புறப்பட்டோம், நாட்டுப் பிரிவினை _ அந்த இடத்திற்குக் கொண்டு போய் எங்களைத் தள்ளிவிடாதீர்கள் என்றேன்.
அமைச்சரை அழைத்தார், இவர்கள் எந்த இடத்தைக் கேட்கிறார்களோ, அந்த இடத்தைக் கொடுங்கள் என்றார்.
அந்த இடத்தைப் பெற்றதோடு மட்டுமல்ல; பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட இடமும் கிடைத்தது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெல்ல வேண்டும்!
வருகிற காலம், ஆபத்தான காலம்; அதை எதிர்ப்பதற்கு வீரமுள்ள இளைஞர்களாக, மான உணர்ச்சியுள்ளவர்களாக, கருஞ்சட்டைப் படையினரே நீங்கள்தான் வரவேண்டும்; இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம். அந்த அணி வெல்லவேண்டும்; வெல்லும். நாடாளுமன்றத் தேர்தலில் வெல்லும்!
அண்ணன் அவர்களே, நீங்கள் ஒன்றும் கவலைப் படவேண்டாம்; நான் எல்லாவற்றையும் கடந்து வந்து விட்டேன். எனக்கென்ன என்று நினைக்கின்ற இடத்தில் நான் இல்லை. இனி இந்த நாட்டிற்கு என்னால் என்ன முடியுமோ அதைச் செய்வேன்.
நாட்டின் சுயமரியாதைதான் முக்கியம்!
என் சுயமரியாதை என்று ஒன்றும் இல்லை. இந்த நாட்டின் சுயமரியாதைதான் முக்கியம். நாங்கள் ஒரு சுயமரியாதையுள்ள, தன்மானமுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். நாட்டிற்காகப் பாடுபட்டு இருக்கிறோம்; இனத்திற்காக, மொழிக்காக, தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்காகப் பாடுபட்டு இருக்கிறோம். முடிவெடுத்து விட்டோம், அண்ணன் கலைஞரிடம், 29 ஆண்டுகள் நிழலாக இருந்த நான், கலைஞரின் கரம் பற்றியபொழுது, தளபதி ஸ்டாலின் அவர்கள், அண்ணன் வைகோ வந்திருக்கிறார் என்றார். அவருடைய காதோரமாகச் சென்று சொல்லுங்கள் என்றார். 29 ஆண்டுகள் உங்களுக்குக் கவசமாக இருந்தேன்; இனி தம்பிக்கும் அப்படி இருப்பேன்’’ என்று நான் சொன்னேன்.
அவர் மூச்சு அடங்குவதற்கு முன்பு, நினைவு நன்றாக இருக்கும்பொழுது, இதைச் சொன்னவுடன், அவருடைய முகம் பிரகாசித்தது; அவர் மனதிற்குள், அடி மனதில், ஆழமான மனதில் எங்கோ ஓர் மூலையில் எனக்கொரு இடம் உண்டு என்று எனக்குத் தெரியும்.
ஆகவே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் நமக்கு ஏன் அது இல்லை; இது இல்லை என்று கவலைப்படாதீர்கள். இந்த மண்ணின் மானம் காக்க _ தமிழனின் உரிமையைக் காக்க _ சுயமரியாதையைக் காக்க _ திராவிட இயக்கத்தைக் காக்க _ இந்த நாளில், திராவிடர் கழக மாநில மாநாட்டு நாளில், சபதம் ஏற்போம்; சூளுரைப்போம் _ இந்தத் தமிழகத்தைக் காப்போம். கடைசியாகப் பேசினாரே பெரியார், உனக்கும் எனக்கும் என்னடா தொடர்பு? ரகளை வேண்டாம் மரியாதையாகப் போய்விடு’’ இந்தக் குரலையும், இந்தக் கொள்கையையும் என் ஆவி அடங்குவதற்குமுன்பு முழங்கி, வாழ்ந்துவிட்டு, உழைத்து விட்டுத்தான் இந்த மண்ணை விட்டுப் போவேன்!’’ என்று உணர்வு பொங்கப் பேசினார்.