சிறுகதை : சுயமரியாதை!

ஏப்ரல் 16-30 2019

ஆறு.கலைச்செல்வன்

சித்ராவிற்கு அவளது இருபத்தைந்தாவது வயதில் அரசுப் பணி கிடைத்தது. பணி ஆணை வந்தவுடன் அவளைவிட அவள் அம்மா மரகதமும் அப்பா குப்புசாமியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பணியில் சேர்ந்த பின் முதல் மாத ஊதியத்தை பெற்றோர்களிடம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினாள் சித்ரா.

சித்ரா பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவள் அம்மாவும் அப்பாவும் அவருக்குத் திருமணம் செய்துவிட முடிவு செய்தனர். அவர்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி மாப்பிள்ளை பார்க்கச் சொன்னார்கள். உடன் திருமணத்தை முடித்து தங்கள் கடமையை நிறைவு செய்ய விரும்பினர்.

ஆனால், சித்ரா அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை. அவள் அம்மா அப்பாவுக்கு அவள் ஒரே பிள்ளை. சொத்து என்று இருப்பது அவர்கள் வசிக்கும் சிறிய வீடு மட்டும்தான். வேறு எதுவும் கிடையாது. சித்ராவை மிகவும் துன்பங்களுக்கிடையே படிக்க வைத்தார்கள். வறுமை காரணமாக அம்மாவும் அப்பாவும் நோயாளிகளாகவே ஆகிவிட்டிருந்தனர்.

சித்ராவிற்கு வேலை கிடைத்தது அவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்தது. ஆனால், திருமணம் வேண்டாம் என்று அவள் சொல்வதை விரும்பவில்லை.

“சித்ரா, உன்னைவிட்டா எங்களுக்கு யாரும்மா இருக்கா? நீ நல்லா இருக்கணும். உன்னை ஒருத்தன்கிட்ட புடிச்சி கொடுத்துட்டா எங்க கடமை முடிஞ்சுடும். நீ கல்யாணம் பண்ணிகிட்டுத்தான் ஆகணும்’’ என்று ஒருநாள் மரகதம் கண்ணிருடன் மகளிடம் கூறினார்.

“அம்மா, என்னைவிட்டா உங்களுக்கு யாருமில்லேன்னு சொன்னீங்க. அப்படி இருக்கும்போது எனக்கு கல்யாணம் ஆயிட்டா உங்களை யார் கவனிக்கிறது? என்னைப் போல் இருக்கிற என்னோட தோழிங்க சில பேருக்கு கல்யாணம் ஆச்சி. ஆனா அவங்களோட அம்மா, அப்பா படாத கஷ்டங்கள் பட்டு இருக்காங்க. ஆண்கள் சமுகம் அவங்களை அவ்வளவு கொடுமைப்படுத்துதாம். உங்களுக்கும் இப்பவே அந்த நிலைமை வரவேணுமா? எனக்காக நீங்க எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கீங்க. அப்பாவை நெனைச்சா எனக்கு அழுகையே வந்திடும்போல. என்னோட சம்பளத்தை உங்களுக்காக செலவு செய்து உங்களுக்கு உதவாம நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட முடியுமா?’’

மகளின் இந்தப் பதிலைக் கேட்ட மரகதம் பதறினாள்.

“சித்ரா, நீ சொல்றது ரொம்ப தப்பு. எங்களைப் பற்றி நீ கவலைப்படக் கூடாது. உன் வாழ்க்கையை நீ அமைச்சிகிட்டே ஆகணும். அப்பாவை நான் கவனிச்சிக்கிறேன். இந்த வீட்டில் சீக்கிரமா நல்ல காரியம் நடந்தே ஆகணும்’’ என்றார்.

அவளது அப்பா குப்புசாமியும் அவளைத் திருமணத்திற்கு மிகவும் வற்புறுத்தினார். ஆனால், சித்ரா தனது சம்பளத்தை அம்மா அப்பாவுக்கு செலவு செய்து அவர்களது உடல் நலனை சீராக்கி மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதிலேயே கவனமாக இருந்தாள். அம்மா அப்பாவின் வேண்டுகோளை அவள் கொஞ்சம்கூட ஏற்கவில்லை.

“அம்மா, உன் சம்பளத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே உனக்குத் திருமணம் செய்ஞ்சி வைக்கலைன்னு ஊர் உலகம் எங்களைப் பழிக்கும்’’ என்றார் அப்பா.

“அப்பா, என் படிப்புக்காகவும், என் நலத்திற்காகவும் நிறைய செலவு செய்ஞ்சிருக்கீங்க. இப்பவும் கடனாளியா இருக்கீங்க. உங்களால நல்ல சாப்பாடுகூட சாப்பிட முடியல. இப்பவும் நோய் நொடியுடன்தான் வாழ்ந்துகிட்டு இருக்கீங்க. இப்ப நான் உங்களை அம்போன்னு விட்டுட்டு போயிட முடியுமா? இனிமே இப்படிப்பட்ட பேச்சை எடுக்காம நல்லா ஓய்வெடுத்துக்கிட்டு இருங்க’’ என்று கண்டிப்புடன் கூறினாள் சித்ரா.

தனது தோழிகள் சிலருக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைத்துப் பார்த்தாள் சித்ரா. ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்கள் பெண்களின் ஊதியத்திற்காகவே திருமணம் செய்து கொண்டு பெண்களின் பெற்றோர்களை பார்க்கக் கூட அனுப்பாத நிலையை அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். பெண்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அவர்கள் கொஞ்சம்கூட மதிப்பதில்லை. எல்லோருமே அப்படித்தான் இருப்பார்களோ என்ற அய்யப்பட்ட அவள் அதற்காகவே தனது பெற்றோர்களின் விருப்பத்திற்கு செவி சாய்க்கவில்லை.

மாதங்கள் சில கடந்தன. சித்ரா தன் பெற்றோர்களை கவனமுடன் கவனித்துக் கொண்டாள். அவர்கள் வாங்கி வைத்திருந்த கடன்களையெல்லாம் சிறுகச் சிறுக அடைத்து வந்தாள். இருந்தாலும் அவளது பெற்றோர்கள் அவளது திருமணத்திலேயே குறியாக இருந்தார்கள். இடையில் அதுபற்றி சித்ராவிடம் கேட்டால் ஏதாவது பேசி ஒரேயடியாக அவர்கள் வாயை அடைத்துவிடுவாள்.

“என் சம்பளத்தை உத்தேசித்துத்தான் எனக்கு நீங்கள் திருமணம் செய்துவைக்கவில்லை என்று யார் வேணும்னாலும் சொல்லிட்டுப் போகட்டும். அதுபற்றி எனக்குக் கவலையில்லை.’’ எப்போதும் இதையே பதிலாகக் கூறினாள்.

இந்நிலையில் ஒரு நாள் குப்புசாமியின் நண்பர் ஒருவர் சித்ராவைப் பெண் பார்க்க அவள் வேலை செய்யும் அலுவலகத்திற்குப் பக்கத்து அலுவலகத்தில் பணியாற்றும் மோகன் என்ற மாப்பிள்ளை குடும்பத்துடன் மறுநாளே வர உள்ளதாக ஒரு தகவலைத் தெரிவித்தார். அது விடுமுறை நாளாகவும் இருந்தது.

இந்த விவரத்தை எப்படி சித்ராவிடம் சொல்வதென மரகதம் தவித்தார். உடனே மறுப்பு சொல்லி விடுவாளே என்ற பயம் அவருக்கு. அதனால் பக்கத்து வீட்டில் இருக்கும் பத்மினி என்ற பெண்ணிடம் சொல்லி சம்மதிக்க வைக்க எண்ணினார். பத்மினியை அழைத்து திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளா விட்டால் சித்ரா செய்யும் எந்த உதவியையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற விவரத்தை சித்ராவிடம் பதமாக எடுத்துக் கூறி சம்மதிக்க வைக்கக் கேட்டுக் கொண்டார். பத்மினியும் அதற்கு இணங்கி சித்ராவைப் பார்க்க வந்தாள்.

“சித்ரா, நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டிற்கு வந்தவள்தான். ஆனாலும் என்னோட நிலைமை வேறு. என் அம்மா, அப்பாவைக் கவனிக்க ரெண்டு அண்ணன்கள் இருக்காங்க. ஆனால், உன் நிலைமை வேறாக இருந்தாலும் நீ கல்யாணம் செய்ஞ்சிக் கிட்டுத்தான் ஆகணும்’’ என்றாள் பத்மினி.

“எனக்கு என் அம்மா, அப்பா நலனே முக்கியம். இப்போ நான் என்ன செய்யணும்னு நெனைக்கிறே அக்கா?’’ என்று கேட்டாள் சித்ரா.

“மாப்பிள்ளை வீட்டாரை வரச்சொல்லி விட்டார் உங்க அப்பா. அதனால் உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் உன்னைப் பெண் பார்க்க வரும்போது நல்லமுறையில் நடந்துக்கணும்.’’

“நல்ல முறையில் என்றால் எப்படி?’’

“மாப்பிள்ளையோடு அவரோடு அம்மா, அப்பா, இன்னும் சிலர் வரலாம். அவர்கள் காலில் விழுந்து கும்பிட வேணும்.’’

“ஏன் அப்படி செய்யணும் அக்கா?’’

“சித்ரா. அதுதான் நடைமுறை. பெண்கள் என்றால் பணிவா நடந்துக்கணும். அப்படிப்பட்ட பெண்ணைத்தான் எல்லோரும் விரும்புவாங்க.’’

“அப்படிப்பட்ட பணிவெல்லாம் தேவையில்லை அக்கா. பெண்களை சமமாக நினைத்து உரிமைகள் கொடுக்கும் காலம் எப்பவோ வந்தாச்சு. எனக்கென்று சில கொள்கைகள் இருக்கு. யார் காலிலும் விழுந்து வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்க நான் விரும்பலை.’’

இதற்குமேல் என்ன பேசுவதென்று பத்மினிக்கு விளங்கவில்லை. எனினும் அவள் ஒப்புக் கொள்ளாவிட்டால் அவளின் பெற்றோர்கள் ஓர் உதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பத்மினி கூறியதால் எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள் சித்ரா.

மறுநாள் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க சித்ராவின் பெற்றோர்கள் ஏற்பாடுகளைச் செய்தனர். பத்மினியும் உடன் இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டாள். சித்ரா எது குறித்தும் கவலை கொள்ளாமல் தெளிவுடன் இருந்தாள். அவளுடைய எண்ணமெல்லாம் அவளது பெற்றோர்களைப் பற்றியே இருந்தது.

காலை பத்து மணிக்கு மோகனும் அவனது பெற்றோர்களும் சித்ராவின் வீட்டிற்கு வந்தனர். சித்ராவின் பெற்றோர்கள் அவர்களை அன்புடன் வரவேற்றனர். அவர்களுக்கு மோகனை மிகவும் பிடித்துவிட்டது. மோகனின் பெற்றோர்களும் கனிவுடன் பேசினர். இருப்பினும் சித்ரா என்ன சொல்லப்போகிறாளோ எனப் பயந்தனர்.

எந்தவிதமான அலங்காரமும் இல்லாத நிலையில் சித்ரா அங்கு வந்தாள். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.

நமது திருமணம் சுயமரியாதைத் திருமணமாகத்தான் இருக்கும். அடிமைச் சின்னமான தாலி அணிவிக்கும் நிகழ்ச்சி இருக்காது. ஆடம்பரச் செலவுகளோ அலங்காரங்களோ இருக்காது. இதற்கெல்லாம் நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பிறகு யாரும் எதிர்பாராவண்ணம் மோகனே அவளிடம் நேரிடையாகப் பேசினான். தனது படிப்பு, பணி செய்யும் விவரம் போன்ற விவரங்களைச் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அவர்கள் பேசிக்கொள்வதைக் கண்ட அவர்களது பெற்றோர்கள் இருவரும் தனியாகப் பேசிக்கொள்வது நல்லது என நினைத்து அவர்களாகவே எழுந்து வேறு இடம் சென்றுவிட்டனர்.

“இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை’’ என்று சொல்லிவிட வாயைத் திறந்த சித்ராவை இடைமறித்த கோபால் அவளை முந்திக்கொண்டு மீண்டும் பேசினான்.

“சித்ரா, உங்களிடம் எனது சில கோரிக்கைகள் உள்ளன. அவற்றை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்’’ என்றான்.

“என்ன கோரிக்கைகள்’’ என்பதுபோல் அவனைப் பார்த்தாள் சித்ரா. எதுவாக இருந்தாலும் அவள்தான் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்த நிலையில் இருக்கிறாளே!

“உங்கள் குடும்பச் சூழ்நிலையை நான் வந்தவுடன் புரிந்துகொண்டேன். உங்கள் அம்மாவும் அப்பாவும் உங்களை நன்கு படிக்க வைத்திருக்கிறார்கள். உங்களை விட்டால் அவர்களைக் கவனிக்க யாருமே இல்லை என்பது தெரிகிறது. அதனால்….!’’ -_ பேச்சை நிறுத்திய மோகனை “என்ன?’’ என்பதுபோல் பார்த்தாள் சித்ரா.

“அதனால்… திருமணத்திற்குப் பிறகு அவர்களும் நம்முடன் வந்து இருக்கலாம். அதில் எனக்கோ என் பெற்றோர்களுக்கோ எந்தவித ஆட்சேபணையும் இல்லை. அவர்களைத் தொடர்ந்து நீங்கள் மட்டுமல்ல நானும் கவனித்துக் கொள்வேன்’’ என்று சொல்லி முடித்தான் மோகன்.

சித்ரா வியப்புடன் அவனைப் பார்த்தாள். அவனே மேலும் தொடர்ந்தான்.

“நாம் என்றும் வாழ்க்கைத் துணைவர்களாகப் பயணம் செய்வோம். நம் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சம பங்கு வகிப்போம். உங்களிடம் நான் என்னென்ன எதிர்பார்க்கிறேனோ அதையெல்லாம் நீங்களும் என்னிடம் எதிர்பார்க்கலாம். ஆணுக்குப் பெண் அடிமையில்லை அல்லவா?’’

சித்ரா மேலும் வியந்தாள்.

“இன்னும் சில செய்திகளையும் சொல்லிவிடுகிறேன். நீங்களும் பணியில் இருக்கிறீர்கள். உங்கள் ஊதியத்தை நீங்கள் விரும்பிய வண்ணம் பயன்படுத்தலாம். அதற்குத் தடை ஏதும் இல்லை. முழுச் சுதந்திரம் உங்களுக்கு உண்டு. இறுதியாக இன்னொரு கோரிக்கை….’’

“என்ன?’’ என்று வாயைத் திறந்து கேட்டாள் சித்ரா.

“நமது திருமணம் சுயமரியாதைத் திருமணமாகத்தான் இருக்கும். அடிமைச் சின்னமான தாலி அணிவிக்கும் நிகழ்ச்சி இருக்காது. ஆடம்பரச் செலவுகளோ அலங்காரங்களோ இருக்காது. இதற்கெல்லாம் நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துகளையும் நீங்கள் தெரிவிக்கலாம்’’ என்று கூறி முடித்தான் மோகன்.

“நீங்க… நீங்க..’’ என்று ஏதோ சொல்ல வந்தாள் சித்ரா.

“ஆமாம். நான் பகுத்தறிவாளன்’’ என்றான் மோகன்.

சித்ராவின் முகம் மலர்ந்தது. அவளது மலர்ந்த முகத்தைக் கண்ட இருவரின் பெற்றோர்களின் முகங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *