அய்யாவின் அடிச்சுவட்டில்…
கி.வீரமணி
26.09.1986 அன்று சென்னை அயன்புரம் ஜாயின்ட் ஆபிஸ் முன்பு தந்தை பெரியார் 108ஆவது பிறந்த நாள் விழா மற்றும் டெல்லியில் நடைபெறவிருக்கும் மண்டல் குழு பரிந்துரை செயல்பாட்டுப் போராட்ட விளக்கம் மற்றும் ரயில்வேயின் பிற்படுத்தப்பட்ட ஊழியர் சங்கம் எட்டாம் ஆண்டு விழாப் பொதுக்கூட்டமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் டில்லியில் நடக்கவுள்ள சமுகநீதிப் போர் வரலாற்றில் பெரும் திருப்பமாக அமையும். ஒடுக்கப்பட்ட தோழர்களும் இளைஞர்களும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்தேன்.
மேலும், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரையும் டில்லியில் கிளர்ச்சி, நாள்தோறும் ஆயிரம் பேர் பங்கேற்பு, மண்டல் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்தவும், நாடு முழுக்க ஒரே சீரான கல்விக்கும், டாக்டர் அம்பேத்கர் பெயரில் பல்கலைக்கழகம் அமையவும், சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும் டில்லியில் தொடர் போராட்டம் என அடுக்கடுக்கான பிரசாரப் பயணத்தைப் பற்றி கூட்டத்தில் தெரிவித்து உரையாற்றினேன்.
தென்னாற்காடு மாவட்டம் திண்டிவனத்தில் 02.10.1986 அன்று இரவு நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
தஞ்சை மாவட்ட திராவிட (ரயில்வே) தொழிலாளர் கழகத் தலைவர் திருவாரூர் தாஸ் அவர்கள் 28.09.1986 அன்று அதிகாலை தஞ்சையில் காலமானர் என்று செய்தி அறிந்து அவரது சிறப்புகள் குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டேன்.
தந்தை பெரியார் அவர்களது சீரிய தொண்டர்களில் ஒருவர். தென்பகுதி ரயில்வேமென் யூனியன் (S.R.M.U) என்று அய்யா அவர்களால் துவக்கப்பட்ட ரயில்வே பகுத்தறிவு தொழிற்சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்று அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
04.10.1986 அன்று ஆத்தூர் தென்னங்குடி பாளையத்தின் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வெங்கடாசலம் அவர்கள் காலமானார். கழக கட்டுப்பாடு, கழகக் கொள்கை என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்த முதுபெரும் கொள்கை முத்து ஆவார்.
தனது 12 வயதிலேயே கழகத்தில் சேர்ந்து 40 ஆண்டு காலமாக கருஞ்சட்டை அணிந்து கிராம மக்களின் முன்னேற்றத்திற்கு அயராது பாடுபட்டவர் என்று இரங்கல் செய்தி வெளியிட்டேன்.
மண்டல் பரிந்துரையை அமுல்படுத்தக்கோரி ஆசிரியர் கி.வீரமணி மற்றும் சந்திரஜித், பிரம்பிராகஷ் ஆகியோர் தலைமையில் டில்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் (8-10-86).
மண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றவும் மலைவாழ் மக்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும், டில்லியில் ஒரு வாரம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டேன். 08.10.1986 அன்று டெல்லி நோக்கி _ கருஞ்சட்டைப் படை இளைஞரணி, மாணவர் அணி மற்றும் கழகத் தோழர்களுடன் புறப்பட்டு சென்றேன். இப்போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 04.10.1986 அன்று கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சாமிதுரை அவர்கள் தலைமையில், அன்றைய தினம் ஏழாவது நாளான போராட்டத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் துரை.சந்திரசேகரன், மாநில மகளிர் அணி செயலாளர் க.பார்வதி, புதுவை மாநிலத் தலைவர் காரை சி.மு.சிவம், மதுரை மாநகர மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் கல்வி வள்ளல் பே.தேவசகாயம், முக்குலத்தோர் சங்கத் தலைவர் தியாகராஜ காடுவெட்டியார் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டார்கள்.
ஒரு வாரப் போராட்டத்தில் 50,000 பேர் பங்கேற்றுக் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைப் போராட்டத்தில் இது ஒரு சரித்திரத் திருப்புமுனையை உருவாக்கியது.
“அய்.நா. உலக சமாதான மாநாட்டில் பங்கேற்ற எனது டென்மார்க், சோவியத் பயணம்’’
1986ஆம் ஆண்டை பன்னாட்டு பொது நிறுவனமான அய்.நா. சமாதான ஆண்டாக (International year of peace) என்று அறிவித்த நிலையில், உலக சமாதானக் காங்கிரஸ் மாநாடு (World Peace Congress) டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகனில் அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து பேராளர்கள் தேர்வு செய்யப்பட்டு சோவியத் யூனியனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தக் குழுவில் நானும் 12ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு 13ஆம் தேதி டெல்லியில் இருந்து இரவு கோபன்ஹேகனுக்கு குழுவினருடன் சென்றோம்.
1932ஆம் ஆண்டிலேயே சோவியத் யூனியனுக்கு சுமார் 3 மாதங்கள் பயணம் செய்து திரும்பி பின்பு நம் நாட்டில் சமதர்மப் புரட்சியை உருவாக்கிய முதல் சமதர்மப் புரட்சியாளராம் நம் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, 54 ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத் யூனியனுக்கு பயணம் மேற்கொண்டேன். டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹெகனில் நடக்கும் உலக அமைதி மாநாட்டில் 3000 பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். இந்தியாவிலிருந்து 200 பேரும், அதில் தமிழ்நாட்டிலிருந்து 23 பேரும் அடங்குவர். மாநாட்டில் பிரதிநிதிகள் பல குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு குழுவிலிருந்தும் 3 பேர் பேசுவற்கு அழைக்கப்பட்டார்கள். அதில் நான் மற்றும் தஞ்சை அ.இராமமூர்த்தி (காமராஜ் காங்கிரஸ்), தஞ்சாவூர் ஏ.வி.பதி ஆகியோர் உரையாற்றினோம். எழுத்தாளர் கவிஞர் பொன்னீலன், நீதிபதி எஸ்.மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
உலக சமாதான மாநாட்டில் கலந்துகொண்டு, “Human Rights and Peace” என்ற தலைப்பில் 16.10.1986 அன்று நடைபெற்ற உரையாடலில் கலந்துகொண்டு கருத்தினை எடுத்துரைத்தேன்.
டென்மார்க் தலைநகரமான கோபன் ஷேகனில் நடந்த உலக அமைதி மாநாட்டு மண்டல முகப்பில் தமிழக மற்றும் புதுவை மாநிலப் பிரதிநிதிகளுடம் ஆசிரியர் கி,வீரமணி பங்கேற்றார்.
எனது உரையில், நமது கண் முன்னால் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனப் படுகொலையை நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இலங்கை அரசாங்கம் குண்டு மாரி பொழிகின்றது. உலகிலேயே சிறைச்சாலைதான் மனித உயிருக்குப் பாதுகாப்பான இடம்.
ஆனால், இலங்கையிலே என்ன நடந்தது. வெளிக்கடை சிறையிலே தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதற்காக உலகம் என்ன நடவடிக்கை எடுக்க முடிந்தது?
கைதிகள் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இலங்கையில் நடைபெற்றுவரும் மனிதாபிமானமற்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டேன். இலங்கைப் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து, தங்களது வெறி உணர்வை வெளிப்படுத்திக் கொண்டனர்.
நான் ஓங்கிய குரலில் என் கருத்தை மேலும் அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்தவுடன் எதிர்ப்பாளர்கள் அடங்கினர்.
பின்பு, தஞ்சை அ.இராமமூர்த்தி, எஸ்.ராமகிருஷ்ணன், ஞானையா_சங்கர நாராயணன் உள்ளிட்டோரும் உரையாற்றினர். பின்பு 21.10.1986 அன்று நானும் தூதுக்குழுவினரும் சோவியத் ரசியாவிற்குப் பயணம் செய்தோம். புதுவை காங்கிரஸ் மகளிர் அணித் தலைவி திருமதி சாய்குமாரி எம்.ஏ., நட்பு கிடைத்தது கண்ணியமானது.
சோவியத் நாட்டின் ‘ஏரோஃபிளாட் தனி விமானம் (Aeroflot) வந்து எங்களை டென்மார்க்கிலிருந்து பகல் ஒரு மணிக்கு மாஸ்கோவிற்கு _ சோவியத் அமைதிக் குழுவின் (Peace Council of Soviet Russia) விருந்தினராக அழைத்துச் சென்றது.
கோபன்ஹேகனுக்கும் மாஸ்கோவிற்கும் 1800 கிலோ மீட்டர் தூரம் பயணத்தின்போது நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் 1932இல் சோவியத்து பூமிக்குச் சென்று 54 ஆண்டுகளுக்குப் பிறகு நான் சென்ற நினைவு சமதர்மத்தில் மேலும் பொலிவும் _ வலிவும் கொண்டு நினைவுகளில் பறந்து மிதந்தேன்.
டென்மார்க்_மாஸ்கோ பயணம் முடித்து 30.10.1986 அன்று நாடு திரும்பினோம். “வென்புறா பறக்கக் கண்டோம்!’’ என்ற தலைப்பில் 03.11.1986 அன்று ‘விடுதலை’யில் டென்மார்க்கில் நடைபெற்ற கருத்தரங்கில் பன்னாட்டு சிக்கலையும் படம் பிடித்துக் காட்டினேன். அதேபோல், 04.11.1986 அன்று “எல்லார்க்கும் எல்லாமும் என்ற சமதர்ம பூமியில்…’’ என்ற தலைப்பில் சோவியத்து யூனியனில் கண்ட காட்சியை தொகுத்து தெளிவாக எழுதியிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.
கழகத்தின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு பாரம்பரியத்தையும், அதற்குப் போராடும் பக்குவத்தையும் தந்தை பெரியார் தமிழகத்தில் வளர்த்த பாங்கினையும் பாராட்டி அய்தராபாத்திலிருந்து வெளிவரும் “தி ரஷ்னுமா-கி டெக்கான்’’ என்ற பிரபல உருதுமொழி வார ஏடு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
என்னுடைய புகைப்படத்தோடு, ‘இந்தித் திணிப்பு சமஸ்கிருத மொழித் திணிப்பே’’ என்ற தலைப்பில் அந்த ஏடு வெளியிட்ட கட்டுரையை இங்கு அப்படியே தருகிறேன். “தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் நடத்திவரும் இந்தி எதிர்ப்புப் போருக்கு அய்ம்பது ஆண்டுகால வரலாறு உண்டு. வட ஆரியரின் அரசியல், சமுதாயப் பண்பாட்டு ஆதிக்கத் திணிப்பின் கருவியே இந்தி என்ற சரியான தத்துவக் கண்ணோட்டத்தோடு இந்தி எதிர்ப்பில் திராவிடர் கழகம் தன் பங்கினை ஆற்றி வருகிறது.
எந்த வடிவத்தில், எப்பக்கமிருந்து வரினும் இந்தியை எதிர்ப்பதே தமிழன் கடமை; அப்படி எதிர்க்காமல் இருந்துவிட்டால் தமிழன், தான் வாழும் நாட்டிலேயே இரண்டாந்தரக் குடிமகனாய் ஆக்கப்பட்டு விடுவான், என்பதெல்லாம் இந்நாட்டினர்க்கு சரிவர உணர்த்தி வந்துள்ளது திராவிடர் இயக்கம்.
இந்தியாவின் பொதுமொழியாக ஒரே ஆட்சி மொழியாக இந்தி ஆக்கப்பட்டு விடுமேயானால், அந்தச் சுமையில் அழுந்தி தமிழினம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு வடவரின் கொத்தடிமையாகிவிடும். அப்படித்தான், வடநாட்டிலே, தனக்கென இலக்கிய வளங்களையும் தானே தனித்தியங்கும் ஆற்றலையும் கொண்டதுமான உருதுமொழியினைத் தேச விரோத மொழி என்றும், பாகிஸ்தான் ஆதரவு மொழியென்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்த இந்து மத வெறியர்கள் _ அதில் கடந்த நாற்பதாண்டுகளில் மெல்ல மெல்ல வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.
உருதுவில் பேசினாலே ஏதோ தேச விரோத சக்தி சதி செய்கிறது என்பது போன்ற மாயையை ஏற்படுத்தி வருகிறார்கள் அக்கொடியவர்கள்.
இந்தித் திணிப்பு எதிர்ப்புக்கான பக்குவத்தை தமிழகத்தில் வளர்த்தவர் தந்தை பெரியார் என்று பிரபல உருது வார இதழான தி ரஷ்னுமா-கி டெக்கான் பத்திரிக்கையில் கழக பணிகளுக்கு பாராட்டியது.
உண்மையில் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் உருதுதான் வடநாட்டைத் தட்டியெழுப்பியது. பஞ்சாபில் இந்தியே சீக்கியர்களுக்கும், இந்துக்களுக்குமிடையே விரோத உணர்ச்சியைத் தூண்டி, அடங்காத வெறுப்பினை வளர்த்துவிட்டது.
இந்தியே தென்னகத்திலும் நுழைந்து, வடக்கு, தெற்கு பிரச்சினைகளை நிரந்தரமாக உருவாக்கிவிட்டது.
எனவே, இந்தியாவில் மேல்ஜாதி இந்துக்களின் மதவெறியே இந்த இந்தித் திணிப்பின் திட்டமிட்ட நுழைவுக்கு அடிப்படை என்பதிலும், உண்மையில், இந்தியாவில் செத்துப்போன சமஸ்கிருதத்தை மீண்டும் உயிர்ப்பித்து- _ இந்த நாட்டை சனாதன தர்மத்திற்கு அடிமைப்படுத்துவதே இதன் நோக்கம் என்பதிலும் எள்ளளவும் சந்தேகமில்லை. இதுவெல்லாம் தந்தை பெரியாருக்குத் தெரியாததல்ல. எல்லாம் அறிந்த அவர், இந்த நாட்டு தமிழரை ஒரு நீண்ட போருக்கு ஆயத்தப்படுத்திவிட்டுதான் மறைந்தார். இந்த நாட்டில் சமுக நீதியைக் கொண்டுவர வேண்டுமானால் சமஸ்கிருதம் (ஆரிய) கலாச்சாரங்களை வேரோடு கிள்ளியெறிய வேண்டும். இந்த நாட்டில் எவ்வளவு படித்த அதிமேதாவியாக இருந்தாலும் அவர் சமஸ்கிருத பண்டிதர் என்றால், அவர் சமஸ்கிருதப் பற்றுக் கொண்டவராகவும், குலம் _ கோத்திரம் பேசும் ஆசார சீலராகவுமே, இருப்பார் என்பதை யாரும் சொல்லிவிடலாம்.
இந்தியாவின் அரசியல் ஒற்றுமை நீடிக்க வேண்டுமானால், அதற்கு ஆங்கிலம் ஒன்றே வழி. மாறாக, எந்தப் பாரம்பரியமும், பண்பாட்டு வழக்கும், இலக்கியப் படைப்பும் இல்லாத இந்தி, ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் இந்திய ஒற்றுமை கேள்விக்குரியதாகிவிடும்’’ என்று உருது வார ஏடு குறிப்பிட்டிருந்தது.
தன்மானக் கவிஞர் கருணானந்தம் அவர்களுடைய கவிதை திறனாய்வு நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி 04.11.1986 அன்று மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவணர் மத்திய நூலகக் கட்டிடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.
08.11.1986 அன்று கோவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிவிட்டு சிதம்பரத்துக்குப் புறப்பட்டபோது, எனக்கு மயக்கமும், லேசான நெஞ்சு வலியும் இருந்தது. முதல் இதயவலி (Heart Attack) ஏற்பட்டது. உடனடியாக கே.ஜி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். டாக்டர் பக்தவச்சலம் தலைமையில் டாக்டர்கள் ராஜசுந்தர கிரி, அன்பு, பெரியசாமி ஆகியோர் கொண்ட குழு எனக்கு சிகிச்சை அளித்தனர்.
அடுத்த நாள் காலை 09.11.1986 அன்று தி.மு.க. தலைவர் கலைஞர், பேராசிரியர், நாஞ்சிலார், நெடுமாறன், மதுரை ஆதீனம், வை.கோபால்சாமி எம்.பி. (மதிமுக பொதுச்செயலாளர் வைகோ), விருதுநகர் பெ.சீனிவாசன், ‘தினகரன்’ கே.பி.கந்தசாமி, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, மற்றும் கழகத் தோழர்கள் என்னை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். மருத்துவர்கள் எனக்கு ஓய்வு தேவை எனக் கூறினர்.
கோவை கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியர் கி.வீரமணியை பரிவுடன் நலம் விசாரித்த கலைஞர் (கலைஞருக்கும் ஆற்காடு வீரசாமிக்கும் இடையே பேராசிரியர் க.அன்பழகன்) மற்றும் கழக இளைஞரணி மாநில செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன், மக்களவை முன்னாள் உறுப்பினர் மோகன், நாஞ்சிலார், கோவை மாவாட்டக் கழக தலைவர் வசந்தம் கு.ராமச்சந்திரனார்.
13.11.1986 அன்று மீண்டும் உடல்நலமின்றி சென்னையிலுள்ள பி.எஸ்.எஸ். மருத்துவமனையில் தங்கி ஓய்வு பெற்று வந்தேன், இந்த நேரத்தில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழகம் வந்திருந்த நிலையில் எம்.ஜி,ஆர் அரசு அவரிடமிருந்து தகவல் தொடர்பு கருவிகளையும், தற்காப்பு கருவிகளையும் பறிமுதல் செய்ததுடன், காவல் துறை கண்காணிப்புக்கு உட்படுத்தியது. இதனைக் கண்டித்து பிரபாகரன் உண்ணாவிரதமிருந்தார். நான் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் உச்சநீதின்ற தலைமை நீதிபதிக்கு ஈழ போராளிகள் மீதான ஒடுக்குமுறை குறித்து தந்தி அனுப்பினேன். ஈழப் போராளிகளுக்கு மத்திய _ மாநில அரசுகள் இழைத்த துரோகத்தைத் தடுத்து நிறுத்த _ தமிழர்கள் கிளர்ந்து எழுந்து போராட வேண்டும் என்று அறிக்கையின் மூலம் கேட்டுக் கொண்டேன். மருத்துவமனையிலிருந்து நேராக ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் தம்பி பிரபாகரனை சென்று சந்தித்து, பிற்பகல் 4.30 மணியளவில் எலுமிச்சை பழரசம் அளித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன்.
முன்பாக, தம்பி பிரபாகரன், டாக்டர் பாலசிங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் அனைவரும் அன்புடன் வரவேற்றார்கள். சற்று நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் தொடர்பு கருவிகளை திருப்பித் தர அரசு சம்மதித்துவிட்டது என்ற தகவலும் வந்து சேர்ந்தது. அந்தக் கருவிகள் வந்து சேர்ந்து போலிஸ் காவலும் விலக்கப்பட்டது. பிறகு தன்னுடைய போராட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தார்.
பிரபாகரன் அவர்களின் உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து பழச்சாறு வழங்கும் காட்சி.
“தமிழ்நாடே உங்கள் பின்னால் நிற்கிறது; உங்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு உணர்ச்சிபெற்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம். உண்ணாவிரதப் போராட்ட முறைகளை நீங்கள் கைக்கொள்ளக் கூடாது’’ என்று தம்பி பிரபாகரன் கரங்களைப் பிடித்து நான் கூறிய காட்சி கூடியிருந்தோர் உள்ளத்தை நெகிழ வைத்தது.
மாலை 4 மணி அளவில் சட்டக்கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உணர்ச்சி முழக்கங்களை எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக தம்பி பிரபாகரன் இல்லத்திற்கு வந்தனர். உங்களுக்காக உயிர்விட நாங்கள் இருக்கிறோம் என்ற உணர்ச்சி முழக்கங்களை எழுப்பினார்கள்.
தம்பி பிரபாகரன் உரையாற்றும்போது, “எந்த அரசுகள் எங்களைக் கைவிட்டாலும் எங்கள் உடன்பிறவா சகோதரர்களான தமிழ்நாட்டின் மக்கள் எங்களைக் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’’. சந்திக்க வந்த இளைஞர்களிடம் பிரபாகரன் பெருமிதத்துடன் கூறினார். பிரபாகரன் உண்ணாவிரதத்தை முடித்துவைத்து, தம்பிக்கு அன்று 32ஆவது பிறந்த நாள் தமிழினத்தின் சார்பில் நமது புரட்சி வாழ்த்துகளைக் கூறினேன்.
(நினைவுகள் நீளும்..)