மருத்துவம் : நலம் காக்கும் நார்ச்சத்து

ஏப்ரல் 16-30 2019

 

உடல் எடை குறையும்!

நார்ச்சத்துள்ள உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறைவதுடன், உடல் பருமனும் கட்டுக்குள் வரும். இவற்றில் குறைந்த அளவு கலோரிகளே இருக்கின்றன. இவை நம் வயிற்றை நிரப்புவதுடன், அடிக்கடி பசியெடுக்கும் உணர்வையும் தடுக்கும். எனவே, உடல் பருமன் எடை எளிதில் அதிகரிக்காது.

ரத்த அழுத்தம் சீராகும்!

நார்ச்சத்து, உடலிலுள்ள ஹெச்டிஎல் (High-Density Lipoprotein-HDL) எனும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்;  எல்டிஎல்   (Low-Density Lipoprotein -LDL) எனும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதனால், ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்பின் அளவு குறைந்து,  ரத்த ஓட்டம் அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும். உணவிலுள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு ரத்த நாளங்களால் அதிக அளவில் உறிஞ்சப்படுவதை நார்ச்சத்து தடுத்துவிடும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதுடன், ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் குறைக்கும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து உணவுகளில் கரையும் நார்ச்சத்து, கரையா நார்ச்சத்து  என இரண்டு வகைகள் உள்ளன.  பீன்ஸ், ஓட்ஸ், அவரை வகைகள் மற்றும் பார்லி போன்ற உணவுப் பொருள்களில் கரையும் நார்ச்சத்து அதிகம் காணப்படும். இவை சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்; இதயத்தைக் காக்கும்.

செரிமான மண்டலம் சீராகும்

குடல் பாதையிலுள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் நீருக்கு முக்கியப் பங்கு உண்டு. போதிய அளவு நார்ச்சத்து உணவை உட்கொள்வதால், உடலுக்குத் தேவையான அளவு நீர்ச்சத்தைப் பெறலாம். இது, உடலுக்குத் தேவையில்லாத நச்சுகளைக் குடல் பாதை வழியாக வெளியேற்றவும், செரிமான மண்டலத்தில் நச்சுகள் தங்கியிருக்கும் கால அளவைக் குறைக்கவும் உதவும். இதனால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும். அதோடு, நார்ச்சத்து உணவிலுள்ள நல்ல சத்துகள் உட்கிரகிக்கப்பட்டு, ரத்தத்தின் வழியாக உள் உறுப்புகளுக்கு அனுப்பப்படும்.

மலச்சிக்கல் விலகும்

நார்ச்சத்து உடலுக்குப் போதுமான அளவு கிடைக்காதபோதுதான், மலச்சிக்கல் ஏற்படும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால்,  மலம் இளகி, குடலில் தங்காமல் அவ்வப்போது எளிதாக வெளியேறிவிடும்; வயிற்றிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிக்கும்; உணவு மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்திறன் அதிகரிக்கும்; உணவு மண்டலத்திலுள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, குடல் சார்ந்த பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

புற்றுநோயைத் தடுக்கும்

நார்ச்சத்து உணவுகளில் புற்றுநோயைத் தடுக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வேதிப் பொருள்கள் இருக்கின்றன. இவை, புற்று நோயைத் தடுக்க உதவும். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டால் பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.

காய்கறி, கீரைகள், பழங்களில் நார்ச்சத்துகள் நிறைவாக உள்ளன. ஜூஸில் நார்ச்சத்து கிடையாது. எனவே, பழங்களை அப்படியே கடித்துச் சாப்பிடுவது நல்லது. சாண்ட்விச், பீட்சா என எதுவானாலும் குறைந்த அளவிலாவது காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *