சென்ற இதழ் தொடர்ச்சி…
ஆளுமையின் அடையாளம்
அன்னை மணியம்மையார்!
நூல் : கருஞ்சட்டைப் பெண்கள்
ஆசிரியர் : ஓவியா
வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை-87.
விலை: 130. பக்கங்கள்: 176
அப்போது வீதியில் செல்கின்ற ஒருவரை வெள்ளைச்சாமி என்கின்ற காவலர் தடி கொண்டு தாக்கினார். இதைக் கண்ட அம்மையார் வேதனையுற்று, ‘ரோட்டுல சும்மா போறவரை ஏனப்பா அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டார். காட்டு தர்பார் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் மாண்புகள் இருக்குமா? மரியாதை இருக்குமா? துணை ஆணையர் தேவாரம் தலைமையில் வந்த காவல்துறையினர் கழகத் தலைவர் அம்மாவை இழிசொற்களால் ஏசினர்.
ஆசிரியர் அவர்களைக் கைது செய்தார்கள். அம்மா உட்பட அனைவரும் சிறை வைக்கப்பட்டனர். சென்னை மத்திய சிறையில்இருந்தபோதுதான் அன்னை மணியம்மையாரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதே காலகட்டத்தில்தான் ஆசிரியர் சிறையில் இருக்கும்போதே அவருடைய தந்தையார் மரணமடைந்தார். இத்தனை இடர்பாடுகளையும், இவ்வளவு கைதுகளையும் மீறி இந்திரா காந்தி அம்மையாருக்கு இயக்கம் கறுப்புக் கொடி காட்டித் தனது எதிர்ப்பை வரலாற்றில் பதிவு செய்தது.
கருத்துரிமை பறிக்கப்பட்ட காலம் அது. பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. பார்ப்பனர்களை ‘பார்ப்பனர்கள்’ என்ற எழுதக் கூடாது. ‘பண்டிதர்’ என்று எழுத வேண்டும் என்றும், ‘சங்கராச்சாரி’ என்பதை ‘சங்கராச்சாரியார்’ என்று எழுத வேண்டும் என்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தந்தை பெரியார் என்று எழுதக் கூடாது என்றும் சொன்னார்கள். நெருக்கடி காலத்தில் பத்திரிகை நடத்தியது மிகப் பெரிய விசயம். ‘மின்சாரம்’ என்னும் பெயரில் கவிஞர் எழுதிய கட்டுரைகளைப் படிக்க அப்போது ஆவலாகக் காத்திருப்போம். எனது பள்ளிக் காலத்தில் அதைக் கார்பன் காப்பி எடுத்து, பேருந்துகளில் அதை விட்டுவிட்டு வருவோம். அதை யாராவது எடுத்துப் படித்துப் பார்ப்பார்கள் என்பதற்காக அப்படிப் செய்தோம். திராவிடர் கழகக் குடும்பத்தின் சிறு பிள்ளைகளுக்குக் கூட இருந்த இயக்க உணர்வு அது.
நெருக்கடிக் காலத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் பலரும் சிறைப் பிடிக்கப்பட்டார்கள். பிரிட்டிஷாருடைய சிறைக் கொடுமைகளை மிஞ்சும் விதமாகத் திராவிட இயக்கத் தோழர்களும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களும் சிறைக் கொட்டடிகளில் தாக்கப்பட்டார்கள். ஆசிரியர் அய்யா அவர்கள் எல்லாம் அந்தக் கொடுமையை அனுபவித்தவர்கள். எனது தந்தை திரு.தமிழரசன் உட்பட பலரும் காவல் நிலையங்களில் அடித்துத் துன்புறுத்தப் பட்டார்கள். எனது சிற்றன்னையாரும் அன்றைய திராவிடர் கழகப் பேச்சாளருமான கண்மணி அவர்கள் காவல்துறையினருக்குப் பயந்து ஓர் இஸ்லாமியப் பெண் போல் பர்தா அணிந்து உதகையில் இருந்து தப்பித்து மதுரை வந்து சேர்ந்தார்கள்.
அவ்வளவு நெருக்கடியான காலகட்டத்தில் ஆளுநரைப் பார்த்து மணியம்மையார் கேட்டார். ‘எதற்காக எங்கள் இயக்கத்தவரைக் கைது செய்கிறீர்கள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?’ ஆளுநர் சொல்கிறார், ‘நீங்கள் தி.மு.க.வை ஆதரிப்பதுதான் தவறு. தி.மு.க.வை ஆதரிக்க மாட்டோம் என்று நீங்கள் சொன்னால் நாங்கள் உங்கள் தோழர்களை விட்டு விடுகிறோம்’ என்றார். ‘அப்படிச் சொல்ல முடியாது’ என்று தீர்மானமாகச் சொன்னார் அன்னை மணியம்மையார். அரசின் அடக்கு முறைக்கும், நியாயமற்ற கோரிக்கைகளுக்கும் இடம் தராதவர் அவர். வரலாற்றில் இது எவ்வளவு முக்கியமான பக்கம் என்பதைச் சிந்தியுங்கள். எந்த இயக்கம் தன் மீதான அவதூறில் தொடங்கப்பட்டதோ, அந்த இயக்கத்துக்கான ஆதரவைத் தர வேண்டிய வரலாற்றுத் தேவையை அந்தத் தியாகப் பெண்மணி பற்றற்ற உறுதியுள்ளத்துடன் நல்கினார்.
ஆளுங்கட்சியின் நிழலில் இல்லாமல், பெரும்பாலான காலகட்டம் எதிர்க் கட்சியாக செயல்படும் காலகட்டமாகத்தான் திராவிடர் கழகம் அன்னை மணியம்மையாரின் தலைமையில் இருந்தது. அப்படிப்பட்டக் காலகட்டத்தில் இயக்கத்தை வழிநடத்திய மாபெரும் தலைவராக அன்னை மணியம்மையார் இருந்தார்.
அதன் பின்னர் நெருக்கடி நிலையில் தி.மு.க.வின் ஆட்சி கலைக்கப்படுகிறது. நெருக்கடி நிலை காலகட்டத்திலேயே மணியம்மையார் எழுதிய தலையங்கங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை. இந்திரா அரசை நோக்கி அவர் எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை.
‘ஆகப்பெரும் அதிகாரத்தைக் கைக்கொண்டு அனைவரையும் கைது செய்து வரும் இந்திராவே, நீங்கள் சோசலிசம் எல்லாம் பேசுகிறீர்களே, உங்கள் நெருக்கடி நிலை அளப்பரிய அதிகாரத்தைக் கொண்டு தனியுடைமையைத் தடை செய்யுங்கள் பார்க்கலாம். நீங்கள் பேசும் சோசலிசத்தைக் கொண்டு வாருங்கள். நீங்கள் தனியுடைமையைத் தடை செய்யும் சட்டம் கொண்டுவந்தால், நெருக்கடி நிலையையே நாங்கள் ஆதரிக்கிறோம்’ என்று பொதுவுடைமைக் கொள்கைக்காகப் போர்ப்பரணி எழுப்பினார் மணியம்மையார். தீரத்தோடு கூடிய மதிநுட்பம் மிகுந்த இந்தக் கருத்துகளை அவர் முன்வைத்தார்.
அதற்கடுத்த எம்.-ஜி.ஆர் ஆட்சியில் அரசு ஊழியர் போராட்டம் மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. இலட்சக்கணக்கான ஊழியர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அப்போது எம்.ஜி.ஆர்., ‘நான் பொதுமக்களை அழைந்து வந்து வீதியில் உங்களைச் சந்திப்பேன்’ என்று சொன்னார். அதற்கு மணியம்மையார் கேட்டார்கள். ‘ஒரு முதலமைச்சர் பேசும் பேச்சா இது? வீதியில் இருப்பவர்களின் பிரச்சினையை தீர்க்க வழி சொல்லாமல், நீங்கள் பொதுமக்களை வீதிக்கு அழைத்து வருவதாகச் சொல்வது என்ன நியாயம்?’ என்று கேட்டார்கள்.
ஆளுங்கட்சியின் நிழலில் இல்லாமல், பெரும்பாலான காலகட்டம் எதிர்க் கட்சியாக செயல்படும் காலகட்டமாகத்தான் திராவிடர் கழகம் அன்னை மணியம்மையாரின் தலைமையில் இருந்தது. அப்படிப்பட்டக் காலகட்டத்தில் இயக்கத்தை வழிநடத்திய மாபெரும் தலைவராக அன்னை மணியம்மையார் இருந்தார்.
ஆட்சிக்கு எதிர்நிலை எடுத்த செயல்பாடுகள், மத்திய அரசை எதிர்த்து அதைக் கலங்கடித்த விதம் என அன்னை மணியம்மையார் தலைமையிலான திராவிடர் கழகம் முழுக்க முழுக்க கிளர்ச்சி இயக்கமாக, போராட்ட இயக்கமாக இருந்தது. திராவிடர் கழகத்தின் மிக முக்கியமான காலகட்டங்களாக 1930கள், 1950கள் இருப்பதுபோல, போர்ப் பரணி கொட்டிய மணியம்மையார் தலைமை வகித்த மிகக் குறுகிய காலகட்டமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது உடல்நலன் குன்றியபோது, ஆசிரியர் அவர்களை பொறுப்பெடுக்கச் சொல்லிக் கேட்டார்கள். அதை ஆசிரியர் மறுத்துவிட்டார்.
அண்மைக் காலத்தில் சுயமரியாதை இயக்கப் பெண்கள் பற்றிய வரலாற்றைப் பதிவு செய்த சில பிற இயக்கத்தவர் கூட நாகம்மையாரைப் பற்றியும் மணியம்மையாரைப் பற்றியும் ஒரு புறக்கணிப்பையே கடைப்பிடித்திருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே திராவிடர் கழகம் என்னும் மகத்தான இயக்கத்திற்குத் தலைமை தாங்கியவர் அன்னை மணியம்மையார். இந்த அளப்பரிய சாதனை கண்டுகொள்ளப்படாதது ஏன்? அவரின் மறைவுச் செய்தியை ‘ஹிந்து’ பத்திரிகை, செய்தியாகக் கூட வெளியிடாமல், காலமானவர்கள் பட்டியலில் வெளியிட்டது. அவர் ‘இராவண லீலா’ கொண்டாட்டத்தை முன்னெடுக்காமல் இருந்திருந்தால் ‘ஹிந்து’ இவ்வாறு செய்திருக்குமா? வரலாற்றின் பக்கங்களில் இந்தக் கேள்வி பதிந்து நிற்கிறது.
சிறந்த நிர்வாகி:
பெண்கள் தலைமைக்குத் தகுதியானவர்களா என்கின்ற கேள்வி வருகிறபோதெல்லாம், பெண்கள் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள், நிர்வாகத் திறமையற்றவர்கள் என்கின்ற கருத்து முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால், அம்மையார் அவர்கள் ஒரு பக்கம் போர்க்குணமிக்க தலைவராக இருந்த அதே நேரத்தில், மற்றொரு பக்கம் பல நிறுவனங்களை உருவாக்கிக் சொத்துகளை நிர்வகிக்கக் கூடிய தனித்திறன் பெற்றவராக இருந்திருக்கிறார் என்பது வியப்புக்குரிய விசயமாகும். பெரியார் திடலில் இன்று காணப்படும் ‘விடுதலை’ பத்திரிகை இயங்கும் ஏழு அடுக்குக் கட்டடம், நடிகவேள் இராதா மன்றம், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம் இவை அனைத்தும், இன்னும் இன்று நடந்துவரும் கல்வி நிறுவனங்கள் பலவற்றுக்கும் தோற்றுவாயை ஏற்படுத்தியது அன்னை மணியம்மையார் அவர்கள்தான். அவருடைய தன்னலம் கருதா தூய தொண்டிற்குச் சாட்சியாக, தமிழ்ச் சமுகத்தின் பல தலைமுறைகள் இன்னும் பலன்பெற நிற்கின்றன இந்த நிறுவனங்கள்.
தனது திருமண ஏற்பாட்டின் நோக்கத்தை நிறைவு செய்யும் பொருட்டு அம்மா அவர்களை அய்யா அவர்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுட் செயலாளராக நியமித்தார். அவருடைய எண்ணமும் மதிப்பீடும் எவ்வளவு சரியானது என்பதை வாழ்ந்து மெய்ப்பித்தார் அம்மா. பெரியாருடைய சொத்தைத் தொடர்புபடுத்தி அம்மையார் அவமதிக்கப்பட்டது மிக அதிகம். ஆனால், தனக்கென கொடுத்தச் சொத்துகளையும் காப்பாற்றி அவருடைய சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கே எழுதிக் கொடுத்தார் அம்மா. கடைசியாகத் சிந்தாதிரிப்பேட்டை மீரான் சாயுபு தெருவில் தனக்கு இருந்த வீட்டையும் அன்னை மணியம்மையார் அறக்கட்டளை என ஏற்படுத்தி அதற்கு எழுதி வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட உதாரணத்தை இந்த உலகத்தின் எத்தனை இயக்கங்களில் நாம் பார்க்க முடியும்? அது தலைவர்களாக இருக்கட்டும், அந்தத் தலைவர்கள் ஏற்றுக்கொண்ட வாழ்க்கைத் துணைவர்களாக இருக்கட்டும், அவர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய அனைத்தையும், தங்களுக்குத் தனிச் சொந்தம் என்ற எதுவுமே வைத்துக் கொள்ளாமல், அந்தப் பொதுவான சொத்துக்கு, அந்த இயக்கத்திற்கு, கொள்கைக்காக எல்லாவற்றையும் தந்திருக்கிறார்கள். ஆக, தியாகம் என்று சொன்னால் அதை இவர்களுடைய வாழ்க்கையில் இருந்துதான் ஒருவர் மொழிபெயர்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.
1978இல் மருத்துவமனையில் இருந்தபோது அம்மா அவர்களிடம் இருந்து இந்த அறக்கட்டளைப் பொறுப்பு இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அம்மாவால் ஒப்படைக்கப்பட்டது.
பெரியாரும் நாகம்மையாரும் இயக்கத் தொண்டர்களுக்கான ஜாதி மறுப்பு, தாலி மறுப்புத் திருமணங்களை அவர்கள் பெற்றோர்களின் நிலையில் இருந்து தாங்களே அழைப்பிதழ் அடித்துச் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வந்தார்கள். சுயமரியாதைத் திருமணங்கள் இவ்வாறு இயக்க வடிவம் பெற்றன. இதனுடைய தொடர்ச்சியாகப் பெரியாரும் மணியம்மையாரும் இணைந்து அழைப்புக் கொடுத்து நடத்தி வைத்த சுயமரியாதைத் திருமணம்தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய திருமணம். பெரியாருடைய பெரும்பணிக்குத் தன்னை ஏற்கெனவே ஒப்படைத்திருந்த ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அய்யா அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்ற வாழ்க்கை ஒப்பந்தத்தை அவ்விதமே ஏற்றுக்கொள்ள சம்மதமாயிருந்தார். அங்ஙனம் அய்யா அவர்களாலும், அம்மா அவர்களாலும் அவருக்குப் பார்க்கப்பட்ட இணையர்தான் மோகனா அம்மையார். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சுயமரியாதை இயக்கக் குடும்பப் பெண்ணாகிய இவர், பெரியார் வழியில் எளிமையான வாழ்க்கையை ஏற்று ஆசிரியர் அவர்கள் எந்த இடையூறுமின்றி அவருக்கு அய்யா அவர்களும், அம்மா அவர்களும் இட்ட பணிகளைச் செவ்வனே நிறைவேற்றிடத் தன்னை ஒப்படைத்து வாழ்ந்து வருகிறார்.
அன்னை மணியம்மையாரின் மறைவுக்குப் பிறகு அவரது வழியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழிநடத்தி வருகிறார். அய்யா அவர்களின் பெண் விடுதலைக் கொள்கைகளைத் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறது இயக்கம். பெண்களின் கல்விக்காக நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் (மறைவு), திருமகள் இறையன் (மறைவு) (தலைவர் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்), வெள்ளக்கோயில் ரங்கநாயகி அம்மாள், தங்கமணி குணசீலன், பார்வதி கணேசன், மீரா ஜெகதீசன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாக இருக்கிறார்கள். வழக்குரைஞரும் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளருமான அ.அருள்மொழி இன்றைய முக்கியப் பெண் ஆளுமையாகத் தமிழ்நாட்டில் இருப்பதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கெதிராக செயற்பட்டு வரும் போராளியாகவும் திகழ்ந்து வருகிறார்.
மேலும், இயக்கத்துக்கு வெளியேயும் இன்று தோன்றுகின்ற எந்தப் பெண்ணுரிமை இயக்கமாக இருந்தாலும் சரி, பெண்ணுரிமையாளராக இருந்தாலும் சரி, அல்லது பெண்ணியவாதியாக இருந்தாலும் சரி, பெரியாரின் பெயரைச் சொல்லாமல் பெண்ணுரிமை அத்தியாயத்தைத் தொடங்கவே முடியாது என்று உறுதியாயிருக்கிறது. பேராசிரியர் சரசுவதி அவர்கள் இன்றைய தினம் பெண்கள் இயக்க முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இந்திய அளவில் செயற்பட்டு வருகிறார். இடதுசாரி இயக்கப் பெண்கள் மேடைகளிலும் தன்னார்வத் தொண்டு நிறுவன இயக்கங்களிலும் பெரியாரின் பெயரை எடுத்துச் சென்ற பெண்ணியலாளராக இருந்து வருகிறார். இவருடைய தொடக்கக் காலப் பொதுவாழ்க்கை திராவிடர் கழகத்தில்தான் தொடங்கியது. ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய அன்பையும் மதிப்பையும் பெற்ற, மாற்றுச் சிந்தனைகளையும் உள்வாங்கிய பெண்மணியாகத் திகழ்கிறார்.
அன்னை மணியம்மையார் காலகட்டத்துக்குப் பின்னால் இந்த நூல் பயணிக்கவில்லை. எனவே, மேற்குறிப்பிட்டிருக்கும் ஆளுமைகளைப் பற்றி இந்த நூல் விவரிக்கவில்லை. இந்த நூலின் இரண்டாம் பதிப்பிலோ அல்லது தனித் தொகுதியாகவோ அவர்களைப் பற்றிய விரிவான பதிவினைச் செய்ய வேண்டும்.
திராவிட இயக்கப் பெண்களை முதலில் பெண்ணியவாதிகளிடம் அறிமுகப்படுத்த வேண்டும். வீரஞ்செறிந்த போராட்டத்தை முன்னெடுத்த நமது திராவிட இயக்கப் பெண்களின் பெயர்கள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டும். அந்தப் பெயர்கள்தான் நமது எதிர்கால விடுதலையையும் வரலாற்றில் எழுதும்.
Leave a Reply