விண்வெளியில் பெண்கள் பயணம் மேற்கொள்ளத் தொடங்கி விட்டாலும் கரையைத் தாண்டி கடலுக்குள்
செல்லப் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சில பெண்களுக்கே அப்படியான மனத்தடை இருக்கிறது. உலக அளவில் இதுபோன்ற பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகள் நிலவிவரும் சூழலில் சற்றும் மனம் தளராதவர் தன் முயற்சியால் சாதித்திருக்கிறார் ரேஷ்மா நிலோஃபர் நாகா.
சென்னையில் பிறந்து வளர்ந்த ரேஷ்மா நிலோஃபார் நாகா, தற்போது கொல்கத்தாவில் உள்ள துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் கப்பலோட்டியாகப் (Marine Pilot) பணியாற்றி வருகிறார். மருத்துவம், பொறியியல் தவிர்த்து வேறு ஏதாவது வித்தியாசமான படிப்பைத் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதை இளம் வயதிலேயே திட்டமிட்டார். அப்போது நாளிதழ் ஒன்றில் உலகின் மிகப் பெரிய சரக்குப் பெட்டகக் கப்பல் நிறுவனமான ‘ஏபி மாலர் மெர்ஸ்க்’ சார்பில் நிதியுதவி, வேலைவாய்ப்புடன் கூடிய ஐந்தாண்டு கால பி.இ. மரைன் டெக்னாலஜி படிப்பதற்கான விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.
“படிப்பதற்கு ஆகும் மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்வதுடன் படித்து முடித்த பிறகு வேலைவாய்ப்பும் அளிக்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் எதிர்பார்த்ததைப் போல் வித்தியாசமான படிப்பாகவும் அது இருந்தது. உடனே பி.இ.மரைன் டெக்னாலஜிக்கு விண்ணப்பித்து, சென்னையில் உள்ள அமெட் பல்கலைக்கழகத்தில் படித்தேன். ஐந்தாண்டு காலப் படிப்பில் முதல் மூன்ற ஆண்டுகள் மட்டும் கல்லூரி வளாகத்துக்குள் கப்பல் குறித்துக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இறுதி இரண்டு ஆண்டுகள் முழுவதும் கப்பல்களில் செயல்முறை விளக்கத்தோடு பாடம் நடத்தப்படுகிறது. பெரிய இன்ஜின்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. அந்த பிரம்மாண்ட இன்ஜின்களைக் கண்டு அஞ்சாமல் அதில் எப்படி வேலை செய்வது என்பதுதான் என் முதல் கடமையாக இருந்தது’’ என்கிறார் ரேஷ்மா.
“நேரம், காலம் பார்க்காமல் செய்யும் இந்தப் பணியில் வேலையின் மீது இருக்கும் ஆர்வமும், குடும்பத்தின் ஆதரவும்தான் அவசியம்’’ என்கிறார். எழுத்தாளர் அமரந்தா, நடராஜன் தம்பதியின் மகள் ரேஷ்மா என்பது குறிப்பிடத்தக்கது.
2-018இல்தான் ரேஷ்மாவுக்கு கப்பலோட்டுவதற்கான உரிமம் வழங்கப்பட்டது. தான்தான் இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டி என்பதே அப்போதுதான் ரேஷ்மாவுக்குத் தெரியவந்தது. பணி நிரந்தரம் பெற்று கொல்கத்தா துறைமுக பொறுப்பு கழகத்தில் கப்பலோட்டியாகப் பணியாற்றி வருகிறார். நாட்டின் முதல் பெண் கப்பலோட்டி என்ற சாதனையை மட்டுமல்லாமல் மிக இளம் வயதிலேயே கப்பலோட்டியவர் என்ற பெருமையும் ரேஷ்மா நிலோஃபர் நாகா பெற்றுள்ளார். இவரின் இந்தச் சாதனையைப் பாராட்டி மகளிர் தினமான மார்ச் 8 அன்று குடியரசுத் தலைவரிடம் ‘நாரி சக்தி புரஸ்கார் விருது’ பெற்றார்.
“எந்தத் துறையாக இருந்தாலும் நம்முடைய திறமையும் உழைப்பும்தான் நாம் யார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்லும். எதிர்மறையாகவும் பிற்போக்குத்தனத்துடனும் பேசுபவர்களின் வார்த்தைகளுக்குக் காது கொடுக்காமல் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற லட்சியம் மட்டும்தான் என் கண் முன்னால் தெரிந்தது. இந்தத் துறையில் முதல் பெண்ணாக இருப்பதே எனக்குப் பெரும் சவாலாகத் தான் இருந்தது. ஏனென்றால் மற்றவர்களைவிட என்னுடைய திறமையை இரட்டிப்பாக நிரூபிக்க வேண்டியிருந்தது. பெண்களுக்குச் சுதந்திரமான சூழலும் ஊக்கமும்தான் தேவை. இந்த இரண்டையும் ஏற்படுத்திக் கொடுத்தாலே பெண்கள் சுயமாக முன்னேறுவார்கள். என்னைப் போல் மேலும், பல பெண்கள் இந்தத் துறையில் இணைந்து பணியாற்றுவதை நான் விரும்புகிறேன். இங்கு ஒரு தோழியின் வருகைக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் ரேஷ்மா சாதனையின் பூரிப்புடன்.
தகவல் : சந்தோஷ்