நேயன்
திரு.ஜெயகர் அவர்கள் தீண்டாமையை ஒழிக்கக்கூடிய ஒரு தீர்மானத்தை பம்பாய் சட்டசபையில் சமீபத்தில் கொண்டு வரப் போவதாகவும் அறிந்து மகிழ்கிறோம். அந்தத் தீர்மானத்திற்கு டாக்டர் அம்பேத்கர் போன்ற பிரமுகர்கள் உதவியாயிருந்து வேலை செய்வார்களெனவும் தெரிகிறது. இவர்களுடைய முயற்சி வெற்றி பெற்று சட்டமும் செய்யப்படுமேயானால், பெண்கள் சமூகத்திற்கு சாரதா சட்டம் எவ்வித பலத்தை அளிக்கின்றதோ அதே மாதிரி தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில், இந்தச் சட்டமும் பெரிய பலமாக இருக்கும் என்பதற்கு அய்யமில்லை.
(‘குடிஅரசு’ 22.12.1929)
இதனால்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சென்ற 4.1.1945ஆம் தேதி கல்கத்தாவில் தாழ்த்தப்பட்டோர் வாரப் பத்திரிகையான ‘பீப்பிள் ஹெரால்டை’ திறந்து வைக்கையில் ‘ஹிந்துக்கள் புல்லுருவிகள். நாம் உழைக்க அவர்கள் உறிஞ்சித் தின்கிறார்கள். இந்தச் சுரண்டலை நிலைநாட்டும் சுதந்திரம் வந்தாலும் ஒன்றுதான், வராதொழிந்தாலும் ஒன்றுதான்’ என்ற வயிறெரிந்து கூறியிருக்கிறார். இதைக் கண்டு பிறர் இரத்தத்தை உறிஞ்சி வந்த கூட்டம், நகத்தில் அழுக்குப்படாமல் வாழ்ந்து வந்த கூட்டம், கிழிச்ச பஞ்சாங்கத்தையும் காய்ந்த தர்ப்பைப் புல்லையும் கை முதலாகக் கொண்டு வாழ்க்கை நடத்திவரும் கூட்டம் வயிறு எரியத்தான் செய்யும். சீறி விழத்தான் செய்யும்.
(‘குடிஅரசு’ 6.1.1945)
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது, ‘இன்றைய நிலையில் நமக்கு சுயராஜ்யம் வந்தால் இன்றைய ஆட்சிபோல ஆளும் ஜாதியார்தான் ஆளுவார்களே தவிர, நம் போன்ற அடிமை ஜாதியார் அடிமைகளாகவே ஆளப்படுபவர் களாகவேதான் இருப்போம். ஆதலால், சுயராஜ்ய ஆட்சி இன்றைய ஆட்சியைவிட மேலானதாக இருக்க முடியாது’ என்று சொன்னார். அதாவது, ஒற்றுமையும் கட்டுப்பாடும் உள்ள ஜாதிதான் எந்த சுயராஜ்யத்திலும் ஆட்சி புரியுமென்றும் அதில்லாத மக்கள் எப்படிப்பட்ட சுதந்திர ராஜ்யத்திலும் ஆளப்படும் அடிமை ஜாதியாகத்தான் இருக்க வேண்டியதாகும் என்றும் அருமையாகச் சொன்னார்.
(‘விடுதலை’ – 26.3.1950)
கோவில்கள் திறக்கப்படுவதாலும், ஓட்டல்கள் தடை நீக்கப்படுவதாலும் மாத்திரம் ஜாதி ஆணவமும், ஜாதி ஆதிக்கமும் ஒழிந்துபோகும் என்ற நினைப்பவர்கள் வடிகட்டிய பைத்தியக்காரர்களே ஆவார்கள். இது ஒரு பித்தலாட்டகரமான காரியம் என்பதோடு பெரிதும் டாக்டர் அம்பேத்கர் கூட்டமாகிய வாயில்லாப் பூச்சிகளை ஏமாற்றும் வித்தையாகும். 15 வருடத்துக்கு முன் ஏமாந்து தனித் தொகுதியை விட்டுக்கொடுத்த அம்பேத்கர் கோஷ்டி இப்போதும் ஏமாந்து போகக்கூடும் என்ற கருதி அம்பேத்கரை வசப்படுத்த வேறு என்ன என்னவோ சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இவர்கள் சூழ்ச்சிகள் எல்லாம் இதுவரை முஸ்லீம்களை என்ன செய்ய முடிந்ததோ, அந்த அளவுக்கத்தான் திராவிடர்களையும், ஆதி திராவிடர்கள் என்பவர்களையும் செய்ய முடியுமே தவிர, ஏமாற்ற முடியும் என்பது இனி நடக்காத காரியமாகும். அம்பேத்கரை சரிப்படுத்திக் கொண்டாலும் அதனால் வடநாட்டு ஷெடியூல்டு வகுப்பார்தான் ஏமாறக்கூடுமே தவிர தென்னாட்டவரை ஏமாற்ற முடியாது.
(‘குடிஅரசு’ 25.1.1947)
இந்து மதத்தைச் சாராதவர்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்களும், இந்து மதப் பற்றுடைய மக்களால் அந்நியர்கள், மிலேச்சர்கள் என்று இழித்துக் கூறக் கூடியவர்களுமாகிய வேற்று மதத்தினர்கள் உயர்சாதி இந்துக்களுடன் தீண்டாமையென்ற வேறுபாடின்றி நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நீண்ட காலமாக இந்துக்கள் என்றே மதிக்கப்பட்டு வருகின்ற தாழ்த்தப்பட்ட மக்களோ உயர்சாதி இந்துக்களுடன் நெருங்கிப் பழக முடியாதவர்களாகவும் சண்டாளர்கள் என்றும் பலவாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர்.
(‘குடிஅரசு’, 8.5.1932)
நான் காங்கிரசிலிருக்கும் போதும் தீண்டாதார் விஷயத்தைப் பற்றியே அதிகம் உழைத்திருக்கிறேன். வைக்கம் சத்தியாக்கிரகம் என்பதும் தீண்டாமை விலக்குக்காகத்தான் ஏற்பட்டதே தவிர வேறில்லை. 3 வருடத்திற்கு முன் நடந்த ஈரோடு கோவில் பிரவேசம் என்பதும் அது சம்பந்தமான வழக்கும் தீண்டாமை விலக்கு சம்பந்தமாக ஏற்பட்டதே தவிர வேறில்லை.
(‘குடிஅரசு’ 4.12.1932)
உலகம் ஒரு பெரும் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டு வருகின்றது. அப்புரட்சி வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்ட தன்மையும் சமீபத்தில் அழிந்துதான் தீரும்.
(‘குடிஅரசு’ 4.12.1932)
சென்னை சட்டசபைக்கு ஒரு ஆதிதிராவிடரைக்கூட காங்கிரஸ் நிறுத்தவே இல்லை என்பதையும் தானாக எந்தக் கட்சியையும் சேராமல் நிற்கிறவர்களையும் ஆதரிக்காமல், எதிர்த்து தோற்கடித்தார்கள் என்பதையும் முன்னமே எழுதி இருக்கிறோம். ஆகவே காங்கிரசுக்காரர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது சட்டசபைக்கு நின்ற ஆதிதிராவிடரைக் காங்கிரஸ் திட்டத்தில் கையொப்பமிடும்படியாக யாராவது கேட்டு அவர் மறுத்தாரா? அல்லது அவர் மறுத்திருந்தாலும் வேறு ஆதிதிராவிடர் கிடைக்கவில்லையா?
(‘குடிஅரசு’ 3.2.1935)
ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூக வாழ்வில் தீண்டப்படாதவர்களாகவும் மற்றொரு பெருங்கூட்ட மக்கள் சமூக வாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசிமக்கள், இழிமக்கள் என்ற பெயருடன் இருந்து வருகிறார்கள் என்றால் இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராஜ்யம் யாருக்கு வேண்டும்?
(‘குடிஅரசு’ 23.6.1935)
உலகம் ஒரு பெரும் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டு வருகின்றது. அப்புரட்சி வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்ட தன்மையும் சமீபத்தில் அழிந்துதான் தீரும்.
திராவிடர் -_ ஆதிதிராவிடர், திராவிட நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய 4 கூட்டத்தினரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நால்வரும் ஒற்றுமையாய் இருந்து ஆரியத்தை எதிர்த்து நிற்க வேண்டும்.
(‘குடிஅரசு’ 8.9.1940)
திராவிட நாட்டில் திராவிடப் பெருங்குடி மக்கள் அறிவிலும் ஆண்மையிலும் வீரத்திலும் தலைசிறந்து இருந்த மக்கள் இன்று சமுதாயத்தில் நான்காம் ஜாதி, பஞ்சமர் என்றும் ஐந்தாம் ஜாதி என்றும் அதாவது சூத்திரர், அல்லது பிறவி அடிமை ஜாதி என்றும், சண்டாளர் அல்லது ஈகை ஜாதி என்றும் அழைக்கப்படுவதோடல்லாமல், அந்தப்படியே நடத்தப்படுகிற மக்களாகவும் இருந்து வருகிறோம்.
(‘குடிஅரசு’ 12.4.1941)
மதுரைக் கோவிலில் பறையர் முதலியவர்கள் செல்ல சட்டம் அனுமதிக்கப்படுகிறது. அக்கோயிலில் பறையர்களுக்குப் பள்ளிக்கூடம் வைத்தார்களா? பறையரை மேளக்காரராக, பூக்கட்டுபவர்களாக வெளித்துறை சிப்பந்திகளாக நியமித்தார்களா? அனுமதித்த கோவில்களுக்கெல்லாம் பறையர்களை டிரஸ்டியாகப் போட்டார்களா?
(‘விடுதலை’ 29.6.1943)
தீண்டப்படாதார், தாழ்ந்தவர்கள் என்று கொடுமையாக ஒதுக்கி ஒடுக்கப்பட்டுத் துன்புறும் மக்களுக்கும், உயர்ந்த ஜாதியார், கடவுள் முகத்தில் பிறந்தவர்களென்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் குணத்தினாலும் உருவத்தினாலும் அறிவினாலும் ஏதாவது வித்தியாசமிருக்கின்றதா என்று கேட்கிறேன்.
(‘குடிஅரசு’ 6.1.1945)
(தொடரும்…)