கே: உத்தரபிரதேசத்தில் அகிலேஷ், மாயாவதி கூட்டணி பி.ஜே.பி.க்கு எதிராக வலிமை பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் வாக்கு பிரிவது பி.ஜே.பி.க்கு சாதகமாகாதா? அதைத் தவிர்க்க தங்களைப் போன்றோர் முயற்சி செய்தால் என்ன? இது தலைமுறை பாதுகாப்புப் போர் அல்லவா?
– க.காளிதாஸ், காஞ்சி
ப: நீங்கள் கூறுவது 100க்கு 100 சரி. பழைய கான்ஷிராம் தலைமை என்றால் நம்மால் முடியும். பல விஷயங்கள் அவரது முதிர்ச்சி, அணுகுமுறை வேறு; இப்போது நிலைமை வேறு! என்றாலும் அவ்விருவரும் சேர்ந்ததே ஒருவகையில் நல்லது. காங்கிரசை அணைத்திருந்தால் வெற்றி 100 சதவிகிதம் நிச்சயமாகி இருக்கும். என்றாலும் பா.ஜ.க. அங்கே தோற்பது உறுதி. காரணம் பல மாநிலங்களில் கட்சித் தலைவர்களைவிட, மக்கள் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முன்பே ஆயத்தமாகிவிட்டனரே! மக்கள் முடிவு முந்தி! தலைவர்கள் கூட்டு பிந்தி! -_ புரிகிறதா?
கே: நீரவ் மோடி கைது தேர்தல் நாடகமா?
– அ.ந.முகமது, சென்னை
ப: இருக்கலாம். மோடி வித்தைகள் பிரபலமானது. எளிதில் புரியாதவையும்கூட!
கே: பா.ம.க. இராமதாசையும், அன்புமணியையும் மக்கள் இப்பொழுதாவது புரிந்து பாடம் புகட்டுவார்களா?
– மா.திருநீலகண்டன், திருச்சி
ப: நிச்சயமாக. மக்கள், அவர்கள் உகுத்த “உறுதிமொழிகளை’’ மறக்கவில்லை. ‘டயர்’, ‘தாயார் உறவு’ _ அடடா என்ன அறிவுக் கொத்துகளின் உளறல்கள்! முழுக்க நனைந்த பின்பு முக்காடு ஏதுக்கடி குதம்பாய்?
கே: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சுற்றுமதில் சுவரை தவறான முறையில் இடித்துவிட்டதன் மூலம் ஆட்சியாளர்கள் காவி ஏவலாளிகள் என்பதை மக்கள் புரிந்து உரிய தண்டனையை அளிப்பார்களா?
– அப்சல், மாதவரம்
ப: தேர்தல் முடிவுகள் தெளிவாய்க் காட்டும்! “பொறுத்தவர் பூமியாள்வார். பொங்கியவர் காடாள்வார்!’’ என்பதானே பழமொழி.
கே: புதிதாக ‘பாதுகாவலன்’ என்று தனக்குத்தானே மார்தட்டிக் கொள்ளும் மோடி, யாருக்கான பாதுகாவலன்?
– கா.மருதமலை, புதுக்கோட்டை
ப: அடானிகளுக்கும் அத்வானிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் ‘சவுக்கிதார்!’ எல்லா குற்ற வழக்கிலும் முதலில் விசாரிக்கப்படுபவர் சவுக்கிதார்தான்.
கே: பொள்ளாச்சி வன்புணர்வு விசாரணையை சிபிஅய் ஏற்க தாமதிப்பது, அரசியல் செல்வாக்குள்ள குற்றவாளிகளைக் காப்பாற்றவா?
– அ.மாணிக்கவேல், மதுரை
ப: அதிலென்ன சந்தேகம். ஆனால், மக்கள் இந்த ஆட்சி _ குற்றவாளிகளுக்கு தருவிக்கும் கடுந்தண்டனை _ 5 ஆண்டு வனவாசம்!
கே: திராவிட இயக்கத்தால் வாழ்க்கையில் உயர்ந்தோர் _ இன்று, தான் ஏறிவந்த ஏணியையே எட்டி உதைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: விபீஷணர்களும், பிரகலாதன்களும், அனுமார்களும், சுக்ரீவன்களும் ‘சிரஞ்சீவிகள்’. எப்போதும் இருப்பார்கள்! இப்போதும் இருக்கிறார்கள் _ அந்த அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்!
கே: தென் தமிழகத்தில் பெரியாரின் கொள்கைகள் போதிய அளவுக்கு பரப்பப்படாமையால்தான் பி.ஜே.பி. அங்கு அடியூன்றுகிறதா?
– மகேஷ், சிவகாசி
ப: உங்கள் கருத்தில் உண்மை உள்ளது. அதனை விரைந்து _ தக்க பிரச்சார ஏற்பாட்டினை _ 2019இல் நிச்சயம் செய்வோம்!
கே: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில். குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு நீக்கம், கல்வி மாநிலப் பட்டியலில் சேர்ப்பது போன்றவற்றை அறிவிப்பது கட்டாயமல்லவா?
– த.மரகதமணி, சென்னை-34
ப: அதைச் செய்ய வைக்கும் ஆற்றல் நமக்கும் தி.மு.க.வுக்கும் நிச்சயம் உண்டு. கவலைப்படாதீர்! பொத்தானை சரியாக அழுத்தி தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற ஒத்துழையுங்கள்!