ஒரு சமயம் ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சராக இருந்த பிரகாஷ்ராவ்காரும், அய்யா பெரியாரும் நாங்கள் நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கும் சென்ட்ரல் தியேட்டரில் பகல்பொழுதில் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசினார்கள்.
பிரகாஷ்ராவ் காங்கிரசுக்காக கடுமையாக உழைத்தவர். பலமுறை சிறைக்குச் சென்றவர். பல இழப்புக்கு ஆளானவர். அவர் பேசுகிறார், “காங்கிரஸில் என்ன குறை கண்டார் பெரியார்? நாங்கள் இருவரும் மாதக்கணக்கில், சிறைச்சாலைகளில் ஒன்றாக அடைக்கப்பட்டிருக்கிறோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து காங்கிரசை வளர்த்தவரும் அவரே!
மது ஒழிப்புக் கொள்கைக்காக தனது தோப்பில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தாரே! அப்படிப்பட்ட பெரியார், ஏன் தனிக்கட்சி தொடங்கி, காங்கிரசுக்கு எதிர்ப்பாகச் செயல்பட வேண்டும்’’ என்று கேட்டார்.
அதற்கு பெரியார் பதில் சொன்னார்.
“இப்போது என் மரியாதைக்குரிய சகோதரர் (பிரகாஷ்ராவ்) பேசினார். அவர் சொன்னதெல்லாம் உண்மைதான். நாட்டு விடுதலைக்காக பல தியாகங்களைச் செய்திருக்கிறார். மறுக்கவே முடியாது. இன்றும் கட்சிப் பற்றுக் குறையாமல் இருக்கிறார். கதர் வேட்டி கட்டியுள்ளார். கதர்ச் சட்டையும் போட்டிருக்கிறார். அதற்குள்ளே கதர்ப் பனியனும் போட்டு இருக்கிறார். அதையும் விலக்கிப் பார்த்தால் உள்ளே ஒரு பூணூல் போட்டிருக்கிறாரே? அது எதற்காக!
ஏ, ராமசாமி எல்லா வகையிலும் நாம் ஒரே மாதிரி இருந்தாலும் நான் உன்னைவிட உயர்ந்த ஜாதிக்காரன் என உறுதி செய்யத்தானே?
நான் சொல்லுகிறேன்! அய்யா பிரகாசம்காரு அவர்களே! இந்த நாட்டில் பூணூல் போட்டவர்களையெல்லாம் கழற்றி எறியச் சொல்லுங்கள். அனைவரும் எந்தவித பேதமுமின்றி சரிநிகர் சமமாக ஒன்றுபட்டு வாழ்வோம்’’ என்றார்.
(தரவு: – இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் எழுதிய ‘நான் வந்த பாதை’ என்ற புத்தகத்தில். பக்கம் 162-163)
தந்தை பெரியாரின் இதுபோன்ற எக்ஸ்ரே பார்வை, இன்றுவரை தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்களால் தொடர்ந்து கொண்டு இருப்பதால்தான், பார்ப்பனர்கள் அலறித் துடிக்கிறார்கள். அவரைக் கொல்ல நினைக்கிறார்கள்.
தகவல்:
வ.க.கருப்பையா, பஞ்சப்பட்டி