இன எழுச்சியூட்டும் ஏடு!
‘உண்மை’, ‘விடுதலை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ‘உண்மை’ ஜனவரி 16-31 இதழைப் படித்தேன். இதழில் இடம்பெற்றிருந்த கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்தும் சிறப்பாக இருந்தது. பொங்கல் சிறப்பிதழாக வந்த இதில் பொங்கல் பற்றிய பல அரிய உண்மையான தகவல்களை தெரிந்து கொண்டேன். எருமை கறுப்பு என்ற காரணத்திற்காக எப்படியெல்லாம் நயவஞ்சகர்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை படித்தறிந்தபோது ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் ஏற்பட்டது.
“மாதவிடாய் நின்றுபோன நிலை’’, சிறந்த நூலில் இருந்து சில பகுதிகள் மிகவும் அருமை. ‘நான் திராவிட இயக்க எழுத்தாளன்’, இந்த நேர்காணல் மிகமிக அருமை. இந்த நேர்காணலில் இடம் பெற்றுள்ள கேள்விகளும் பதில்களும் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றன. குறிப்பாக ‘திராவிட இலக்கியம் சமுகத்தைப் பேசியது’ என்ற வரிகள் மிகவும் முக்கியமானது. இன்றும்கூட சமுகத்தை பேசவல்ல பல இலக்கியங்கள் வந்து கொண்டுள்ளன. இதற்கெல்லாம் அடிப்படை எதுவெனில் அது திராவிட இலக்கியம்தான். முன்பிருந்ததைக் காட்டிலும் சாதியும், மதமும் கள்ளத்தனமாக வைத்துள்ள கூட்டு இன்றைய நிலையில் சமுகத்தின் பல தளங்களிலும் விரிவடைந்து வருகிறது. அவற்றை எதிர்த்து தவிடுபொடியாக்க திராவிடம் எழுச்சியுடன் எழுந்து பல தளங்களிலும் அவைகளை எதிர்த்து வீரச் சமர் புரியவேணடும். அச்சமரின் படைத் தளபதிகளாக இன்றைய இளம் வயதினர் இருக்க வேண்டும். அவர்களை வளர்த்தெடுப்பது இன்றைய திராவிட இயக்கங்களின் முக்கிய பணி.
– ப.கார்த்தி, உலகபுரம், ஈரோடு
உண்மை
ஒரு கருத்துக் கருவூலம்
மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். கருத்துப் பெட்டகமாக வெளிவந்திருக்கும் ‘உண்மை’ பிப்ரவரி 1-15 2019 இதழ் படித்தேன். தலையங்கத்திலிருந்து, ஆய்வுக் கட்டுரை வரை ஒவ்வொன்றும் சிந்தனைக்கும் அதனைச் செயல்படுத்தவதற்கும் ஒரு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது.
பதவி ஏற்கும்போது அண்ணா, கடவுள் பெயரால் உறுதிமொழி எடுக்காததை அய்யா, சுட்டிக்காட்டி, அண்ணா அரசுதான் உண்மையான மதச்சார்பற்ற அரசு என்பதை ஆணித்தரமாகக் கூறியிருப்பது இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்! கஜாப் புயலில் சிக்கிச் சீரழிந்து, பேரழிவுக்கு உள்ளாகி வருந்தும் மக்களுக்கு, ஒரு ஆறதல் வார்த்தைகூட கூறாத மோடி, பட்டேல் சிலைக்கு ரூ.3000 கோடியும், கும்பமேளாவுக்கு ரூ.7100 கோடியும் கொட்டிக் கொடுத்த கொடுமையை அட்டைப் படத்திலேயே சுட்டிக்காட்டி இருப்பதை எண்ணும்போது, ஆரிய திராவிடப் போராட்டமே நினைவுக்கு வருகிறது. ஆனால், இனி வெற்றி திராவிடருக்கே என்பது உறுதி!
மானமிகு ஆசிரியர் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் பதில்கள் பகுதியில் தரப்பட்டிருக்கும் அறிவுசார்ந்த சிந்தனைக்குரிய பதில்கள் மிகுதியும் பயனுடையவை! ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ என்ற தங்களின் நூல் பற்றி பேராசிரியர்கள், கவிஞர்கள் வழங்கியிருக்கும் ஆய்வுரைகள் சிந்தனைக்கு நல்விருந்து! அரசியல்வாதிகள் அண்ணாவிடம் படிக்கவேண்டிய பாடம், இன்றைய அரசியல்வாதிகள் அவசியம் படிக்க வேண்டிய அரசியல் பாடம்! இறுதியில் ஆய்வுக் கட்டுரையைப் படிக்கும்போது, வரலாற்று திரிபு செய்பவர்களிடம் எவ்வளவு விழிப்போடிருந்து நமது மொழியை, வரலாற்றைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. ஒரு நல்ல ஏடு படித்த நிறைவு நிச்சயம் படிப்போருக்கு ஏற்பட்டே தீரும்!
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்