அன்னை மணியம்மையாரின் நினைவு நாள் கருத்தரங்கம் : பொது வாழ்வையே தன் வாழ்வாக்கிக் கொண்டவர் அன்னை மணியம்மையார்!

ஏப்ரல் 1-15 2019

 

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவையொட்டி அடுத்த சில நாட்களில் அவரது 41ஆம் ஆண்டு தொடக்க நினைவு நாள் எழுச்சியுடன் நடைபெற்றது. அய்யா, அம்மா சிலைகளுக்கும், நினைவிடங்களுக்கும் மலர் வளையம் வைத்து மரக்கன்றுகள் நடப்பட்டன.

அன்னை மணியம்மையார் பவுண்டேஷன்  சார்பாக லால்குடியையடுத்த தச்சன்குறிச்சி என்னும் கிராமத்தில் ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு மெட்ரிக் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா, சென்னைப் பெரியார் திடலில் காணொளி காட்சிமூலம் நடைபெற்றது. நமது நிதி ஆலோசகர் ச.இராசரத்தினம் அவர்கள் தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டை யொட்டி  ‘ஈ.வெ.ரா. மணியம்மை பவுண்டேஷன்’  அமைக்கப்பட்டதன் நோக்கம் குறித்தும் அதற்கு ஆதரவு பெருகி வரும் வகையில்  நன்கொடைகளைக் கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும் அளித்து வருவது குறித்து உணர்வு பொங்க அப்போது ஆசிரியர் குறிப்பிட்டார்.

கருத்தரங்கம்

தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் அன்னையாரின் நினைவு நாள் கருத்தரங்கம் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தலைமையில் தொடங்கியது. பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி வரவேற்புரையாற்றினார்.

பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி உரை

மணியம்மையார் அவர்கள் வயது 25 இருக்கும்பொழுது பொதுத் தொண்டாற்ற முன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வயதில் எளிதாக யாருக்கும் அத்தகு தொண்டுள்ளம் வருவது இயல்பான ஒன்றல்ல. அதைவிட பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவராக அவர் இருந்தார் என்பதுதான் தலையானது. பெரியார் ஒருவரை நம்பினார், – கணித்தார்  என்றால் அது சாதாரணமானதல்ல.

அன்னையார் மீது ஏவப்பட்ட பழிச் சொற்களும், வசவுகளும் ஏராளமானவை. பெரியாரிடம் ஏராளமான சொத்துக்கள் இருந்தன. அவற்றை அனுபவிக்க ஒருவர் வந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் என்றுகூட சிலர் நினைக்கலாம். அந்த நினைப்பு அப்பட்டமாய் தவறானது என்பதற்கு என்ன அடையாளம் என்றால், அந்தச் சொத்துக்களின் பலனை பயனை எந்த வகையிலும் மணியம்மையார் அனுபவித்தவர் இல்லை. தலையைக்கூட சீவாமல் இயக்கத்திற்குத் தலைமை வகித்தவர் அன்னை மணியம்மையார்’’ என்று உரையாற்றினார்.

ஊடக இயலாளர் இரா.உமா

“சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறையில் மரணமடைந்த இரு கருஞ்சட்டைத் தோழர்கள் சிறைக்குள்ளேயே புதைக்கப்பட்டனர். அன்னை மணியம்மை அவர்கள் முதலமைச்சர் காமராசர் வரை சந்தித்து, புதைக்கப்பட்ட பிணங்களைத் தோண்டி எடுக்கச் செய்து அந்த ஜாதி ஒழிப்பு வீரர்களின் பிணங்களை திருச்சி மாநகரில் கம்பீரமாக ஊர்வலமாக எடுத்துச் சென்றாரே _- அந்தச் செயல் அன்னையாரின் போராட்டப் பெருங் குணத்துக்கோர் எடுத்துக்காட்டு.

அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளான மார்ச் 10ஆம் தேதியை தமிழகப் பெண்கள் உரிமை நாளாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

தமிழர் தலைவர் சிறப்புரை:

அன்னை மணியம்மையார் அவர்கள் நெருக்கடிக் காலம் என்னும் நெருப்பாற்றைத் தாண்டி வந்தவர். ‘விடுதலை’ ஏட்டுக்குத் தணிக்கை என்ற பெயரால் தொல்லை, இன்னொரு பக்கம் வருமான வரித் துறையின் தொல்லை, இயக்கத்திற்கு வரும் வாடகை உள்ளிட்ட வருவாய்களை வருமான வரித் துறைக்குத் திருப்ப வேண்டும் என்று உத்தரவு போட்டனர். இந்த சவால்களை எல்லாம் சந்தித்தவர் அம்மா அவர்கள்.

மிசா சிறையிலிருந்து நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். வருமான வரித்துறை அதிகாரியைச் சந்தித்து நியாயம் கேட்டேன்.

வருமான வரித்துறைக்கு நாங்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கியை தவணை முறையில் செலுத்தத் தயார் நாங்கள் கல்வி நிறுவனங்களை நடத்துகிறோம், இயக்க ஏடுகளை நடத்துகிறோம், அதற்குப் பணம் தேவைப்படுகிறது என்று சொன்னபோது வருமானவரித் துறையின் அந்த அதிகாரி என்னிடம் சொன்னார், உங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தை எங்களுக்கு அனுப்பியுள்ளார்கள்’ என்று சொல்லி, அந்தக் கடிதத்தை என்னிடம் காட்டினார்.

அடுத்து அவர் சொன்னதுதான் அதிர்ச்சிக்குரியது. வருமான வரித் தொடர்பான தாவாவைத் தீர்த்துக் கொள்வதற்கு சுலபமான ஒரே வழி – ‘விடுதலை’ ஏட்டை நிறுத்தினால் போதும் என்றார்.

ஒரு பக்கத்தில் எனக்கு அதிர்ச்சி! அப்பொழுது அந்த அதிகாரியிடம் சொன்னேன். ‘விடுதலை’  ஏட்டை நிறுத்த ஒப்புக் கொண்டு விட்டால் எங்கள் தோழர்களை எங்களால் சந்திக்க முடியாது. இரண்டாவது எங்கள் தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, நேராக உங்கள் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்துதான் முற்றுகையிட நேரும் என்று நான் சொன்னபொழுது, “என்ன இப்படி சொல்லுகிறீர்கள்” என்று என்னைத் திருப்பிக் கேட்டார். உண்மையைத் தான் சொல்லுகிறேன் என்றேன். அதற்குமேல் மேல் முறையீடு சென்று அதில் வெற்றி பெற்றோம்.

நெருக்கடி நிலை காலத்தில் அம்மா என்ன செய்தார்கள்? தம் கையில் இருந்த எல்லாப் பணத்தையும் போட்டு பெரியார் திடல் முகப்பில் இருக்கும் ஏழு மாடி கட்டடத்தைக் கட்டி முடித்தார்.

இந்தப் பெரியார் திடலை நமக்கு முன்னின்று வாங்கிக் கொடுத்தவர் கோவை ஜி.டி.நாயுடு அவர்கள் அப்பொழுது ஒரு லட்ச ரூபாய். பக்கத்தில் இருக்கும் ‘தினத்தந்தி’ பகுதியை ஆதித்தனார் வாங்கினார். இந்த இடத்தையும் வாங்கிட வேண்டும் என்று விரும்பினார்.

அய்யாவையும் சந்தித்தார். ஒரு லட்ச ரூபாய் கொடுத்து இந்த இடத்தை வாங்கியுள்ளீர்கள். நான்கு லட்ச ரூபாய் தருகிறேன், இந்த இடத்தை எனக்குக் கொடுங்கள் என்று கேட்டபோது, நாம் வாங்கிய ஒரு லட்ச ரூபாய்க்கு நான்கு மடங்கு ரூபாய் தருவதாக சொல்லுகிறாரே ஆதித்தனார் -’கொடுத்து விடலாமா’ என்ற எண்ணம் தந்தை பெரியாருக்கு; ஆனாலும் அம்மாவின் கருத்தைக் கேட்டுச் சொல்லுகிறேன் என்று ஆதித்தனாரிடம் கூறினார் அய்யா.

அம்மாவிடம் அய்யா சொன்னபோது, அம்மாவுக்கு வந்ததே கோபம் – ‘அது எப்படி?’  இது சாதாரணமான இடம் இல்லை. இயக்கத்துக்குத் தலைமையிடம். நான்கு லட்சம் இல்லை, நான்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கொடுக்கக் கூடாது’ என்று பிடிவாதமாக இருந்தார் அம்மா. “ஆதித்தனாரிடம் கொடுக்கிற மாதிரி சொல்லி விட்டேனே என்று அய்யா தயங்கியபோது அம்மா அவர்கள் ‘நானே ஆதித்தனாரிடம் பேசுகிறேன்’ என்று கூறி, ஆதித்தனாரிடம் உண்மை நிலையைச் சொன்னபோது அவரும் அதனை ஏற்றுக் கொண்டார்.

இன்று இந்த இடத்தில் நாம் கம்பீரமாக  இருக்கிறோம், நிற்கிறோம், தலைமைக் கழகம் இருக்கிறது, ‘விடுதலை’ அலுவலகம் இயங்குகிறது என்றால் அதற்குக் காரணம் அம்மா அவர்கள்தான்’’ (இவ்வாறு ஆசிரியர் சொன்னபொழுது பலத்த கரஒலி! கரஒலி!!)  ‘‘தனக்கென இருந்த தனி வாழ்வைப் பொது வாழ்வுக்கு அர்ப்பணித்தவர் அன்னை மணியம்மையார்.  அந்தப் பொது வாழ்வில்  மான அவமானம் பார்க்கக் கூடாது என்பதற்கு இலக்கணமாக, எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் அம்மா’’ என்று ஆசிரியர் உணர்வு பொங்கக் குறிப்பிட்டார்.

வட சென்னை மகளிர்ப் பாசறை அமைப்பாளர் சுமதி கணேசன் நன்றி கூறினார். மாநில மாணவர் கழக இணைச் செயலாளர்  வழக்குரைஞர் பா. மணியம்மை நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *