மூளையெல்லாம் வஞ்சனை!

ஜனவரி 01-15

மூளையெல்லாம் வஞ்சனை!


தாங்கள் நினைப்பதை, பொதுக் கருத்தாக மக்கள் மத்தியில் உருவாக்கிட ஊடகங்களை மிகச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பார்ப்பனர்கள். நடுநிலையாளர்களைப் போலத் தங்களை உருவகப்படுத்திக் கொண்டு, பார்ப்பனிய நஞ்சைக் கக்குவதில் எப்போதும் அவர்கள் சளைத்ததில்லை. தங்கள் தனிப்பட்ட புகழைப் பயன்படுத்தி தங்களை அறிவு ஜீவிகளாகக் கருதும் பிறரையும் நாங்கள் சொல்வதே உண்மை என்று நம்பச் செய்வதிலும் உண்மையில் அவர்கள் திறமைசாலிகள் தான். ஒரு பக்கம் அரசியல் தரகு வேலை பார்ப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டே, மறுபக்கம் இந்தநாள் வரை சோவும், சுப்பிரமணிய சாமியும் நடுநிலையாளர்கள் என்ற பெயரில் உலாவ முடிகிறதென்றால் அவர்களின் இந்தத் திறமையில் நமக்குச் சந்தேகம் இருக்கமுடியுமா?

இப்படி அரசியல் ரீதியாக ஒரு புறத்தில் என்றால் கலைத்துறையிலும் கொஞ்சமும் கூச்சமின்றி தங்கள் ஏகாதிபத்தியத்தை நிறுவவும், தங்களைத் தவிர வேறு யாரும் வென்றுவிடாமலும் இருக்க தம்மாலானதைச் செய்வார்கள். நந்தலாலா என்றொரு திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் உருவாக்கியிருக்கிறார். இது கிகுஜிரோ என்ற படத்தின் சாயலில் உள்ளது; அதன் மூலாதாரமான கருவைக் கொண்டு மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது என்பது பலரின் கருத்து. மிஷ்கினே கூட இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்தப் படம் குறித்து அதீதமான விமர்சனத்தைப் பார்ப்பன ஊடகங்கள் வைத்தன. இந்த ஊடகங்கள் எதுவும், இந்த அறிவுஜீவிகள் எவரும் பாலச்சந்தர், மணிரத்னம் போன்ற பார்ப்பன இயக்குநர்கள் குறித்து, இது போன்ற எந்த விமர்சனத்தையும் வைப்பதில்லை. எந்தெந்த ஒரிய, வங்காளப் படங்களிலிருந்து கதையைத் திருடி, பாலச்சந்தர் படம் எடுத்தார். எந்தெந்தப் பன்னாட்டுப் படங்களிலிருந்து மணிரத்னம் கதையை, காட்சிய-மைப்பை, திரைக்கதையை உருவினார் என்றெல்லாம் பட்டியல் வைத்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இதையெல்லாம் விடக் கொடுமை, தான் திருடி பிறரை நம்பாது என்ற கதையாக நடிகை சுகாசினி விமர்சனம் என்ற பெயரில் மிஷ்கினின் படம் குறித்து அளவுக்கதிகமாகப் பேசுகிறார். கொஞ்சம் திரும்பி தன் கணவரைப் பார்த்தால் நிலைமை எப்படியிருக்கும் என்று தெரியும். ஏற்கெனவே, இயக்குநர் சக்தி சிதம்பரம் வெளிப்-படையாக அறிக்கைவிட்டே விளாசியிருக்கிறார். இன்ஸ்பிரேசன் உரிமை எல்லாம் அவாளுக்கே உரியது போலும்.

இப்படி எங்கு வாய்ப்புக் கிடைத்தாலும், தங்கள் பங்கைச் செவ்வனே செய்து தங்கள் முதுகைத் திறந்து காட்டிவிடுவார்கள்… அது பயணவழி விவாதமாக இருந்தாலும் சரி.. பத்திரிகையில் துணுக்கானாலும் சரி..! அப்படி ஒரு அக்கிரகாரத்துத் திருமேனி ஒன்று அண்மையில் தனது முதுகைத் திறந்து பூணூலைக் காட்டியிருக்கிறது. புக்கர் பரிசு பெற்ற அந்த (பூ)நூலார் யார் தெரியுமா?  அரவிந்த் (அடிகா).

அடிகா என்பது மேற்குக்கரை கன்னட அவாள் பயன்படுத்தும் ஜாதி வால். இரண்டாண்டுகளுக்கு முன் தி வொயிட் டைகர் என்ற நாவலுக்காக அரவிந்த், புக்கர் பரிசு பெறும்போது, ஒரு பொழுதுபோக்கு நாவலுக்கு இவ்வளவு பெரிய பரிசா என்று விவாதங்கள் நடந்தன என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இவர் சென்னையில் பிறந்தவர் என்பதால் தமிழ்நாட்டு ஊடகங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமான விளம்பரத்தையும் கொடுத்திருந்தன. கடந்த மாதம் இவர் கருநாடகாவில் இருந்து சென்னைக்கு வந்தாராம். அதைப் பற்றி ஆங்கில இந்தியா டுடேயில் ஒரு பத்தி எழுதியிருக்கிறார். பெங்களூரில் இருந்து கிளம்பும்போது ஓட்டுநரிடம், மெட்ராஸ்-க்குப் போக வேண்டும் என்றாராம். ஓட்டுநரோ, சென்னைக்குப் போகும் என்று சொல்லியல்லவா எங்கள் கம்பெனியிலிருந்து அனுப்பினார்கள் என்று முரண்டுபிடித்தாராம். மெட்ராஸ்தான் என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல், கடைசியில் ஓட்டுநர் சொன்னபடி, உன்னுடைய சென்னைக்கே போ என்று ஒப்புக் கொண்டாராம் அரவிந்த். சென்னைக்குள் நுழைந்தவருக்கு நகரமே வேறாகத் தெரிந்ததாம். எங்கேயும் மெட்ராஸைக் காண முடியவில்லையாம். தான் சிறுபிள்ளையில் வாழ்ந்த நகரம் தொலைந்து போனதாகக் கவலைப்பட்டிருக்கிறார்.

சரி இதெல்லாம் எல்லோருக்கும் இருப்பதுதானே என்று நினைத்தால் அவர் சொல்ல வருவது அதுவல்ல. அதற்குப் பிறகுதான் அவருடைய பிரச்சினை என்ன என்பதற்கே வருகிறார். சென்னையில் தொழில் செய்துவந்த கன்னடப் பார்ப்பனர்களின் இன்றைய நிலைமை பற்றி நினைத்தால் தனக்கு ஜெர்மனிலிருந்து விரட்டப்பட்ட யூதர்களின் நினைப்பு வருகிறதாம். ஆங்கிலேயர் காலம் தொட்டு செல்வச்செழிப்புடன் தாஸ்பிரகாஷ், வுட்லேண்ட்ஸ் என்று சென்னையில் தொழில் நடத்திவந்தவர்கள் தங்கள் ஊர்களான மங்களூர் பகுதியை நோக்கியும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நோக்கியும் பறந்துபோனார்களாம். எஞ்சியோர், தி.மு.க. ஆட்சி வந்த பின் அயலவர்கள் என்று தாங்கள் ஒதுக்கப்படுவோம் என்ற அச்சம் மிகுதியால் ராவ், பட், ஆச்சார்யா உள்ளிட்ட தங்கள் குலத்தார் தங்களின் ஜாதிப் பெயரொட்டினைப் போடமுடியாமல் பயந்து போனார்களாம். மெட்ராஸ் என்பதற்கு ஆதரவளிக்க ஆளே இல்லையே என்று அங்கலாய்க்கிறார்.

தெற்கு கர்நாடகாவிலிருந்து சென்னையில் குடியேறி ஆங்கில அரசின் கீழ் பிரபல டாக்டர் களாகவும், வக்கீல்களாகவும், தொழிலதிபர்களாக வும் விளங்கிவந்தோம். பின்னர் வேலைவாய்ப்புக்குத் திண்டாடினோம் என்றெல்லாம் புலம்புகிறாரே..! ஓர் இனம் தன்னுடைய பண்பாட்டை மீட்டெடுத்து, திரிக்கப்பட்ட தங்கள் ஊர்ப் பெயர்களைத் திரும்ப மாற்றிவைத்துக் கொண்டது பொறுக்கவில்லை இவர்களுக்கு! ஜெர்மனியில் யூதர் இனம் பட்ட துன்பத்தை தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு ஏற்படுத்தியதைப் போல மாய்மாலம் காட்டி, திராவிட இயக்க அரசியலை நாஜிப் படைகளோடு ஒப்பிடுகிறாரே.. எத்தனை கேடுகெட்ட அயோக்கியத்தனம்! ரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சியால் மட்டுமே இன இழிவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று தந்தை பெரியார் முடிவெடுக்காமல் ஆயுதம் தூக்குங்கள்; அழித்தொழியுங்கள் என்று சொல்லியிருந்-தால் நிலை என்ன? ஒரு பார்ப்பனப் புல் பூண்டாவது எஞ்சியிருக்குமா? இன்றைக்கும் ஆரியம் தனது அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறதே அனைத்துத் துறையிலும்! அதை மீட்க ஒவ்வொரு நாளும் இந்த இயக்கம் போராடிக் கொண்டிருக்கிறதே! ஒடுக்கப்பட்ட மக்களை, மண்ணின் உரிமையாளர்களை விழிப்படையச் செய்து அவர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்குவதை எவ்வளவு நாசூக்காக கொச்சைப்படுத்துகிறது அரவிந்தின் எழுதுகோல்! உண்மையில் இன்றைய சென்னையின் உண்மை நிலை என்ன? பஞ்சம் பிழைக்க எவர் வந்தாலும் நெஞ்சம் சுரக்கும் அன்னை என்று வைரமுத்து எழுதிய வரிகளைப் போல, பஞ்சம் பிழைக்க வந்த பார்ப்பனர் தொடங்கி, பனியா, மார்வாடி, குஜராத்தி என்று வந்தேறிகளின் வேட்டைக் காடாக மாறியிருக்கிறதே சென்னை! இந்த நகரத்தின் பூர்வீகக் குடிகள் நகரினுள் வாழமுடியாத அளவுக்கு, பணமுதலைகளால் விரட்டப்பட்டிருக்கிறார்களே.. அதற்கான போராட்டத்தை வந்தேறியே வெளியேறு என்று மீண்டும் முன்னெடுக்க வேண்டிய சூழல் இன்றைக்கும் தொடர்கிறதே. ஆனால், ஆரிய நாடோடிக் கூட்டத்தின் பிரதிநிதி அடிகா பசப்புகிறார்.. சென்னையில் இவர்களெல்லாம் வாடிவதங்கியதைப் போல!

இன்றைக்கும் இந்திய ஏகாதிபத்தியத்தால் தங்கள் மண்ணில் வாழ முடியாமல் தவிக்கும் வடகிழக்கு மாநில மக்களை இழிவுபடுத்தி, அந்த இனத்துப் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்பதைப்போல படம்காட்டிய அடிகா கும்பலுக்கு, மண்ணின் மைந்தர்களைக் கண்டால் எப்போதும் நடுக்கம் இருக்கத்தான் செய்யும். எங்கும் அதிகாரம் தேடி அலையும் தங்களை மிகச்சரியாக யூதர்களோடு ஒப்பிட்டுப் பேசியுள்ள அடிகாவின் பார்ப்பனப் புத்தி, ஒவ்வொரு பார்ப்பனக் கொடுக்கின் மூளையிலும் வஞ்சனை தான் நிரம்பியிருக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் ஆகும்.

– சமா இளவரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *