சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ஆளுமையின் அடையாளம் அன்னை மணியம்மையார்!

ஏப்ரல் 1-15 2019

சென்ற இதழ் தொடர்ச்சி…

 ஆளுமையின் அடையாளம்
 அன்னை மணியம்மையார்!

நூல்    : கருஞ்சட்டைப் பெண்கள்

ஆசிரியர்        : ஓவியா

வெளியீடு     : கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை-87.

விலை: 130. பக்கங்கள்: 176

 

பத்திரிகைச் சுதந்திரத்திற்காக:

பத்திரிகைச் சுதந்திரம் என்பதற்காகத் தொடர்ந்து எண்ணற்ற கனைகளைத் தாங்கிய இயக்கம் திராவிடர் கழகம். இந்த இயக்கத்தின் பத்திரிகைகள் சந்திக்காத தடைகளே கிடையாது.

திருச்சி மாவட்ட ஆட்சியரைப் பற்றி இரண்டு பார்ப்பன நீதிபதிகள் அவதூறாகப் பேசுகிறார்கள். அதைத் தடுத்து ஆட்சியருக்கு ஆதரவாக வாதாடியிருக்க வேண்டிய அரசத் தரப்பு வழக்கறிஞரும் ஒரு பார்ப்பனர். அவரும் அதைச் சரியாக வாதாடவில்லை. இதைக் கண்டித்து விடுதலையில் கடுமையாக எதிர்த்து எழுகிறார் பெரியார். அதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும நீதிபதியும் ஒரு பார்ப்பனர். நீங்கள் அனைவரும் பார்ப்பனர்கள், நீங்கள் ஒரு மாவட்ட ஆட்சியரைத் தரக்குறைவாகப் பேசியிருக்கிறீர்கள், இதை நான் கேட்காமல் வேறு யார் கேட்பார் என்று கேட்டவர் பெரியார். இது அரசாங்கத்தின் உள் விவகாரம் என திராவிடர் கழகம் அப்போது ஒதுங்கி விடவில்லை. இடஒதுக்கீடு என்னும் உரிமையைப் போராடி பெற்றுத் தந்த தலைவர் மட்டுமன்று, அதன் காரணமாகப் பதவிக்கு வந்த முதல் தலைமுறையைப் பாதுகாக்கும் வேலையையும் தனது இயக்கத்தின் மூலமாகச் செய்தவர் தந்தை பெரியார்.

ஏற்கெனவே அந்தக் கட்டமைப்பில் இருப்பவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, தங்களைத் தவிர அந்தப் பதவிகளுக்கு வேறு சாதியினர் வந்துவிடக் கூடாது என்னும் கருத்தில் இருப்பவர்களுமாவர். அவர்கள் முதல் தலைமுறையினரை எவ்வாறு நடத்துவார்கள் என்று கணிப்பவராகவும் பெரியார் இருந்தார். இந்தக் காவல் பணியைத் திராவிடர் கழகம் போல வேறு யாரும் செய்ததில்லை. பகையில் இருந்து தமிழர்களைக் காக்கும் தடுப்பரண் திராவிடர் கழகம்.

இந்தக் காரணத்தினாலேயே ‘தமிழகம் ஒழுங்கற்ற மாநிலம்’ என்று நெருக்கடி காலத்தில் எரிச்சலாகச் சொன்னார் இந்திரா காந்தி. அவர்களால் எப்போதும் சமாளிக்க முடியாத மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. இந்தியாவின் வேறு எந்தப் பகுதியும் அவர்களுக்கு இப்படிப்பட்ட அச்சுறுத்தலைத் தருவதில்லை. தமிழ்நாட்டின் இந்த நிலைக்குக் காரணம் ‘ஒரு நாள் புரட்சி அல்ல. அது ஓர் இயக்கத்தின் தொடர் நிகழ்வு. அதன் தொடர் பணிகளால் விளைந்த கனி. விடுதலை ஏட்டின் பொறுப்பு ஆசிரியராக அன்றைக்குத் தொடுக்கப்பட்ட வழக்குகளை தீரமுடன் எதிர்கொண்டவர் மணியம்மையார்.

பம்பாயில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது 1967இல் சிவசேனை எதிர்ப்புக் குழு ஒன்றை பெரியார் அமைக்கிறார். ஏழு உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவில் மணியம்மையார், விசாலாட்சி அம்மையார் என இரு பெண்கள் இருந்தனர். தமிழர்கள் உலகின் எந்தப் பகுதியில் தாக்கப்பட்டாலும் அதற்காகத் திராவிடர் கழகம் உரிய கவனத்தைச் செலுத்தியது. அதற்கான கட்டமைப்புகளைச் செயற்படுத்தியே வந்துள்ளது. ஈழத் தந்தை செல்வா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்தபோது ‘நானே ஒரு அடிமை’ எனப் பெரியார் சொன்னதாக மேற்கோள் காட்டப்படும் விசயம் ஆழமான அரசியல் கேள்வியாகும். அது ஓர் எச்சரிக்கைக் கேள்வியுமாகும்.

தன்னை மறந்தார்:

ஒருபுறம் தொண்டு, மறுபுறம் போராட்டம் என வாழ்ந்த மணியம்மையார் தனது உடல்நிலையைப் பேணவில்லை. பெரியார் இறந்தபிறகு மணியம்மையார் வாழ்ந்த 5 ஆண்டுகளும் போராட்டக் களத்தில் வீரியமாகச் செயல்பட்டார். இந்தியாவில் நெருக்கடி நிலையைச் சமாளித்து இயக்கத்தைக் காத்தது, இராவண லீலா கொண்டாடியது என பெரியார் அவர்களின் மறைவுக்குப் பிறகும் இயக்கத்தைத் தீவிரமாகப் பெரியார் வழியிலேயே முன்னெடுத்துச் சென்றவர் மணியம்மையார்.

இராவண லீலா:

1928கள் முதல் இராமாயணம் குறித்துப் பெரியார் பேசத் தொடங்குகிறார். இந்த நாட்டில்இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எதிர்த்துப் பேசிய இரண்டே தலைவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும். வேறு எவரும் எதிர்த்துப் பேச மாட்டார்கள். ஏனெனில் இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய ஆதிக்கத்திற்கு ஒத்திசைவான இதிகாசங்கள் அவை. அந்த இரு காப்பியங்களையும் மறுத்துவிட்டால் அதன்பிறகு இந்தியா என்னும் கட்டமைப்பைப் பற்றி புளகாங்கிதம் அடைவதற்கு ஏதுமில்லை. ‘தமிழன்டா’ என்ற உணர்வு இன்றைய சூழலில் தமிழ் இளைஞர்களிடம் மேலோங்கியிருப்பது போல, ‘இந்தியன் டா’ என்று மெய் சிலிர்ப்பதற்கு ஏதாவது ஒன்று முன்னிறுத்த வேண்டுமென்றால்அதனை இராமாயணம், மகாபாரதம் என்னும் இரு காப்பியங்களை வைத்ததுதான் செய்ய முடியும்.

1928களில் இருந்து எதற்காக ஓர் இயக்கம் தொடர்ந்து இராமனை விமர்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்; எதற்காக இராமனை எதிர்முனையில் நிறுத்த வேண்டும் என்பதற்குப் பெரியார் சொல்கிறார், ‘இராமாயணம் என்பது வெறும் ஆரியர் _ திராவிடர் போர் என்பதைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை. அதனால் அது முற்றிலும் நமக்கு எதிரானதே’. எதை வைத்து நாம் ஆளப்படுகிறோமோ, அடக்கப்பட்டுள்ளோமோ, அதை எதிர்ப்பது, கட்டுடைப்பது, அதற்கு எதிரான பிம்பங்களை உருவாக்குவது என்னும் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் சுமார் 90 ஆண்டுகளாகச் செய்து வருகிறது. 1957இல் இராமன் படம் எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் நடத்தினார். இந்த எதிர்ப்பு முக்கியமானது என்பதைத் திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

‘இராமாயணம் திராவிட மக்களை இழிவுபடுத்தும் புராணம். ஆதலாலும் மதத்தின் பெயரால் மக்களிடையே புகுத்தப்பட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்குப் பல விதங்களிலும் தடை ஏற்படுத்தியதோடு மூடப் பழக்கவழக்கங்களை மக்களிடையே வளர்ப்பதற்கு இராமாயணம் காரணமாயிருப்பதால், இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை நாட்டில் தீவிரமாக நடத்த வேண்டும்’ என்னும் வேலைத் திட்டத்தை திராவிடர் கழகம் முன்வைத்தது.

இராவண லீலா, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் உள்ளிட்ட விசயங்களை பெரியார் 1970களில் மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். நமக்கு நேரம் இல்லை, மிக விரைவாக இவற்றை நாம் செய்து முடிக்க வேண்டும் என்று சொன்னார். 1973இல் அவரின் மறைவுக்குப் பின்னர் முழுமையான பொறுப்பு அன்னை மணியம்மையாரின் கைகளுக்கு வருகிறது. அரசியல் இயக்கங்களில் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்திருக்கலாம். ஆனால், ஒரு முழுமையான கலாச்சார எதிர்ப்பும், பகுத்தறிவு வழியும், ஆளும் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான ஓர் இயக்கத்திற்கு ஒரு பெண் தலைவராக வந்தார் என்பதே வரலாற்றில் பொறிக்கப்பட்ட சாதனை. பெண்களின் வரலாற்றில் இது மிக முக்கியமான சாதனை.

தலைமைப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டில் இராவண லீலாவை அறிவிக்கிறார் மணியம்மையார். பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் இதுகுறித்து மடல் எழுதுகிறார். எந்தவொரு போராட்டத்தையும் முறைப்படுத்தி நெறிப்படுத்திச் செய்யும் பயிற்சி பெரியாரிடமிருந்து அவருக்கு வந்திருக்கிறது. மணியம்மையார் அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு எழுதுகிறார்.

‘இராமாயணம் என்பது வெறும் ஆரியர் – திராவிடர் போர் என்பதைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை. அதனால் அது முற்றிலும் நமக்கு எதிரானதே’. எதை வைத்து நாம் ஆளப்படுகிறோமோ, அடக்கப்பட்டுள்ளோமோ, அதை எதிர்ப்பது, கட்டுடைப்பது, அதற்கு எதிரான பிம்பங்களை உருவாக்குவது என்னும் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் சுமார் 90 ஆண்டுகளாகச் செய்து வருகிறது.

உங்கள் தந்தையே உங்களுக்கு எழுதியது நியாபகம் இருக்குமென்று நினைக்கிறோம். அதையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இராம லீலா நடத்துவது தென்னாட்டவராகிய எங்களைப் புண்படுத்துகிறது. அவை புராணக் கதைகள், இன்று நாம் அனைவரும் ஒரே நாட்டவர் என்பது உண்மையெனில் நீங்கள் இராம லீலாவைக் கொண்டாடக் கூடாது. நிறுத்த வேண்டும்’.

இதற்கு இந்திரா காந்தியும் குடியரசுத் தலைவரும் பதில் தரவில்லை. இராம லீலா நடத்துவதற்கு ஆதரவான செய்திகள் அதிகமாக வரத் தொடங்கியது. அப்படியே நடந்தாலும் பிரதமரும் குடியரசுத் தலைவரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் மணியம்மையார் வலியுறுத்துகிறார். ஆனால், அந்த ஆண்டும் வழக்கம்போல பிரதமரும் குடியரசுத தலைவரும் கலந்துகொள்கின்றனர்.

அதையடுத்து இராவண லீலாவை அறிவிக்கிறார் மணியம்மையார். பெரியார் நினைவு நாளான திசம்பர் 24க்கு அடுத்த நாள் இராவண லீலா நடத்தப்படும் என்பதைக் கேள்விப்படும் இந்திரா காந்தி மணியம்மையாரின் கடிதத்தை அலட்சியப்படுத்தி விட்டோமோ என அப்போது எண்ணுகிறார். அதன்பிறகு இந்திரா காந்தி மணியம்மையாருக்குப் பதில் அனுப்புகிறார். இராமாயணம் ஆரியர் _ திராவிடர் போர் என்பதெல்லாம் கிடையாது என்று சொல்லும் இந்திரா காந்தி, இராவண லீலா நடத்தக்கூடாது என்றும் கூறுகிறார். அதை மணியம்மையார் கண்டுகொள்ளவில்லை.

அப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடக்கிறது. திராவிடர் கழகத்தின் ஆதரவும் தி.மு.க.வுக்கு அப்போது இருந்தது. ஆனாலும், எது செய்தாலும் அதைக் காரணம் சொல்லி ஆட்சி பறிக்கப்படுமோ என்னும் அச்சம் தமிழக ஆட்சியாளர்களுக்கு எப்போதும் இருப்பதுபோல அப்போதும் இருந்தது. இராவண லீலாவுக்கு முந்தைய நாள் ஆசிரியர் கி.வீரமணி கைது செய்யப்படுகிறார்.

தலைவராக ஒரு பெண் இருந்தபோதும் அடுத்த நிலையில் இருக்கும் ஆண்தான் இதை முன்னெடுக்கிறார் என்னும் சிந்தனையின் நீட்சியாகக் கூட ஆசிரியர் அய்யா அவர்களை மட்டும் கைது செய்யும் நிகழ்வு நடந்திருக்கலாம். ஆனால், அறிவித்தபடியே பெரியார் நினைவு நாளுக்கு அடுத்த நாள் மணியம்மையார் தலைமையில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ, பெரியார் திடலில் இராவண லீலா நடைபெற்றது. அதில் நானும் பங்கேற்றிருப்பதில் பெருமைப்படுகிறேன்.

இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு நிகழ்வு நடக்கிறது என்று ஆர்ப்பரித்துப் பார்த்த ஒரு நிகழ்வாக, இந்தியாவே திரும்பிப் பார்த்த ஒரு நிகழ்வாக இராவண லீலாவை அன்னை மணியம்மையா£ முன்னெடுத்தார்.

அன்றைய போராட்டத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டார்கள. பஞ்சாபில் இருந்து அம்பேத்கரிய இயக்கங்கள் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பினார்கள். இந்த ஆண்டு நீங்கள் நடத்துங்கள், அடுத்தாண்டு நாங்கள் நடத்துவோம் என்று அறிவித்தார்கள். இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு நிகழ்வு நடக்கிறது என்று ஆர்ப்பரித்துப் பார்த்த ஒரு நிகழ்வாக, இந்தியாவே திரும்பிப் பார்த்த ஒரு நிகழ்வாக இராவண லீலாவை அன்னை மணியம்மையா£ முன்னெடுத்தார். இந்திய வரலாற்றில் முழுமையான அரசியல் போராட்டமாக இராவண லீலாவை மிக வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் அன்னை மணியம்மையார்.

திராவிடர்களின் கலாச்சாரத்திற்காகப் போராட வேண்டுமென்றால் அன்னை மணியம்மையாரின் பெயரை உச்சரிக்காமல் வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. இராமாயணத்திற்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால், இராமனைக் கொளுத்திய திராவிடர் கழகத்திற்கும், இராவண லீலா நடத்திய மணியம்மையாருக்கும் அந்த வரலாற்றில் இடமுண்டு. அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இந்தச் செயல்கள் நடைபெற்றன.

அவரசரநிலை அறிவிப்பும் கழகம் அனுபவித்த இன்னல்களும்:

பெரியார் காலத்திலேயே திராவிடர் கழகத்தை ஒடுக்கக்கூடிய மிகப் பெரிய ஆயுதமாக வருமான வரித்துறையை இந்திய அரசு பயன்படுத்தியது. அப்போதே பதினைந்து இலட்ச ரூபாய் அபராதமும் ஒரு இலட்ச ரூபாய் வரியும் விதிக்கப்பட்டன. ஓர் அறக்கட்டளை மீதான மிகப் பெரிய தாக்குதல் இது. இந்த இடையுறுகள் குறித்துப் பெரியார் எழுதுகிறார். ‘வருமான வரித்துறை மூலமாக நமது இயக்கத்தை நசுக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். நமக்குப் பொருளாதார நெருக்கடி கொடுத்து ‘விடுதலை’ நாளேட்டை நடத்த முடியாத வண்ணம் ஒடுக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மணியம்மையார் காலத்தில் இந்தத் தாக்குதல்கள் அதிகரித்தன. நெருக்கடி நிலைக் காலத்தில் இது உச்சத்துக்குச் சென்றது. ஒருபுறம் வருமான வரித்துறையின் தாக்கு-தல், மறுபுறம் அரசின் ஒடுக்குமுறை என இருவழி அடக்குமுறைகளை எதிர்த்து நின்றார் மணியம்மையார். கொடூரமான அடக்குமுறைகளை எதிர்த்து நின்றார் மணியம்மையார். கொடூரமான காலத்தில் இயக்கத்தை வழிநடத்திய தலைமைப் பண்பாளர் அவர்.

இந்திராகாந்தி அம்மையாருடைய அடக்குமுறை ஆட்சியினுடைய உச்சமாக அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது. அப்போது திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் பொதுவுடைமை இயக்கமும் அரசினுடைய கொடுமையான நடவடிக்கைகளுக்கு இலக்காகின. பெரியார் கூடச் சந்தித்திராத அந்தக் கொடுங்கோன்மையான காலத்தை அன்னை மணியம்மையார் தலைமையிலான திராவிடர் கழகம் சந்தித்தது. பொதுமக்களும்கூட ஆளுங்கட்சியினரும் காவல்துறையினரும் இந்திரா காங்கிரஸ் கட்சிக்காரர்களும் இணைந்து நடத்திய வன்முறைகளுக்குத் தப்பவில்லை. இந்த நிலையில் சென்னை வந்த இந்திரா காந்திக்குத் திராவிடர் கழகத்தால் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை அரசு தடை செய்தது. தடையை மீறி கறுப்புக் கொடி கிளர்ச்சி நடக்கும் என அம்மையார் அறிவித்தார். அதில் முதலில் சென்ற அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர்   கி.வீரமணி அவர்களும் கழகத் தோழர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

அம்மா அவர்களும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

(தொடரும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *