இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ பயிற்சியாளர், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தவர், உலக அமைதி உள்ளிட்ட ஏராளமான விருதுகளுக்குச் சொந்தக்காரர். மரபு வழி மருத்துவம் பயின்றவர். இந்திய வான்படை பயிற்சியில் வானத்தில் குட்டிக்கரணம் போட்டு சாகசம் செய்து காட்டியவர். துப்பாக்கி சுடுவதில் வல்லவர், மலையேறுவதில் திறமைசாலி, தற்காப்புக் கலையில் ஆண்களோடு போட்டியிட்டு பட்டம் வென்ற ஒரே பெண்மணி என்ற பெருமையும் பெற்றவர் சீமாராவ். இவரது தந்தை டாக்டர் ராம்காந்த் சினாரி. கோவாவின் சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். ராணுவத்தில் பணியாற்றியதால் குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார். இளம் வயதிலேயே ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ தற்காப்புக் கலையில் வல்லமை பெற்றார்.
திருமணத்திற்கு பிறகு கணவர் மேஜர் தீபக்ராவ் கொடுத்த ஊக்கம், தற்காப்பு கலையோடு, உலக பயங்கரவாதத்திலிருந்து வெற்றி பெறுவது எப்படி? போரில் எப்படி சண்டையிடுவது? குறித்து பல நூல்களை எழுத உதவியது. அவற்றை தனது சொந்தத் செலவில் வெளியிட்டு, கிடைத்த வருமானத்தை ஆயுதப் படைக்கு மட்டுமே செலவு செய்தார். இவரின் மகள் கோமல் ராவ் ஒரு மருத்துவர். தனது தாய் சீமாவை முன்னுதாரணமாகக் கொண்டு ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அதிரடி தற்காப்புக் கலையில் சாதனை படைத்து வருகிறார்; அவர் பயிற்சி முறையும் கடந்து வந்த பாதையும் பற்றிக் கூறுகையில்,
“தற்காப்புக் கலைக்கு பொறுமையும் கடின உழைப்பும் தேவை. ஒருமுறை பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட காயத்தால் படுக்கை அறையை விட்டு வெளியே வர முடியவிலை. அதிலிருந்து மீண்டுவர தாயின் அரவணைப்பும் தேவையாயிருந்தது’’ என்கிறார். “மும்பை நகரில் வாலிபர் ஒருவர் என்னிடம் அத்துமீறி நடந்துகொள்ள முயன்றான். அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். அங்கிருந்து, வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் சொன்ன போது என்னை கட்டி அணைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தார்.
‘அடுத்த முறை பலமாக அடித்துவிட்டு வா’ என தைரியப்படுத்தினார். மும்பையில் நடந்த போட்டி ஒன்றில் ஆடவர் ஒருவரை எதிர்கொண்டார். அந்தப் போட்டியில் என் அம்மா போலவே தீரத்துடன் போராடி அந்த ஆடவரை வீழ்த்தினேன்’’ என்கிறார் உற்சாகம் பொங்க.
“முடிவு என்னவாகும் என்று எதிர்பார்க்கப்படுவது பெரும் தவறு. ஆரம்பத்திலேயே வெற்றிகரமாக முடிப்போமா? தோல்வியில் முடியுமா? என்று சிந்திக்கவும் கூடாது. அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். சரியான நேரத்தில் வெற்றி கிடைக்கும்’’ என புரூஸ்லீ கூறியதை நினைவுபடுத்தினார்.
மருத்துவத் துறையோடு தங்களை சுருக்கிக் கொள்ள விரும்பாத தாயும் மகளும் அதிரடிக்கு பெயர் பெற்று விளங்குகின்றனர்.
உண்மையான பெண் விடுதலையை நோக்கி பயணிக்க போராட்டமே ஒரே வழி. இதை தீவிரமாக சிந்தித்தால் பெண்களும் ஆண்களுக்கு இணையாக பலசாலியாக முடியும் என்பதை தாயும் மகளும் நமக்கு வழிகாட்டுகிறார்கள்!
தகவல் : சந்தோஷ்