சிறுகதை : கல்விச் சுற்றுலா

ஏப்ரல் 1-15 2019

ஆறு.கலைச் செல்வன்

அபிநயா கூறியவுடன் எட்டாம் வகுப்பு மாணவி இனியா மிகுந்த உற்சாகத்துடன் கட்டுரை ஏட்டை எடுத்து எழுதத் தொடங்கினாள். தனியாகச் சென்று பார்க்க இயலாத இடங்களையெல்லாம் ஆசிரியைகள் உதவியுடன் தோழிகளுடன் சென்று கண்டு களித்து அவ்விடங்களின் சிறப்புகளை நன்கு அறிந்து கொள்ள கல்விச் சுற்றுலா உறுதுணை புரியும் என எழுதத் தொடங்கி கல்விச் சுற்றுலாவிற்கு ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியைகள் மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டியது அவசியம் என எழுதி முடித்தாள்.

அவளது கட்டுரையைப் படித்துப் பார்த்த ஆசிரியை அபிநயா மிகவும் மகிழ்ந்தார். இவ்வாண்டிலேயே அந்த வகுப்புப் பிள்ளைகளை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். அவருடன் உஷா, பிரியா ஆகிய ஆசிரியைகளையும் துணைக்கு அழைத்துச் செல்வதென முடிவு செய்து புறப்படுவதற்கான நாளையும் தேர்வு செய்தார்.

சுற்றுலா செல்லும் நாளும் வந்தது. எட்டாம் வகுப்பில் படிக்கும் நாற்பது பிள்ளைகள் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். ஆசிரியைகள் மூவரும் பேருந்தில் அமர்ந்த பின்பே பேருந்து புறப்பட்டது.

பேருந்து தில்லை நகரை அடைந்தது. பிள்ளைகள் அனைவரும் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அக்கோயிலின் சிறப்புகள் என பல செய்திகளை விலாவாரியாக ஆசிரியைகள் மூவரும் மாணவிகளுக்கு எடுத்துச் சொன்னார்கள். நடனமாடும் சிலையின் காலில்தான் பூமியின் மையமே உள்ளது என ஆசிரியை அபிநயா கூறினார். சில மாணவிகள் அதை ஆர்வத்துடன் கேட்டனர். ஆனால், இனியா அதை விரும்பவில்லை.

“சுழலும் உருண்டைக்கு எப்படி டீச்சர் மையப்புள்ளி கண்டுபிடிச்சாங்க?’’ என எதிர்வினா எழுப்பினாள். ஆசிரியைகள் யாருமே பதில் கூறவில்லை.

இயற்கைத் துன்பங்களைக்கூட களைவதற்கு இயலாத நிலையில் மாணவிகள் அனைவரும் மிகுந்த அல்லல்பட்டனர். நல்ல வெயிலில் காலில் செருப்புகள் அணியாத நிலையில் நடந்த மாணவிகள் எங்காவது நிழல் இருக்குமா எனத் தேடி ஓடினர். உள்ளே சுற்றித் திரிந்த மாடுகள் அவர்களைத் துரத்தின. ஆளை விட்டால்போதுமென்று அனைவரும் பேருந்து நிற்கும் இடம் நோக்கி விரைந்தனர்.

அடுத்த ஊருக்கு பேருந்து புறப்பட உள்ளது என ஆசிரியைகள் கூறியதும் திடுக்கிட்ட இனியா ஆசிரியை அபிநயாவைப் பார்த்து,

“டீச்சர். இந்த ஊரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இருக்கு. அதைப் பார்க்க வேணும் டீச்சர்’’ என்றாள்.

சில மாணவிகளும் அவள் கேட்டதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

“இப்ப டைம் இல்லை. நாம் அடுத்த ஊருக்குப் போகணும்’’ என்றார் ஆசிரியை அபிநயா. ஆசிரியைகள் உஷாவும், பிரியாவும் அதையே கூறினார்கள்.

“தமிழ்நாட்டில் அது புகழ்பெற்ற பல்கலைக்கழகமாம் டீச்சர். எங்க அப்பாகூட அங்குதான் படிச்சாராம். அவசியமா பார்க்கணும் டீச்சர்’’ என்று கெஞ்சினாள் இனியா.

அவளே மீண்டும் பேசினாள்.

“அய்ம்பது வருஷங்களுக்கு முன்னாடி நம்ம தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மட்டும்தான் இருந்துச்சாம். அப்பா சொன்னாங்க.

இந்தப் பகுதியில் வசிக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் படிக்கிறதுக்கு முக்கிய காரணமாக இருந்தது இந்தப் பல்கலைக்கழகம்தானாம்.’’

இப்படியெல்லாம் பேசிய இனியாவை வியப்புடன் பார்த்தனர் ஆசிரியைகள்.

“1929ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்தப் பல்கலைக்கழகத்தைப் பார்க்க முடியவில்லையே’’ என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே பயணித்தாள் இனியா.

அடுத்துப் பார்க்க வேண்டிய ஊரும் ஆசிரியைகளால் ஏற்கனவே முடிவு செய்தபடி வந்துவிட்டதால் மாணவிகளை கீழே இறக்கினர் ஆசிரியைகள்.

அந்த ஊரிலும் கோயிலுக்கே அழைத்துச் சென்றனர். ஆசிரியை உஷா அந்தக் கோயிலின் அருமை பெருமைகளையெல்லாம் மாணவிகளிடம் விவரித்தார்.

“இந்த ஊர் சாமியின் பெயர் வைத்தியநாதன். மக்களுக்கு வரும் நோயையெல்லாம் இந்தச் சாமி போக்கும். ரொம்ப சக்தி வாய்ந்த சாமி. ரொம்ப பெரிய ஆட்கள் எல்லாம் இங்க வருவாங்க. இங்க ஜோசியம் பார்த்தா அப்படியே பலிக்கும்’’ என்று மூச்சுவிடாமல் பேசினர் உஷா.

“அய்ம்பது வருஷங்களுக்கு முன்னாடி நம்ம தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மட்டும்தான் இருந்துச்சாம். அப்பா சொன்னாங்க.

”சரி, அப்படியே இருந்தாலும் அதனால் இந்த ஊருக்கு என்ன பயன் விளைஞ்சிருக்கு? இங்கு நோய் நொடியே இல்லையா? அப்படிப்பட்ட செய்திகள் எதையும் நான் கேள்விப்பட்டதில்லையே?’’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

“வர்ரப்போ ஒரு ஆஸ்பத்திரியில் நிறைய கூட்டம் இருந்துச்சே டீச்சர்! இந்த சாமிதான் நோயையெல்லாம் போக்கிடுவாரே! இங்கியே வந்திருக்கலாமல்லவா?’’ என்று ஒரு மாணவி கேட்டாள்.

அந்த மாணவியை முறைத்துப் பார்த்த உஷா ‘அதிகப் பிரசங்கி’ எனத் திட்டினார்.

மேலும், “நோய் நொடி எதுவும் வரக்கூடாது. அம்மா அப்பா யாருக்கும் எந்த நோயும் வரக்கூடாதுன்னு எல்லோரும் சாமியை வேண்டி கும்பிடுங்க’’ என்றார்.

இனியாவுக்கும் வேறுசில மாணவிகளுக்கும் இதில் சிறிதளவுகூட நாட்டமில்லை. ஆனால், மற்ற மாணவிகள் கண்களை மூடிக் கொண்டு சாமி கும்பிட்டனர். ஆசிரியைகளும் அவ்வாறே செய்தனர்.

அப்போது திடீரென யாரோ கீழே விழுவது போன்ற சத்தம் கேட்டது. எல்லோரும் கண் விழித்துப் பார்த்தபோது ஆசிரியை உஷாதான் மயக்கமடைந்து கிழே விழுந்துகிடந்தார். அனைவரும் பதறியபடி அவரைத் தூக்கினர்.

“உஷா, உஷா, என்னாச்சு உஷா’’ என பதறியபடியே அபிநயாவும், பிரியாவும் உஷாவை மடியில் கிடத்திக் கொண்டு கத்தினர்.

அந்த இடத்தில் கூட்டமும் கூடிவிட்டது. பலர் விபூதியை எடுத்துவந்து உஷா முகத்தில் தூவினர்.

சற்றுநேரத்தில் கண்விழித்த உஷா, “டாக்டர், டாக்டர்’’ என முனகினார்.

உஷா தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என விரும்புவதை அனைவரும் உணர்ந்தனர்.

சில மாணவிகள் தங்கள் ஆசிரியைகளைப் பார்த்து அது வேண்டாம் என்றனர்.

“இந்தச் சாமி எல்லா நோயையும் குணப்படுத்தும் என்று டீச்சர் சொன்னாங்க. ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம்’’ என அப்பாவித்தனமாகக் கூறினார்.

ஆனால், இனியாவுடன் வேறு சில மாணவிகள் டீச்சரை உடனடியாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றனர்.

பிறகு ஆசிரியைகள் அபிநயாவும், பிரியாவும் சற்றும் தாமதிக்காமல் மாணவிகளின் உதவியுடன் உஷாவைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவர் உடனடியாக உஷாவைப் பரிசோதித்து தக்க சிகிச்சையளித்தார். சற்று நேரத்தில் குணமடைந்த உஷா கண்விழித்து எழுந்தார்.

மேலும் மருத்துவர் உஷாவைப் பார்த்து இதற்கு முன் இப்படி நடந்தது உண்டா என வினவினார்.

அதற்கு உஷா தனக்கு ஒருமுறை இதுபோல் சில மாதங்களுக்கு முன் நடந்ததாகவும் ஆனால் மருத்துவமனை செல்லாமல் சாமிக்கு வேண்டிக் கொண்டதாகவும் கூறினார்.

“மிகவும் தவறு. அப்பவே நீங்க ஆஸ்பத்திரிக்கு போயிருக்க வேண்டும். உங்களுக்கு இதயத்தில் சில பிரச்சினைகள் இருக்கு. உங்க ஊருக்குப் போன பிறகு நல்லமுறையில் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை எடுத்துக்க வேணும்’’ என்று அந்த மருத்துவர் உஷாவுக்கு அறிவுரை கூறினார்.

அப்போது ஒரு மாணவி, “இந்த ஊர் வைத்தியநாதன் சாமி நோயைக் குணப்படுத்தமாட்டாரா?’’ என்றாள்.

மருத்துவர் அந்த மாணவியைப் பார்த்து புன்னகைத்தார்.

“அப்படிப் பார்த்தா எங்களுக்கு வேலையே இல்லையம்மா. மருத்துவக் கல்லூரிகளை யெல்லாம் இழுத்து மூடிவிடலாமே’’ என்று கூறியபடியே அடுத்த நோயாளியைக் கவனிக்கச் சென்றார் மருத்துவர்.

அதோடு சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பி விடலாமென ஆசிரியைகள் முடிவெடுத்தனர். மாணவிகளும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

பேருந்து புறப்பட்டது. இனியா முகவாட்டத்துடன் உட்கார்ந்திருந்தாள்.

ஆசிரியை அபிநயா அவளைப் பார்த்து, “இனியா ரொம்ப வருத்தமா இருக்கா. பல்கலைக்கழகத்தைப் பார்க்க முடியலையே என்கிற கவலை உனக்கு இன்னும் இருக்கு’’ என்றார்.

“ஆமாம் டீச்சர். ஆனாலும் எங்க டீச்சருக்கு உடம்பு சரியில்லாம போனது ரொம்ப வருத்தமா இருக்கு’’ என்றாள் இனியா.

“இன்னும் நிறைய பார்க்க வேண்டிய நல்ல இடங்கள் இருக்கு’’ என்றார் ஆசிரியை அபிநயா.

“ஆமாம் டீச்சர். பக்கத்தில பிச்சாவரம் இருக்கு. அங்குள்ள அலையாத்திக் காடுகள் உலகிலேயே இரண்டாவது பெரிய காடுகளாம் டீச்சர்’’ என்றாள் இனியா.

“நீ நிறைய தெரிஞ்சு வைச்சிருக்க இனியா. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. அதுபற்றி வேறேன்ன தெரியும் உனக்கு?’’ என்று கேட்டார் ஆசிரியை பிரியா.

“அந்தக் காட்டில் சுரபுன்னை மரங்கள் இருக்காம். அதன் இலைகள் பழுத்து தண்ணீரில் விழுந்து அழுகி விடுமல்லவா! அதை மீன்கள், இரால் வகைகள் சாப்பிட்டு வளருமாம். நிறைய பறவைகளும் வருமாம் டீச்சர்’’ என்றாள் இனியா.

“அப்படிப் பார்த்தா எங்களுக்கு வேலையே இல்லையம்மா. மருத்துவக் கல்லூரிகளை யெல்லாம் இழுத்து மூடிவிடலாமே’’ என்று கூறியபடியே அடுத்த நோயாளியைக் கவனிக்கச் சென்றார் மருத்துவர்.

“இன்னும் ஒரு முக்கிய செய்தி இருக்கு இனியா. அதை நீ இன்னும் சொல்லவில்லையே’’ என்று கேட்டார் பிரியா.

“ஆமாம் டீச்சர். 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி சுனாமி வந்தது. அப்போது தமிழ்நாட்டில் கடலோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல ஊர்களுக்குள் கடல் நீர் புகுந்து பெரும் அழிவு ஏற்பட்டது. பல பேர் செத்துப் போயிட்டாங்க. ஆனாலும், பிச்சாவரத்தில் அலையாத்திக் காடுகள் இருந்ததால் அந்தப் பகுதி பெரும் பாதிப்பு இல்லாமல் தப்பித்துவிட்டது. இதை நானும் புத்தகத்தில் படிச்சிருக்கேன். அப்பாவும் அம்மாவும் சொல்லியிருக்காங்க’’ என்றாள் இனியா.

பிறகு ஆசிரியைகள் மூவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

“மாணவிகள் நல்லா சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனிமே அவர்களை கோயில், குளம்னு சொல்லி ஏமாத்த முடியாது. உண்மையில் அவர்களுக்கு இருக்கும் சிந்தனைகூட நமக்கு இல்லாமல் போயிடுச்சி. பல்கலைக்கழகத்தையும், பிச்சாவரம் காட்டையும் நாம் அவங்களுக்கு காட்டியிருக்கணும். இனிமேல் சுற்றுலா சென்றால் அறிவியல் மனப்பான்மையோடு சிந்தனையைத் தூண்டி அறிவை வளர்க்கும் இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் மூடநம்பிக்கைகளை மாணவிகள் மத்தியில் பரப்பக் கூடாது’’ என்று ஆசிரியை அபிநயா கூறியதை மற்ற இரு ஆசிரியைகளும் ஏற்றுக் கொண்டார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *