பழங்களைவிட பழச்சாற்றை சாப்பிடுவதையே குழந்தைகள் விரும்புவார்கள். ஏன், பெரியவர்களுக்கும்தான். பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நம் மரபு. காலப்போக்கில் அரைத்து சாறாகக் குடிக்கப் பழகினார். சிலர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஜூஸ் (பழச்சாறு) குடிப்பார்கள். சிலருக்கு பழச்சாறே உணவாகும். “காலையில் வெறும் வயிற்றில் தாராளமாக ஜூஸ் குடிக்கலாம். பழங்களில் மட்டுமல்லாமல் காய்கறி, கீரைகளிலும்கூட ஜூஸ் எடுத்துக் குடிப்பது நல்லது’’ என்கிறார் இயற்கை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ்.கோகுலகிருஷ்ணன்.
காய்கறி, பழங்களை ஜூஸாக்கிக் குடிப்பதால் சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளும் வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அவரவர் தேவைக்கேற்ப தினமும் ஏதாவது ஒரு பழச்சாற்றினை அருந்தலாம். பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலில் வைட்டமின் ஏ, சி போன்ற பல்வேறு அத்தியாவசியச் சத்துகள் உள்ளன. எனவே, தோலுடன் அரைத்து அருந்துவது நல்லது. ஆப்பிள், திராட்சை, மாம்பழம் போன்ற பழங்களையும், கேரட், பீட்ருட் போன்ற காய்கறிகளையும் தோலுடன் சேர்த்து அரைத்து அருந்தலாம்.
பழங்களின் சதைப் பகுதியில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் (Phytonurtrients) நிறைந்துள்ளன. இந்தச் சத்துகளை முழுமையாகப் பெற அதிக நேரம் அரைப்பதை தவிர்க்க வேண்டும். கோடை வெயிலில் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை நீக்க தர்பூசணி, மாதுளம் பழம், எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கிர்ணி, ஆப்பிள், பப்பாளி போன்ற பழச்சாற்றினை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறு கடைகளில் காய்ச்சாத பாலில் தயாரிக்கப்படும ஜூஸ்ஸினை தவிர்க்க வேண்டும். காய்ச்சாத பால் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். உணவு உண்ணும் நேரத்துக்கும் ஜூஸ் அருந்தும் நேரத்துக்கும் 30 நிமிட இடைவெளியாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவு சாப்பிட்டால் எலுமிச்சை ஜூஸ் அருந்தலாம். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அதன் பிறகு ஜூஸ் குடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
பழச்சாறும் அவற்றின் பயன்களும்
ஆரஞ்சு : குடல் சுத்தம் செய்யும்.
பப்பாளி : உயர் ரத்த அழுத்தம், மலச்சிக்கல் தீர்க்கும்.
மாம்பழம் : உடல் எடை அதிகரிக்க உதவும். செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மைக்குத் தீர்வு.
கறுப்பு திராட்சை : வாந்தி, மயக்கம் வராமல் தடுக்கும்.
ஆப்பிள், பீட்ருட், கேரட் : உடலில் நஞ்சு நீக்கும்.
நன்னாரி : உடல் குளிர்ச்சியடையச் செய்து, உடல்வலி நீக்கி, மலச்சிக்கல் போக்கி, ரத்தத்தை தூய்மையாக்கும்.
எலுமிச்சை : அஜீரணம், வாய்வுக் கோளாறு, மலச்சிக்கல், சளித்தொந்தரவு போன்ற உபாதைகளை நீக்கும்.
ஆரஞ்சு, வெள்ளரி : உயர் ரத்த அழுத்தத்தை சீரா£க்கும்.
எல்லாவித திராட்சை அல்சர் நோய்க்கு நல்லது.
கோவைப்பழம் : பல்வலி போக்கும்.
ஆரஞ்சு, சாத்துக்குடி : காய்ச்சல், சரும நோய்களை குணமாக்கும்.
எலுமிச்சை, நெல்லிக்காய் : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
மாம்பழம் : இதயம் வலுப்பெறும், புற்றுநோய் தடுக்கக் கூடியது.
மாதுளை : கர்ப்பிணிகளுக்கு முக்கியமான ஒன்று.
பீட்ருட், பேரீச்சம்பழம் : ரத்த சோகையைச் சரிசெய்யும்.
கேரட், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை : கண்பார்வைக் குறைபாட்டைச் சரியாக்கும்.
வெள்ளரி, வாழைத்தண்டு, வெண்பூசணி : மூட்டுவலி, வீக்கம், சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் மற்றும் உடல் எடை இளைக்க உதவும்.