தந்தை பெரியார்
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மகா புத்திசாலி, நல்லவர், நாணயமானவர், சுயநலம், பட்டம் பதவி பேராசை அற்றவரும்கூட. ஆனால், அவருக்கு இந்த நாட்டு
ஆதிதிராவிடர் நிலையும் இங்குள்ள ஆதிதிராவிடத் தலைவர்களின் தன்மையும் சரியாகத் தெரிவதற்கு இதுவரை வழி இல்லாமலே போய்விட்டது. தலைவர்களுக்குள் தனித்தனி உணர்ச்சியும் இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கட்சியை ஆதரித்தவர்களாகவே இருந்து
வந்தவர்களாவார்கள். அந்தச் சமுதாயப் பெருவாரி மக்களுக்கும் தலைவர்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் இல்லாமல் ஒவ்வொரு கூட்டத்தாரால் ஒவ்வொரு தலைவர் மதிக்கப்பட வேண்டியவர் களாகிவிட்டார்கள். அச்சமுதாய மக்களுக்குள் பறையர், பள்ளர், வள்ளுவர்கள், சக்கிலிகள் என்பது போன்ற பல வகுப்புகள் இருந்து கொண்டு ஒருவருக்கொருவர் நம்பிக்கையோ நட்பு முறையோ இல்லாமல் இருந்து வந்தது. இதை காங்கிரஸ்காரர்கள் நன்றாய்ப் பயன்படுத்திக் கொண்டு தேர்தலைத் தங்களுக்கு அடிமை ஆக்கிக்கொண்டார்கள்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஷெடியூல் வகுப்பார்கள் இந்துக்கள் அல்லவென்று சொல்லி வருகிறார். இங்குள்ள ஷெடியூல் வகுப்பார்கள் இந்துக்களாகவே இருக்கிறார்கள். இந்த விவரங்களை அவர்களுக்கு எடுத்துச்சொல்ல சரியான பிரச்சாரம் இல்லை, சரியான பத்திரிகையுமில்லை. பெருவாரியான நம்பிக்கைபெற்ற தலைவர்களுமில்லை. நல்ல தலைவர்களை நம்பிக்கையோடு பின்பற்றுகிற மக்களும் அரிதாக இருக்கின்றனர். அவர்களுடைய ஓட்டுகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதிலும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். தெளிவிருந்தாலும் அந்த வகுப்பு மக்களின் பெரும்பான்மை ஓட்டைக் கொண்டவர் தெரிந்தெடுக்கப்பட முடியாத மாதிரியில் தேர்தல் தொகுதி இருக்கிறது.
இதை அறிந்தே டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்த முறை பரீட்சார்த்தமாய் 10 வருஷத்திற்கு இருக்கத்தக்கது என்று சொல்லி ஏற்பாடு செய்யச் செய்தார். இப்போது 10 வருஷம் ஆகிவிட்டது. இனி தனித்தொகுதி ஏற்படவேண்டும் ஆதலால் அதற்காகத் தேர்தலை அவர்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். எல்லா விஷயத்திலும் திராவிட மக்களுக்கும், ஷெட்யூல் வகுப்பார் என்கின்றவர்களுக்கும் நம் நாட்டைப் பொறுத்தவரை வித்தியாசமே இல்லை என்பதுதான் நம் கருத்து.
– ‘குடிஅரசு’ தலையங்கம், 27.10.1945
சென்ற இதழின் 50-ஆம் பக்கத்தில் பெரியார் பேசுகிறார் கட்டுரையின் தொடர்ச்சியில் மாதம் 16-1-1961 என்று தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளது, அதை 16-2-1961 என திருத்தி படிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.