தஞ்சை மாநில மாநாட்டில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் உணர்ச்சியுரை
திராவிடக் கொள்கை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிற மாநாடு இந்த மாநாடு. தமிழர் தலைவர் திராவிட கொள்கை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இது தமிழ்ச் சமுகத்திற்கு மட்டுல்ல, அகில இந்திய அளவில் விளிம்பு நிலை சமுகத்தினரை வழிநடத்தும் ஓர் ஆயுதம் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
திராவிட இயக்கம் என்பது திராவிட என்கிற சொல்லை கையாளுகிற அனைவருக்கும் பொருந்தாது. திராவிடக் கட்சிகள், திராவிட இயக்கம் இதற்கே வேறுபாடுகள் உண்டு. திராவிடக் கட்சிகள் தேர்தல் அரசியலில் ஈடுபடக்கூடிய அமைப்புகள். திராவிடக் கட்சிகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்கிற இயக்கங்கள். அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, மாறுபட்டு தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வழியில் சமத்துவம் என்கிற இலக்கை நோக்கி உறுதிபடப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிற திராவிடர் கழகம் என்பது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் அமைப்பு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
திராவிடர் கழகம் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆவணத்தை இந்த மாநில மாநாட்டின் மூலம் வெளியிட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. இது திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் உரிய ஆவணம் அல்ல. சமத்துவத்தை விரும்புகிற ஒவ்வொருவருக்கும் தேவையான ஆவணம். சமத்துவத்தை வென்றெடுக்க வேண்டும் என்று துடிக்கிற ஒவ்வொரு அமைப்புக்குமான ஆவணம். சமத்துவத்தை வென்றெடுக்க வேண்டுமானால், யாரை எதிர்த்து, எதனை எதிர்த்து, எந்தக் கோட்பாட்டை எதிர்த்து, வெற்றியை நாம் ஈட்ட வேண்டும் என்கிற புரிதல் நமக்குத் தேவை. யாரை எதிர்த்து, சனாதனிகளை எதிர்த்து, எதை எதிர்த்து, சனாதனக் கோட்பாட்டை எதிர்த்து, நாம் வென்றாக வேண்டும். ஆகவே, இங்கு இரண்டு கோட்பாடுகளுக்கிடையேதான் யுத்தம். ஒன்று சனாதனம், இன்னொன்று சமத்துவம். சனாதனம் என்கிற கோட்பாடு, சமத்துவத்தை மறுக்கிறது, எதிர்க்கிறது. சமத்துவம் என்கிற கோட்பாடு, சுயமரியாதை மூலம் சமூகநீதியின் மூலம், ஜனநாயகத்தின் மூலம் வென்றெடுப்பதற்கான வழியைக் காட்டுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பேதமில்லை. சமத்துவம் வேண்டும். வருணத்தின் அடிப்படையில் பேதம் கூடாது, சமத்துவம் வேண்டும். சாதியின் அடிப்படையில் பேதங்கள் கூடாது, சமத்துவம் வேண்டும். அதற்கு அடிப்படையான களம், சமூகநீதிக் களம்.
இடஒதுக்கீட்டை, அல்லது அந்த இடஒதுக்கீட்டிற்கான சமூகநீதிக் கோட்பாட்டை முற்றிலும் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படக்கூடிய சனாதன சக்திகள் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள், அதன் முகமாக இருக்கிற பா.ஜ.க சூது மதி படைத்தவர்கள், சூழ்ச்சி குணம் கொண்டவர்கள் இன்றைக்குப் பொருளாதார அடிப்படையிலே இடஒதுக்கீடு என்கிற ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள், சட்டமாக்கி இருக்கிறார்கள். இத்தனைக் காலம் இடஒதுக்கீட்டுக்குச் சட்டம் வேண்டும் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சமத்துவ அமைப்புகள் பலவும் போராடிய நிலையிலும், இடஒதுக்கீட்டுக்கு என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வரவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடி மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கான ஒரு சட்டத்தை கொண்டு வாருங்கள் என்று கேட்ட காலத்திலே அதை எதிர்த்து தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள், பொருளாதார அளவுகோலை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பொருளாதார அளவுகோல் என்பது கல்வி ரீதியாகவும் சமூகரீதியாகவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படக்கூடிய முன்னுரிமையை குழிதோண்டிப் புதைப்பதற்கான சதி அது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். ஆட்சி அதிகார பீடத்தில் சனாதன சக்திகள் விரட்டியடிக்கப்பட வேண்டும். மீண்டும் எக்காரணம் கொண்டும் சனாதன சக்திகள் ஆட்சி பீடத்தில் வராமல் தடுக்கப்பட வேண்டும். ஏற்கெனவே, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், இந்து ராஷ்டிரம் என்று முழங்குகின்றார்கள். ‘கர்வாசிப்’ என்னும் முழக்கத்தின் மூலம் சிறுபான்மையினரை விரட்டி அடிக்க முயல்கிறார்கள். அம்பேத்கருக்கு விழா, தலித்துகளுக்குக் கட்சியில் அதிகாரம் என்னும் பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் பிளவுபடுத்த முயல்கிறார்கள். தலித்துகளை தனிமைப்படுத்த முயல்கிறார்கள். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி என்னும் பிரிவுகளின் எண்ணிக்கை பலத்தை சிதறடிக்க முயல்கிறார்கள். அதன்மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு மனுதர்மத்தை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமாக்கத் துடிக்கிறார்கள். தப்பித்தவறி மீண்டும் இந்த மனுதர்ம கும்பல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் இந்திய அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் அமைப்புச் சட்டம் தூக்கி எறியப்பட்டுவிடும். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரால் வரையறுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இருக்காது. அது நொறுக்கப்பட்டால், தூக்கி எறியப்பட்டால் நாம் விரும்புகிற சமதர்ம இந்தியாவை படைக்க முடியாது. தந்தை பெரியாரும், அம்பேத்கரும் கண்ட சமத்துவ இந்தியாவை படைக்க முடியாது. ஆகவே, நம்முன் உள்ள சவால், நாம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலும் ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டும். அகில இந்திய அளவில் சனாதன சக்திகளுக்கு எதிரான மற்ற கட்சிகளை திரட்ட வேண்டிய கடமை நமக்குள்ளது. சனாதன சக்திகள் விரட்டியடிக்கப்பட வேண்டும், இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். அப்போதுதான் சமூகநீதிக் கோட்பாட்டை பாதுகாக்க முடியும்.
இந்திய அரசியலை வெறும் வாக்கு வங்கி அரசியலாகக் கொண்டு போவதிலிருந்து மீட்டு இந்திய அரசியலை சனாதனமா? சமத்துவமா? என்னும் நோக்கில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்குள்ளது. அதில் திராவிடர் கழகத்திற்கு கூடுதல் பொறுப்பிருக்கிறது. அதனால்தான் தமிழர் தலைவர் சரியான தருணத்தில் இந்த சமுகநீதி மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார். 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மாநாடு இந்திய அளவில் உரையாடலை துவங்க வேண்டும். யார் ஆளவேண்டும் பா.ஜ.க.வா? காங்கிரசா? என்பதல்ல இப்போதைய உரையாடல். சனாதனமா? ஜனநாயகமா? என்னும் நோக்கில் கூர்தூக்கி இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளையும் வழிநடத்திச் செல்ல வேண்டிய ஆற்றலும் ஆளுமையும் பொறுப்பும் ஆசிரியருக்கு இருக்கிறது. அதனால்தான் இந்த மாநாட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்.
திராவிடர் கழகமும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என அண்ணா சொன்னார். திராவிடர் கழகமும், தி.மு.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் மூன்று குழல் துப்பாக்கி என ஆசிரியர் சொல்வார். அதை உறுதிபடுத்தும் வகையில் என்றென்றும் திராவிடர் கழகத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என்று கூறி உறுதியளித்து அமர்கிறேன்.
தஞ்சை மாநில மாநாட்டில் பேராசிரியர் அருணன் எழுச்சியுரை
நாடு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. மத்தியிலே கடந்த அய்ந்து ஆண்டுகாலமாக ஆண்டுகொண்டிருப்பது பா.ஜ.கட்சி அதன் விரிவாக்கம் பார்ப்பனிய ஜனதா கட்சி அவ்வளவுதான்.
தயவு செய்து யோசித்துப் பாருங்கள். எது பார்ப்பனியம். ஜாதிதான் பார்ப்பனியம். ஆணாதிக்கம்தான் பார்ப்பனியம். கொடூரமான மூடநம்பிக்கைதான் பார்ப்பனியம். இந்த மூன்றின் ஒட்டுமொத்த உருவம்தான் பார்ப்பனியம். அதனுடைய ஆதார அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். அதனுடைய அரசியல் அமைப்புதான் பா.ஜ.க. பார்ப்பனியம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை எப்படியெல்லாம் அடித்தட்டு மக்களைச் சுரண்டி வந்தது, அடக்கி வந்தது, சமுகரீதியாக ஒடுக்கி வந்தது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நான் ஒரு நூல் எழுதியிருக்கிறேன். அதை எழுதி முடித்துவிட்டு இந்த மாநாட்டிலே பங்கு கொள்வது எனக்கு தனிப்பட்ட பெருமை. தேவ அசுர யுத்தம் என்பது திராவிட_ஆரிய யுத்தமே.
திராவிடர்கள் ஆரியர்களால் ஒடுக்கப்பட்டார்கள். திராவிடர்களை ஆரியர்கள் வஞ்சகத்தால் வென்றார்கள். கேரளத்தை ஆண்ட மாவலி என்ற திராவிட மன்னனை வாமனன் என்ற ஆரியன் எப்படி ஒழித்துக் கட்டினான் தெரியுமா? சூழ்ச்சியால். இந்த நிலை இன்றைய சூழலிலும் பல ரூபத்தில் தொடர்வதுதான் கொடுமை! திராவிடர்கள் நிதியால், உழைப்பால் கட்டிய கோயிலில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களை நுழைய முடியாதபடி வஞ்சகம் செய்தார்கள். அதனால்தான அனைத்துக் கோயில்களிலும் திராவிடர்கள் அர்ச்சகர்களாக ஆகவேண்டும் என்று பெரியார் போராடினார். கலைஞர் அதற்கு சட்ட வடிவமும் தந்தார். கேரளத்தின் முதல்வர் பினராயி விஜயன் நாட்டிலேயே முதன்முதலில் அதை நடைமுறைப்படுத்தினார்.
இளவயது பெண்கள் சபரிமலைக்குச் செல்லலாம் என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. அதை எதிர்த்து எவ்வளவு கலகம் நடத்தினார்கள். இதனால் கேரள அரசுக்கு ஒன்றே முக்கால் கோடி நட்டம். இதை ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து வசூல் செய்ய வேண்டுமென்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பார்ப்பனிய ஜனதா அரசு அய்ந்தாம் வகுப்புக்கும், எட்டாம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு என்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.இத்திட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் கல்வியை ஒழிக்கும் திட்டம். இத்திட்டம் தமிழ்நாட்டில் அமலாகுமா என்று கல்வியமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி கேட்கப்பட்டபோது தீவிரமாக பரிசீலிக்கிறோம் என்கிறார். பொறுப்பில்லாமல் பார்ப்பனிய சூழ்ச்சிகளுக்கெல்லாம் இந்த எடப்பாடி அரசு தலையட்டிக் கொண்டிருக்கிறது. ‘நீட்’டை எதிர்த்து இந்த அரசு இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியது. ஆனால், மோடி அரசு இதுவரை இதற்கு பதில் தரவில்லை.
பா.ஜ.க.வுடன் கூட்டு சேருகின்றவர்கள் தமிழினத் துரோகிகள், சமுகநீதிக்குத் துரோகிகள், திராவிடர்களின் துரோகிகள், முற்போக்கு சிந்தனைக்குத் துரோகிகள்.
பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்சும் நாங்கள் இந்துவுக்காக இருக்கிறோம் என்று சொல்வார்கள். நான் கேட்கிறேன். ஓபிசி மக்கள் இந்துக்கள் இல்லையா, எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் இந்துக்கள் இல்லையா? இத்தனை பேருக்கும் துரோகம் செய்கின்ற நீங்கள் இந்துக்களே இல்லை. அத்தனை அடித்தட்டு மக்களுக்கும் தீங்கு, கெடுதல் செய்கின்ற கட்சி பா.ஜ.க., மோடி அரசு இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டத்தான் பொதுத்துறை நிறுவனங்களை நிறுவனங்களை மூடி, ஒழித்துக் கட்டுகிறது. ஆகவே, பொதுத்துறை காக்க நாம் போராட வேண்டுமும். பார்ப்பனர்களின் சூழ்ச்சி முதுகெலும்பை உடைக்க வேண்டுமென்றால் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டுமென நாம் போராட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுகநீதி அழிந்துவிடும். எனவே, மத்திய மோடிக்கும் தமிழ்நாட்டு எடப்பாடிக்கும் மக்கள் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்! புகட்டுவார்கள்! தேர்தலில் நன்றி! வணக்கம்!