கேள்வி? பதில்!

மார்ச் 16-31 2019

பா.ஜ.க. கூட்டணியை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்!

கே:அரசியல் ஆதாயத்திற்காக ஜாதி உணர்வேற்றி வளர்க்கப்படுவதால், அதை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?

 – க.மாணிக்கவாசகம், திருவொற்றியூர்

ப:அப்படிப்பட்ட ஜாதி அரசியல்(பேர)வாதிகளை டிப்பாசிட் இழக்கச் செய்து, கட்சிகளை வழித்தெறிய வேண்டும்!

கே:கார்ப்பரேட் முதலாளிகளின் ஊடகங்கள் உதவியுடன், பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கப்படும் ஜாதிக் கட்சித் தலைவர்களை வைத்துக்கொண்டும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயலும் பா.ஜ.க.வை முறியடிக்க என்ன செய்ய வேண்டும்?

 – பா.மணிமேகலை, பெரம்பலூர்

ப:ஒருவிரல் புரட்சியாக மோடி உள்ள காவிக் கூட்டணியை ஒழிக்க, படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்! எதிர்த்து வாக்களிப்பதன் மூலம்!

கே:ஜாதகத்தில் சிறை தோஷம் இருப்பதாக ஒரு ஜோசியன் சொன்னதை நம்பி, உ.பி. மாநிலத்தில் ரமேஷ் சிங் (வயது 38) என்பவன் தோஷத்தைப் போக்க, உள்ளூர் காவல் நிலையத்தில் ஒரு நாள் லாக்அப்பில் இருந்தது எதைக் காட்டுகிறது?

– திராவிடச் செல்வன், கோவை

ப:  எல்லையற்ற முட்டாள்தன மூடநம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

 

ஆதித்யநாத்

 

கே: மதுரா பகுதியில் குரங்குகள் தொல்லையைப் போக்க, அனுமானாகிய குரங்கை வணங்கி, மந்திரம் ஓதுங்கள் என்று உ.பி. முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் கூறியது பற்றி தங்கள் கருத்து என்ன?

 – முகிலன், பண்ருட்டி

ப: அந்தோ இந்திய குரங்கு பூஜை ஜனநாயகமே! உன் முடிவு விரைந்து வருவதாக! என்றே சொல்லத் தோன்றும்!

கே: காந்தியை சுட்டதுபோல ஒரு பார்ப்பன இளைஞன் உங்களைச் சுட்டுவிடுவான்! கவனம் என்று எச்சரிப்பதுபோல் கொலையைத் தூண்டும் தினமலர் ஆசிரியரை கொலைத்தூண்டல் பிரிவில் சிறையில் தள்ள வேண்டாமா?

 – க.காளிதாஸ், காஞ்சி

ப: தமிழக அரசு, காவல் துறை தங்கள் கடமையைச் செய்தால் முடியும். செய்யுமா? என்பதுதான் இப்போதைய கேள்வி!

கே: ஜாதி, சந்தர்ப்பக் கூட்டணி, பணத்தாசை என்று பல காரணங்களால் வாக்குகள் பிரிய வாய்ப்பிருக்கும் நிலையில், பி.ஜே.பி. ஆட்சி மீண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பதை வாக்காளர் முன் நிறுத்துவதே சரியான தேர்தல் வியூகம். இதைத் திராவிடர் கழகம்தான் கட்டமைக்க வேண்டும்! செய்யுமா?

  – வே.மாணிக்கவேல், திருச்சி

ப: ஏற்கனவே சில ஆண்டுகளாக திராவிடர் கழகம் அதைத்தானே செய்து வருகிறது. அறியவில்லையா?

கே: மீண்டும் மோடி என்பதே எங்கள் தேர்தல் முழக்கம் என்று அ.தி.மு.க., பா.ம.க. வெளிப்படையாக கூறிவிட்டதால், பா.ஜ.க. மீதான மக்கள் வெறுப்பை இவர்களுக்கு எதிராக திருப்புவதுதானே சரியான பிரச்சாரம்?

 – த.வெங்கடேஷ், திருவள்ளூர்

ப:   தங்கள் கட்சிக்குக் குழிதோண்டும் பணியை விரைந்து அவர்களே செய்கிறார்கள். வாழ்க! வாழ்க!

திருமுருகன் காந்தி

கே: அரசியலில் பங்கு கொள்ளாத திருமுருகன் காந்தி போன்ற பி.ஜே.பி.யை ஒழிக்கத் தீவிரமாய் செயல்படுவோரை ஒருங்கிணைத்து ஊர்ஊராய் விழிப்பு ஏற்படுத்த திட்டமிட்டால் என்ன?

  – வா.காசிநாதன், வேலூர்

ப:  நிச்சயமாக அவரைப் போன்ற கொள்கைத் தெளிவுள்ளவர்கள் செய்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *