அன்னை மணியம்மையாரின் தமிழினத்தைக் காக்கும் ஒற்றைத் தீர்மானம்!

மார்ச் 16-31 2019

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு

சிறப்புக் கட்டுரை

த.மு.யாழ் திலீபன்

 தந்தை பெரியார் அவர்களின் உயிரை மட்டும் அல்ல கடைசி வரையில், அய்யா இறந்த பிறகும் கொள்கையைக் காப்பாற்றிய உலகம் கண்டிராத பெண் ஆளுமை அன்னை மணியம்மையார். அம்மா பழகவும், பேசவும் தென்றல்தான். ஆனால், அய்யாவின் கொள்கை முடிக்கும் போராட்டம் என்றால் பெரும் எரிமலையாக வெடிக்கும் குணம் கொண்டவர்.

தந்தை பெரியார் அவர்கள் தற்கால சூழலில் இருந்திருந்தால் இப்போது என்ன செய்திருப்பார்களோ அதே நிலைப்பாட்டை, அதே தீர்மானங்களை முன்மொழிந்து

திராவிடர் கழக மாநாடு நிறைவேற்றியுள்ளது.

2-12.1950இல் ‘வடவர் சுரண்டல் எதிர்ப்பு மாநாடும்’’, வடவரிடமிருந்து எப்படி நம் உரிமையை காத்துக் கொள்ளுதல் என்று “வகுப்புரிமை மீட்பு மாநாடும்’’ எதிர்கால நிலையை உணர்ந்து அப்போதே மக்களை பக்குவப்படுத்த மாநாட்டை நடத்தி இருக்கிறார் அந்தத் தொலைநோக்காளர். இம்மாநாட்டில் பல்வேறு சிறப்புகள் இருந்தும் மாநாட்டின் சில  தீர்மானங்கள் இன்றும் நாம் கையில் ஆயுதமாய் எடுத்துச் செல்ல வேண்டிய தீர்மானங்கள் ஆகும்.

தீர்மானம்: 1

வடவர்களால் நடத்தப்படும் கடைகள், கம்பெனிகள் முதலியவைகளைப் பகிஷ்கரிக்குமாறு இம்மாநாடு மக்களை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 2

நம்முடைய நாட்டில் கிடைக்கக்கூடிய பொருள்களை வடநாட்டாரிடம் வாங்காதிருக்குமாறு மக்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 3

வடநாட்டாருடைய பாங்கிகள், இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் இவைகளுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதென மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 4

நம் நாட்டில் வேலை இல்லாத மக்களும் ரயில்வே வேலையில் சர்வீஸ் அனுபவம் ஆனவர்கள் ஏராளமாக இருக்க பொன்மலையிலுள்ள ரயில்வே தொழிற்சாலையில் அகதிகள் என்ற பெயரால் வடநாட்டாரை -_ பல நூற்றுக்கணக்கான பேர்களை வேலைக்கு எடுத்து வருவது குறித்து இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

– ‘விடுதலை’, 04.12.1950

என்கிற தீர்மானங்கள் இந்த மண்ணில் உரிமை இழந்த மக்களின் உள்ளுணர்வை பிரதிபலிப்பதாகவே இன்றுவரையில் இருக்கிறது.

ஆனால், முழு மாற்றம் இன்னும் நிகழவில்லை. அதற்காக திராவிடர் கழகமோ அல்லது அய்யாவிற்குப் பின் தலைமையேற்ற அன்னை மணியம்மையார் அவர்களோ வடவர் ஆதிக்கத்தையும், பார்ப்பனர்களின் புளுகுப் பித்தலாட்டங்களை நன்குணர்ந்து தமிழ் மக்களின் கல்வியும், வேலைவாய்ப்பும்தான் நமக்கான ஒரே தீர்வுயென தன் பேச்சிலும், எழுத்திலும் மக்களின் கல்வி விடுதலையின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்தார். அப்படியொரு கருத்தை அன்னை மணியம்மையார் அவர்கள் 22.7.1974 அன்று எழுதிய தலையங்கத்தில் குறிப்பிடுகிறார். அந்தத் கருத்துதான் இன்றைய வடவர் ஆதிக்கம். பண்பாடு, அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு என நம் நிலத்தையே ஆக்கிரமித்து இருக்கும் வடவர்களின் ஆதிக்கத்தை வீழ்த்தி தமிழ் மக்களைக் காக்கும் தீர்மானம் ஆகும். அய்யா பெரியாரின் கொள்கை வழித்தோன்றல் ஆயிற்றே! பின் எப்படி இருக்கும்! அய்யாவின் சொல்லுக்குச் செயலாக வாழ்ந்தவர் தலைவர் அன்னை மணியம்மையார்.

1974இல் கூடிய தமிழ்நாடு மந்திரிசபை கூட்டத்தில் 80% உத்யோகம் உள்ளூர்காரர்களுக்கே. அதாவது 15 வருடங்களுக்குக் குறையாமல் இருப்பவருக்கு வழங்கப்படும் என்பது முடிவாகும். அப்போதைய தி.மு.கழக அரசு ஆட்சியை சரிவர நடத்தி வந்தாலும் இந்த முடிவென்பது, பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களுக்கே 80% உத்யோகம் தரப்பட வேண்டும் என்கிற நமது கிளர்ச்சிக்கு நல்லதொரு வெற்றியாகும்.

ஆனால், அன்னை மணியம்மையார் தந்தை பெரியாரிடம் பயின்றவர் அல்லவா? அம்மாவின் அன்றைய அறிக்கையில், “15 வருடங்களுக்குக் குறையாமல் குடியிருந்து வருகிறவர்கள் என்கிற சாக்கில் இன்றைக்குப் பல துறைகளில் ஏகபோகமாய் உயர்பதவிகளை அனுபவித்து வருகிற பார்ப்பனர்களும், மலையாளிகளும் மற்றும் பல சமுகத்தினர்களும் மேலும் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டு விடலாம். பெரிய அளவுக்கு அவர்களுக்கே இந்நல்வாய்ப்பு பெரிதும் பயன்பட்டுவிடும் என்பதே நமது பயம். ஆகவே இதற்கு பதிலாக அதாவது 15 வருடங்களுக்குக் குறையாமல் தமிழ்நாட்டில் குடியிருந்தவர்கள் என்பதற்குப் பதிலாக இனி ஒரு 15 ஆண்டுகளுக்கு தமிழர் அல்லாதவர்களுக்கு 20% சர்க்கார் உத்தியோகமே வழங்கப்படும் என்பதாக தீர்மானம் செய்யப்பட்டிருக்குமேயானால் இடத்தின் அடிப்படையில் இல்லாமல், இனத்தின் அடிப்படையில் தீர்மானம் செய்யப்பட்டிருந்தால் நம் இனம் முன்னேறுவதற்காக தீர்மானம் இருந்திருந்தால் தி.மு.கழக ஆட்சிக்கு ‘கிரீடம்’ வைத்ததுபோல் இருந்திருக்கும்’’ என தமிழகத்தின் குரலாய், பெரியாரின் சிந்தனை ஊற்றாய் தமிழ்நாட்டு மக்களின் தாகம் அறிந்து செயல்படும் ஓர் அன்னையாய், பிள்ளைகளின் தவிப்பை உணர்ந்து அடிமை விலங்கொடிக்க, வலி உணர்ந்து புதிய தமிழக உரிமைக்கான பாதை காட்டியவர் அன்னை மணியம்மையார்.

அய்யாவின் தீர்மானங்கள் எவ்வளவு புரட்சியை இன்றளவும் பேசுகிறதோ, அதுபோல அம்மாவின் சிந்தனையை அம்மாவின் இந்தத் தீர்மானத்தை தமிழக அரசியல் கட்சிகள் ஆதரித்து நிறைவேற்றினால், நம் மண்ணில் நாம் கல்வி, வேலைவாய்ப்பு என அனாதைகளாகத் திரிய வேண்டிய அவசியம் இருக்காது.

எங்கிருந்தோ வந்தவன் நம் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலை இனி ஏற்படாது. தபால் துறை, இரயில்வே துறை, பேராசிரியர்கள் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் நியமனம், தமிழக மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் வடவர் ஆதிக்கம், வேளாண்மை, பொறியியல், சட்டக்கல்லூரி, கலை அறவியல் வரை வடவர்களின் எண்ணிக்கையை பெருக்க பொது நுழைவுத் தேர்வு முறை, மிகுமின் நிலையங்கள், பாதுகாப்புத் துறை என அத்துனை நிறுவனங்களிலும் உயர்பதவியில் தமிழர்கள் இல்லாததும், கடைநிலைகளில் மட்டுமே தமிழர்கள் குறைந்த அளவு இன்னும் தொடர்கிறது.

குறிப்பாக, கடைநிலை என்பதை உயர்நிலைக்கு மாற்றும் தீர்மானமே அன்னை மணியம்மையாரின் தீர்மானம். இந்த ஒற்றைத் தீர்மானம் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் கொள்கைப் போராட்டம், அன்னை மணியம்மையாரின் தீர்மானத்தை தொட்டு, திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களின் தமிழர் உரிமை மீட்புப் பயணம் போராட்ட அளவிலும், நீதிமன்றங்களிலும் வென்றுகொண்டுதான் உள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 23, 24 மாநில மாநாடு _ சமுகநீதி மாநாட்டில் வடவர்களின் ஆதிக்கம் கல்வி, வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசியல், தொழில் சாம்ராஜ்யம், சிறு வியபாரம் என பெருநகரம் முதல் குக்கிராமங்கள் வரையில் ஆதிக்கம் நீளுகிறது.

இந்திய தேசியம் என்கிற போர்வையில், மாநிலங்களின் தனித்தன்மைகள், பண்பாடு சீரழிவதற்கு முடிவு கட்ட தீர்மானம் ஒன்றை தந்தை பெரியார், அன்னை மணியம்மையாருக்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவேற்றி நம் வாழ்வில் புது உந்துதலைத் தந்திருக்கிறார். அய்யாவின்  கொள்கை வழியில், மணியம்மையாரின் செயல் திட்டங்களோடு தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா தலைமையில் மாணவர்களும், இளைஞர்களும் படை அமைப்போம். வகுப்புவாரி உரிமையை நிலைநாட்டி சமுகநீதி காப்போம்! அன்னை மணியம்மையாரின் மண்ணுரிமை சபதம் ஏற்போம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *